[X] Close

எப்படியிருக்கிறது இந்தியா?- வடக்கு


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:05 am
  • அ+ அ-

-வ.ரங்காசாரி

சிந்து-கங்கை நதிகள் பாயும் சமவெளி, இமயமலை, திபெத்திய பீடபூமி, மத்திய ஆசியாவின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது வட இந்தியா. ஜம்மு-காஷ்மீர், இமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களும் சண்டீகர் ஒன்றியப் பிரதேசமும் டெல்லி தலைநகரப் பகுதியும் வட இந்தியாவில் அமைந்துள்ளன. முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள், பிரிட்டிஷ் பேரரசு ஆகியவற்றால் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளப்பட்டவை இந்தப் பகுதிகள். வைஷ்ணவ தேவி ஆலயம், அமிர்தசரஸ் பொற்கோவில், குதுப்மினார், செங்கோட்டை, ஆக்ரா கோட்டை, தாஜ் மஹால் ஆகியவை முக்கிய யாத்திரை, சுற்றுலாத் தலங்கள். வடக்கு மாநிலங்களில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மொத்த மக்களவையில் இது 7.18%. மேற்கண்ட மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை 9,03,44,095. இது இந்திய மக்கள்தொகையில் 7.47%

வட இந்தியா ஓர் அறிமுகம்

ஜம்மு-காஷ்மீரும் இமாசல பிரதேசமும் மலை மாநிலங்கள். ஆப்பிள் விளைச்சல், தோட்டக்கலைப் பயிர்கள், மலர்ச் சாகுபடி பொதுவானவை. பஞ்சாபும் ஹரியாணாவும் கோதுமை, கரும்பு, பருப்பு வகைகள், சோளம் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் விளைச்சலுக்குப் பெயர்பெற்றவை. டெல்லிக்கு அருகில் இருப்பதால் வரிச்சலுகையுள்ள பொருளாதார மண்டலங்களில் மோட்டார் வாகனத் தயாரிப்பு உள்ளிட்டவை வளர்ந்துவருகின்றன. டெல்லியும் சண்டீகரும் நகர்ப்புறங்கள். மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகள், எழுத்தறிவு அதிகம் உள்ளவை.

எதிர்கொள்ளும் சவால்கள்

வட இந்திய மாநிலங்கள் அனைத்துமே ராணுவரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் முக்கியமானவை. காஷ்மீர் தொடர்பாக இதுவரை பாகிஸ்தானுடன் மூன்று போர்கள் நடந்திருக்கின்றன. ஊடுருவல்காரர்களையும் எல்லைக்கு அப்பாலிருந்து வரும் தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் தலைநகர் ஸ்ரீநகரிலும் காவல் துறை, துணை நிலை ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டை விரும்பாத உள்ளூர் மக்கள் கல்லெறிந்து தாக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்ந்து அங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. பிடிபி கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்துக்கொண்டதால் ஜம்மு-காஷ்மீரில் இப்போது குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி நடக்கிறது. அரசியல் சட்டப் பிரிவு

370-ஐ நீக்க முயல்வதும், மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் நிலங்களை வாங்கத் தடைவிதிக்கும் சட்டப் பிரிவை மாற்ற நினைப்பதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

சண்டீகர், டெல்லி இரண்டிலும் மகளிருக்குப் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது. பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மக்களிடையே பாதுகாப்பற்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. பஞ்சாப்-ஹரியாணா மாநிலங்களில் நெல் சாகுபடிக்குப் பிறகு அடுத்த சாகுபடிக்கு நிலங்களை விரைவாகத் தயார்படுத்த நெல் அடிக்கட்டைகளை எரிப்பது மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினையாகிவருகிறது. அரசின் பிரச்சாரமும் ஊக்குவிப்பு அறிவிப்புகளும்கூட இதை நிறுத்தவில்லை. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவருவதும், இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீர்ப்பெருக்குக் குறைந்துவருவதும் அடுத்த சூழலியல் பிரச்சினையாகிவருகிறது. டெல்லியில் யமுனை அசுத்தமாகச் சீர்கெட்டுவரும் வேளையில் அதன் கரையோரங்களிலேயே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவருவது அடுத்த பிரச்சினையாகும். பஞ்சாபில் இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம்  ஒரு கலாச்சாரமாக உருவெடுத்திருப்பது அங்கு பெரும் சவாலாகியிருக்கிறது.

வட இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களிலும் டெல்லி, சண்டீகர் நேரடி ஆட்சிப் பகுதிகளிலும் வறுமை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ஏற்பட்ட நசிவு, விவசாயிகளின் கடன் சுமை, வியாபாரிகளுக்குப் பொதுச் சரக்கு சேவை வரியால் ஏற்பட்ட இழப்பு ஆகியவை பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன.

அரசியல் நிலைமை என்ன?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்த பாஜகவுக்கும் அக்கட்சிக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவியது. மக்களிடையே செல்வாக்கை வளர்த்துக்கொள்வதில் யார் முதலில் என்ற போட்டியும் தலைதூக்கியது. பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்று பாஜக குற்றஞ்சாட்டியது. அதேசமயம், ஜம்மு பகுதியில் புதிய வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசும் மறைமுகமாக ஆதரவு காட்டியது. இது காஷ்மீரிகளிடையே பாஜகவுக்கு எதிரான வெறுப்பை வளர்த்தது. காஷ்மீருக்கு சுயாட்சி தருவது தொடர்பாகக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்துவருகிறது.

பஞ்சாபில் 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் ‘காலிஸ்தான்’ என்ற தனி நாடு கேட்கும் சீக்கியர்களின் கிளர்ச்சி உச்சகட்டத்துக்குச் சென்றது. காஷ்மீரைப் போலவே பஞ்சாபிலும் இந்தியத் துணைநிலை ராணுவப் படையினர் ஏராளமான எண்ணிக்கையில் உயிர்த்தியாகம் செய்தனர். இப்போதும் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. அவ்வப்போது எழுவதும் அடங்குவதுமாக இருக்கிறது. பஞ்சாபில் இதற்கு முன்பு பாஜக-அகாலி தளம் கூட்டணி ஆட்சியிலும், இப்போது காங்கிரஸ் ஆட்சியிலும் இது பெரிய பிரச்சினையாகத் தொடர்கிறது. ஹரியாணாவில் அரசியலில் ஜாட் சமூகத்தவரின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. ஹரியாணா விகாஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக மூன்றும் பெரிய கட்சிகள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்தனியாக மூன்று கட்சிகளும் போட்டியிட்டதால் பாஜகவால் எளிதில் வெற்றிபெற முடிந்தது. இமாசலத்தில் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சிசெய்கிறது. இங்கு ஆள்வோரின் ஊழல்தான் தொடர் பிரச்சினை.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசுடன் தொடர்ந்து பிணக்கில் இருக்கிறது. பாஜகவுக்கு எதிராகக் குரல்கொடுத்தாலும் ஆஆகவுடன் சேரவும் கூட்டணி வைத்துக்கொள்ளவும் காங்கிரஸ் தயங்குகிறது. இதனால், தலைநகரில் அரசியல் களம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close