[X] Close

அன்பாசிரியர் 41: கனகசபை- அரசுப் பள்ளியை பசுமைத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்!


41

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 14:06 pm
  • அ+ அ-

-க.சே.ரமணி பிரபா தேவி

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் அரிச்சந்திரபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்குள் நுழைந்தாலே ஏசி அறைக்குள் செல்வதுபோல இருக்கும் என்று சொன்னவர்கள் பலர். அந்த அளவுக்கு மூலிகைகளாலும் மரங்கள், செடி, கொடிகளாலும் நிரம்பிக் கிடக்கிறது பள்ளி வளாகம்.  கொடி பசலை, சித்தரத்தை, சிறு குறிஞ்சான், சர்க்கரைக் கொல்லி, வெட்டி வேர், திருநீற்றுப் பச்சிலை, ஆடாதோடை, கருந்துளசி, ஆமணக்கு, வல்லாரை, அகத்தி, வெற்றிலை, இஞ்சி, அத்தி என எக்கச்சக்கமான மூலிகைகளின் வாசம் அந்த இடத்தையே ரம்மியமாக்கியுள்ளது.

'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்று சுவர்களில் வாசகங்கள் எழுதி வைப்போம்; மாணவர்களுக்கு சொல்லியும் கொடுத்திருப்போம். ஆனால் அந்தச் சொல்லைச் செயலாக மாற்றும் எண்ணம் எப்படி வந்தது?

பசுமைத் தோட்டம் குறித்தும் தன்னுடைய ஆசிரியர் பயணம் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் அன்பாசிரியர் கனகசபை.

''12-ம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். நமக்கு ஆசிரியப் பணிதான் என்று முடிவுசெய்து, ஈடுபாட்டோடு படித்தேன். 1987-ல் அரசுப் பணி கிடைத்தது. 89-ல் வடபாதி மங்கலம் என்னும் ஊரில் ஆசிரியராக வேலையில் சேர்ந்தேன். இயற்கையாகவே வேளாண்மையில் ஆர்வம் என்பதால், தென்னை, புங்கை, தேக்கு உள்ளிட்ட மரங்களையும் மூலிகைகளையும் உருவாக்கினோம்.

செடி, மரங்களை மாணவர்களே அக்கறையுடன் பராமரிப்பர். சனி, ஞாயிறுகளில் அவ்வப்போது வந்து தண்ணீர் பாய்ச்சிவிட்டுச் செல்வேன். வாரக் கடைசியில் ரெக்கார்டு நோட் திருத்துவது, சிறப்பு வகுப்புகள் எடுப்பது, மாணவர்களுடன் விளையாடுவது என்று பொழுது போகும். செவ்வந்தி, அரளி, மல்லிகை உள்ளிட்ட பூ வகைகளையும் வளர்த்தோம். தினந்தோறும் 1 ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு பூக்களை மாணவிகள் வாங்கிக்கொள்வர்.

பொது நிதி

அப்போது நோட்டுகளை எல்லாம் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். நாங்களே பள்ளியில் நோட்டுகளை விற்பனை செய்வோம். அதில் கிடைக்கும் லாபம், டிசி கொடுப்பதற்கு வாங்கும் பணம், அதேபோல பூ, காய்கறி, தேங்காய் ஆகியவை மூலம் கிடைக்கும் தொகை ஆகிய அனைத்தையும் பொது நிதியில் சேர்த்துவிடுவோம். அந்தப் பணத்தை ஆண்டு முழுவதும் சேகரித்து, ஆண்டு விழாவின்போது மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குவோம்.

3.jpg 

மாமரத்தில் இருந்து மேசை, நாற்காலிகள்

ரெடிமேட் மர நாற்காலிகள்கூட அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத காலகட்டம் அது. பள்ளிக்கு மேசை, நாற்காலிகள் தேவைப்பட்டன. வடபாதி மங்கலத்தில் உள்ள சர்க்கரைத் தொழிற்சாலையை அணுகி, மிகப்பெரிய மாமரங்கள் மூன்றை இலவசமாக வாங்கி வந்தோம். அவற்றை அறுத்து, மேசைகள், நாற்காலிகள், மாணவர்களுக்கான பெஞ்ச்கள் ஆகியவற்றை உருவாக்கினோம். 20 வருடங்கள் கடந்தும் அவை இன்னும் உறுதியாக இருக்கின்றன.

2006-ல் ஓகைத் தேரையூர் என்னும் பகுதியில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது. அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாகப் பணியாற்றி,  நடுநிலைப் பள்ளியாக்கும் முயற்சியில் இறங்கினோம். தனிப்பட்ட வகையில் முயற்சித்து பள்ளிக்கான இடத்தை மருத்துவர் ஒருவரிடமிருந்து பேசிப் பெற்றேன். கட்டிடத்துக்கும் அனுமதி வாங்கி, 2009-ல் பள்ளியைத் தரம் உயர்த்தினோம்.

காலை 9.30 மணிக்கு பிரேயர் முடிந்த பின், கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்துவேன். முந்தைய நாள் ஆசிரியர்கள் என்ன பாடம் நடத்தினார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் கேட்பேன். என்ன படித்தார்கள் என்று ஆசிரியர்களிடம் கேட்கப்படும். பெற்றோர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டும் பேசுவேன்.

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையும் அருகிலுள்ள கோயில் சன்னிதானத்தில் வைத்து மாணவர்களுக்கு சொந்த செலவில் கொண்டைக்கடலை சுண்டல் வழங்குவது வழக்கம். தனியார் கணினி பயிற்சி மையத்தின் உதவியுடன் வாரத்துக்கு 3 நாட்கள் கணிப்பொறி வகுப்பு எடுக்கப்பட்டது. ஞாயிறன்று மாணவர்களுக்கு பழைய படங்களை போட்டுக்காட்டுவோம். இதன்மூலம் கிராம மக்களுக்கு என்மீது பாசம் அதிகமானது.

’போகாதீங்க சார்’- மறியல் நடத்திய பொதுமக்கள்

நன்றாய்ப் போன ஆசிரியப் பணியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 12-ம் வகுப்பு முடிக்காதவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியாக முடியாது என்று 2012-ல் அரசாணை வந்தது. நான் போகக்கூடாது என்று கிராம மக்கள் 100 பேர் மறியல் நடத்தினர். பள்ளியின் கேட்டை இழுத்து மூடி, ''கனகசபை சார் இங்கதான் இருக்கணும்'' என்று போராட்டம் நடத்தினர். அந்த நாளை என்றுமே மறக்க முடியாது. ஆனாலும் அரசு உத்தரவுப்படி ஓகைத் தேரையூர் ஆரம்பப் பள்ளிக்கு மாறினேன்'' என்று கடந்த கால நினைவலைகளுக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார் அன்பாசிரியர் கனகசபை.

f5eddcd9-c64e-49f0-bfda-ec8582411378.jpg 

அரசாணைக்கு எதிரான வழக்கு போட்டு அதில் வெற்றி பெற்ற அன்பாசிரியர் கனகசபை, 2014-ல் தான் படித்த அரிச்சந்திரபுரம் அரசுப் பள்ளிக்கே தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். இதுகுறித்துப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்ளும் அவர், ''வார்த்தைகளால் விளக்க முடியாத தருணம் அது. கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக உழைக்க முடிவெடுத்தேன்.

பள்ளிக்கு ப்ரொஜெக்டர் வாங்கினோம். கல்வி சீர்வரிசை பெறப்பட்டது. மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்காக ஆர்.ஓ. பொருத்தியுள்ளோம். பசுமையை வளர்க்கும் பள்ளிகளுக்கு அரசு ஆண்டுதோறும் 5 ஆயிரம் ரூபாயை வழங்குகிறது. அந்தவகையில் அந்தப் பணத்தையும் மரம், செடிகளின் பராமரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதேபோல கடந்த முறை பசுமைப்படை விருதும் ரூ.10 ஆயிரம் ரொக்கமும் எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு மூலிகைத் தோட்டத்தை மேம்படுத்தினோம்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் கனகசபை.

எப்படி மூலிகைத் தோட்டத்தை அமைக்கும் எண்ணம் வந்தது என்று கேட்டால், ''பள்ளி மைதானத்தைச் சுற்றிலும் புங்கை மர இலைகள் கீழே விழுந்து கிடக்கும். அது குப்பை மேடாகக் காட்சி அளித்தது. அவற்றின்மீது தண்ணீர் தேங்கும்போது கொசுக்கள் உற்பத்தி ஆகின. அவற்றைச் சுத்தப்படுத்திய போதும் குப்பைகள் சேர்ந்துகொண்டே இருந்தன. அந்த இடத்தில் தோட்டம் போட்டு, உரமாகக் குப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று யோசித்து, செயல்படுத்தினோம். அப்படித்தான் மூலிகைத்தோட்டம் உருவானது.

மாணவர்களே அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்கின்றனர். வார இறுதிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பார்த்துக்கொள்கின்றனர். கீரைகளையும் பிற காய்கறிகளையும் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் பயன்படுத்திக் கொள்கிறோம். சுழற்றி அடித்த கஜா புயல், எங்களின் மூலிகைத் தோட்டத்தையும் நாசமாக்கிவிட்டது. இப்போதுதான் அவற்றை மீட்டுவருகிறோம்.

24tytvr14 school.jpg

பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களின் குழந்தைகளே இங்கு அதிகம் படிக்கின்றனர். ''எங்க பசங்களை நல்லா பார்த்துக்கறீங்க சார்'' என்று அவர்களும் பள்ளிக்கு நன்கொடை அளிப்பார்கள். அவர்களின் நிலை புரிந்து வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார்கள்.

 '100 நாள் வேலை' பார்க்கும் பெண் ஒருவர், 1000 ரூபாயைப் பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுத்தார். வேண்டாம் என்றபோது, ''என் ரெண்டு பொண்ணுங்களும் உங்க ஸ்கூல்லதான் எல்லாமே கத்துக்கறாங்க சார். ஆளுக்கு 500 ரூபாய்னு நான் ஆசப்பட்டு கொடுக்கறத வேணாம்னு சொல்லாதீங்க'' என்னும்போது, மறுக்க முடிவதில்லை.

தற்போது அறிவியல் ஆய்வகப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை. கணினி ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் தனித்திறனை வளர்க்க வேண்டும். இவற்றை நனவாக்கப் பணம் தேவைப்படுகிறது. அறிந்தவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், விரைவில் கனவுகளை நிஜமாக்குவோம்'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் அன்பாசிரியர் கனகசபை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close