[X] Close

பியூட்டி பார்லர்... ஆபத்தா?


beauty-parlour

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 11:29 am
  • அ+ அ-

 - ஜெமினி தனா

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதெல்லாம் பழைய மொழி. இல்லாத அழகும் பார்லரில் கிடைக்கும் என்பது புதுமொழி. மை விழியாள்... மீன் விழியாள்.. என்ற வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டு, இன்றைய  மஸ்காரா போட்டு மயக்கும் கருவிழிதான் ஹைலைட்!

 மார்க்கெட்டில் வரும்  அழகு சாதனங்களை, மாத பெட்ஜெட் இடித்தாலும்   வீட்டு அலமாரியில் இடம்பிடித்து விடுகின்றன.  இதில்  லோயர், அப்பர் மிடில் க்ளாஸ் பெண்கள் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை.

என்னதான் வீட்டுச் சாப்பாடு நல்லது என்றாலும் ஹோட்டல் ருசிக்கு நாக்கு அலைகிறதுதானே. அதேபோல் என்னதான் வீட்டில் ஃபேஷியல் செய்தாலும், பார்லருக்குச் சென்று வந்தால்தான், ஒரு நிம்மதி; கூடுதல் அழகு என்பதான உணர்வு.

அழகு நிலையங்களில் செய்யப்படும் ப்ளீச்சிங், ஃபேஷியல், பெடிக்யூர், மெனிக்யூர் எல்லாம் தனிச் செலவு. சொல்லப்போனால் தனித்தனிச் செலவு.

பரபரப்பாக  அலுவலகத்தில் முழுஈடுபாட்டுடன் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையில், ’என்னடி இது... இவ்ளோ சீக்கிரமே நரைமுடி வந்துருச்சு. ‘டை’ போட்டுக்கடி’ என்று தோழி ஒருத்தி சொல்லிவிட்டால் போதும்... அந்த வேலை அப்படியே கிடப்பில் போடப்படும். ஏதோ ஒருவித பயம் உள்ளே தொற்றிக்கொள்ளும். ‘நமக்கு வயசாயிருச்சோ!’ என்று கலவரமாவார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

தயங்கித் தயங்கி, ‘ஹேர் டை’ என்று பார்லரில் சொன்னால் போதும்... ’அம்மோனியா இல்லாத  ஹேர்டை தான் நாங்க யூஸ் பண்றோம். உங்க சருமம் பாதிக்கப் படக் கூடாதுன்னு அவ்ளோ அக்கறை எடுத்துக்கறோம்’ என்று சொல்லும்போது, டிவியில் வரும் எல்லாப் பொருட்களின் விளம்பர வசனங்களைப் போலவே அதுவும் இருக்கும்!

இங்கே ஒருவிஷயம் பெண்களே... ‘ஒரு முறை... ஒரேயொரு முறை... என்கிற சாய்ஸெல்லாம் ‘ஹேர் டை’ விஷயத்தில் இல்லை. தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்வது என்பார்களே! அது தலைமுடி விஷயத்துக்கும் பொருந்தும்.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம், பெண்கள் தலைமுடியை வெட்டிக்கொள்கிற பழக்கமெல்லாம் இல்லை. அல்லது பரவலாக அறியப்படவில்லை. கூந்தல் என்பது கலாச்சார, பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் என பின்னிப்பிணைந்திருந்தது. இப்போது காலம் மாறிப் போய், முடி ஸ்டைலும் மாறிவிட்டன.

யூ கட், வி கட், க்ராஸ் கட், ஸ்ட்ரெய்ட் கட், கலரிங் என எக்கச்சக்க பெண்கள்... ஏகப்பட்ட வெரைட்டிகள். என்னதான் கட் பண்ணினாலும் என்னவிதமான கட்டிங் பண்ணிக்கொண்டாலும், பொதுவாகவே பெண்கள் தலைமுடியை விரித்துப்போட்டது மாதிரி வைத்துக்கொள்வதும் காற்றில் அது பறக்க நடப்பதும்தான் இன்றைய தேதிக்கு டிரெண்ட். உடனே இதற்கு ஹேஷ்டேக்கெல்லாம் போட்டுவிடாதீர்கள். இது... ‘ஹேர்டாக்’!

‘சரி... வாழ்க்கைல ஒருதடவை, பார்லருக்குப் போய், ஃபேஷியல் பண்ணிக்குவோமே’ என்று ஆசைப்பட்டு செல்பவர்களுக்கு, ஊரில் இருந்து பெற்றவர்களிடம் இருந்து கூட அத்தனை போன்கால்கள் வந்திருக்காது. ஆனால், மாதந்தோறும் மெசேஜ், போன்கால், ‘மேடம், நீங்க ஃபேஷியல் பண்ணி ஒருமாசமாச்சு. வரலியா மேடம். வாங்க மேடம்’ என்று வெற்றிலைப் பாக்கு வைப்பது போல கையில் க்ரீம் கிண்ணம் வைத்துக்கொண்டு வரவேற்பார்கள்.

டீன் ஏஜ் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலரும் ஆளாளுக்கு ஒரு பியூட்டி பார்லருடன் ‘டைஅப்’பில் இருக்கிறார்கள். ’ஹலோ... இன்னிக்கி சாயந்திரம் வரலாமா?’ என்பார்கள். ‘அடடா... பெங்களூர்ல ஒரு மேரேஜ் ஃபங்ஷன். செம ஆஃபர். அங்கே ரெண்டுநாள் ஒர்க் முடிச்சிட்டுதான் வருவேன்’ என்று சொன்னால், அதுவரை காத்திருப்பார்கள். அந்தக் காலத்தில் டெய்லர், மளிகைக்கடை, சைக்கிள் பஞ்ச்சர் கடை என்று ரெகுலராக இருந்தது போல, ஃபேமிலி டாக்டர் போல, பேமிலி பியூட்டி பார்லர்கள் என மைண்ட் செட்டாகி இருப்பவர்கள் ரொம்பவே அதிகம்.

கன்னத்தில் வந்திருக்கும் பருவில் தொடங்கி கால் பாதத்தில் வந்திருக்கும் வெடிப்பு வரைக்கும் ஆல் இன் ஆல் ப்யூட்டி பார்லர்காரர்கள்தான், இவர்களுக்கு எல்லாமே!

இந்த நிலையில், பேக்கேஜ் ஆஃபர் கூட வந்துவிட்டன. ஃபேஷியல் மட்டும் செய்து கொண்டால், ஒரு ரேட். அத்துடன் இரண்டு விஷயங்கள் என்று பேக்கேஜாக செய்துகொண்டால் சலுகைகள் என கவர்ச்சிகரமாக இழுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதையெல்லாம் விட முக்கியம்... கல்யாணம், சடங்கு, ரிசப்ஷன் என விழாக்களில், பியூட்டி பார்லர்களின் பங்கு வெகுவாகிவிட்டன. அவரவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப பெண்ணுக்கு மட்டுமா அல்லது வரும் அனைவருக்கும் மெஹந்தி இட வேண்டுமா? என்று ஒட்டு மொத்த அலங்காரத்துக்கும் மெகா பேக்கேஜ் பேசப்படுகிறது. விழாவுக்கு வரும் குழந்தைகள் தொடங்கி பாட்டியம்மா வரை அனைவருக்கும்  அவரவரவர்களுக்கேற்ப க்ரீம், ஐ லைனர், ஐலேஷஷ், மஸ்காரா, பிளஷ், க்ரீம், ரோஸ் பவுடர் பட்டி பார்த்து சுண்ணாம்பு அடிப்பது போல் சருமத்துக்கேற்ற சர்வீஸ் செய்யப்படுகிறது.

’ப்ப்ப்ப்பா...’ என்று விஜய்சேதுபதி ஸ்டைலில் சிலருக்கு அமைந்துவிடுவது,, காமெடி கலாட்டாவாக முடியும்.

விழாவின் நாயகி... அதாவது மணமகள்,  பத்து நாட்களுக்கு முன்பே பார்லரின் கண்ட்ரோலுக்கு வந்துவிடுகிறாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை  அழகாக்கப்படுகிறாள். ’பச்சைத்தண்ணில குளிக்கணுமா? வெந்நீர் எப்ப உபயோகப்படுத்தணும்?’, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள் எப்பலாம் எடுத்துக்கணும் என்றெல்லாம் சொல்லி, ‘ஹேர்டேக்கர்’கள் ‘கேர்டேக்கர்களாகவே மாறிவிடுவார்கள். ஆனால் என்ன... இப்படியான செலவுகளில், இரண்டு பவுன் தங்கமே வாங்கிவிடலாம்டா சாமீ!

பியூட்டி பார்லர் போவது தவறா?

தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? தன்னை அழகாக்கிக் கொள்வதிலும், மெருகேற்றிக் கொள்வதிலும் எல்லோருக்கும் உரிமையும் உண்டு. ஆசையும் இருக்கிறது. அழகாக வளைய வரும்போது தன்னம்பிக்கை கூடுகிறது என்பது உண்மைதான். அதேநேரம் அடிக்கடி பார்லருக்கு சென்று  ஃபேஷியல் செய்வதும் க்ரீம்களும் அப்போதைக்கு முகத்துக்கு பளபளப்பு கூட்டலாம். ஆனால், அழகு சாதனப் பொருட்களின் வியாபார வேகத்தில், தரமற்ற பொருட்களும், எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிற ரசாயனப் பூச்சுகளும் அதிகரித்துவருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அழகு அழகான விஷயம்தான். ஆனால் அதேசமயம் அழகு ஆபத்தில் முடியும் என்று சொல்வதும் நினைவிருக்கிறதுதானே. அதைவிட முக்கியமாக, அழகு படுத்திக்கொள்வதிலேயே ஆபத்து வரும் என்பதையும் உணர்ந்து பயன்படுத்துவோமே!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close