[X] Close

அதிமுகவுக்கு சவால்விட இங்கே யாருமில்லை!- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:57 am
  • அ+ அ-

-எஸ்.விஜய்குமார்

எதிர்க்கட்சிகளின் பலமுனைத் தாக்குதல்கள், உள்கட்சியில் நடந்திருக்கும் பிளவு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான உரசல்கள், ஆளுங்கட்சிகளின் மீது இயல்பாகவே எழும் அதிருப்திகள் என எல்லாவற்றையும் நிதானமாகவே அணுகுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் முழுவதையும் வலம்வந்துகொண்டிருக்கும் அவரோடு உரையாடியதிலிருந்து...

பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கான பிரச்சாரப் பொறுப்பை உங்கள் தோள் மேல் சுமப்பது எப்படி இருக்கிறது?

உண்மையில் இது மிகப் பெரிய பொறுப்புதான். கட்சிக்குக் கட்டுப்பட்ட பணிவான தொண்டன் நான். இதை அப்படித்தான் உணர்கிறேன். எம்ஜிஆர், அம்மா ஆகியோரின் தேர்தல் பிரச்சாரங்களில் தொண்டனாக இருந்திருக்கிறேன். இவ்விரு பெருந்தலைவர்களாலும் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட கட்சி கோடிக்கணக்கான தொண்டர் களுக்கு எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்கிறது. இந்தப் பொறுப்பை மிகுந்த விசுவாசத்துடனும் பணிவுடனும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.

ஜெயலலிதா இப்போது இல்லாத வெறுமையை நீங்களும் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் உணர்கிறீர்களா?

ஆமாம், நிச்சயமாக. திட்டமிட்டும் முறையாகவும் பிரச்சாரம் செய்வதில் அவருக்கு நிகர் யார்? பிரச்சார உத்திகள் மட்டுமல்லாமல் அவரிடமிருந்து நிர்வாகத் திறமைகளையும் அரசியல் சாதுரியங்களையும் நிறையக் கற்றிருக்கிறோம். இருந்தாலும், யாராலும் அவருக்கு நிகர் ஆக முடியாது. அவர் இல்லாத வெறுமையை நாங்கள் நிறையவே உணர்கிறோம். ஆனால், அவருடைய ஆன்மா என்னையும் என்னுடைய கட்சியையும் வெற்றிப் பாதையில் வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பிரச்சாரத்தில் இருக்கிறீர்கள்; மக்களுடைய மனங்களில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்ததா?

மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் எங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளைக் கேட்டுப் பயணித்துக்கொண்டிருக்கிறேன். அம்மாவின் வழிகாட்டலில் நடக்கும் நல்லாட்சி குறித்து மக்களிடம் பேசுகிறேன். நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சிறப்பான வெற்றியைப் பெறுவோம் என்று என்னால் சொல்ல முடியும். என்னைப் பார்க்க வரும் மக்களுடைய முகங்கள் பெரும் உற்சாகத்தோடு இருக்கின்றன. பெண்களும் குழந்தைகளும் கட்சி சின்னத்தை எங்களுக்குக் கையசைவுகளில் காட்டுகிறார்கள். இந்த அரசைப் பொருத்தவரையில் எதிர்ப்பதற்கு ஏதும் இல்லை. மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராகக் கடுமையான அதிருப்தி இருந்தது; பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று உங்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட்டது? அது அவசியம் என்று உங்களுடைய கட்சித் தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் கூறி, அவர்களை ஏற்க வைக்க முடிந்ததா?

பாஜகவுக்கு எதிராக அதிருப்தி அலை இருந்தது என்ற கூற்றையே முதலில் மறுக்க விரும்புகிறேன். இது எதிர்க்கட்சிகளால் கற்பனையாக உருவாக்கப்பட்ட சித்திரம். மத்தியில் அவர்களால் தனித்தே ஆட்சி நடத்த முடியும் என்பதைப் பரிசீலித்த பிறகே வலுவான நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களுடன் கூட்டணி வைத்தோம்.

பாமக தலைவர்கள் ராமதாஸும் அன்புமணியும் உங்களுடைய நிர்வாகச் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்கள்; அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

வலிமையான, உறுதியான நாட்டை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுக்கும் எங்களுடைய தோழமைக் கட்சிகளுக்கும் முன்னால் இருக்கும் ஒரே இலக்கு. இந்த இலக்கை அடைய எங்களுடன் எல்லாக் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக உழைத்துவருகின்றனர்.

முன்னர் எம்.பி.க்களாக இருந்த 14 பேருக்கு இந்த மக்களவைத் தேர்தலில் ஏன் மீண்டும் வாய்ப்பு தரவில்லை?

கட்சியின் எல்லா உறுப்பினர்களையும் சமமாகவே பார்க்கிறது அதிமுக. எல்லா உறுப்பினர்களுக்குமே கட்சியில் மேலே வருவதற்கு வாய்ப்புகள் அனேகம். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் விரிவாக விவாதித்த பிறகுதான் போட்டியிட வாய்ப்பு தரப்படுகிறது. தோழமைக் கட்சிகளுக்கும் இடம் தர வேண்டியிருப்பதால் நாங்கள் 20 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறோம்.

உங்களுடைய கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று கூறுகிறீர்கள்; உங்களுடைய நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

பல்வேறு துறைகளில் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறோம். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் பெற்றிருக்கிறோம். மின் மிகை மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். பாலிதீன் பயன்பாட்டுக்குத் தடை அமல்படுத்தியிருக்கிறோம். இம்மாதிரியான சாதனைகளுக்காக மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

கொடநாடு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகிறாரே?

கொடநாடு விவகாரத்தை ஊதிப் பெருக்குகிறார்கள். என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரியும். இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு சம்பவத்தைக் கடுமையாக அனைவரும் கண்டிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இந்த விசாரணை தொடர்பாக ஏற்கெனவே சில அதிகாரிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

டிடிவி தினகரன் அரசியல் களத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேற்றப்படக்கூடியவரா?

டிடிவி தினகரன் பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை. எம்ஜிஆர், அம்மா உருவாக்கிய கட்சிக்கு சவால்விடுவார்கள் என்று யாரையும் நான் கருதவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close