[X] Close

தடைகளைத் தாண்டி: கடத்தப்பட்ட பெண்ணின் சாதனை வெற்றி


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 17:38 pm
  • அ+ அ-

-க்ருஷ்ணி

பொள்ளாச்சி சம்பவம் பலரையும் உலுக்கியிருக்கும் நிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்த விவாதங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சி.ஏ. படிப்புக்குத் தேர்வாகியிருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பவானியின் வெற்றி கவனிக்கத்தக்கது. காரணம் 13 வயதில் பாலியல் விடுதியிலிருந்து மீட்கப்பட்டவர் இவர்.

உலக அளவில் குழந்தைகளும் பெண்களுமே அதிக எண்ணிக்கையில் கடத்தப்படுகின்றனர். இவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிலாளர்களாகவும் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். பவானி, அம்மாவாலேயே கடத்தப்பட்டுப் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்.

தன்னுடன் பிறந்தவர்களையும் தன் அம்மாதான் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது பவானியின் உலகம் இரண்டாகப் பிளந்தது. சிறு வயதிலேயே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட அவர், தன் வாழ்க்கையில் வெளிச்சம் வரும் எனக் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஒவ்வொரு நாளும் நரகமாகக் கழிய, ஹைதராபாத் மீட்புக் குழு வடிவில் பவானியின் வாழ்க்கையில் விடியல் பிறந்தது. சமூக ஆர்வலர்களின் உதவியோடு 13 வயதில் மீட்கப்பட்டவர்தான் இப்போது சி.ஏ. மாணவியாக உயர்ந்திருக்கிறார்.

தளராத உறுதி

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை மீட்பதற்காக ‘ப்ரஜ்வலா’ என்ற அமைப்பை நடத்திவரும் சுனிதா கிருஷ்ணன், பவானியின் இந்தப் போராட்டம் குறித்து முகநூலில் எழுதியிருக்கிறார்.

“உணர்வுகளால் திக்குமுக்காடிவிட்டேன். எங்கள் குழந்தைகளில் ஒருவர் சி.ஏ. படிப்புக்குத் தேர்வாகியிருக்கிறார். யாருடைய உதவியும் இன்றி கல்வி ஒன்றையே இலக்காக வைத்து, நான்காவது முயற்சியில் பவானி தேறியிருக்கிறார்” என்று சுனிதா கிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

பவானியை மீட்ட அந்த நாளை மறக்க முடியாது என சுனிதா குறிப்பிடுகிறார். “வாடிக்கையாளருடன் இருந்த அந்த 13 வயது சிறுமியைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அந்தச் சிறுமியின் அம்மாவே அவளைக் கடத்த உதவியிருக்கிறார் என்பதை அறிந்து உறைந்துவிட்டோம். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக அந்தச் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாள்” என்கிறார் சுனிதா.

பவானியைக் கருவியாக வைத்தே அவருடைய இரண்டு சகோதரிகளையும் பாலியல் தொழிலிலிருந்து மீட்டனர். மறுவாழ்வு இல்லத்தில் தங்கவைக்கப்பட்ட பவானி, பாதுகாப்புக்காரணங்களுக்காகப் பத்தாம் வகுப்புத் தேர்வைத் தனித்தேர்வராக எழுதினார். தற்போது கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துவரும் அவர், கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்கிறார்.

ஆதரவுக்கரம் நீட்டுவோம்

வாழ்வையே உருக்குலைத்துப் போட்டுவிடுகிற சூழலிலிருந்து மீட்கப்பட்ட பிறகும் அந்த நாட்களின் வலியையும் வேதனையையும் எளிதில் கடந்துவிட முடியாது. அசைக்கவே முடியாத உறுதி இருந்தால் மட்டுமே இப்படியொரு வெற்றி சாத்தியம். பவானி, இறந்த காலத்தைப் புதைத்துவிட்டு எதிர்காலத்தைத் திறம்பட வடிவமைக்க உறுதியெடுத்திருக்கிறார். அதைத்தான் அவரது இந்த வெற்றியும் உணர்த்துகிறது.

“சரியான நேரத்தில் மீட்கப்படுவது, முழுமையான புனர்வாழ்வு, பற்றிக்கொள்ள ஆதரவான கரங்கள் ஆகிய மூன்றும் இருந்தாலே போதும். பாலியல் தொழிலிலிருந்து மீட்கப்பட்ட சிறுமியை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லலாம்” என்கிறார் சுனிதா.

பவானியின் வெற்றி, கலங்கரை விளக்கமாக ஒளிர்கிற அதேநேரம் வேறொரு உண்மையையும் உணர்த்துகிறது. பவானியைப் போல் லட்சக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். கடத்தப்படுகிறவர்கள் அனைவரும் மீட்கப்படுவதில்லை.

மீட்கப்படுகிறவர்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதில்லை. ஆள்கடத்தலைத் தடுக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் குழந்தைகளும் பெண்களும் கடத்தப்படுவது தொடர்கிறது. இப்படியொரு சூழலில் நம் குழந்தைகளை மட்டுமல்ல; நம் கண்ணில்படுகிற குழந்தைகளையும் பாதுகாக்கும் பொறுப்பையும் நாம் ஏற்போம்.சூழல் காப்போம்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close