[X] Close

எப்படியிருக்கிறது இந்தியா? - தெற்கு


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 17:05 pm
  • அ+ அ-

-வ.ரங்காச்சாரி

தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவருகின்றன தென்னிந்திய மாநிலங்கள்.  தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட ஒன்றியப் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்னிந்தியா. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தென்னிந்தியாவுக்கு மட்டும் 130 இடங்கள்.

மாநிலவாரியாகத் தமிழ்நாடு 39, ஆந்திரம் 25, தெலங்கானா 17, கர்நாடகம் 28, கேரளம் 20, புதுச்சேரி 1. தென்னிந்திய பரப்பளவு 2,45,480 ச.கி.மீ. தென்னிந்தியாவின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 25.2 கோடி. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 20.8%. ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு.

தென்னிந்திய மாநிலங்கள் ஓர் அறிமுகம்

கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் தென்னிந்தியாவைச் செழிப்பாக்குகின்றன. சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம்,  திருவனந்தபுரம், கொச்சி ஆகியவை மிகப் பெரிய நகரங்கள். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் தகவல் தொழில்நுட்பத் தொழில் கேந்திரங்களாக ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், கோயம்புத்தூர் நகரங்கள் விளங்குகின்றன.

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உட்பட கிட்டத்தட்ட 73 திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும் சாளுக்கியர்கள், சாதவாகனர்கள், ராஷ்டிரகூடர்கள் ஆண்ட பிரதேசம் இது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அடுத்த முப்பதாண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த சராசரியைவிட அதிகமான அளவில் தென்னிந்திய மாநிலங்கள் வளர்ச்சி பெற்றன. தேசிய சராசரியைவிட அதிகமாக 80% எழுத்தறிவைப் பெற்றிருக்கிறது தென்னிந்தியா. கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டச் செயல்பாடு ஆகியவற்றில் பெரும் பாய்ச்சலைக் கண்டிருக்கிறது. விவசாயம், தொழில்வளம், கைத்தொழில்கள், கலை-கலாச்சாரம், அரசியல் விழிப்புணர்வு ஆகியவற்றிலும் சிறந்து விளங்குகிறது.

therku 2.jpg 

எதிர்கொள்ளும் சவால்கள்

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முதலிடம் வகிப்பதும் தென்னிந்தியாதான். மக்கள்தொகை அடிப்படையில் வரிவருவாயைப் பிரித்துத் தருமாறு நிதி ஆணையத்தை மத்திய அரசு பணித்திருக்கிறது. இதனால், தென்னிந்திய மாநிலங்களுக்கு வருவாய்ப் பங்கு குறையும். எனவே, தென்னிந்திய மாநிலங்கள் புதிய வருவாய்ப் பகிர்வு முறையைக் கடுமையாக ஆட்சேபிக்கின்றன.

மாநிலப் பிரிவினையின்போது ஆந்திரத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் வாக்குறுதி தந்தார். மோடியும் அதைப் பிரச்சாரத்தில் வழிமொழிந்தார். நிதிக் குழு அத்தகைய சிறப்பு ஒதுக்கீடுகள் இனி கூடாது என்று பரிந்துரைத்ததையடுத்து, மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

கேரளத்தில்  2018-ல் பெருமழை கொட்டி, அனைத்து அணைகளும் நிரம்பி மாநிலமே வெள்ளக்காடானது. சாலைகள், மின்கம்பங்கள், தகவல்தொடர்புக் கோபுரங்கள், குடியிருப்புகள் என்று அனைத்துமே சேதமடைந்தன. மறுசீரமைப்புக்கும் புத்தமைப்புக்கும் கோடிக்கணக்கான ரூபாய் தேவைப்பட்டபோது மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை; உதவ முன்வந்த வெளிநாடுகளிடமிருந்தும் உதவி பெறுவதற்கும் அனுமதிக்கவில்லை. இது பெரும் குறையாக இருக்கிறது.

மிக முக்கியமாக, வளைகுடா நாடுகளில் ஆட்குறைப்பு அதிகரித்துள்ளதால் நாடு திரும்பும் கேரளர்களின் எண்ணிக்கை கணிசமாகிவிட்டது. ஒருபுறம், அவர்களின் மூலமாக வரும் வருமானம் குறைந்துவருகிறது என்பதுடன், அவர்களுக்கும் மாற்று வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது.

வேளாண்மைதான் தென்னிந்தியாவின் முக்கியமான தொழில். 47.5% மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். எனினும், தக்காணப் பீடபூமியில் அமைந்திருப்பதால் தொடர்ந்து வறட்சியைச் சந்திக்கும் பகுதியாகவும் தென்னிந்தியா இருக்கிறது. கிருஷ்ணா, கோதாவரி, பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு என்று மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச் சிக்கல்கள் தொடர்கின்றன. காவிரி படுகைப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்குக் கடும் அதிருப்தி நிலவுகிறது. கர்நாடகத்தில் லிங்காயத்துகளைச் சிறுபான்மை சமயமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டுவருகிறது.

therku 3.jpg 

அரசியல் நிலைமை என்ன?

சுதந்திரத்துக்குப் பிறகு தென்னிந்தியா மதறாஸ் மாகாணம், மைசூர் மாகாணம், ஹைதராபாத் மாகாணம், திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசம் என்று நான்காகப் பிரிக்கப்பட்டது. 1956-ல் மொழிவழி மாநிலங்கள் உருவானபோதுதான் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உருவாகின. ஆந்திரமும் இப்போது தெலங்கானா, ஆந்திரம் என்று பிரிந்துவிட்டது. தமிழ்நாட்டில் எழுந்த மாநில உரிமைகளுக்கான குரல், பக்கத்து மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம் ஆகியவற்றிலும் எதிரொலிக்கிறது.

ஆந்திரத்தில் என்டிஆர் தொடங்கிய தெலுங்கு தேசமும் தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தொடங்கிய தெலங்கானா ராஷ்டிர சமிதியும் மாநில உரிமைகளை முன்னிறுத்தி செயல்பட்டுவருகின்றன. இருந்தாலும், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சாதி அரசியலின் செல்வாக்கே அதிகமாக இருக்கிறது. தெலங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக மூன்றுக்குமே செல்வாக்கு இல்லை என்பதை சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துவிட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அரசு அமைத்திருந்தாலும் தொடர் பூசல்களால் மாநில நிர்வாகம் அலைக்கழிக்கப்படுகிறது. இரு கட்சிகளும் பரஸ்பர அவநம்பிக்கையுடன் தேர்தலைச் சந்திக்கின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அங்கேயும் சாதி சார்ந்த அரசியலின் செல்வாக்கே தொடர்கிறது. லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள் இடையிலான போட்டியாகவே கர்நாடக அரசியல் களம் இருக்கிறது.

கேரள மாநிலம் இடதுசாரி ஜனநாயக முன்னணியால் ஆளப்படுகிறது. அங்கு,  காங்கிரஸும் இடதுசாரி முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருக்கிறது. புதிதாக உள்ளே நுழைந்துள்ள பாஜகவை இரண்டு கட்சிகளும் எதிர்த்தாலும் தேர்தலைத் தனித்தனியாகவே சந்திக்கின்றன. முதல்முறையாக கேரளத்திலும் சபரிமலை விவகாரத்தால் இந்துக்களைத் திரளவைக்க முயற்சி நடந்தது. தமிழகத்தில் இணையம் துறைமுகத் திட்டம் வேண்டாம் என்று மீனவர்கள் போராடியதைப் போல கேரளத்திலும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராடிவருகிறார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close