[X] Close

இதுதான் இந்த தொகுதி: ஆரணி


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:43 am
  • அ+ அ-

-இரா.தினேஷ்குமார்

வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற ஆரணி, ‘பட்டு நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தொண்டை மண்டலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது ஆரணி. சோழர், பல்லவர், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரசர்கள், மராட்டியர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் ஆளுமையில் இருந்த பகுதி இது.

1760-ல் நடைபெற்ற கர்நாடகப் போரில் ஆரணி கோட்டையும் ஆற்காடு கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்றன. அவர்களது நிர்வாகத்தில் பட்டு நெசவுக்கும் விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆரணி தாலுகாவும் உருவானது. ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, மயிலம், செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி இது.

பொருளாதாரத்தின் திசை: விவசாயத்தைச் சார்ந்துள்ள பகுதி. நெல், கரும்பு அதிகளவு பயிரிடப்படுகின்றன. வாழை, உளுந்து, நிலக்கடலையும் பிரதானப் பயிர்கள். ஜவ்வாது மலையில் சிறு தானியங்கள், மா, பலா ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. செய்யாறு அருகே சிப்காட், கூட்டுறவு சர்க்கரை ஆலை, போளூர் அருகே தனியார் சர்க்கரை ஆலை ஆகியவைதான் சொல்லிக்கொள்ளும்படியான தொழிற்சாலைகள். ஆரணியில் பட்டு நெசவும், கைத்தறித் தொழிலும் முக்கியத்துவம் பெற்றவை. ஆரணி, களம்பூரில் விளையும் அரிசி புகழ் பெற்றது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை செய்யாறு, வந்தவாசி, போளூர் வழியாகச் செயல்படுத்தத் திட்டமிட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பல நூறு ஆண்டுகளாக செம்மைப்படுத்தப்பட்ட விவசாய பூமி பறிபோகிறது என்று குரல்கள் எழுந்திருக்கின்றன. எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரிப்பவர்களை எதிர்ப்போம் என்கின்றனர் தொகுதியின் விவசாயிகள். வானம் பார்த்த பூமியாக மாறிவரும் ஆரணி தொகுதியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். செய்யாறு, கமண்டல நாக நதி, சுக நதியில் தொடர்ந்து நடந்துவரும் மணல் கொள்ளை ஆரணி தொகுதி மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து செய்யாறு அல்லது ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இரண்டு தொகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர். ஆரணியில் பட்டுப் பூங்கா, சிப்காட், அரசு கலைக் கல்லூரி அமைக்க வலியுறுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி, ஆற்காடு வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்குப் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. செண்பகத் தோப்பு அணையின் மதகுகளைச் சரிசெய்வது; ‘நாமக்கட்டி’ தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூட்டுறவு சங்கம்; செய்யாறு, கமண்டல நாக நதி, சுக நதியில் தடுப்பணைகள் என்று கோரிக்கைப் பட்டியல் நீளமானது.

ஒரு சுவாரஸ்யம்: தொகுதி சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது. இந்தத் தொகுதியில் 1967 மற்றும் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். பின்னாளில் விஐடி வேந்தராக உருவெடுத்தார். இவருக்குப் பிறகு, அப்போதைய வந்தவாசியிலும், தற்போதைய ஆரணியிலும் திமுக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர்கள், பட்டியலினத்தவர் அதிகளவில் உள்ளனர். முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் வன்னியர்கள் இருப்பதால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அரசியல் கட்சிகள் அதிகம் களமிறக்குகின்றன.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: வந்தவாசி மக்களவைத் தொகுதி, ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தமாக ஆறு முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 1962-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஜெயராமன் முதல் வெற்றியைப் பெற்றார். அதிக முறை வெற்றி பெற்றவர் பலராமன். காங்கிரஸ் சார்பில் இரண்டு முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் என்று மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும் திமுக, அதிமுக, பாமக தலா இரண்டு முறையும், தமாகா, மதிமுக தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்

அதிமுக: வெ.ஏழுமலை

காங்கிரஸ்: எம்.கே.விஷ்ணுபிரசாத்

மக்கள் நீதி மய்யம்: வ.ஷாஜி

நாம் தமிழர் கட்சி: அ.தமிழரசி

வாக்காளர்கள் யார்?

மொத்தம்: 14,34,313

ஆண்கள்: 7,09,889

பெண்கள்: 7,24,352

மூன்றாம் பாலினத்தவர்கள்: 72

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 93.08%

முஸ்லிம்கள்: 3.72%

கிறிஸ்தவர்கள்: 2.72%

பிற சமயத்தவர்: 0.48%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 74.21%

ஆண்கள் 83.11%

பெண்கள் 65.32%

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close