[X] Close

வாடிக்கையாளரிடம் காகித பை-க்கு ரூ. 3 வசூலித்த பேட்டா நிறுவனத்துக்கு நுகர்வோர் கவுன்சில் ரூ.9 ஆயிரம் அபராதம்


3-9

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 10:04 am
  • அ+ அ-

பேட்டா விற்பனையகத்தில் காலணி வாங்கியபோது அதை எடுத்துச் செல்வதற்கு வழங்கப்பட்ட காகித பைக்கு ரூ.3 வசூலித்ததற்காக அந்த விற்பனையகத்துக்கு நுகர்வோர் கவுன்சில் ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இத்தொகையை பேட்டா இந்தியா நிறுவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவானது நாடு முழுவதும் உள்ள பேட்டா விற்பனையகங்களுக்குப் பொருந்தும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேபோல விற்பனையகங்கள் செருப்புகளுக்கான விலையைத் தவிர கூடுதலாக எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது. தினேஷ் பிரசாத் ரௌத்ரி என்ற வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கின் மீது நுகர்வோர் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சண்டீகரில் செக்டார் 22டி பகுதியில் அமைந்துள்ள விற்பனையகத்தில் ரூ.402-க்கு ஒரு காலணியை (ஷூ) வாங்கியதாகவும், ஷூ-வின் விலையுடன் அதை எடுத்துச் செல்வதற்கான பையின் விலையும் அடங்கும். ஆனால் அவர்கள் அளித்த பை தனக்கு திருப்திகரமாக இல்லை என்பதால் ரூ. 3-ம், சேவை திருப்திகரமாக இல்லாததற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் ஆணையத்திடம் வழக்கு பதிவு செய்தார்.

காகித பை-க்கு கூடுதல் கட்டணம் வாங்கியதை நுகர்வோர் ஆணையம் வன்மையாக கண்டித்ததோடு, நுகர்வோரிடம் அந்தத் தொகையை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறியது. விற்பனையகத்தில் வாங்கும் பொருளுக்கு உரிய பை-யை இலவசமாக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி வழக்கறிஞர் சாகர் சக்சேனா, நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த இந்த உத்தரவு நாடு முழுவதும் செல்லுபடியாகும் என்றும், பை-க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறினார். அளிக்கப்படும் பை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்றாலும் அதற்காக கூடுதல் கட்டணத்தை நுகர்வோரிடம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவனம் அதிக அக்கறை செலுத்துவதாயிருந்தால், அந்த நிறுவனமே சூழல் காப்பு பை-களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் நுகர்வோர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நுகர்வோர் ஆணையத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நுகர்வோர் விவகார அமைச்சகம் இதுகுறித்து ஒரு உத்தரவை பிறப்பித்து நுகர்வோரின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகில் மஜிதா குறிப்பிட்டார். அதேபோல விற்பனையாளர்கள் பைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அவர்களது பிராண்ட் லோகோ பையில் இடம்பெற்றிருந்தால் அதுவே விளம்பரம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சண்டீகர் நுகர்வோர் ஆணையம், பையின் விலையான ரூ. 3 மற்றும் நீதிமன்ற வழக்கிற்கான தொகை ரூ. 1,000 மற்றும் ரூ. 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவை கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இந்த இழப்பீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பேட்டா நிறுவனம் ரூ. 5 ஆயிரம் தொகையை நுகர்வோர் ஆணையத்தின் சட்ட பிரிவு கணக்கில் நன்கொடையாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close