[X] Close

‘இளையராஜாவை பாத்ததுல பாரதிராஜாவையே மறந்துட்டான்!’ – ஆர்.சுந்தர்ராஜன் குறித்து கே.பாக்யராஜ்


rsundarrajan-ilayaraaja-bhagyaraj

இளையராஜா - ஆர்.சுந்தர்ராஜன்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Feb, 2019 18:16 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இளையராஜாவைப்  பாத்துக்கிட்டே இருந்தான் ஆர்.சுந்தர்ராஜன். அதுல பாரதிராஜா சார் வந்ததையே மறந்துட்டான்’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் கலகல நினைவுகளைத் தெரிவித்தார்.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதன்முதலாக இயக்கிய படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. மோகன், பூர்ணிமா ஜெயராம், பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.வி.சேகர் முதலானோர் நடித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1982ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. இன்றுடன் 37 வருடங்களாகிவிட்டன. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அத்தனைப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதிலும் ‘இளையநிலா பொழிகிறதே’ என்ற பாடல், இன்றைக்கும் முக்கால்வாசிபேரின் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிற பாடலாக அமைந்திருக்கிறது. மேலும் காலர் டியூன், ரிங்டோன் என்றும் இருப்பதைக் கேட்கலாம்.

முதல்படம் வெள்ளிவிழாப் படம். 200 நாட்களைக் கடந்தும், 400 நாட்களைக் கடந்தும் ஓடி, பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது இந்தப் படம். இன்றைக்கு எந்த இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், குறும்படம் எடுத்துவிட்டு, திரைத்துறைக்கு வந்து, வெற்றிவாகை சூடிய இயக்குநர்கள் பலர் உண்டு. ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற முதல் படத்தை மட்டுமின்றி, அடுத்தடுத்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் எவரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு விஷயம்… இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இருவருமே கோவைக்காரர்கள். மேலும் இருவருமே சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.

ஆர்.சுந்தர்ராஜன் குறித்து நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், விழா ஒன்றில்  அவரைப் பற்றிப் பேசினார்.

‘ஆர்.சுந்தர்ராஜன் என் பால்ய நண்பன். இருவருமே சேர்ந்து சினிமாக் கனவுகளுடன் சுற்றியிருக்கிறோம். நிறைய நாடகங்கள் போட்டிருக்கிறோம். ஆர்.சுந்தர்ராஜன் நாடகத்துக்கு ரிகர்சல் பண்ணுவதே அவ்வளவு தமாஷாக இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை குசும்பு கொப்புளிக்கும்.

நான் சென்னைக்கு வந்து, அப்படி இப்படி என்று அலைந்து திரிந்து, ஒருவழியாக பாரதிராஜா சாரிடம், சேர்ந்துவிட்டேன். ’16 வயதினிலே’ பட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்போது, இந்தப் படத்தின் செய்திகளை பேப்பரில் பார்த்துவிட்டு, என்னைப் பார்க்க வந்தான் சுந்தர்ராஜன்.

‘டேய் பாக்யா. எனக்கு ஒண்ணும் வேணாம்டா. இளையராஜாவை ஒரேயொரு தடவை பாக்கணும்டா. ஏற்பாடு பண்ணு’ என்றான். அதன்படி, இளையராஜா சார், ’16 வயதினிலே’ படத்துக்கான டியூன்களைப் போடுவதற்காக வந்திருந்தார். சுந்தர்ராஜனை அழைத்துக்கொண்டு சென்றேன். அங்கே, இளையராஜாவைப் பார்த்தான். பார்த்தவன் பார்த்தவன்தான். இமைக்காமல், அங்கே இங்கே திரும்பாமல் இளையராஜாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில், பாரதிராஜா சார் உள்ளே வந்தார். வந்ததும் சுந்தர்ராஜனைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். ‘என் நண்பன்’ என்று ஜாடையில் சொன்னேன். சுந்தர்ராஜனை உசுப்பினேன். ம்ஹூம்… திரும்பவே இல்லை அவன். இளையராஜாவையே பாத்துட்டிருந்தான். என்னை எரிப்பது போல் பார்த்துவிட்டு,விறுவிறுவென வெளியே சென்றார் பாரதிராஜா சார்.

பின்னாலேயே ஓடினேன். ‘யாருய்யா அவன்?’ என்றார். ‘என் பால்ய நண்பன் சார். இளையராஜாவைப் பாக்கணும்னு சொன்னான். அதான்… சார்…’ என்று இழுத்தேன். ‘டியூன் போட்டுட்டிருக்கும் போது, அவன் சம்பந்தமே இல்லாம உள்ளே இருக்கான். முதல்ல அவனை வெளியே கூட்டிட்டுப் போ’ என்று கடும் கோபத்துடன் சொன்னார் டைரக்டர் சார்.

திரும்பவும் உள்ளே வந்து, ஒருவழியாக சுந்தர்ராஜனை உலுக்கி, உசுப்பி, வெளியே அழைத்துவந்தேன். ‘என்னடா நீ… இப்படிப் பண்ணிட்டே. டைரக்டர் சார் வந்தது கூட தெரியாம உக்காந்துட்டிருக்கே. அவர் கன்னாபின்னானு திட்டுறாருடா’ன்னு சொன்னேன். ஆனா, அவன் காதுல எதுவுமே விழலை. ‘இளையராஜாவைப் பாத்த சந்தோஷத்துல அப்படியே இருந்துட்டேண்டா. எதுவுமே கண்ணுக்குத் தெரியலடா’ன்னு அந்த நினைவுலயே இருந்தான் சுந்தர்ராஜன்.

அதுக்கு அப்புறம், ஆர்.சுந்தர்ராஜன் முதல் படம் பண்ணும்போது, எந்த இளையராஜாவை ஒருதடவையாவது பாக்கணும்னு ஆசைப்பட்டானோ, அதே இளையராஜா கூட வேலை செஞ்சு, எல்லாப் பாட்டுகளையும் செம ஹிட்டாக்கினான். அதுக்குப் பிறகும் நிறைய படங்கள் அவர் கூட பண்ணினான். ஆத்மார்த்தமா, முழு ஈடுபாட்டோட ஒர்க் பண்ணுவான் சுந்தர்ராஜன். அதான் இவ்ளோ பெரிய வெற்றியும் உயரமும் அடைஞ்சிருக்கான்’.

இவ்வாறு தன் நண்பன் ஆர்.சுந்தர்ராஜன் குறித்து, கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close