[X] Close

யு டர்ன் 14: டி.டி.கே. குழுமம் – நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….


14

  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 12:43 pm
  • அ+ அ-

-எஸ்.எல்.வி.மூர்த்தி

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முக்கிய குழுமம் டி.டி.கே. அண்மைக் காலங்களில் இந்நிறுவனத்தில் யூ டர்ன் நிகழ்த்திக் காட்டியிருப்பவர் சேர்மன் டி.டி. ஜகன்னாதன். இவரும், திருமதி சந்தியா மென்டோன்சாவும் (Sandhya Mendonca) சேர்ந்து எழுதியிருக்கும் Disrupt and Conquer புத்தகம், Penguin Random House 2018 வெளியீடு, இந்தக் கட்டுரையின் முக்கிய ஆதாரம். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

1972. அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக் கழகம் (Cornell University). அதி திறமைமைசாலிகளின் போட்டிக் களமான சென்னை ஐ.ஐ.டி–யில் முதல் மாணவராகத் தங்க மெடல் வாங்கிய ஜகன்னாதன் இங்கே முதுகலை மாணவர். இன்னும் சில மாதங்களில் படிப்பு முடிந்து, லாபம் தேடி ஓடும் இரண்டு தலைமுறைக் குடும்ப பிசினஸில் இணையவும், கை நிறையச் சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளில் சேரவும், அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை.

அறிவுத்தேடலும், ஆராய்ச்சியும்தான் அவர் இலக்குகள். இதற்கு ஏற்றபடி, லாபக் குறிக்கோள் இல்லாமல் இயங்கும், ராண்ட் கார்ப்பரேஷன் (Rand Corporation) என்னும் பிரபல ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

ஜகன்னாதனுக்குக் கார்னெல் வளாகம் மிகப் பிடிக்கும். அதிலும், இப்போது வசந்த காலம், புல்வெளிகள், பச்சைப் பசேல் மரங்கள், பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் – எங்கும் இயற்கையின் எழில் நடனம். இனிப்புக்கு இனிப்பாய் வந்தது ஒரு சேதி. இந்தியாவிலிருந்து அப்பா நரசிம்மனும், அம்மா பத்மாவும் வந்தார்கள்.

முதல் சில நாட்கள். அப்பாவும், அம்மாவும் எதையோ தன்னிடம் பேசத் தயங்குவதுபோல் ஜகன்னாதனுக்கு உள்ளுணர்வு. அவர்கள் இந்தியா திரும்புவதற்கு முந்தைய நாள் இரவு. மூவரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஜகன்னாதனின் சுகானுபவ வசந்தத்தில் அடித்தது சுனாமி.

தொண்டையைக் கனைத்துக்கொண்டு அப்பா கேட்டார், “ஜகன்னாதன். உன் படிப்பு முடியப்போகிறது. என்ன செய்யப்போகிறாய்?”

“முன்னாடியே உங்களிடம் சொல்லியிருக்கிறேனே? ராண்ட் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேரப்போகிறேன்.”

‘‘அது இப்போது முடியாது. நீ உன் படிப்பை நிறுத்திவிட்டு உடனேயே இந்தியா திரும்ப வேண்டும்.”

“அப்படி என்ன பிரச்சினை? நம் குழுமக் கம்பெனிகள் எல்லாம் நன்றாகத்தானே நடக்கின்றன?”

“இல்லை. ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய கடனுக்கு வட்டிகூடக் கட்ட முடியவில்லை. தலைக்குமேல் வெள்ளம். எனக்கும் வயதாகிறது. சமாளிக்க முடியவில்லை.“

“அண்ணா ரங்கநாதன் உங்களுக்கு உதவியாக இருக்கிறாரே?”

‘‘அது நாங்கள் உன்னிடம் இதுவரை மறைத்த இன்னொரு பிரச்சனை. ரங்கநாதன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான்.”

ஜகன்னாதன் தலையில் இடிமேல் இடி. அப்பா கலங்கி அவர் பார்த்ததேயில்லை. அவர் கண்களில் பொங்கும் கண்ணீர். பேச்சில் தடுமாற்றம், மகனின் வருங்காலக் கனவுகளைத் தகர்க்கிறோமே என்னும் குற்ற உணர்வு. ஜகன்னாதன் சிந்தித்தார் - அவர் கனவுகள் முக்கியம். அதைவிட, அப்பா, அம்மாவுக்கு உதவி செய்வது அதிமுக்கியம். தயங்காமல் உடனே பதில் சொன்னார்.

“சரி அப்பா. நான் உடனே இந்தியா வருகிறேன்.”

இடைவெளிவிட்டுத் திரும்பி வந்து படிப்பைத் தொடர, கார்னெல் பல்கலைக்கழகத்தில் அனுமதிப்பார்கள். ஆகவே, சென்னை வந்து குழுமக் குழப்பங்களுக்குத் தீர்வு கண்டபின், கார்னெல் திரும்ப வேண்டும், படிப்பை முடிக்க வேண்டும், ராண்ட் கார்ப்பரேஷனில் வேலைக்குச் சேர வேண்டும். மனம் நிறையத் திட்டங்கள். 24 வயது இளைஞர் சென்னை திரும்பினார்.

** சிவசங்கரி எழுதி, ஏ.வி.எம். தயாரித்த ஒரு மனிதனின் கதை தொலைக்காட்சித் தொடர் மாபெரும் வெற்றி கண்டது. தியாகு என்னும் திரைப்படமாகவும் வெளியானது. இரண்டிலும், ரகுவரன் கதாநாயகன். ரகுவரனின் பாத்திரம் மதுவுக்கு அடிமையாகி 32 வயதில் மறைந்த ரங்கநாதனின் பிரதிபலிப்பு. டி.டி.கே. குழுமத்தின் பாரம்பரியம் ஜகன்னாதன் கண் முன்னே ஓடியது.

டி.டி.ரங்காச்சாரி சென்னையின் பிரபல வழக்கறிஞர். பின்னாட்களில் நீதிபதியாகவும் முத்திரை பதித்தார். 1878–ல் ஹிந்து நாளிதழ் நிறுவிய அறுவருள் ஒருவர். அவருக்கு ஒரே மகன் டி. டி. கிருஷ்ணமாச்சாரி. மகனையும் நீதிதுறையில் ஜொலிக்கவைக்க அப்பா விரும்பினார். மகன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தார். வழக்கறிஞராக விருப்பமில்லை.

துரைசாமி ஐயங்கார் என்பவர் சோப்கள் தயாரிக்கும் லீவர் கம்பெனியின் (இன்று லக்ஸ், ஹமாம், ரெக்சோனா, ஆயுஷ், டவ் சோப்கள், பெப்சோடன்ட், க்ளோஸப் டூத்பேஸ்ட்கள், க்ளினிக் ஷாம்பூ, சர்ஃப் சோப் பவுடர் ஆகியவை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி) விநியோகஸ்தர். டி.டி. கிருஷ்ணமாச்சாரி அங்கே வேலைக்குச் சேர்ந்தார். ‘‘லாயர் ரங்காச்சாரி மகன் இந்தச் சின்னக் கம்பெனியிலா?” என்று அனைவர் புருவங்களும் விரிந்தன.

1928. துரைசாமி ஐயங்கார் மரணம். லீவர் கம்பெனி விநியோக உரிமையைக் கிருஷ்ண மாச்சாரிக்கு மாற்றினார்கள். தன் பெயரிலேயே, டி.டி.கே. அன்ட் கம்பெனி தொடங்கினார். லீவர் தயாரிப்புகளின் விநியோகம் தொடர்ந்தது. கிருஷ்ணமாச்சாரி பக்கா பிசினஸ்மேன். அதுவரை லீவர் தயாரிப்புகள் சென்னையிலிருந்து மட்டுமே தென்னிந்தியா முழுக்க சப்ளை செய்யப்பட்டன.

புதிய முதலாளி ஏராளமான நகரங்களில் முகவர்களை நியமித்தார். விநியோக வீச்சு விரிந்தது. கிராமங்களிலும் லீவர் பொருட்கள் கிடைத்தன. கிருஷ்ணமாச்சாரி தென்னிந்தியா முழுக்க அடிக்கடி பயணம் செய்தார். முகவர்களோடு நட்புறவு வைத்துக்கொண்டார். ஒவ்வொரு வருடமும், ஹிந்து தெய்வங்கள் படம் போட்ட அழகான, பெரிய காலெண்டர்கள் அச்சடித்தார். கஸ்டமர்களுக்குத் தந்தார். படங்கள் பூஜை அறைகளிலும், தயாரிப்புப் பொருட்கள் குளியல் அறையிலும் தவறாமல் இடம் பிடித்தன. பிரமிக்கவைக்கும் விற்பனை வளர்ச்சி.

இந்த வெற்றி கண்டு காட்பரி சாக்லெட்ஸ், பீச்சம் (Beecham – ப்ரில்க்ரீம் தயாரிப்பாளர்கள்) ஆகியோர் டி.டி.கே. கம்பெனிக்கு விற்பனை உரிமை தர ஓடோடி வந்தார்கள். அத்தனை

வாய்ப்புகளையும் கம்பெனி பயன்படுத்திக் கொண்டது. கம்பெனி இப்படி ஓஹோவென்று வளர்ந்து கொண்டிருக்கும்போது, கிருஷ்ணமாச் சாரி ஒரு அதிர்ச்சி முடிவெடுத்தார். அது, அரசியலில் குதிப்பது. சுயேச்சையாக, (அன்றைய) மதராஸ் ராஜதானியின் அசெம்பிளித் தேர்தலுக்கு நின்றார். வென்றார். தற்செயலாக ராஜாஜியோடு சந்திப்பு. காங்கிரஸில் சேர்ந்தார்.

1939. தன் எதிர்காலம் இனிமேல் அரசியல் தான் என்று கிருஷ்ணமாச்சாரி முடிவெடுத்தார். பிசினஸிலிருந்து விலகி நிற்பதுதான் தார்மீகம். அவருக்கு நான்கு மகன்கள். இன்டர்மீடியட் (இன்றைய ப்ளஸ் டூ) படித்துக்கொண்டிருந்த சிறுவன், மூத்த மகன் நரசிம்மனிடம் கம்பெனியை ஒப்படைத்தார்.

நரசிம்மன் கைகளில் கடிவாளம் வந்த ராசியோ என்னமோ, பல திடீர்ப் புயல்கள். கம்பெனியின் முக்கிய வருமானம், லீவர் தயாரிப்புகளிலிருந்து வந்தது. லீவர் நேரடியாக விநியோகம் செய்ய முடிவெடுத்தார்கள். டி.டி.கே – உடனிருந்த ஒப்பந்தம் ரத்து. 1939. இரண்டாம் உலகப் போர் ஆரம்பம். போர் முடியும்வரை, ஆறு ஆண்டுகளுக்கு இறக்குமதிக்குப் பல தடைகள். ப்ரில்க்ரீம்,

காட்பரீஸ் வியாபாரங்களும் படுத்தன. சம்பளம் தரக்கூடப் பணமில்லை. நரசிம்மன் வங்கிகளிடம் கடன் வாங்கினார். 1946. இருட்டில் கொஞ்சம் வெளிச்சம். அமெரிக்காவின் ஸெய்மூர் (Seymour) கம்பெனி, பாண்ட்ஸ் பவுடர், கெல்லாக் (Kellogg) காலை உணவுகள், கிராஃப்ட் சீஸ் (Kraft Cheese) ஆகியவற்றின் தென்னிந்திய விநியோக உரிமையை டி.டி.கே-க்குத் தந்தார்கள். இந்த உந்துதல் காரணமாக நரசிம்மன் ஏராளமான வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏஜென்சி எடுத்தார். விரைவில், சுமார் 150 அயல்நாட்டுப் பிரபலத் தயாரிப்புகள் அவர் வசம்.

1952. நேருஜி அமைச்சரவையில் கிருஷ்ணமாச் சாரி தொழில், வணிக அமைச்சரானார். நாட்டில் அந்நியச் செலாவணிப் பிரச்சினை. டி.டி.கே. விற்பனை செய்த பெரும்பாலான பொருட்களின் இறக்குமதியை அரசு தடை செய்தது. நரசிம்மன் தடைக்கல்லைப் படிக்கல்லாக்கினார். பாண்ட்ஸ் பவுடர், உட்வேர்ட்ஸ் கிரைப்வாட்டர், ப்ரஸ்டீஜ் பிரஷர் குக்கர், வாட்டர்மேன் இங்க் ஆகிய நான்கு பொருட்களையும் இந்தியாவில் தயாரிக்க, அயல்நாட்டுக் கூட்டுறவோடு நவீனத் தொழிற் சாலைகள் தொடங்கினார்.

இவை தவிர, 1960 – களில் அவர் தொடங்கிய புதிய தொழிற் சாலைகள் – ஆணுறைகள் (Condoms) தயாரிக்கும் மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி, தேசப்படங்கள் (Atlas) உருவாக்கும் மேப்ஸ் அன்ட் அட்லஸஸ், பனியன்கள் நெய்யும் டான்டெக்ஸ், பெட்ரோல் சுத்திகரிக்கும் கெமோலியம்ஸ் (Chemoleums). இவை எல்லாமே, தொலைநோக்குத் தொழில்கள், அன்றைய காலத்தின் நிதர்சனத்தை மிஞ்சிய தொழில்கள்.

ஆகவே, விற்பனை சூடு பிடிக்க, லாபம் வரப் பல வருடங்களாகும் நிலை. வங்கிகள் கடன் தர மறுத்தார்கள். லேவாதேவிக்காரர்களிடம் 40 சதவிகித வட்டியில் கையேந்தும் கட்டாயம். வட்டி விஷமாக ஏறியது குழுமத்தின் பிசினஸ் விஷயங்களை ஜகன்னாதன் ஆழமாகப் படிக்கத் தொடங்கினார்.

அதிர்ச்சி. கடன் சுமை 10 கோடி ரூபாய் (இன்றைய மதிப்பில் சுமார் 740 கோடி.) பிசினஸ் தற்காலிகச் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து தான் ஜகன்னாதன் சென்னை வந்தார். இங்கோ… ஆழம் தெரியாத புதைகுழியில் இருப்பதை உணர்ந்தார். தாத்தா தொடங்கிய கம்பெனி, அப்பா நிர்வகிக்கும் கம்பெனி.

வாங்கியிருக்கும் கடன்களைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், அது வெறும் பிசினஸ் பிரச்சினையல்ல. குடும்பத்தின் மானப் பிரச்சினை. வீடு தீப்பற்றி எரிகிறது. இது சில மாதங்களில் தீரப்போவதில்லை. சில வருடங்கள் ஆகலாம். சுயநலக் கார்னெல் கனவுகள் இனிச் சாத்தியமில்லை. சொந்த ஆசைகளுக்குக் குட்பை சொன்னார். இனி ஒரே ஒரு ஆசைதான் – டி.டி.கே. கம்பெனியைக் கரையேற்ற வேண்டும்.

(புதிய பாதை போடுவோம்!)

-slvmoorthy@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close