[X] Close

திறந்திடு சீஸேம் 28: ஆர்லவ் வைரம்


28

  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 12:21 pm
  • அ+ அ-

-முகில்

‘ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் அந்தக் கடவுள் சிலையின் இரண்டு கண்களிலும் இரண்டு வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.’ இப்படி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து அந்த பிரெஞ்சு வீரருக்குத் தூக்கமே வரவில்லை. எப்படியாவது அந்த வைரங் களைப் பறித்துவிட வேண்டுமென்று திட்டம் போட்டார்.

அது பதினெட்டாம் நூற்றாண் டின் மத்தியில் கர்நாடகப் பகுதியிலிருந்த பல்வேறு ராஜ்யங்கள் பிரெஞ்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகவும், பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகவும் போர்களை நடத்திக்கொண்டிருந்த காலகட்டம். ஒட்டுமொத்தமாக அவை ‘கர்நாடகப் போர்கள்’ என்று அழைக்கப்பட்டன. அந்த நேரத்தில் தென்னிந்தியாவில் முகாமிட்டிருந்த ‘பெயர் தெரியாத’ பிரெஞ்சு வீரர் ஒருவர்தான், வைரத்தைக் குறி வைத்திருந்தார்.

அதற்காகவே அவர் கி.பி. 1747-ல் ஸ்ரீரங்கத்துக்கு வந்தார். இந்து மதத்துக்கு மாறினார். அங்கிருந்த அர்ச்சகர்களிடம் நட்பை வளர்த்துக்கொண்டார். தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தார். ஒருநாள் இரவு கடும் மழையும் புயலும் அடித்துக்கொண்டிருந்தது. கோயிலுக்குள் புகுந்த அந்த வீரர், வைரம் பதிக்கப்பட்டிருந்த சிலையின் ஒரு கண்ணிலிருக்கும் வைரத்தை எடுத்தார். போலி கல் ஒன்றை அந்தக் கண்ணில் பதித்தார். இன்னொரு கண்ணை எடுப்பதற்குள் உடல் நடுங்கியது. பயம் கவ்வியது. உடனே கோயிலிலிருந்து வெளியேறினார். சென்னையை அடைந்தார். அங்கே ஆங்கிலேய கேப்டன் ஒருவரிடம் 2,000 பவுண்ட்களுக்கு அந்த வைரத்தை விற்றார் என்கிறது ஒரு கதை.

ஆங்கிலேயே கேப்டனிடமிருந்து சில கைகளுக்கு மாறிய அந்த வைரம், பின் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமுக்கு விற்பனைக்கு வந்துசேர்ந்தது. ஈரானைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான ஷஃப்ராஸ் என்பவர், அந்த வைரத்தை நல்ல விலைக்கு வாங்கினார். பதினெட்டாம் நூற்றாண்டில் ரஷ்யாவின் பிரபுக்களில் ஒருவரான கிரிகோரி ஆர்லவ் என்பவர், ஷஃப்ராஸிடமிருந்து அந்த வைரத்தை விலை கொடுத்து வாங்கினார் என்று சொல்லப்படுகிறது.

சில ஆய்வாளர்கள், ஸ்ரீரங்கம் கதையில் நிஜமில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோயில் குறித்த பதிவேடுகளில் இப்படி ஒரு வைரம் இருந்ததாகவோ, அது பதினெட்டாம் நூற்றாண்டில் காணாமல் போனதாகவோ குறிப்புகள் இல்லை என்கிறார்கள். வைரத்தை அதிக விலை வைத்து விற்பதற்காகவும், அதன் மதிப்பை உயர்த்துவதற்காகவும் வியாபாரிகளால் கற்பனையில் உருவாக்கப்பட்ட விஷயங்களே இவை என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரம் இது என்று சில வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நூற்றாண்டில் முகலாய இந்தியாவுக்கு வந்த மிக முக்கியமான பயணிகளுள் ஒருவர், பிரான்ஸைச் சேர்ந்த தாவர்னியர். அவர் நகை, கற்கள் விற்பனை செய்த வணிகரும்கூட. அப்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த தாவர்னியர், பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதில் இந்த வைரம் பற்றிய குறிப்புகளும் அடக்கம். தாவர்னியர், இந்த வைரத்தின் வடிவத்தையும் வரைந்து வைத்துள்ளார்.

மிர் ஜும்லா, கோல்கொண்டாவைச் சேர்ந்த வைர வியாபாரி. கி.பி. 1656-ல் முகலாயப் பேரரசர் ஷாஜஹானைச் சந்திக்கும் வாய்ப்பு மிர் ஜும்லாவுக்குக் கிடைத்தது. அப்போது அவர், பேரரசர் ஷாஜஹானுக்குப் பல்வேறு வைரங்களைப் பரிசாகக் கொடுத்தார். அதில் இந்தக் கோல்கொண்டா வைரமும் அடக்கம். 787 காரட் எடை கொண்ட கோல்கொண்டா வைரத்துக்கு ‘Great Mughal Diamond’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த வைரத்தைக் கொடுத்ததற்குப் பரிசாக கோல்கொண்டாவின் பிரதம மந்திரி பதவியை மிர் ஜும்லா பெற்றுக்கொண்டார் என்று தாவர்னியர் குறிப்பிட்டுள்ளார்.

முகலாயப் பேரரசராக ஔரங்சீப் இருந்தபோது, கிரேட் முகல் வைரத்தைச் செதுக்கி, அழகிய வடிவில் மாற்றும் பணியை ஆர்டென்சியோ போர்கியோ என்பவரிடம் ஒப்படைத்தார். அவர், வெனிஸ் நகரத்திலிருந்து டெல்லிக்கு வந்திருந்த வைர நகை வடிவமைப்பாளர்.

sesame.jpg 

கவனமே இன்றி அந்தப் பணியை மேற்கொண்ட போர்கியோ, கிரேட் முகல் வைரத்தின் வடிவத்தையே சிதைத்தார். 787 காரட் வைரம், வெறும் 280 காரட்டுக்குச் சுருங்கிப் போனது. கடும் கோபமடைந்த ஔரங்கசீப், போர்கியா கையிலிருந்த செல்வங்களை எல்லாம் பறிக்கச் சொன்னார். சவுக்கடி தண்டனைக்கும் ஆளான போர்கியோ, உயிர் தப்பித்தால் போதுமென்று டெல்லியை விட்டே ஓடிப் போனார்.

முகலாயர்களின் கஜானாவில் பத்திரப்படுத்தப்பட்ட அந்த கிரேட் முகல் வைரம், கி.பி. 1739-ல் பெர்சியப் பேரரசர் நாதிர் ஷா டெல்லி மீது படையெடுத்தபோது, அவரால் கொள்ளையடிக்கப்பட்டது. கி.பி. 1747-ல் நாதிர் ஷா படுகொலை செய்யப்பட்டார். அவரால் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தைப் பலரும் பறித்துக் கொண்டு சென்றனர். அதில் அந்த வைரமானது ஆப்கன் வீரர் ஒருவரது கையில் சிக்கியது. அவர், அதை பாஸ்ராவுக்கு (இன்றைய ஈரான்) எடுத்துச் சென்றார். அப்போது ஆசியக் கண்டம் முழுவதிலும் ஆர்மேனியர்கள் மணிக்கல் வியாபாரத்தில் சிறந்து விளங்கினார்கள். அந்த ஆப்கன் வீரர், வைரத்தை ஆர்மேனிய வியாபாரி சஃப்ராஸ் என்பவரிடம் விற்றார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்யாவின் ஜார் வம்சப் பேரரசி கேத்தரினுக்கு வைரங்கள் வாங்கிச் சேர்ப்பதில் அளவற்ற ஆர்வம் இருந்தது. தன் அவையில் இருந்த ஆர்மேனிய வைர வியாபாரி மூலமாக சஃப்ராஸ் கையிலிருந்த வைரம் பற்றி கேத்தரின் அறிந்தார். ஆனால், அவர் கேட்ட விலைக்கு வைரம் கிடைக்கவில்லை. அதே ராஜ்யத்தின் பிரபுக்களில் ஒருவரான கிரிகோரி ஆர்லவ், அந்த வைரத்தை வாங்கினார். பேரரசி கேத்தரினுக்குப் பரிசாக வழங்கினார். அதன் மூலம் கேத்தரினின் நம்பிக்கையைப் பெற்ற கிரிகோரி ஆர்லவ், பின்பு ரஷ்யப் பேரரசர் மூன்றாம் பீட்டரை பதவியிலிருந்து தூக்கி எறியவும் உதவினார் என்பதெல்லாம் வரலாறு.

ரஷ்யப் பேரரசி கேத்தரினின் கஜானாவில் சேர்ந்த அந்த வைரத்துக்கு ‘ஆர்லவ் வைரம்’ என்ற பெயர் நிலைத்தது. அரை முட்டை வடிவிலான அது, ரஷ்யப் பேரரசின் செங்கோலில் பதிக்கப்பட்டது. 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, அது அரசாங்கத்தின் சொத்தாக மாறியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரம்மாவின் கண்களில் இருந்து பறிக்கப்பட்டதுதான் இந்த ஆர்லவ் வைரமா அல்லது கிரேட் முகல் வைரம்தான் இந்த ஆர்லவ் வைரமா என்பதில் குழப்பங்கள் உண்டு. சுமார் 190 காரட் எடை கொண்ட ஆர்லவ் வைரம், தற்போது ரஷ்யாவின் மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையில் பாதுகாப்பாக இருக்கிறது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close