[X] Close

இளைஞர்களை அட்டாக் பண்ணும் 'அசிடிட்டி’


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 14:48 pm
  • அ+ அ-

ஜெமினி தனா

வகைவகையாய், தினுசுதினுசாய் உணவு வகைகள் இன்றைக்கு அதிகரித்துவிட்டன.  அப்படி வரும்போதே, விதம்விதமான நோய்களும் சிக்கல்களும் நமக்குள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கான உதாரணங்களில் ஒன்று... அசிடிட்டி.

   நாம் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆவதற்கு  இரைப்பையில் சுரக்கும் அமிலம் மிக முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த அமி்லத்தின் அளவு அதிகமாக சுரக்கும்போது அதுவே செரிமான பாதிப்பையும் உண்டுபண்ணுகிறது.

  நாம் ஒவ்வொரு கவளத்தையும் விழுங்கும்போது, உணவுக் குழாயின் முனைப்பகுதி திறந்து உணவை இரைப்பைக்குள் அனுப்பும். பிறகு உணவு மேலே வராதவாறு இறுக்கமாக்கும். சில நேரங்களில் உணவுக் குழாய்களில் உள்ள வால்வுகள் பாதிக்கப்பட்டு இரைப்பையில் உள்ள அமிலங்கள்  உணவு குழாய்க்குள் வரத்தொடங்கும். அப்போதுதான் செரிமானப் பிரச்னை தொடங்குகிறது. நெஞ்செரிச்சல் உண்டாகும். உரிய சிகிச்சைகள் இல்லாதபட்சத்தில்  குடலில் புண்களை  உண்டாக்கி அல்சர் வரை கொண்டுபோய்விட்டுவிடும்.

அசிடிட்டி அறிகுறிகள் இதுதான்:

  சாப்பிட்ட உணவு எளிதாக இருந்தாலும் கூட, புளித்த ஏப்பம் உண்டாகும். தொடர்ந்து வரும் இந்த ஏப்பத்தில் நாம் சாப்பிட்ட உணவின் மணத்தை நம்மால் உணரமுடியும். பிறகு நெஞ்செரிச்சல், வாந்தி, வயிற்றில் வலி, வயிறு மற்றும் தொண்டை  எரிச்சல், புண், வயிறு உப்புசம், ஜீரணமின்மை, மலச்சிக்கல் முதலானவை என படிப்படியாக உண்டாகும்.

   ஆரம்ப நிலையில் இவற்றைக் கண்டறிந்து சிகிச்சை செய்யாமல் இருந்தால் நாளடைவில்  வயிற்றுப்போக்கு, தொண்டை உலர்ந்து போதல், உடல் எடை குறைவு, மூச்சுத்திணறல் என மிகத் தீவிர பாதிப்புகளை உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். தீவிர அசிடிட்டி பிரச்சினை எண்டோஸ்கோப்பி மூலமாக  கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.. .

அசிடிட்டி பிறப்பது  இங்குதான்:

உணவு ரீதியாக: இன்று பெரும்பாலான நோய்கள் உணவுப்பழக்கங்களால் மட்டுமல்ல மனம் சார்ந்துமே உருவாகின்றன என்பதை மருத்துவர்கள் ஆய்வுகளின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

மிதமிஞ்சிய புளிப்பும், கண்ணில் நீர்வரவைக்கும் காரமும், அதீதமான உப்பும் கலந்த மசாலாக்கள் நிறைந்த  உணவுப்பண்டங்கள்தான் இன்றைக்கு ஆல் ஃபேவரிட்டாக இருக்கிறது. கொழுப்பு நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்கள் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாகவே இருக்கின்றன என்பதற்கு அசிடிட்டியும் ஓர் உதாரணம்தான். காபி, டீ, காபின் நிறைந்த பொருள்கள், மது, புகை  எல்லாமே அளவை மிஞ்சும்போது உடனடியாய் ஒட்டிக்கொள்கிறது அசிடிட்டி..

பதப்படுத்தப்பட்ட உணவுகள்,  மசாலா கலந்த சாட் உணவுகள், தக்காளி, ஊறுகாய், அசுத்தமான குடிநீர், கலப்படமிக்க பொருள்களில் தயாரிக்கப்படும் உணவு, வெறும் வயிற்றில்  செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது, வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது இப்படி இன்னும் பல காரணங்கள் அசிடிட்டியை உருவாக்குகின்றன.

மாறுபட்ட பழக்கம், வழக்கம்:

மனித மனம் இன்று அமைதியின்றி இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் மனத்தை அழுத்தி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சட்டென்று உணர்ச்சிவசப்படுதல், பணிச்சுமை, பொருளாதார நெருக்கடி, தனிப்பட்ட பிரச்சினைகள்  உண்டாக்கக்கூடிய  மன அழுத்தம் இவையெல்லாமே அசிடிட்டி தோன்றக் காரணமான அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இரவு நேரம்  அதிகம் கண்விழித்திருப்பது, நேரம் மாறிய  பழக்கமற்ற உறக்கமும், குறிப்பாக  குறித்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, அதிக பசியோடு வயிற்றைக் காயவிட்டு நேரம் கடந்து சாப்பிடுவது இவையும் கூட அசிடிட்டியை உண்டாக்கும் என்கிறார்கள். அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரைகளோடு  தங்கள் பழக்க வழக்கங்களிலும் கவனம்  செலுத்தவேண்டும்  என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

என்ன சாப்பிடலாம்:

முட்டைகோஸைச் சாறாக்கிக் குடிக்கலாம். இதில்  உள்ள குளுட்டமைன் எனும் அமினோ அமிலம் செரிமானத்தைச் சீராக்கி துரிதப்படுத்தவும் செய்கிறது. மாதுளை, பப்பாளி, அத்திப்பழம், கீரை வகைகள், இஞ்சி, ஓட்ஸ், பாதாம், கிரீன் டீ, வாழைப்பழம், தர்பூசணி,  இளநீர், முட்டைகோஸ் முதலானவற்றை  அடிக்கடி  உணவில் சேர்த்து வரலாம்.   அசிடிட்டியால் உண்டாகும் வயிற்றின் எரிச்சலைக் குளிர்விக்கும் தன்மை மோருக்கு உண்டு. வயிறு உப்புசமாக இருக்கும் நேரங்களிலும், வயிறு புடைக்கச் சாப்பிடும் நேரங்களிலும்  இஞ்சி, சீரகம் கலந்த மோரை பயன்படுத்தினால் செரிமானம்  எளிதாகும்.

அசிடிட்டி இருக்கும் காலங்களிலும் உணவைத் தவிர்க்கக் கூடாது. அசிடிட்டி இருக்கும் போது உணவில் நாட்டம் குறைவது இயல்புதான் என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும். துளசியும் அசிடிட்டி பிரச்சினையை தீர்க்கவல்லது.

  மனதை பக்குவப்படுத்தும் வகையில் யோகாசனம், உடற்பயிற்சி என செய்வதலும் அசிடிட்டி உண்டாகாமல் தடுக்கச் செய்யலாம். மன அமைதி, பல நோய்களை நம்மை நெருங்கவே விடாது.

 வயிற்றில் தொடர்ந்து  எரிச்சல், புளி ஏப்பம், நெஞ்செரிச்சல் என எதுவாக இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை பெறுங்கள்.. 

உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்க உண்ணும் உணவில் ஒரு கண் வையுங்கள்… மனதை அமைதியாக்கும் உடற்பயிற்சியில் மற்றொரு கண் வையுங்கள்.

அசிடிட்டியும் நெருங்காது; அசிடிட்டியால் வரும் தொல்லைகளும் நமக்கில்லை!

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close