[X] Close

'மகளிர் மட்டும்' மூக்கன்கள்... உங்கள் ஆபீசில் இருக்கிறார்களா? அதிகரித்து வரும் அலுவலக செக்ஸ் டார்ச்சர்கள்


office-sex-torchar-magalir-mattum-mukkangal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Apr, 2018 18:40 pm
  • அ+ அ-

அந்தப் பெண்ணுக்கு கைநிறைய சம்பளம். சொல்லப்போனால், லட்சத்தில்தான் சம்பளம் வாங்கினாள். ஆனால் திடீரென்று ஒருநாள் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள்.

இதேபோலத்தான் இன்னொரு பெண். ஆனால் அவளுக்கு கார்டு வழிய சம்பளமும் இல்லை. கைநிறைய சம்பளமும் கிடையாது. ஆனாலும் அந்தப் பெண், ஒருநாள் முடிவெடுத்தாள். அடுத்தநாள் முதல் வேலைக்கு வரவில்லை.

அந்தப் பெண்ணுக்கோ அளவிட முடியாத சம்பளம். இந்தப் பெண்ணுக்கோ கிள்ளிக்கொடுப்பது போலான சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே பிரச்சினை. பாலியல் பிரச்சினை.

வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டுமா? அப்படியெனில் மேலதிகாரியின் ஜொள்ளு விடுகிற எச்சிலைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவனின் கழுகுப்பார்வையையும் காதல் பிதற்றலாகச் சொல்கிற ஐ லவ் யூக்களையும் ஏற்றுக் கொள்வது தவிர, வேறு வழியே இல்லை. அந்தப் பெண் பணக்காரப் பெண். இவளோ பரம ஏழை. ஆனால் என்ன... இருவருமே பெண்.... அந்தத் தகுதி மேலதிகாரிகளுக்குப் போதுமானதாக இருக்கிறது.

நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்... எல்லா விஷயத்திலும் ஜாதி பார்க்கிறார்கள். ‘என் ஜாதியே உயர்ந்தது’ என்று பீற்றிக் கொள்வார்கள். சாதீயச் சிந்தனையுடனும் செயலுடனும் எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களையும் அணுகுவார்கள். ஆனால் செக்ஸ் என்று வருகிற போது, இச்சை என்பது தலையெடுக்கிற போது, காம வக்கிர புத்தி கண் விழிக்கிற போதெல்லாம், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ஜாதியை, கீழே இறக்கிவைத்துவிடுகிறார்கள் என்பார். பெண்ணை பாலியலுக்கு உட்படுத்துகிற வேளையில், இவர்கள் ஜாதி புடலங்காய், புண்ணாக்கெல்லாம் பார்ப்பதே இல்லை. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் சினிமாத் துறை வரை, ஆய்வுக்கூடங்கள் முதல் அரசியல் வரை எல்லா இடங்களிலும் அங்கிங்கெணாதபடி நீக்கமற நிறைந்திருக்கின்றன... பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகளும் மிரட்டல்களும்.

‘தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் என்னைப் படுக்கைக்கு அழைத்தனர்’ என்று ஒரு நடிகை சமீபத்தில் குமுறிக் கொட்டியிருந்தார். ‘என்னை நிர்வாணமாக வீடியா சாட்டிங் செய்யச் சொன்னார்கள்’ என்று வெடித்துக் கதறியிருந்தார்.  

நடிகையின் பேட்டியை பரபரப்பாகத்தான் பார்த்தார்கள். நடிகையும் பெண் தானே என்பதை ஏனோ மிகச்சுலபமாக மறந்துவிடுகிறோம்.

ஒழுக்கமீறல்கள் குறித்து இங்கே நிறைய எல்லைக்கோடுகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். சாதீய அடிப்படையில், பொருளாதார அடிப்படையில், நகரத்தில், பெருநகரத்தில், கிராமத்தில், பட்டிக்காட்டில் என்றெல்லாம் ஒழுக்கமீறல்கள் குறித்து தனித்தனி வியாக்கியானங்கள் உளறிக்கொட்டப்படுகின்றன.

இங்கே... ஆணுக்கும் ஆணுக்கும் வருகிற சண்டையில் வெளிப்படும் கெட்ட வார்த்தையில் பெண்களே இழிவுபடுத்தப்படுகிறார்கள். தனக்கு மசியாத பெண், கற்புடன் வாழ்பவளாக பார்க்கப்படுவதே இல்லை. ‘அவங்கிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேசுறே’ என்று அவளை உரசிப்பார்க்கிற ஈனபுத்தியுடன் அவள் ஒழுக்கத்தையே நசுக்கிச் சிதைக்கிற டெக்னிக்கைக் கையாள்கிறார்கள்.  

பாலியல் பிரச்சினை. ஒற்றை வார்த்தையில் இதைக் கடந்துவிடமுடியவில்லை. ஆஷிபாக்களுக்கும் நிர்பயாக்களுக்கும் நடக்கிற கொடூரங்களின் ஆரம்பப்பள்ளிதான் செக்ஸ் டார்ச்சர். ‘படிச்ச படிப்புக்கு உண்டான வேலையும் வேணாம், ஒருமண்ணும் வேணாம்’ என்று பொருளாதாரத்தையே தூக்கிப் போடுகிறாள். ‘நல்லாப் படிக்கத்தான் முடியல. கிடைச்ச வேலையாவது பாத்து வயித்தைக் கழுவலாம்னு பாத்தா, இங்கே நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு சாவடிக்கிறானுங்களே...’ என்று அரைவயிற்றுக் கஞ்சி கிடைத்த வேலையையும் கடாசி எறிகிறாள்.

ஓடினாள்.

ஓடினாள்.

வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.

என்ற பராசக்தியின் வசனம், இன்னும் நூற்றாண்டுகள் பல கடந்தாலும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்... கல்யாணிகள்! 

பணியிடங்களில் பாலியல் தொந்தரவு என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத கருப்புப் பக்கங்கள்.

எவையெல்லாம் பாலியல் தொந்தரவு?

1. உடன் பணிபுரியும் பெண்ணை ஆபாசமாகப் பார்ப்பது.

2. உடன் பணிபுரியும் பெண்ணை ஆபாசமாக விமர்சிப்பது.

3. உடன் பணிபுரியும் பெண்ணிடம் இடிப்பது போலவும் உரசுவது போலவும் வருவது.

4. உடன் பணிபுரியும் பெண்ணிடம் ‘அந்த’ மாதிரி விஷயங்களையே பேசுவது.

5. உடன் பணிபுரியும் பெண்ணிடம், பாலியல் உறவுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ தூண்டுவது.

6. ஆபாசமான புகைப்படங்களையோ அல்லது வீடியோவை பெண்களிடம் காட்டுவது.

7. செல்போன் மூலமாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ ஆபாச குறுந்தகவல்கள் அனுப்புவது.

8. ஒரு பெண்ணின் அங்கங்களை விமர்சிப்பது.

9. உடன் வேலைப் பார்க்கிற பெண்ணைப் பாராட்டுவது போல, தட்டிக் கொடுப்பது போல, உற்சாகப்படுத்துவது போல, முதுகில் தட்டுவது, கன்னத்தைக் கிள்ளுவது, பின்பக்கத்தில் அடிப்பது.

10. அலுவலகத்தில் யாருமற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணுடன் உடலுறவுக்கு இசைவு தெரிவிக்க வலியுறுத்துவது. ஆசையாகவும் கோபமாகவும் இணங்கச் சொல்லித் துன்புறுத்துவது.

இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் விசாகா நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

விசாகா நெறிமுறைகளா... அப்படீன்னா?

ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதைத் தொடர்ந்து அங்கே பெண்கள் இயக்கம் வெகுண்டெழுந்தது. உறுதியுடன் போராடியது. அதையடுத்து பெண்ணுரிமைக்கான இயக்கங்கள் திரண்டன. உச்ச நீதிமன்றத்தில், விசாகா எனும் கூட்டமைப்பின் சார்பில், பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை வழக்காக எடுத்துக் கொண்டது சுப்ரீம் கோர்ட். 1997ம் ஆண்டு, பணியிடங்களில் பாலியல் தொல்லை என்றால் என்னென்ன என வரையறுத்து, அவற்றை எப்படியெல்லாம் கையாளவேண்டும் என்றெல்லாம் வகுத்துக் கொடுத்தது. அது... விசாகா நெறிமுறைகள் என்று அழைக்கப்பட்டன. இன்றைக்கும் அந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, வழிமுறைப்படுத்தப்படுகின்றன.

விசாகா நெறிமுறைகள் என்னென்ன?

1. பணியிடத்தில் பாலின சமத்துவம் வழங்கவேண்டும்.

2. அலுவலகங்களில், பெண்களுக்கு பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

3. அரசியல் சாசனம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

4. பாதுகாப்பான வேலைச்சூழல் என்பது பணிபுரியும் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை.

5. பணியிடத்தில் ஆண் பணியாளர்களுடன் எந்த வகையிலும் பெண் பணியாளர்கள் ஒப்பிடப்பட்டு ஒடுக்கப்படக் கூடாது.

6. எக்காரணத்தைக் கொண்டும் பெண்களின் எண்ணிக்கையைக்  குறைக்கக் கூடாது. அப்படி ஒரு நிறுவனத்தில் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் (எ.கா. காவல்துறை, ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு), அது முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.

இப்படியான விசாகா நெறிமுறைகள் பெண்களுக்காகவும் பெண்களின் நலனுக்காகவும் பெண்களின் அலுவல் சூழலின் பாதுகாப்பிற்காகவும் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக, எல்லா நிறுவனங்களும் இதுதொடர்பாக புகார் குழு ஒன்றை அலுவலகங்களில் உருவாக்க வேண்டும். அதன் தலைவராக பெண்ணே இருக்க வேண்டும். அந்தக் குழுவில் குறைந்தபட்சம் பாதியளவு உறுப்பினர்கள் பெண்களாகவே இருக்க வேண்டும்.

பெண் பணியாளர்களை பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்துபவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை நிறுத்தி வைக்கலாம். பாலியல் புகார் அளிக்கும் பெண் பணியாளருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறதா என்பதுதான் கேள்விக்குறி. இத்தகைய விசாகா குழு அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

முதலாளி அல்லது நிர்வாகத்தின் கடமைகள்

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதுடன் வேலையிடத்திற்கு வரும்நபர்களிடமிருந்தும் பாதுகாப்பளிப்பது முதலாளி அல்லது நிர்வாகத்தின் கடமை என்று சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட விசாகா நெறிமுறை வலியுறுத்துகிறது.

மேலும், அந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழு மற்றும் தண்டனை குறித்த விவரங்களை அனைவரின் பார்வைக்கும் உரிய இடத்தில் காட்சிப் படுத்திட வேண்டும். அதாவது நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படவேண்டும். இதுமட்டுமா? இச்சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டங்களை அலுவலகங்களில் நடத்தவேண்டும்.

புகார்க் குழுவின் செயல்பாட்டிற்கு உகந்த சூழலை அலுவலக நிர்வாகம் உருவாக்கித் தரவேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது நாளுக்கு நாள் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும், எல்லா அலுவலகங்களிலும் நடக்கிற இந்த அட்டூழியங்களுக்கு கடும் சட்டங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி என்கிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்கள்!

அபராதம்

இந்தச் சட்டம் அலுவலகங்களில் அமலாக்கப்படுவது மட்டுமின்றி உறுதியாக செயல்படவும் வேண்டும். அதனால்தான் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டம் வலியுறுத்தி எச்சரிக்கிறது.

புகார் குழுக்களின் அவசியம்

பாலியல் தொல்லை என்பதை வரையறை செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. பாலியல் சீண்டல், அல்லது ஆபாசமான பேச்சு ஆகிய புகார்களை இந்தியக் குற்றவியல் சட்டப்படி காவல்நிலையத்துக்கு மாற்றிவிட முடியும். ஆனால், வெறித்துப் பார்க்கிறார் என்பதோ, மேலதிகாரி அவரது மேஜையில் அட்டைப்படத்தில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் வார, மாத இதழ்களை வேண்டுமென்றே பார்வையில்படும்படி வைத்திருக்கிறார் என்பதோ இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படிநேரடியாகத் தண்டிக்க முடியாவிட்டாலும் விசாகா குழுவின் வரம்பிற்குள் இந்தப் பிரச்சினைகளைக் கொண்டுவரமுடியும். 

இத்தனை சட்டம் இருந்தும் பணியிடங்களில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள்தான் ஆஷிபாவை வன்புணரும் அளவுக்கு வக்கிரபுத்தி கொண்டவர்களாக வளர்கிறார்கள் என்பது வெட்கக்கேடான உண்மை.

மகளிர் மட்டும் என்றொரு படம். கம்ப்யூட்டர் டிசைனர், ஸ்டெனோ கிராபர், ஹவுஸ்கீப்பிங்... அதாவது மேல்தட்டு, நடுத்தர, கீழ்த்தட்டு பெண்களுக்கு நேர்கிற பாலியல் கொடுமைகளை, மூக்கன் என்கிற மேலதிகாரியின் செக்ஸ் டார்ச்சர்களை, சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, சிந்திக்க வைத்திருப்பார்கள். இதிலென்ன காமெடி என்றால்.... அப்படிச் சிந்தித்தவர்கள் மகளிர்மட்டும்தான்! மூக்கன்களுக்கு ஏனோ மரமண்டையில் படவே இல்லை.

பிணம் தின்னும் கழுகுகள் போல், காம, உடலியல், செக்ஸ் வக்கிரக் காமாந்தகர்களுக்கு, அவர்களின் மனசாட்சி தண்டனை கொடுக்காது. ஏனெனில் அந்த கீழ்ப்புத்திக்காரர்களுக்கு, மனமே இல்லை. சட்டங்கள்தான் கைகொடுக்கவேண்டும். சட்டங்களுக்குள்தான் அலுவலக நியதிகளும் கட்டுப்பாடுகளும் கூட இருக்கின்றன!

ஆஷிபா இறந்துவிட்டாள். ஆனால், செக்ஸ் டார்ச்சர் கொடுமைகளுக்கு ஆளாகி, ஆயிரக்கணக்கான ஆஷிபாக்கள், இன்றைக்கும் இருக்கிறார்கள்... நடைபிணங்களாக!

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close