[X] Close

டிங்குவிடம் கேளுங்கள்: விலங்குகளால் சிரிக்க முடியுமா?


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 14:24 pm
  • அ+ அ-

காரமாகச் சாப்பிடும்போது கண்களிலும் மூக்கிலும் தண்ணீர் வருகிறதே ஏன், டிங்கு?

– வெ. யுவன் ஆதித்யா, 7-ம் வகுப்பு, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தருமபுரி.

மிளகாய் விதைகளில் கேபசைசின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நாம் காரம் அதிகமான உணவைச் சாப்பிடும்போது, நாக்கில் தீப்பிடித்ததுபோல் எரிச்சல் உண்டாகிறது. உதடு, நாக்கு, மூக்கு போன்ற பகுதிகளில் சீதமென்சவ்வுப் (mucous membrane) படலம் அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறது.

அந்நியப் பொருட்களைத் தடுப்பது இவற்றின் முக்கியப் பணி. நாம் காரமாக உணவு சாப்பிடும்போது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்குக் காரம் இருக்கிறது என்பதை நம் மூளை எச்சரிக்கிறது. உடனே அந்தக் காரத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சீதமென்சவ்வுப் படலம் நீரைச் சுரக்கிறது. அதனால் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்களிலிருந்தும் நீர் வெளியேறுகிறது.

சீதமென்சவ்வு மூலம் இந்தத் தகவல் குடலுக்கும் செல்கிறது. குடல் கேபசைசினை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. அதிகமான காரத்திலிருந்து குடலைக் காக்க, நீரைச் சுரந்து பேதியாக வெளியேற்றிவிடுகிறது. காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டால், உடனே குளிர்ந்த பாலைப் பருகலாம், யுவன் ஆதித்யா.

மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியுமா, டிங்கு?            

– மு.ஜோ. திரிசாந்த், 6-ம் வகுப்பு, ஸ்ரீகந்தசாமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி, மதுரை.

இல்லை, திரிசாந்த். மனிதர்களைப்போல் இன்னும் சில விலங்குகளும் சிரிக்கின்றன. இவை சிரிப்பதுபோல் குரலை எழுப்புகின்றன, அல்லது பற்களைக் காட்டிச் சிரிக்கவும் செய்கின்றன. குரங்கு இனங்களில் சிம்பன்ஸி, கொரில்லா, மனிதக் குரங்கு, ஒராங்ஊத்தான் போன்றவை குரல் மூலமாகவும் பற்களைக் காட்டியும் சிரிக்கின்றன. விளையாடும்போது, மகிழ்ச்சியாகத் துரத்தும்போது, கிச்சுக்கிச்சு மூட்டும்போது சிரிப்பை வெளிப்படுத்துகின்றன.

மனிதர்களைப்போலவே சிம்பன்ஸிக்கும் அக்குள், வயிறு போன்ற பகுதிகளில் கிச்சுகிச்சு மூட்டினால் சிரிப்பு வரும். எலிகளின் தோலில் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டினால் சிரிப்பு வரும். பிற எலிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடும்போது எலிகள் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. நாய்கள் சில நேரம் மனிதர்களைப் போன்றே சிரிக்கும் ஒலியை எழுப்புகின்றன. ஓங்கில்களும் (டால்பின்) மகிழ்ச்சியை வெளிப்படுத்த, சிரிப்பு ஒலியை வெளிப்படுத்துகின்றன.

tinku 2.jpg 

கன்னத்தில் கை வைத்தால் கவலை என்று ஏன் சொல்கிறார்கள், டிங்கு?

– மா. மதுமிதா, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது இப்படி ஓரிடத்தில் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க மாட்டோம். கவலை, பயம் போன்றவை ஏற்படும்போது, அதை எப்படிச் சமாளிப்பது என்ற நினைப்பில் அப்படியே ஓரிடத்தில் அமர்ந்துவிடுவோம். தலை குனிய நினைக்கும். அதைத் தடுக்கும் விதத்தில் கையைக் கன்னத்தில் வைத்து, யோசித்துக்கொண்டிருப்போம். அதனால்தான் கன்னத்தில் கை வைத்தால், கப்பல் கவிழ்ந்துவிட்டதா என்று கேட்பார்கள், மதுமிதா.

நம் உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான உறுப்பு மூளையா, இதயமா, டிங்கு?

– மா. கோவர்த்தணன், 5-ம் வகுப்பு, டாக்டர் எஸ்.ஆர்.கே பள்ளி, ஆரணி.

மூளைதான் நம் உடலின் தலைமைச் செயலகம். உடலில் உள்ள செல்கள் அனைத்தும் நரம்புகள் மூலம் மூளையுடன் இணைந்துள்ளன. இவற்றின் மூலம் 24 மணி நேரமும் மூளைக்குத் தகவல்கள் செல்கின்றன. மூளையும் அந்தத் தகவல்களை ஆராய்ந்து, உடல் உறுப்புகளுக்குத் தகவல் அனுப்புகிறது. இப்படித் தகவல் அனுப்புவதும் பெறுவதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதால்தான் உயிர் வாழ்தலே சாத்தியமாக இருக்கிறது. அதனால் உடல் சீராக இயங்க மூளையே காரணம், கோவர்த்தணன்.

யானை ஏன் காதுகளை அசைத்துக்கொண்டிருக்கிறது, டிங்கு?

- இன்பா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது யானை தன் பெரிய காதுகளை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டிருக்கும். இப்படிக் காதுகளை அசைக்கும்போது அது தோலில் மோதி, சத்தம் உண்டாக்கும். இந்தச் சத்தம் மற்ற யானைகளுக்குத் தகவல் பரிமாற்றம். வெயில் அதிகமாக இருக்கும்போது, உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் காதுகளை அசைக்கிறது யானை, இன்பா.

tinku 3.jpg

எனக்கு 13 வயது. கீழே விழுந்ததில் இரண்டு முன் பற்கள் உடைந்துவிட்டன. மீண்டும் பற்கள் முளைக்குமா, டிங்கு?        

– எம். அபிகா, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

இரண்டு முறைக்கு மேல் பல் விழுந்தால் முளைக்காதா, டிங்கு?

– ஜெ. கவிஸ்ரீ, 7-ம் வகுப்பு, ஸ்ரீவாகிச வித்யாசரம் பள்ளி, ஸ்ரீரங்கம்.

பால் பற்கள்தான் விழுந்த பிறகு முளைக்கும். நிலையான பற்கள் விழுந்தால் முளைக்காது, கவிஸ்ரீ. கவலை வேண்டாம், உடைந்த பற்களை எடுத்துவிட்டு செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொள்ளலாம், அபிகா.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close