[X] Close

அன்புமணியின் மாற்றம் யாருக்கு ஏமாற்றம்?


anbumani

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 10:25 am
  • அ+ அ-

அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் நடத்தும் கூட்டணிப் பேரங்களில் சமரசங்கள் புதியவை அல்ல. ஜெயலலிதா பாணியில் சொல்வதென்றால், “அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தரப் பகைவர்களும் இல்லை” என்பதை வைத்துக்கொண்டே யாரும் யாருடனும் கூட்டணி சேர்ந்துகொள்ளலாம்தான். அதிலும் தமிழ்நாட்டில் பாமகவின் கூட்டணி வரலாற்றை எடுத்துக்கொண்டால், அக்கட்சி தன் பாதையையே ‘யு-டர்ன்’ பாதையாகக் கொண்டது என்பது தெரியவரும்.

1989-ல் தொடங்கப்பட்ட பாமக, 1991-ல் தேர்தல் அரசியலுக்குள் வந்தது. முதல் முறையாகப் போட்டியிட்டபோதே இரு கழகங்களையும் மிகக் கடுமையாக விமர்சித்தது பாமக. கூடவே, தனக்கு என்று ஒரு தனித்த அடையாளத்தையும் கோரியது. ஆனால், 1996 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்ட மன்றத் தேர்தலின்போதே திமுகவுடனான கூட்டணிக்குத் தயாராகிவிட்டது – அந்தத் தேர்தலில் திடீர் திருப்புமுனையாக காங்கிரஸிலிருந்து பிரிந்துவந்து தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் தொடங்க, தமாகாவுடன் திமுக கரம் கோக்க, வேறு வழியின்றி திவாரி காங்கிரஸுடன் சேர்ந்து கூட்டணிக் கணக்கை தொடங்கியது பாமக. அடுத்து, 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, 1999 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, 2001 சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, 2006 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி என்று மாறிக்கொண்டேதான் இருந்திருக்கிறது பாமக.

அப்படியிருக்க இன்றைக்கு பாஜக – அதிமுக கூட்டணியில் பாமக ஐக்கியமாகிவிட்டதில் பெரிதாக அதிர்ச்சியடையவோ, வியக்கவோ என்ன இருக்கிறது? ஆனாலும், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் பாமகவின் கூட்டணி முடிவு ஏன் கடுமையாக விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது? இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அன்புமணி ராமதாஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் உருவாக்க முற்பட்ட பிம்பம்தான் காரணம்.

அன்புமணி யுகம்

பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி கட்சிக்குள் தலையெடுக்கத் தொடங்கிய பத்தாண்டுகளில் கட்சியின் சகல முடிவுகளையும் எடுப்பவராக முன்னிலைப்படுத்தப்பட்டார். கட்சியின் ஏனைய எல்லாத் தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளி, கட்சியின் முகமாக எப்படி முன்வைக்கப்பட்டாரோ அப்படியே தமிழக அரசியலிலும் அவரை விட்டால் அடுத்து ஆள் இல்லை என்று ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றது பாமக. கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி அண்ணா, பெரியார் வரைகூட நிராகரித்துப் பேசத் தொடங்கிய அவர், ஒருகட்டத்தில் ‘தமிழ்ச் சாதிகள்’ என்ற சொல்லாடலை உருவாக்கி திராவிட இயக்கத்தையும் திராவிடக் கட்சிகளையும் விளாசினார்.

ராமதாஸ் எப்படி ஆரம்ப காலத்தில் ‘என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்; அப்படி வந்தால் தெருமுனையில் நிறுத்தி என்னைச் சவுக்கால் அடியுங்கள்’ என்று சொன்னாரோ, அதற்கு இணையான சத்திய மொழியில், ‘இரு திராவிடக் கட்சிகளுடனும் இனி கூட்டணி என்பது கிடையவே கிடையாது’ என்று உறுதியாகப் பேசினார் அன்புமணி ராமதாஸ். இதை உறுதிப்படுத்துவதற்கேற்ப திமுக, அதிமுக இரு கட்சித் தலைவர்களையும் கடுமையாகச் சாடினார்; எள்ளி நகையாடினார். தந்தை – மகன் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப ஏனையோரை மிகக் கடுமையான மொழியில் விமர்சிக்க, மறைந்த காடுவெட்டி குரு ஒரு அஸ்திரமாகப் பயன்படுத்தப்பட்டார்.

அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது ஒன்று வாய்த் தாக்குதல் நடத்துவதும், எதிர்ப் பிரச்சாரம் செய்வதும் அபூர்வமானதல்ல – ஆனால், பாமகவின் வியூகம் ஏனைய கட்சிகள் மீதான மதிப்பை நிர்மூலமாக்குவதாக இருந்தது. கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் முற்றிலுமாக நிராகரித்து ஏதோ ‘கொள்ளையர்’போலப் பேசிய பாமகவும் அன்புமணியும் இவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் எள் அளவும் மதிக்கத்  தயாராக இல்லை.  அதிமுக அமைச்சர்களை எள்ளலுடன் கையாண்ட ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் அவர்கள் மீது முன்வைத்த விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. ‘கழகத்தின் கதை’ எனும் தலைப்பில் ராமதாஸ் எழுதிய புத்தகம் இவற்றின் உச்சம் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதிமுக தலைவர்களுக்குத் தங்கள் தோட்டத்தில் விருந்தும் வைத்த பாமக தலைமை, கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகிறது. இது மேலோட்டமான விமர்சனம் மட்டும் அல்ல; கட்சியின் கீழ் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் மனப்புழக்கத்தின் பாதிப்பும் இதில் இருக்கிறது.

வெறும் பதவிக்கான கட்சியாகிறதா?

சாதி அடிப்படையில் இயங்கும் கட்சி என்ற விமர்சனம் பாமக மீது இருந்தாலும், ராமதாஸின் காலத்தில் தமிழ்நாட்டின் உயிரோட்டமான பிரச்சினைகளைக் கையில் எடுத்து, போர்க்குணத்துடன் பேசும் கட்சி என்ற ஒரு பொதுப் பார்வை பாமக மீது இருந்தது. தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறினாலும், எல்லா கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ராமதாஸுக்கு நல்ல நட்பும் மதிப்பும் இருந்தது.

அன்புமணி தலையெடுத்த இந்தப் பத்தாண்டுகளில் தேர்தல் சமயப் பிரச்சாரங்கள், ஏனைய சமயங்களில் அடையாள அரசியலுக்கான அறிக்கைகள் என்று இயங்கிவந்தார். பாமகவினரைப் பொறுத்தவரை, உண்மையான மாற்றத்தை உருவாக்கும் தலைவர் எனும் நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட்டார்.

இதற்கிடையே, எல்லா கட்சிகளையும் துச்சமாகப் பேசத் தொடங்கியதாலும், போராட்டங்களிலும்கூட ஏனைய கட்சிகளுடன் இணையாமல் ஒதுங்கிக்கொண்டுவிட்டதாலும் தனிமைப்பட்டே இருந்தது பாமக.  கட்சிக்குள்ளும் இரண்டாம் நிலையில் பல தலைவர்கள் செல்வாக்கோடு இருந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. அவர்கள் யோசனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அன்புமணியின் யோசனைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. எல்லாவற்றையும் தாண்டி கட்சித் தொண்டர்களும் கீழ்நிலை நிர்வாகிகளும் மக்களிடம் முன்னெடுத்துவந்த ஒரே பிரச்சாரம் ‘அன்புமணி ராமதாஸ் மட்டுமே ஒரே மாற்றுத் தலைவர்’ என்பதுதான். இப்போது அந்த அஸ்திவாரம் அன்புமணி ராமதாஸாலேயே முறித்துப்போடப்பட்டிருக்கிறது. “பாமக சின்ன கட்சிதான். இப்படித்தான் போகும் பாதை என்பது தெரிந்திருக்குமானால், இவ்வளவு பேரையும் பகைத்துக்கொள்ளும் பேச்சுகளைக் கடந்த காலத்தில் ஏன் பேச வேண்டும்?” என்பதே கட்சிக்காரர்களிடம் கீழே ஒலிக்கும் கேள்வி.

சாதிக் கட்சி டு குடும்பக் கட்சி

பாமக இன்று எதிர்கொள்ளும் இன்னொரு பெரிய சவால், தன்னுடைய பெரும் பலமான வன்னியர் சமூகத்தினரின் நம்பிக்கையையும் அது இழக்கத் தொடங்கியிருப்பது. ஏற்கெனவே, பாமகவிலிருந்து பிரிந்த வேல்முருகன் வட மாவட்டங்களில் ஒரு தனி அடையாளம் மிக்க தலைவர் ஆகியிருக்கிறார். இப்போது அடுத்த விஷயமாக, ராமதாஸுக்கு அடுத்து, கீழ்நிலையில் பாமகவிலும், வன்னியர் சமூகத்திலும் பெரிய செல்வாக்கோடு இருந்த காடுவெட்டி குருவின் மரணத்தைத் தொடர்ந்து நடந்துவரும் சர்ச்சைகள் வன்னியர் சமூகத்தின் மத்தியிலும் ராமதாஸ் குடும்பத்தின் மீதும் பாமக மீதும் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. பாமக ஒரு சமூகத்துக்கான கட்சியாகப் பார்க்கப்பட்ட நிலை மாறி, ஒரு குடும்பத்துக்கான கட்சியாகப் பார்க்கப்படும் நிலையை, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் உருவாக்கிவருகின்றன.

மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாமக - பாஜக கூட்டணி வெல்லலாம்; தோற்கலாம்; ஆனால், இந்தக் கூட்டணியில் இணைந்ததன் மூலம், பாமகவின் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ எனும் கோஷம், தேர்தலுக்கு முன்பே மிகப் பெரிய ஏமாற்றத்துக்கு வழிவகுத்துவிட்டது என்பதைத்தான் பாமக மீதான இன்றைய விமர்சனங்கள் காட்டுகின்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close