[X] Close
 

எனக்கொரு மகள் இருந்தாள்.. இன்னொரு மகளும் இருக்கிறாள்..


ode-to-kathua-chid

  • பாரதி
  • Posted: 14 Apr, 2018 14:36 pm
  • அ+ அ-

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவளைப் பற்றி அவளைப் பெற்றெடுத்த தாய் "என் மகள் ஆடு மேய்க்கப் போகும்போது மான் போல துள்ளிச் செல்வாள். அவளது குரல் பறவையின் கீச்சுக் குரலைப் போல் இருக்கும்".. என்று ஒப்பாரி ஓலமிடுகிறாள்.
சிதைக்கப்பட்ட அந்தக் குழந்தை, இன்று அந்த தாய்க்கு மட்டும் மகளல்ல. என்னைப் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு அவள் மகளானாள்.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவளுக்காக நான் ஒப்பாரி வைத்து அழுதால் இன்னும் எப்படியெல்லாம் கதற வேண்டியிருக்குமோ! எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள்.. அவளது பாதுகாப்பை நினைத்து ஒவ்வொரு நொடியும் நான் பதறிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவள் இறப்பதற்கு முன் அவளை நான் பார்த்ததில்லை. அவள் பெயர்கூட செய்தித்தாள் வாயிலகவேத் தெரிந்தது. குலைந்து கிடந்த அந்த உருவத்தின் அழகிய தோற்றத்தை அவள் வீட்டிலிருந்த புகைப்படம் மூலமாகவே எனக்குத் தெரியவந்தது. அழகு தேவதை அவள். ஆனால், அரக்கர்கள் கையில் சிக்கிக்கொண்டாள். விதியின் தப்பல்ல. கூட்டுச் சதியின் தப்பு. 

எனக்கொரு மகள் இருந்தாள்.. சிதறிக்கிடக்கும் அவளுடைய சிறிய ஆடைகள் எல்லாம் என் மகளின் உடுப்பு போலவே இருக்கின்றன. இரண்டு நாட்களாக நான் பெற்ற மகள் முகத்தில் நான் பெற்றெடுக்காத அந்த பிஞ்சு முகம்தான் தெரிகிறது.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவளை 8 பேர் சேர்ந்து வன்புணர்வு செய்தனர். அவளுக்கு மயக்கம் தெளியாமல் இருக்க தூக்க மாத்திரியைக் கொடுத்தனர். அவளது இடுப்பு எலும்பு முறியும் வரை அவளை அந்தக்கூட்டம் வன்புணர்ந்தது. அவளது கழுத்தை நெறித்தது. அவளது தலையில் கல்லைப் போட்டது. என் தலையிலும் தான் விழுந்து கிடக்கிறது அந்தக் கல். ஏனெனில் எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள்.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவளை இடுகாட்டில் புதைக்கக்கூட எனக்கு வழியில்லாமல் போனது. நிலத்துக்காகவும் நீருக்காகவும் உரிமை கோரிய அவர்களால் நான் 7 கி.மீ. தாண்டி இன்னொரு கிராமத்துக்குச் சென்று அவளை புதைத்தேன் இல்லை இல்லை விதைத்தேன்.

எனக்கொரு மகள் இருந்தாள்... அவள் பலாத்காரத்தை நியாயப்படுத்தி சிலர் கோஷமிடுகின்றனர். பலாத்காரர்கள் ஆதரவுக்குரல் எழுப்புவர்களால் எனக்கு பயமாக இருக்கிறது. காரணம், எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள். 

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவளுக்கு நீதி நிலைநாட்டப்படும் என பிரதமரே கூறுகிறார். அவள் வாழ இந்த இந்திய தேசத்தில் இடமில்லை. இனி என்ன நீதி நீங்கள் அவளுக்குத் தரப் போகிறீர்கள்?! எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள்.
எனக்கொரு மகள் இருந்தாள்.. ரோஜா மனம் கமல வேண்டிய அவள் மேனியில் அன்று காய்ந்த ரத்தம் வீசியது. செய்தித்தாளிலும் தொலைக்காட்சியிலும் எனக்கு ரத்த வாடை அடித்தது. அந்த ரத்தம் அவளை அசுத்தப்படுத்தவில்லை. இந்த தேசத்தையே அசுத்தப்படுத்தியிருக்கிறது. அந்த ரத்த நெடி அகலாது.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவள் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்த / பிரசுரிக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு. பிரச்சினை அவள் குழந்தை என்பதாலா அல்லது அவள் 'ஆசிபா பானு' என்பதாலா?

எனக்கு ஒரு மகள் இருந்தாள்.. அவளை அவள் வாழ்ந்த ஊர்க்காரர்கள் சிதைத்துவிட்டனர். ஒருத்தன் மீரட்டிலிருந்து புறப்பட்டு வந்தான். அவளை சிதைப்பதற்காகவே. ஒருத்தன் அவளைக் கொன்று விடாதீர்கள் நான் வந்து அவளை இன்னொருமுறை சிதைக்கவேண்டும் என்றான். எனக்கு பதற்றமாக இருக்கிறது. ஏனெனில்.. எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள்.

எனக்கு ஒரு மகள் இருந்தாள்.. என் இறந்துபோன மகளுக்கு நேர்ந்த கொடுமையால் என்னால் என் எதிர் வீடு, பக்கத்துக்கு வீடு, என் தெரு, என் ஏரியா, என் மாவட்டம், என் மாநிலம், என் தேசம் என எங்கெங்குமிருக்கும் ஆண்கள் மீதும் சந்தேகப் பார்வையே முதலில் விழுகிறது. ஏனென்றால்.. எனக்கு இன்னொரு மகள் இருக்கிறாள்.

எனக்கொரு மகள் இருந்தாள்.. அவள் இனி எப்போதும் இந்த பூமிக்கு வரமாட்டாள். எனக்கு இன்னொரு மகள் இருக்கிறாள்.. இன்னும் நிறைய மகள்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்காகவது இந்த தேசத்தில் இடமிருக்குமா? ஓடி விளையாடுவதற்கும் மான் போல் துள்ளி குதிப்பதற்கும்?!

- பாரதி ஆனந்த்

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


[X] Close