[X] Close

நெகிழி பூதம் 10: விஷ வாயு கக்கும் ஞெகிழிப் பதாகைகள்


10

  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 12:33 pm
  • அ+ அ-

-கிருஷ்ணன் சுப்ரமணியன்

வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால், எங்கு பார்த்தாலும் விளம்பரப் பலகைகள். கடை பெயர் எழுதியிருக்கும் பலகை, சிக்னல்களில் கண்ணை உறுத்தும் மிகப் பெரிய விளம்பரங்கள், நண்பனின் திருமணத்துக்கு விநோதக் குழுக்களின் பெயர்களில் ஃபிளெக்ஸ் வாழ்த்துப் பதாகை, கட்சிப் பெரும் தலைவர்களை வரவேற்கும் பதாகைகள், இப்படி அனைத்துமே இன்றைக்கு ஃபிளெக்ஸ் எனப்படும் பி.வி.சி. பதாகைகளாக மாறிவிட்டன. தகர, எஃகு பெயர்ப் பலகைகள் காலாவதியாகிவிட்டன. தேர்தல் நேரத்தில் ஃபிளெக்ஸ் பதாகைகள் எப்படிப் பெருகும் என்பதற்குத் தனிக் கணக்கு தேவையில்லை.

எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும்போதும், பயன்படுத்தும்போதும், தூக்கி எறியும் போதும் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகளை அது ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே நமது குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப்போகிறோம் என்பது முடிவாகிறது. அப்படிப் பார்த்தால் இந்த ஃபிளெக்ஸ் பதாகைகள் நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கேலிக்கூத்தாகும் ஒரு பொருளாகவே உள்ளது.

பி.வி.சி. எனும் நச்சு ஞெகிழி

ஒரு ஃபிளெக்ஸ் பதாகை மூன்று முக்கியப் பொருட்களால் ஆனது, Poly Vinyl Chloride (PVC), Calcium Carbonate, Polyester. இதில் குறிப்பாக பி.வி.சி. எனும் ஞெகிழியை ஆய்வாளர்கள் நச்சு ஞெகிழி என்றே குறிப்பிடுகின்றனர். காரணம், மற்ற ஞெகிழிகளைவிட இதை எரிக்கும்போதுதான் டையாக்சின் என்ற நச்சு வாயு மிக அதிகமாக வெளிவருகிறது. டையாக்சின் உணவுச் சங்கிலிக்குள் புகுந்து நம்மைக் காலகாலத்துக்கும் நோயாளியாக்கும், புற்றுநோயைத் தூண்டும் தன்மை கொண்டது.

நம் பையில் வைத்துள்ள கிரெடிட் கார்டு, குழந்தைகள் கையில் உள்ள பொம்மைகள், தண்ணீர் பைப்புகள் போன்றவை பெரும்பாலும் பி.வி.சி. கொண்டு தயாரிக்கப்படுபவையே. இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்குச் சராசரியாக 2.5 கிலோ பி.வி.சி. ஞெகிழி தயாரிக்கப்படுகிறது. அத்தனையும் சில மாதங்களிலோ சில ஆண்டுகளிலோ மக்காத பொருளாகத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது நச்சு வாயுவைக் கக்கும் பொருளாக எரிக்கப்படுகின்றன. உலக நாடுகள் பல பி.வி.சி.யால் செய்யப்படும் பொம்மைகளையும் பால் புட்டிகளையும் தடை செய்துள்ளன. நாமோ குழந்தையின் காதணி விழாவுக்கு ஃபிளெக்ஸ் பதாகை அடிப்பது முதல் அந்தப் பதாகையை உள்ளூர் குப்பைக் கிடங்கில் எரித்து, அதில் உருவாகும் நச்சு வாயுவை காற்றில் விட்டு குழந்தைகளின் வாழ்வில் நச்சைக் கலந்துகொண்டிருக்கிறோம்.

தடைகள்

பொதுமக்களுக்கு இடையூறாக ஃபிளெக்ஸ் பதாகைகள் வைக்கக் கூடாது என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஃபிளெக்ஸ் பதாகைகளின் சுற்றுச்சூழல் கேடுகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தடை செய்யுமாறு அரசுக்கும் சுற்றுசூழல் அமைச்சகத்துக்கும் பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. கர்நாடகம், சத்தீஸ்கர், கேரளம் போன்ற மாநிலங்கள் ஞெகிழித் தடையுடன் ஃபிளெக்ஸ் பதாகைகளையும் தடைசெய்துள்ளன.

ஆனால், தமிழக ஞெகிழித் தடையில் ஃபிளெக்ஸ் பதாகைகள் சேர்க்கப்படவில்லை. அரசு தடை செய்யவில்லை என்பதற்காக, நம் உடல் நலனை நாமே அழிவுக்குத் தயார்படுத்த முடியுமா? நம் வாரிசுகள் ஆரோக்கியமாக வாழ இந்தப் புவியைத் தகுந்த சூழலுடன் விட்டுச்செல்ல வேண்டிய கடமை  நமக்கு இருக்கிறது. அரசுத் தடைகளால் மட்டுமே புவியைக் காப்பாற்றிவிட முடியாது.

மாற்று பொருட்கள்

பி.வி.சி. பதாகைகள் நம் ஊரை ஆக்கிரமிக்கத் தொடங்கியதற்கு முன்பு துணிப் பதாகைகளும், காகிதப் பதாகைகளும், நீடித்து உழைக்கும் எஃகு, தகரம் போன்ற உறுதியான பதாகைகளுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. அவையே இதற்குச் சிறந்த மாற்று. தற்போது பி.வி.சிக்குப் பதில் பாலிஎத்திலீன் மூலம் செய்யப்படும் பிளெக்ஸ் பதாகைகளும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

இது மக்காது, ஆனால் சற்றே எளிதாக மறுசுழற்சி செய்யக்கூடியது. ஆனால், நம் நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையே மறுசுழற்சி என்ற பெயரில் மீண்டும் மீண்டும் புவியின் ஆற்றல் வளத்தை வீணடிக்கும் வேலைதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குச் சிறந்த மாற்று குறைந்த காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் சாத்தியமுள்ள சூழலுக்கு ஒவ்வாத பொருட்களை உருவாக்காமல் இருப்பதும் விலக்கி வைப்பதும்தான்.

கட்டுரையாளர்,

துணிப்பை பிரசாரகர்

தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close