[X] Close

கோலான் குன்று: வரம்பு மீறும் வல்லரசர் ட்ரம்ப்!


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

இஸ்ரேல் தொடர்பாக அதிரடியான முடிவுகளை எடுத்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மார்ச் 21-ல் புதிய அறிவிப்பை வெளியிட்டார். “கோலான் குன்றுப் பகுதி மீது இஸ்ரேலுக்கு இருக்கும் இறையாண்மை உரிமையை 52 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா முழுதாக அங்கீகரிப்பதற்கான நேரம் இது; இஸ்ரேல் அரசின் பாதுகாப்புக்கும் பிரதேச ஸ்திரத்தன்மைக்கும் இது மிகவும் இன்றியமையாதது” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப் எடுத்திருக்கும் மூன்றாவது நடவடிக்கை இது. கடந்த ஆண்டு மே 8 அன்று ஈரானுடனான ‘ஒட்டுமொத்த கூட்டுச் செயல்திட்டம்’ தொடர்பான கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் ட்ரம்ப். அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக ஈரான் மீது விதித்திருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு, ஈரானுடன் பேசி ஒப்புக்கொண்ட விஷயங்கள் தொடர்பானது அந்தக் கூட்டம். அந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்தது. சிரியாவில் ஈரானின் (ராணுவரீதியிலான) பங்களிப்பு அதிகரிப்பதும், லெபனானில் ஹெஸ்புல்லாவையும் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பை ஈரான் ஆதரிப்பதும், இஸ்ரேல் என்ற நாடு நீடிக்க உரிமையுண்டு என்பதை அங்கீகரிக்க மறுப்பதும், ஈரானின் ராணுவ வலிமையும் தனக்கு ‘தொடர்ச்சியான ஆபத்துகள்’ என்று இஸ்ரேல் கருதுகிறது.

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம்

அதற்கும் முன்னதாக, 2017 டிசம்பர் 6-ல் வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க இதுவே தருணம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்று அறிவித்தார். வாஷிங்டனிலிருந்த பாலஸ்தீன அலுவலகத்தை மூட முடிவெடுத்த அவர், ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறக்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இதற்கும் முன்னால் அமெரிக்க அரசுகளின் நிலை, ‘1967-ல் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்துக்குப் பிறகு எந்தப் பகுதி யாருடையது என்பது தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையிலான பேச்சுகளுக்குப் பிறகே தீர்மானிக்கப்பட வேண்டும்’ என்பதாகவே இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானங்கள் 242 (1967), 338 (1973) இரண்டுமே, ‘ராணுவ பலத்தைக் கொண்டு கைப்பற்றப்பட்ட எந்தப் பகுதியையும் கைப்பற்றிய நாட்டின் பகுதியாக ஏற்க முடியாது. எனவே, இஸ்ரேல் தனது பழைய இடத்துக்குத் திரும்பிவிட வேண்டும்’ என்று வலியுறுத்தின. ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் தீர்மானம் 497 (1981), “கைப்பற்றிய இடத்தின் மீது இஸ்ரேல் விதிக்கும் சட்டங்கள், ஆட்சி வரம்பு, நிர்வாக வரம்பு ஆகிய எதுவும் சர்வதேச சட்ட ஒப்புதல் இல்லாததால் செல்லத்தகாதது, சட்டத்துக்குப் புறம்பானது” என்றது.

யூதர்களைத் திரும்ப அழைக்க மாட்டேன்

ட்ரம்பின் முடிவுகள் அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் உள்நாட்டு அரசியலுடன் தொடர்புள்ளவை. அமெரிக்க யூதர்களில் 65% ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பவர்கள். இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அமெரிக்காவில் அதிகரித்துவந்தாலும், வலதுசாரி குழுக்களுக்கு ட்ரம்ப் அளிக்கும் ஆதரவு காரணமாக ட்ரம்புக்கு ஆதரவு பெருகிவருகிறது. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. அவருக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர்களும் இஸ்ரேலைத் தீவிரமாக ஆதரிப்பவர்களே.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிகவும் கடுமையான போட்டியில் மீண்டும் ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். தனக்கு ட்ரம்ப் மீதிருக்கும் செல்வாக்கால் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட வைக்க முனைகிறார். “மீண்டும் இஸ்ரேல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்குக் கரையில் குடியமர்த்தப்பட்ட யூதர்களைத் திரும்ப அழைக்க மாட்டேன்” என்று தன் நாட்டில் வாக்காளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார். 1979-ல் அமெரிக்க அதிபர் முன்னிலையில் கேம்ப் டேவிட்டில் ஏற்பட்ட, ‘(கைப்பற்றப்பட்ட) நிலத்துக்குப் பதிலாக சமாதானம்’ என்ற ஒப்பந்தத்தை இனியும் ஏற்க முடியாது என்று அதன் மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஆபத்தா?

கோலான் குன்று தொடர்பாக அதிபர் ட்ரம்ப் இப்போது செய்துள்ள அறிவிப்பு எல்லை கடந்து செல்கிறது. அமெரிக்காவின் புதிய நிலைக்கு அதன் மேற்கத்தியக் கூட்டாளிகள் உட்பட எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஈரான், ரஷ்யா, துருக்கி ஆகியவை கண்டித்துள்ளன. அரபு நாடுகளின் எதிர்வினை வலுவாக இல்லை. இதற்கான காரணங்களும் புரிந்துகொள்ளக்கூடியதே.

இப்போதைக்கு இந்திய நலன்களுக்கு நேரடியான ஆபத்து ஏதும் இல்லை. இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு வலிமையாகவும் வளர்ந்துவருகிறது. அதேசமயம், சிரியாவுடன் நல்லுறவையும் இந்தியா பராமரிக்கிறது.

கோலான் குன்றில் உள்ள அமைதிக் காப்புப் படையில் இந்தியப் படையணிகளும் உள்ளன. மேற்காசியப் பகுதியில் புவிசார் அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவு நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தியா மீதும் செல்வாக்கு செலுத்தும் என்பதையே ட்ரம்பின் முடிவு தெரிவிக்கிறது. சர்வதேச உறவுகளில் சட்டங்களின்படியான தீர்வுகளுக்குப் பதிலாக, வல்லரசுகள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளே திணிக்கப்படும் என்பது மிகப் பெரும் விளைவுகளை உண்டாக்கும். ரஷ்யா, கிரீமியா விவகாரத்திலும் அமெரிக்கா இப்படித்தான் நடந்துகொண்டது.

- அருண் கே. சிங், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர்.

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: சாரி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close