[X] Close

பிச்சாவரம் போலாமா?


pichavaram-polama

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Apr, 2018 13:10 pm
  • அ+ அ-

பிச்சாவரம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், இன்னும் கூட பலருக்குத் தெரியாது. ‘அட... எம்.ஜி.ஆரால ஃபேமஸ் ஆச்சேப்பா. இதயக்கனி படம் கூட ஷூட்டிங் எடுத்தாங்காளேப்பா’ என்று சொன்னதும் ஆமாம்யா ஆமாம் என்பார்கள்  எல்லோரும்!

கடலூர் மாவட்டத்தில், சிதம்பரத்துக்கு அருகில் உள்ளது பிச்சாவரம். வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதி இது. சிதம்பரத்தில் இருந்து கிளம்பிச் செல்லும் போது, பிச்சாவரத்தை நெருங்க நெருங்க நமக்குள் ஓர் கேள்வி எழும். ‘இது தமிழ்நாடுதானா’ என்று. சதுப்புநிலக்காடுகளும்  மாங்க்ரோவ் காடுகளுமாக இணைந்தும் பிணைந்துமாக இருக்கிற அழகிய தீவுதான், பிச்சாவரம். எங்கு திரும்பினாலும்  மரங்கள், மரங்கள், மரங்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியை இந்த மரங்கள் வழங்கும் போதே, சில்லென்ற காற்று, தீவு நீரில் பட்டு, காற்றில் கலந்து நம் உடலுக்கு இதம் தரும் போது, ‘அடடா... சொர்க்கம் சொர்க்கம்’ என்று சிலாகித்து மெய்ம்மறக்காதவர்களே இருக்கமுடியாது.

உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு என்று கொண்டாடுகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். புன்னை வகையில் ஒன்றான சுரபுன்னை மரங்கள் அதிகம் வளர்ந்திருக்கின்றன. குளம் போலவும் ஏரி போலவும் ஆறு போலவும் அழகு காட்டி, குளுமை கூட்டி இருக்கும்  இந்தச் சூழலை, இன்னும் ரம்மியமாக்க, வியப்பூட்ட, மகிழ்வூட்ட, படகுச் சவாரியும் உண்டு.

சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ. பயணித்தால் போதும்... கிள்ளை எனும் கிராமம் வருகிறது. இந்தக் கிள்ளை கிராமத்தையொட்டிதான், வரம் வாங்கி வந்த பூமியாகத் திகழ்கிறது  பிச்சாவரம். சுள்ளென்று அடிக்கிற கோடை வெயிலுக்கு, இங்கே ஒருநாள் போய் வருவது, உடலுக்கும் குளிர்ச்சி. மனதுக்கும் மலர்ச்சி.

சென்னை, புதுச்சேரி, கடலூர் வழியே வருபவர்கள், சிதம்பரம் வருவதற்கு முன்னதாகவே உள்ள பி.முட்லூரில் இருந்து கிளை பிரிந்து செல்லும் வழியே பயணித்து, பிச்சாவரத்தை அடையலாம்.

காலை 8 மணிக்கெல்லாம் பிச்சாவரத்தில் இருந்தால், மதியத்துக்குப் பிறகு கிளம்பினால் சரியாக இருக்கும். சுற்றிப்பார்க்கவோ வயதானவர்கள் கஷ்டப்பட்டு மூச்சுமுட்ட நடக்கவோ மாதிரியான இடங்கள் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். கொஞ்சம் கொறிப்பதற்கும் மதிய உணவுக்கும் வரும் வழியிலேயே  ஏதேனும் வாங்கிச் சென்றால், கொஞ்சம் செலவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

படகுச் சவாரிக்கும் அதிக கட்டணமெல்லாம் இல்லை. கொஞ்சம் குளுமை, நீர்வழி போக்குவரத்து, படகில் சவாரி என கொஞ்சம் செலவில் அதிகமாவே கிடைக்கும் ரிலாக்ஸ். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைத்திருக்கிறார்கள். டீக்கடையும் ஹோட்டலும் இருக்கின்றன.

மாலை 5 மணி வரைதான் படகுச் சவாரிக்கெல்லாம் அனுமதி. பிச்சாவரம் என்றாலே படகுச் சவாரிதான் மெயின். எனவே காலையில் வெயில் ஆரம்பிக்கும் முன்பே அங்கே போய்விட்டு, வெயில் இறங்கி ஓயும் போது பிச்சாவரத்தில் இருந்து வெளியே வந்தால்... அதுவே நம் வாழ்வின் ஆகச்சிறந்த பிக்னிக்... அந்த பிச்சாவரமே  நமக்கான வரம்... என்று சொல்லிப் பூரிக்கத் தொடங்கிவிடுவோம்!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close