[X] Close

வியாசர்பாடி, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் பறக்கும் படை சோதனையில் ரூ.70 லட்சம் சிக்கியது


70

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 08:19 am
  • அ+ அ-

வியாசர்பாடி, நெற்குன்றம், மண்ணடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் சிக்கியது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே நடந்த சோதனையில் ஒரு மினி வேனில் ரூ.36 லட்சம் ரொக்கம் இருந்தது. அதேபோல மற்றொரு காரில் ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.56 லட்சம்

மினி வேனில் இருந்த பணம் மின்சார வாரியத்துக்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் காரில் இருந்த பணம் டாஸ்மாக் கடையில் இருந்து வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாக அதில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் இரு வாகனங்களிலும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.56 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தகுந்த ஆவணங்களைக் காட்டி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொகுசு கார்

நெற்குன்றம் மூகாம்பிகை நகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஏழுமலை கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சொகுசு காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில், ரூ.11 லட்சம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். காரில் இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிப், வாசிம்அக்ரம் ஆகிய இருவரிடமும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

ரூ.3 லட்சம்

மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவில் சோதனை நடத்தினர். மண்ணடி, ராமசாமி தெருவில் உள்ள விடுதியில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த தென்காசியைச் சேர்ந்த நாகூர்மொய்தீன் என்பவரிடம் ரூ.3 லட்சம் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி நாகூர் மொய்தீனிடம் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close