[X] Close

அதிபரான சூழலியல் போராளி


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 12:28 pm
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியாவின் அதிபர் தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. லிபரல் கட்சியைச் சேர்ந்த சூசானா கபுட்டோவா அதில் வெற்றி பெற்றதோடு, அந்த நாட்டின் வரலாற்றில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

45 வயதே நிரம்பிய சூசானாவுக்கு வழக்குரைஞர், ஊழல் எதிர்ப்பாளர், சூழலியல் போராளி எனப் பல அடையாளங்கள் இருந்த போதும், அரசியலில் அவருக்கு அனுபவமோ அடையாளமோ கிடையாது. இருந்தாலும் ’நீதிக்கான போராட்டத்தை’ முன்னிறுத்திய அவருடைய தேர்தல் பரப்புரை, குறுகிய காலத்திலேயே ஸ்லோவாகியாவின் அசைக்க முடியாத ஆளுமையாக அவரை மாற்றியது. இந்தத் தேர்தலில் 58.4 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மாரோஸ் செபகோவிக்கை வென்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கபுட்டோவா.

55 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஸ்லோவாகியாவில், இதுவரை அதிபர் பதவி ஓர் அலங்காரப் பதவியாகவே இருந்துவந்தது. அங்கு அதிகாரம் அனைத்தும் நாட்டின் பிரதமரான பீட்டரிடமே உள்ளன. நாட்டை ஆள்பவராகவும் வழிநடத்துபவராகவும் அவரே உள்ளார். ஆனால், முறைகேடான சட்டத்தைத் தடை செய்யும் அதிகாரமும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரமும் மட்டுமல்லாமல் நாட்டின் ராணுவத்தை வழிநடத்தும் பொறுப்பும் அதிபரிடமே இருப்பதால், சூசானா பதவியேற்ற பின்னர், நாட்டின் நிலையில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்று அந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

யார் இந்த சூசானா?

மத்திய ஸ்லோவாகியாவின் பெஸிநாய்க் நகரில், உழைக்கும் வர்க்கக் குடும்பம் ஒன்றில் சூசானா பிறந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கும் அவர், விவாகரத்தானவர். தன்னுடைய அன்றாட வாழ்வே பெரும் போராட்டமாக இருந்த நிலையில், சமூகத்துக்காகவும் சூழலியலுக்காகவும் தொடர்ந்து அவர் போராடினார். 2016-ல் தனது சொந்த ஊரில் நிலத்தில் நச்சுப்பொருட்கள் நிரப்பப்படுவதை எதிர்த்து மிகப் பெரும் சூழலியல் போராட்டத்தை முன்னெடுத்தார். அது மட்டுமல்லாமல், தனது ஊரில் சட்ட விரோதமாக நிலத்தில் நஞ்சை விதைத்த செல்வாக்கு படைத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தினார்.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இதற்காக வழக்குகளைத் தொடுத்தார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எண்ணற்ற புகார் கடிதங்களை எழுதினார். இவருடைய எழுச்சி மிகுந்த, சுயநலமற்ற சூழலியல் நலனுக்கான முன்னெடுப்புப் போராட்டங்கள், உலகின் மதிப்புமிக்க ‘கோல்ட்மேன் என்விரான்மெண்டல்’ விருதை 2016-ல் பெற்றுத் தந்தது. இந்தத் தன்னலமற்ற போராட்டங்கள் காரணமாக ஸ்லோவாகிய மக்கள் அவரை ‘Erin Brockovich’ (அமெரிக்க பெண் சுற்றுச்சூழல் போராளி) என்று அன்புடன் அழைக்கின்றனர்.

தேர்தலில் போட்டி

ஸ்லோவாகியாவின் அரசியல்வாதிகளுக்கும் அந்நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஜன் குசியாக் என்ற புலனாய்வுப் பத்திரிகையாளர் கடந்த பிப்ரவரியில் ஆய்வு நடத்தினார். அப்போது தன்னுடைய காதலியுடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொடூர மரணங்கள் நாட்டில் மிகப் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தின. அந்தப் படுகொலைகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான தொடர்பு மக்களை அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தது.

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, நாட்டின் அதிபர் பதவி விலகினார். தேர்தலும் அறிவிக்கப்பட்டது. எல்லா மக்களையும் போல் சூசானாவையும் இந்தப் படுகொலைகள் வெகுவாகப் பாதித்தன. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட, அதிபர் தேர்தலில் தானே போட்டியிடுவது என சூசானா முடிவுசெய்தார். ஸ்லோவாகிய நாடாளுமன்றத்தில் ஒருவரைக்கூட உறுப்பினராகக் கொண்டிராத தாராளவாத முற்போக்குக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிட்டார்.

எப்படி வென்றார்?

ஊழலை ஒழிப்பேன் என்பதே சூசானாவின் முக்கியத் தேர்தல் முழக்கமாக இருந்தது. அரசியல் கட்சிகளோடு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளையும் வழக்குரைஞர்களையும் பதவியில் இருந்து அகற்றுவேன் என்று மேடைகளில் துணிந்து முழங்கினார். தன்பால் உறவாளர்கள் திருமணமும், குழந்தைகளைத் தத்தெடுப்பதும் சட்டவிரோதமாக உள்ள அந்த நாட்டில், அதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை சூசானா கொண்டுள்ளார்.

கருக்கலைப்பைச் சட்ட விரோதமாகக் கருதும் நாட்டில், கருக்கலைப்பு பெண்களின் உரிமை என்று தனது தேர்தல் பரப்புரைகளில் தொடர்ந்து அறிவித்தார். அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாத காரணத்தால், மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து அவர் தனித்துத் தெரிந்தார். அரசியல் ஆதாயத்துக்காகப் பொய் பேசாமல், உண்மையைப் பேசினார். எந்த வேட்பாளரையும் தரக்குறைவாக அவர் பேசவில்லை. எதிரிகளின் குறைகளைக் கண்ணியமாகவே விமர்சித்தார்.

உலகின் நம்பிக்கை

சமூகத்தின் மீதான அவரது இயல்பான அக்கறையும் சூழலியல் மீதான அவரது அளவற்ற நேசமும் மனிதாபிமானம் நிறைந்த அவரது எளிமையும் மக்களைக் கவர்ந்தன. தங்களில் ஒருவராக மக்கள் அவரைக் கருதினார். தங்கள் வருங்காலத்தை மாற்றியமைக்கப்போகும் ஆற்றல் அவரிடம் உள்ளதாக மக்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ஓட்டாக மக்கள் வெளிப்படுத்தினார்கள். அரசியலில் அனுபவமற்ற அவருக்கு வரலாறு சிறப்புமிக்க வெற்றியை அளித்து, தங்கள் நாட்டின் அதிபர் இருக்கையில் அமரவைத்துள்ளனர்.

மக்களின் நம்பிக்கையை சூசானா காப்பாற்றுவாரா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல முடியும். ஆனால், சூசானாவின் போராட்டம் நிறைந்த கடந்த கால வாழ்வு, இனி நல்லதே நடக்கும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. சூசானாவின் இந்த மகத்தான வெற்றி ஸ்லோவாகியாவுக்கு மட்டுமல்லாமல், வலதுசாரிகளின் பிடியில் சிக்கியிருக்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close