[X] Close

கதை: மகரன் போட்ட சட்டம்


  • kamadenu
  • Posted: 17 Apr, 2019 12:21 pm
  • அ+ அ-

-நத்தம் எஸ். சுரேஷ்பாபு

பூமியில் ரொம்ப காலத்துக்கு முன்னால் ஊர்வன, அதிலும் குறிப்பாகப் பெரிய ஊர்வன மட்டுமே ஒரு ஊரில் வாழ்ந்துவந்தன. அந்த ஊரின் பெயர் பாம்புப்பட்டி. பெரிய ஊர்வன என்றால் முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்றவை எல்லாம் அந்த ஊரில் வசித்து வந்தன. இந்த உயிரினங்களின் உடலின் மேல் பகுதி செதில் செதிலாக இருக்கும். முட்டை போட்டு இனப்பெருக்கம் செய்யும்.

அந்தப் பாம்புப்பட்டியில் ஒவ்வொரு மாதமும் பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெறும். சுறுசுறுப்பாக சரசரவென்று பாய்ந்தோடும் பாம்புகள், மெதுவாவும் அமைதியாகவும் இருக்கும் ஆமைகள், சடசடவென்று எந்த வேலையையும் செய்து முடிக்கும் ஓணான்கள், பார்ப்பதற்கு முரட்டு ஆட்களைப் போலிருந்தாலும் ரொம்ப அமைதியாகவும் மெதுவாவும் நகர்ந்துகொண்டிருக்கும் முதலைகள் என எல்லாமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்.

காட்டிலேயே பெரிய முதலையாக இருந்த மகரன்தான் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும். அது ரொம்ப நீளமான முதலை. தன்னுடைய மார்பு மிகவும் அகலமானது என்று மகரனே சொல்லிக்கொண்டது. மகரன் ரொம்ப முக்கியமான ஆள்தான் என்று மற்ற உயிரினங்கள் நம்பின. யாராவது ஒருவர் ரொம்ப பலசாலியாகவும், அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தால், அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமலோ கேட்காமலோ இருக்க முடியுமா?

ஒரு நாள் வித்தியாசமாக ஒரு விஷயம் நடந்தது. மாதக் கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, ஆமைகள் எல்லா வற்றுக்கும் மகரன் ஒரு கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில் ஆமைகள் இனிமேல் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று அது உத்தரவிட்டிருந்தது.

அந்தக் காட்டில் ஆமைகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைவுதான். மகரனுடைய உத்தரவை மீறி அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்த ஆமைக்கும் தைரியம் வரவில்லை. ஆமைகளைத் தவிர, மற்ற எல்லா உயிரினங்களும் வந்திருந்தன.

கூட்டத்துக்கு வந்த மகரன் "நண்பர்களே" என்று சத்தமாகப் பேசத் தொடங்கியது. "இனிமே இந்த ஆமைங்க நம்ம காட்டுக்குத் தேவையில்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். சரி, நமக்கு ஏன் ஆமைகள் தேவையில்லைன்னு யாராவது சொல்ல முடியுமா?"

கூட்டத்தில் பங்கேற்ற உயிரினங் கள் ஒருவர் முகத்தை மற்றொன்று அமைதியாகப் பார்த்துக்கொண்டன. ஓர் ஓணான் மெதுவாக, "ஆனா வந்து..." என்று ஆரம்பித்தது. "என்ன ஆனால், கீனால்னு பேசுற? அப்படீல்லாம் நம்ம கூட்டத்துல பேசக் கூடாது, தெரியுமா?" என்று மகரன் சத்தம் போட்டது.

ஒரு குட்டி முதலை, "நான் என்ன நினைக்கிறேன்னா..." என்று சொல்லத் தொடங்கியது. "நினைக்கிறேன், கினைக்கிறேன்னு யாரும் பேசிக்கிட்டிருக்கக் கூடாது" என்று மகரன் திரும்பவும் சத்தமாகக் கத்தியது. எவ்வளவு சத்தமாக என்றால், உயிரினங்கள் கூடியிருந்த மரத்தடியில் இருந்த மரத்திலுள்ள பழங்கள் உதிர்ந்து கீழே விழுகிற அளவுக்கு மகரன் சத்தமாகக் கத்தியது. அதற்கு அப்புறம் அந்தக் கூட்டத்தில் பேச யாருக்குமே தைரியம் வரவில்லை.

தொண்டையைச் செருமிக்கொண்டு மகரன் பேச ஆரம்பித்தது "சரி, ஆமைங்க ஏன் நமக்குத் தேவையில்லைன்னு நானே சொல்லிடுறேன். அதுங்க ரொம்ப மந்தமா இருக்குதுங்க. ரொம்ப முட்டாள்தனமாகவும் இருக்குதுங்க! அப்புறம் தங்களோட வீட்டை முதுகுலயே தூக்கிக்கிட்டுப் போகுதுங்க. இப்படியொரு மடத்தனமான வேலையை யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா? இப்போ ஓணான்கள் சொல்லுங்க, நீங்க மரத்து மேல வாழுறீங்க, அதுக்காக மரத்தையே உங்க முதுகுல தூக்கிக்கிட்டு போவீங்களா?..." என்று ஆளைப் பிடித்து உலுக்குவது போல மகரன் கேட்டது.

ஓணான்கள் ரொம்ப பயத்துடன் சன்னமான குரலில், “இல்ல. நாங்க அப்படியெல்லாம் வீட்டைச் சுமந்துபோக மாட்டோம். ஆனால்...” என்று ஏதோ சொல்ல வந்தன.

உடனே மகரன், “ஆனால் கீனால்னு யாரும் பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல. ஆமைங்க எல்லாம் பாம்புப்பட்டிய விட்டு வெளியேறித்தான் ஆகணும்னு. ஆமா, நான் சொல்லிட்டேன். அதுங்க வெளியே போயிடுச்சுன்னா நமக்கு இந்தக் காட்டுல எல்லாமே அதிகமா கிடைக்கும். உணவு, தண்ணி, ஏன் கூடுதலா இடம்கூடக் கிடைக்கும். ஆமைங்க நாளைக்கே வெளியேறிடணுங்கறதுதான் என்னோட விருப்பம். ஆனா, அதுங்க ரொம்ப மெதுவா நகர்ற பிறவிகளாச்சே. அதனால ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருக்கேன்” என்று திரும்பவும் மிரட்டுவதுபோல மகரன் பேசியது.

மகரன் சொன்னது போலவே, அடுத்த வாரத்தில் அந்தக் காட்டில் ஒரு ஆமைகூட இல்லை. மற்ற உயிரினங்களுக்கு முதலில் வருத்தமாக இருந்தது. ஆனால், மகரன் சொன்னது உண்மை என்பதுபோலவும் தோன்றியது. நிறைய உணவு, நிறைய தண்ணீர், நிறைய இடம் எல்லாமே கிடைத்தன. ஆனால், அதெல்லாமே சில நாட்களுக்குத்தான்.

அதற்குப் பிறகு, ஒரு கெட்ட வாடை காட்டுக்குள் பரவத் தொடங்கியது. ஏதோ அழுகியது போன்ற ஒரு வாசனை. பார்க்கிற இடமெல்லாம் அழுகிப் போன பழங்கள் கிடந்தன. ஆற்றில் செத்துப்போன உயிரினங்களின் சடலங்கள் அழுகி மிதந்தன. ஏன் இப்படியெல்லாம் நடந்தது? இவ்வளவு நாள் இதையெல்லாம்தான் அந்த ஆமைகள் சாப்பிட்டு வந்தன. உத்தரவு போட்ட மகரனே, தன்னுடைய மூக்கை மூடிக்கொண்டுதான் காட்டில் நடமாடிக்கொண்டு இருந்தது.

இப்படியே ஒரு மாதம் ஓடியது. அடுத்ததாக, பாம்புகளுக்கு வினை வந்தது. பாம்புகள் எல்லாம் பாம்புப்பட்டி காட்டைவிட்டு வெளியேறின. சில வாரங்களுக்குப் பிறகு, பாம்புப்பட்டி காட்டில் வாழ்ந்த உயிரினங்கள் ரொம்பவும் சோர்ந்தும் அலுத்தும் போயிருந்தன. எலிகளைச் சாப்பிடக்கூடிய பாம்புகள் வெளியேறிவிட்டதால், அந்தக் காட்டில் எங்கே பார்த்தாலும் எலித்தொல்லை அதிகமாகியிருந்தது. ஓணான்களின் முட்டைகளையும் முதலைகளின் முட்டைகளையும் எலிகள் சாப்பிட்டுவிட்டன.

இது எல்லாவற்றுக்கு அப்புறமும் மகரனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. அதன்படி முதலைகள் மட்டுமே பங்கேற்ற ஒரு கூட்டத்துக்கு அது ஏற்பாடு செய்தது. "இந்தக் காடு முழுசும் நமக்கு மட்டுமே, முதலைகளுக்கு மட்டுமே சொந்தமா இருந்தா எவ்வளவு அருமையா இருக்கும்? நம்மளைத் தவிர வேற யாரும் இந்தக் காட்டுல இருக்கக் கூடாது. ஓணானுங்க எல்லாத்தையும் விரட்டிடுவோம்" என்று மகரன் சொன்னது.

அந்த நேரத்தில் மகரன் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்கவும் நம்பவும் அவை பழகியிருந்தன. அதனால், "வாழ்க, வாழ்க. முதலை குலத் தலைவன் வாழ்க" என்று முதலைகள் கோஷம் இட்டன. ஓணான்களும் காட்டைவிட்டு வெளியேறின.

இப்போது முதலைகளின் வாழ்க்கை செழிப்பாகவும் சிறப்பாகவும் மாறியிருக்க வேண்டும், இல்லையா? ஆனால், அதற்குப் பிறகுதான் எல்லாமே குழப்பமானது. யாரோ ஒரு புத்திகெட்டவன் காட்டுக்குள் நுழைந்து, எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது மாதிரி பாம்புப்பட்டி மாறிவிட்டது.

kadhai 2.jpg 

ஓணான்கள் இல்லாமல் போனதால், அந்தக் காட்டில் பூச்சிகள் லட்சக்கணக்கில் பெருகியிருந்தன. அவை பெரிது பெரிதாக வளர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தன.

முதலைகளுக்கு அந்தக் காடு பயங்கரமான இடமாக மாறிவிட்டது.

மாதாந்திரக் கூட்டத்தில் ஒரு நாள் "நம்ம காடு ஏன் இப்படி ஆகிடுச்சுன்னு நாம எல்லாருக்கும் தெரியும் தானே?" என்று ஒரு முதலைக் குட்டி தைரியமாகக் கேள்வி கேட்டது. "முதல்ல காட்டுலேர்ந்து ஆமைகளை விரட்டி..." என்று அது சொல்லி முடிப்பதற்குள், மகரன் குறுக்கிட்டுப் பேசியது.

தான் எடுத்த எல்லா முடிவும் தப்பாகிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள மகரன் விரும்ப வில்லை. அதேநேரம், இப்ப யாரும் மகரனைப் பார்த்துப் பெரிதாகப் பயப்படவில்லை. எப்பொழுதும் பயந்துகொண்டே இருந்தால், எந்த நல்ல விஷயமாவது நடக்குமா?

அதனால், மற்ற முதலைகள் எல்லாம் கூடி முடிவெடுத்து, காட்டைவிட்டு வெளியேறிய உயிரினங்கள் எல்லாம் காட்டுக்குத் திரும்ப வர வேண்டும் என்று அவசரத் தகவல் அனுப்பின. ஆமைகள், பாம்புகள், ஓணான்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அந்த உயிரினங்களும் குடும்பம் குடும்ப மாக காட்டுக்குத் திரும்பி வந்தன.

இது எல்லாம் நடந்து இரண்டு மாதங்களில், காடு தன் இயல்புக்குத் திரும்பத் தொடங்கியது. பூச்சிகள், எலிகள், தவளைகள், அந்தக் கெட்ட வாடை எல்லாமே காட்டைவிட்டுப் போய்விட்டன. அந்தப் பாம்புப்பட்டி காடு முன்பு போலவே இப்போது மாறிவிட்டது. நீங்கள் நேரில் போனாலும் அதை உணர முடியும், ஆமாம்!

- ஸாய் விட்டேகர், தமிழில்: அ. குமரேசன் | மறுவடிவம்: ஆதி வள்ளியப்பன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close