[X] Close

’ஒரு தங்கரதத்தில்...’ மலேசியாவின் குரல்!


malasia-vasudevan

இளையராஜா - மலேசியா வாசுதேவன்

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Feb, 2019 13:04 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

- மலேசியா வாசுதேவன் நினைவு தினம் இன்று

’இந்தக் குரல் அவர் மாதிரியே இருக்கு’ ‘இந்தப் பாடகர் அவர் மாதிரியே பாடுவாரு. அவர் குரல் அப்படித்தான் இருக்கும்’ என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதுவரை வந்த எந்தப் பாடகர் போலவும் அவர் குரல் இல்லை. அவரின் குரல், ஆல் இன் ஆல். ஏ டூ இசட். அதாவது, குத்துப்பாட்டுக்கும் அவர் குரல் செம. சோகப்பாட்டிலும் அப்படியொரு குழைவு. காதல் பாட்டில் உருகித் ததும்பும். அவர்... மலேசியா வாசுதேவன்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டு, மலேசியாவில் வாழ்ந்த குடும்பம் வாசுதேவனுடையது. அங்கே, நாடகத்தில் நடித்து வந்தார். பாட்டெல்லாம் பாடி வந்தார். நடிப்பு ஆசையையும் பாட்டு ஆசையையும் மூட்டைகட்டிக்கொண்டு, சென்னையில் வந்து இறங்கினார்.

அங்கே இங்கே... அப்படி இப்படி... என்றிருந்த வேளையில், அந்த இசைக்குழுவில் அவ்வப்போது பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இசைக்குழுவின் பெயர்... ‘பாவலர் பிரதர்ஸ்’. அங்குதான் இளையராஜாவின் நட்பும் அன்பும் கிடைத்தது. இளையராஜாவின் நண்பர் பாரதிராஜா, மலேசியா வாசுதேவனுக்கும் நண்பரானார்.

இதனிடையே ஒரு பாட்டு சினிமாவில் கிடைத்திருந்தது. ஆனால் அது வந்ததும் தெரியவில்லை. போனதும் புரிபடவில்லை.

அன்னக்கிளி வந்தது. இளையராஜா வந்தார். 16 வயதினிலே வந்தது. பாரதிராஜா வந்தார். அந்தப் படத்தின் பூஜைக்கு மலேசியா வாசுதேவனும் நட்பின் அடிப்படையில் வந்திருந்தார். அன்று பாடலுக்கான வேலையும் தொடங்க ஏற்பாடு. கமலுக்குப் பாடவேண்டிய எஸ்.பி.பி. வரவில்லை. தொண்டையில் பிரச்சினையாம்.

‘இப்ப வாசுவை வைச்சு எடுத்துக்குவோம். அப்புறம் பாலு வந்து பாடட்டும்’ என்று முடிவானது. ‘யோவ் வாசு. பிரமாதமாப் பாடுய்யா. கமலுக்குப் பாடப்போறே. ஒருவேளை, நீ பாடினது நல்லா அமைஞ்சிட்டா, பெரியாளாயிருவே. கமலுக்குப் பாடுறே’ என்று காதில் ராஜா சொல்ல, பிபி எகிறிப்போய்த்தான் பாடலைப் பாடினார். ‘அட’ என்றார்கள் எல்லோருமே. ‘இவர் பாடினதையே வைச்சுக்கலாமே’ என்றார் ராஜா. பாரதிராஜாவும் சரியென்றார். மலேசியா வாசுதேவனுக்கான வாசல் அன்றைய நாளில் திறந்தது. அந்தப் பாட்டு திறந்துவைத்தது. அது... ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு!’

அதன் பிறகு தொடர்ந்து ராஜா, விதம்விதமாக, ரகம்ரகமாக, தினுசுதினுசாகப் பாடல்களைக் கொடுத்தார். அவரும் வெளுத்து வாங்கினார்.

’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் இரண்டே பாடல். ஒன்று கமல். இன்னொன்று மலேசியா வாசுதேவன். ‘இந்த மின்மினிக்குக் கண்ணிலொரு மின்னல் வந்தது’, என்ற பாட்டு, புதுசாய் இருக்கே என்றார்கள் ரசிகர்கள். ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில், ‘தண்ணீ கருத்திருச்சு’ பாட்டு, பட்டிதொட்டியில் பட்டையைக் கிளப்பியது.

சிவகுமாரின் 100வது படமாக வந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘வெத்தலவெத்தல வெத்தலயோ’ பாட்டு, எல்லார் காதுகளையும் வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றது. எல்லோரும் ரெட்கார்ப்பெட் விரித்து பாடலையும் பாடியவரையும் வரவேற்று, மனதில் அமர்த்திக் கொண்டார்கள்.

இப்படித்தான் பாட்டு கொடுக்கணும் என்று ஒருவட்டத்துக்குள் இல்லாமல், வெரைட்டி வெரைட்டியாக அள்ளியள்ளிக் கொடுத்தார் இளையராஜா.

‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாட்டைக் கேட்டால் அந்தக் குரல் உருகவைத்துவிடும். ‘கோடை கால காற்றே, வரும் தென்றல் பாடும் பாட்டே’ என்கிற பன்னீர்புஷ்பங்கள் பாட்டு, மெல்லிசை கானம். ‘ஆகாய கங்கை...’ என்று நம்மைத் துள்ளச் செய்யும் மலேசியா வாசுதேவன், அதே படத்தின் ‘ஒரு தங்கரதத்தில்...’ பாட்டில், கலங்கடிப்பார்.

‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா’ என்ற பாட்டைக் கேட்கும் போது ஆடாதவர்களே இல்லை. ‘வான் மேகங்களே’ என்று காதல் சுவை கூட்டித் தந்தார் மலேசியா.

கமலுக்கு பாடுவார்... ‘தங்க ரத்தினம், எங்க ரத்தினம்’, ‘ஆழக்கடலில் தேடிய முத்து’, ’கட்டவண்டி கட்டவண்டி’, ‘நிலாகாயுது நேரம் நல்ல நேரம்’, ‘மாமாவுக்குக் கொடும்மா கொடும்மா’, ‘விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை’, ‘பேர்வைச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம்’ என்ற பாடலெல்லாம் கமலுக்கு ஏற்ற குரல் என்று சொல்லவைத்தது.

‘பொதுவாக எம்மனசு தங்கம்’. ‘ஒரு தங்கரதத்தில்’, ‘ஆசை நூறு வ்கை’, ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’, ‘பட்டுவண்ண சேலைக்காரி’, ’சொல்லி அடிப்பேனடி’, ‘என்னோட ராசி நல்ல ராசி’, ‘வா வா வசந்தமே’  என்று ரஜினிக்குப் பாடுவார். அப்படியே பொருந்தும்.

சிவகுமார், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், ராமராஜன் என்று ஆள்பேதமில்லாமல் பாடி, குரல்பேதம் காட்டி அசத்தினார் மலேசியா வாசுதேவன். ’ஊருவிட்டு ஊரு வந்து’ என்ற பாடல், கரகாட்டக்காரனின் தனி ஆவர்த்தனம். அவ்வளவு ஏன்... ‘ஒரு கூட்டுக்கிளியாக’, ‘பூங்காத்து திரும்புமா’ என்று சிவாஜிக்கு டிஎம்எஸ்க்கு அடுத்ததாக, அற்புதமாக பின்னிப்பிணைந்த குரல் என்று மலேசியா வாசுதேவனைக் கொண்டாடினார்கள்.

‘சுகராகமே’ என்றும் ‘ஆனந்தத் தென்காற்று தாலாட்டுதே’ என்று சிதம்பரம் ஜெயராமன் ஸ்டைலில் பாடிய பாட்டு தனிரகம். ‘கண்ணத் தொறக்கணும் சாமீ’ பாட்டு துள்ளாட்டம். ‘குயிலே குயிலே பூங்குயிலே’ ஆண்பாவம் பாட்டில், பாரபட்சமில்லாமல் மனசை அள்ளிக்கொண்டிருப்பார் மலேசியா.

இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். மலேசியா வாசுதேவனின் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இரவுகளின் மடியிலான தருணங்களில், மலேசியாவாசுதேவனின் ஒரு பாட்டு... ஒரேயொரு பாட்டு... என்னவோ செய்வார்கள் ராஜாவும் வாசுவும்!

‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா

சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா!’

மலேசியா வாசுதேவன் நினைவு நாள் இன்று (20.2.19).

குரல்வழியே, நம் செவிவழியே வாழ்ந்துகொண்டிருக்கிறார்... வாழ்ந்துகொண்டே இருப்பார் மலேசியா வாசுதேவன்!

உங்களுக்குப் பிடித்த மலேசியா வாசுதேவனின் பாடலை பதிவிடுங்களேன்! 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close