[X] Close

தொழிலை காதலித்தால் வெற்றி நிச்சயம்!- கே.பி.என். டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி.நடராஜன்


kpn-travels

  • kamadenu
  • Posted: 16 Feb, 2019 09:52 am
  • அ+ அ-

த.செ.ஞானவேல்

குணா படத்துல கமல்ஹாசன் ‘மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல்  அல்ல. அதையும் தாண்டி புனிதமானது’னு பாடுவாரு. எனக்கும் பஸ்ஸுக்கும் நடுவுல இருக்கிறது அப்படி ஒரு காதல்தான். சொன்னா மத்தவங்களுக்குப் புரியாது.  என்னோட கண்மணி பஸ்ஸுதான். நான் ஓட்டுற பஸ்ஸுல யாராச்சும் சின்னதா ஒரு கோடு போட்டாலும், சட்டையைப் பிடிச்சி அடிக்கப்போயிடுவேன். பொண்டாட்டி மாதிரினு சொல்றதைவிட, நான் ஓட்டுற பஸ் எனக்கு கொழந்த மாதிரி. அதை கழுவறது, தொடைக்கிறது, அலங்காரம் பண்ணி அழகு பாக்கிறதும்தான் எனக்குப் பிடிச்ச விஷயம். பயணிகளுக்கு சர்வீஸ் பண்ற வாய்ப்பைக் கடவுள் கொடுத்திருக்காரு. குறைவைக்காம அதை நல்லா பண்ணணும். அதுதான் இப்பவும் எப்பவும் கே.பி.என். ட்ராவல்ஸ் நிறுவனத்தோட குறிக்கோள். பல தடைகள் தாண்டி, நம்ம வண்டி நிக்காம நல்லா ஓடுது. கடவுளுக்கும், பயணிகளுக்கும் கோடானகோடி நன்றிகள்” என்கிறார் கே.பி.நடராஜன்.

பேருந்து மீதான அவரது காதலும், கே.பி.என்.  ட்ராவல்ஸ் நிறுவனத்தின் வரலாறும் வியப்புக்குரியவை. அரசுப் பேருந்து  தவிர்த்து,  தனியார் பேருந்துகளுக்கென தமிழகம் முழுவதும் தனித்த அடையாளம் கொடுத்த நிறுவனமாக வளர்ந்திருக்கிறது கே.பி.என்.

பேருந்து கிளீனராக வாழ்வைத் தொடங்கி,  பெரிய தொழிலதிபராக உயரம் தொட்ட கே.பி.நடராஜனின் வாழ்க்கைப் பயணம், அவருக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. மற்றவர்களுக்கு, ‘நம்மாலும் முடியும்’ என்கிற நம்பிக்கையைத் தருகிறது.

பஸ்ஸை பார்ப்பதே பொழுதுபோக்கு

“திருச்செங்கோடு பக்கம்  பூர்வீகம். தாத்தா காலத்துலேயே சேலத்துக்கு வந்துட்டோம். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ற குடும்பம். அப்பாவும் விவசாயிதான். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு பஸ் மேல ஒரு கிறுக்கு. சின்ன பசங்க திருவிழாவை, சர்க்கஸை  வேடிக்கைப் பார்ப்பாங்க. எனக்கு பஸ்ஸை வேடிக்கைப் பார்க்க  ரொம்ப பிடிக்கும். மகனை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக்கி, காக்கி உடுப்போட என்னைப் பார்க்கணும்னு கனவு கண்டார் எங்கப்பா.

ஆனா, எனக்கு எப்படியாவது பஸ் டிரைவராகிடணும்னு லட்சியம். காக்கி உடுப்பு போட்ட போலீஸா, கம்பீரமாக பையனைப்  பார்க்க நினைச்சார் அப்பா. நான் பஸ் டிரைவரா காக்கி உடுப்பைப் போடுவேனு ஒத்தக்கால்ல நின்னேன்.

பெரிய மலைப்  பாதையில வளைஞ்சி வளைஞ்சி பஸ் போற அழகைப் பார்க்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுதுபோக்கு. ஜனங்களை ஏத்திக்கிட்டு, காத்தைக் கிழிச்சிகிட்டு பயணிக்கிற பேருந்தை, வேடிக்கைப் பார்க்க சிலை மாதிரி நின்னுடுவேன். பள்ளிக்கூடமும், பஸ் ஸ்டாண்டும் எதிரெதிர் திசையில் இருந்தது. நான் படிக்காமப் போனதுக்கு அதுதான் முக்கியக்  காரணம். பஸ்ஸை வேடிக்கைப் பார்க்கணுமா, பள்ளிக்கூடத்துல பாடம் படிக்கணுமானு எனக்கு கொஞ்சம்கூட குழப்பம் வந்ததே இல்லை. ஸ்கூலை கட் அடிச்சுட்டு, பஸ்ஸை வேடிக்கைப் பார்க்க சந்தோஷமா கிளம்பிடுவேன். ஒவ்வொரு டிரைவரையும் ரொம்ப ஏக்கத்தோடு பார்ப்பேன். கையில் காசு கிடைச்சா, டவுன் பஸ்ல ஏறி டிரைவர் சீட் பக்கத்துல நின்னுட்டு, பஸ் ஓட்டுற அழகை ரசிச்சு ஜாலியா பார்த்துகிட்டே வருவேன்.

பஸ்ல போகணும்னு ஏதேதோ ஊருக்கு பஸ் ஏறிப் போனதுதான் வாழ்க்கையில் அதிகம். எனக்கு எப்படி படிப்பு ஏறும்? மோட்டார் ஃபீல்டு பத்தி நிறைய படிப்புகள் இருக்குன்னு இப்ப தெரியுது. படிக்காம கோட்டை விட்டுட்டோம்னு இப்போ வருத்தமா இருக்கு. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை எடுத்திருந்தா, நான்தான் தங்கப் பதக்கம் வாங்கியிருப்பேன். விவரம் இல்லாம, ஏழாங் க்ளாஸ் படிக்கும்போதே என்னை பஸ்ல கிளீனரா சேர்த்துவிடச் சொல்லி  அடம்பிடிச்சேன். அப்பாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. என் எதிர்காலம் வீணாப்  போயிடுமோன்னு பயந்தாரு. பஸ்ஸும், பயணமும் புடிச்ச அளவுக்கு, படிப்பு புடிக்காம போயிடுச்சு. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.

ரேஷன் கடை பணி

‘படிக்கலைன்னாலும் பரவாயில்லை. வேற வேலைக்குப் போ’னு ஒரு ரேஷன் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாங்க. அரிசி, பருப்புனு  எடைபோட்டு, அளந்து கொடுக்கிற வேலையில் ரெண்டு வருசம் போச்சு. நல்லா தொழில் செய்தாலும், மனசு மட்டும் ஒட்டவே இல்லை.

கிளீனர் வேலை தொடங்கியது...

பஸ்ஸ கண்ணால பார்க்கும்போதெல்லாம், ரோடுல ஓடுற அதிசயமா தெரியும். ஐயப்பன் என் ஆசையை நிறைவேற்ற கண் திறந்தார். என் அண்ணனும்,  அவர் மாமனாரும் சேர்ந்து ஒரு பஸ் வாங்கி,  ரூட்ல விட்டாங்க. நான்தான் அந்த பஸ்ஸுக்கு கிளீனர். என் வாழ்க்கையில் அன்னிக்கிருந்த சந்தோஷம் வேற என்னிக்குமே இருந்தது இல்லை. பஸ் துடைக்கிறது, கழுவறதுனு பஸ்ஸைப் பராமரிக்க ஆரம்பிச்சா, என்னை மறந்துடுவேன்.

பஸ்ஸை கழுவிய கைகள்!

எங்க பஸ்ல வேறொருத்தர் டிரைவராவும், நான் கிளீனராவும் வேலை செஞ்சிருக்கேன். `லட்சக்கணக்குல பணம்போட்டு பஸ் வாங்குற குடும்பத்துல பொறந்துட்டு, டிரைவர்கிட்ட ‘எடுபிடி’ வேலை செய்யணுமா?`னு உறவினர்கள் கேட்டிருக்காங்க. எதுவுமே என் காதுல விழலை. எனக்குப்  புடிச்ச மாதிரி, அந்த வேலையை ரசிச்சி செஞ்சேன். பூ போடுறது, ஊதுபத்தி ஏத்துறது தொடங்கி, ஒவ்வொரு நாளும் சீட் தொடச்சு வைக்கிறதுவரை என் வேலைதான். இன்னும் சொல்லப்போனா, பஸ்ல தினம் ரெண்டு பேர் வாந்தி எடுத்துட்டுப்  போயிடுவாங்க. என் ரெண்டு கையால் அதை அள்ளி வெளியில் ஊத்தி, பஸ்ஸை கழுவுற வேலைவரைக்கும் சலிச்சுக்காம செஞ்சிருக்கேன்.

யானை பாகன், தன் யானையை எப்படி அலங்கரிப்பானோ அதைவிட கவனமா பஸ்ஸை நான் அலங்கரிப்பேன். யாராவது பஸ்மேல வந்து இடிச்சிட்டா, நான் உலக மகா முரடனாகிவிடுவேன். எதைப் பற்றியும் கவலைப்படாம சண்டைக்கு நிப்பேன். என் சொந்த விஷயம் எவ்வளவோ விட்டுக்  கொடுத்திருக்கேன். ஆனா, என் பஸ்ஸுக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது.

டிரைவரான கிளீனர்

பஸ் மேல ஏன் இவ்ளோ காதல் வந்துச்சுன்னு இன்னமும் தெரியலை. கிளீனரா இருக்கும்போதே, மெதுவா பஸ் ஓட்டிப்  பழகினேன். டிரைவர் சீட்ல உட்கார்ந்து ஸ்டேரிங்கை பிடிச்சா, சும்மா தேவலோகத்து ராஜாவான இந்திரனா மாறின சந்தோஷம் வந்துடும். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து,  அவரோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சு கவனிச்சு மூளைக்குள்ள எல்லாம் பதிஞ்சி போயிடும். ஏனோதானோன்னு பஸ்ஸை ஓட்டுறதுல எப்பவும் எனக்கு உடன்பாடு இல்லை. மழைக்காலத்துல தண்ணீர் தேங்கி ரோடெல்லாம் சேறா இருக்கும். பஸ் வீல், சேற்றில் இறங்காத அளவு கவனமா ஓட்டுவேன். தவிர்க்கமுடியாம சேற்றில் இறங்கிட்டா,  எப்ப டயரைக் கழுவி சுத்தம் செய்யறேனோ,  அப்பத்தான் எனக்கு நிம்மதியே வரும். பஸ் ஓட்டுறதும், படம் பார்க்கிறதும்தான் எனக்கு வாழ்க்கை.

அஞ்சலிதேவி நடித்த `டவுன் பஸ்’

 நான் பார்த்த முதல் படம் அஞ்சலிதேவி நடிச்ச ‘டவுன் பஸ்’. படத்தோட பேரைக் கேட்டதுமே, அதைப் பார்க்கிறதுனு முடிவுபண்ணிட்டேன். அந்தப் படத்துல வர்ற டவுன் பஸ்ஸோட ஹெட்லைட் ஆந்தை மூஞ்சி மாதிரி இருக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் அது. அப்புறம்,  நடிகர் சிவகுமாரோட ரசிகன் நான். கடவுள் வேஷம் போட்டு நல்லா நடிப்பார். லட்சணமான அவருடைய முகம், சாமி வேஷத்துக்குப் பொருத்தமா இருக்கும். எல்லாரும் சைக்கிள், ஸ்கூட்டர் எடுத்துட்டுப்போய், தியேட்டர்ல நிறுத்துற மாதிரி, நான் பஸ்ஸை எடுத்துட்டுபோய் நிறுத்தினா எல்லாரும் மிரண்டு போயிடுவாங்க. சைக்கிள், ஸ்கூட்டர், காருக்கெல்லாம் பார்க்கிங் கட்டணம் இருக்கும். பஸ்ஸுக்கு எப்படி கட்டணம் வசூல் பண்றதுனு தியேட்டர்காரங்க குழம்பிடுவாங்க.

பஞ்சர் ஒட்டறதுல தொடங்கி, மோட்டார் ரிப்பேர் பண்ற வேலைவரைக்கும் நானே கத்துக்கிட்டேன். வண்டி ஒர்க்சாப் போச்சுன்னா, வண்டியை நிறுத்திட்டு கிளம்பிடுவாங்க. நான் சர்வீஸ் பண்ற வரைக்கும் கூடவே இருந்து பார்ப்பேன். பஸ் மெக்கானிஸம் புரிய ஆரம்பிச்சது.

வாடகை பஸ்ஸுக்கு சிவகுமார் பெயர்!

கிளினரா இருக்கும்போதே நான் பஸ்ஸை நல்லா ஓட்டுவேன். லைசென்ஸ் எடுக்கிற வயசு வர்ற வரைக்கும் பொறுமையா இருந்தேன். ஓட்டுநர் உரிமம் வாங்குற முதல் நாளே, பஸ்ஸை  எடுத்து பத்து மணிநேரம் ஓட்டுற பக்குவம் கைவந்திருச்சி. அனுபவம் கிடைச்சதுக்கப்புறம், சொந்தமா பஸ் வாங்கி, தொழில் தொடங்கலாம்னு யோசனை வந்துச்சு. மொத்தமா பணம் போட்டு பஸ் வாங்குற அளவுக்கு வசதி இல்லை. வங்கியில் கடன் வாங்குற நிலைமையிலேயும் நான் இல்லை. ஆனா, நான் எப்படி பஸ்ஸை பார்த்துக்குவேன்னு தெரிஞ்ச ஒருத்தரு,  என்னைய நம்பி வாடகைக்கு பஸ்  கொடுத்தாரு.

ரூட் வண்டி ஓட்டாம, முதல்ல டூரிஸ்ட் வண்டியா ஓட்டினேன். நடிகர் சிவகுமாரோட ரசிகனா இருந்த காரணத்தால, ‘சிவகுமார் டூரிஸம்’னு பேர் வெச்சேன். வண்டியில் பேனர் கட்டி ஓட்ட ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு இருந்துச்சு. லாபமும் கிடைச்சது.  ஆனா, டூர் வண்டி ஓட்டினா, பஸ் ஓட்டுற நேரத்தைவிட  சும்மா உட்கார்ந்திருக்கிற நேரம் அதிகம். அது எனக்கு ஒத்துவரலை. சும்மா இருக்கிறது கஷ்டமா இருந்தது. அப்பாகிட்ட ஐயாயிரம் ரூபாய் காசு வாங்கினேன்.

கே.பி.என். டிராவல்ஸின் முதல் பஸ்

மனைவியோட நகைகளை அடகுவெச்சு ஒரு பஸ் முதன்முதல்ல சொந்தமா வாங்கினேன். தாத்தா பேர், அப்பா பேர், என் பேர்ல வர்ற முதலெழுத்தை வெச்சு கே.பி.என். டிராவல்ஸ் உருவாச்சு.  நான்தான் எங்க கம்பனியோட முதல் டிரைவர். பஸ் கம்பெனியைப் பொருத்தவரைக்கும் எல்லாமே ஓட்டுநர்களை நம்பித்தான் இருக்கு.  பயணிகளோட  உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பா இருந்து, பத்திரமா அவங்க போய்ச்  சேரவேண்டிய இடத்துல, சேர வேண்டிய நேரத்துல இறக்கிவிடுகிற மாபெரும் பொறுப்பு ஓட்டுநர்களுக்கு இருக்கு. டிரைவர் சில விநாடி அசந்தாலும், மொத்த காரியமும் கெட்டுப்போயிடும். ஒரு நல்ல டிரைவர் எப்படி இருக்கணும்னு முதல்ல எல்லாவிதமான பரிசோதனைகளையும், என்னைவெச்சே செஞ்சு பார்த்தேன்.

பாதுகாப்பான பயணம்

சொன்ன நேரத்துக்கு வண்டி சரியா கிளம்பும். குறிப்பிட்ட நேரத்துக்கு அஞ்சு நிமிசம் முன்னாலயே போயிடும். பெண் பயணிகளின் தேவைகளை உணர்ந்து நடந்துக்குவேன். வண்டிக்கு டீசல் அடிக்கும்போதும்கூட, நல்ல பாத்ரூம் வசதி இருக்கிற பெட்ரோல்பங்கா பார்த்துதான் நிறுத்துவேன். விபத்தில்லாத பாதுகாப்பான பயணம்தான் ரொம்ப முக்கியம்.

வண்டியை எடுக்கிறதுக்கு முன்னால, டயர்ல காத்து சரியான அளவுல இருக்கா, பிரேக் புடிக்குதா, லைட் ஒழுங்கா  எரியுதான்னு எல்லா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செக்கிங் எல்லாம் முடிச்சிருவேன். மதுரையில் என் வண்டியில் ஏறி ஒருத்தர் படுத்தாருன்னா, அவர் கழட்டி விட்ட செருப்பு, காலையில கண் முழிச்சி பார்க்கும்போது அதே இடத்துல இருக்கிற மாதிரி வண்டி ஓட்டணும். நாலு சீட்டு முன்னாலபோய் தேடி செருப்பை எடுத்தா, அந்த டிரைவர் அதிகமா பிரேக் அடிச்சி வண்டி ஓட்டி இருக்கிறதா அர்த்தம். பிரேக் அடிச்சு அடிச்சு ஓட்டுறது, பஸ்ஸுக்கும் நல்லது இல்லை. பயணிகளுக்கும் நல்லது இல்லை.   இப்ப புது டிரைவர் வேலைக்கு எடுத்தாலும், ராத்திரி பயணிகள் மாதிரி எங்க ஆளுங்களையே ஏத்தி, எப்படி வண்டி ஓட்டுறாருன்னு கவனிச்சு,  ரிப்போர்ட் பண்ணச் சொல்லுவேன்.

பல பஸ் கம்பெனி முதலாளிங்க, பணம் இருக்கிறதால இந்தத் தொழிலுக்கு வந்திருப்பாங்க. நான், கிளினர், டிரைவர்னு படிப்படியா உயர்ந்து வந்ததால, பயணிகளோட எதிர்பார்ப்பு என்னனு நேரடியா புரிஞ்சிக்கிட்டேன். கே.பி.என். டிராவல்ஸ் ஆரம்பிக்கிறப்ப அதுதான் எனக்கு பலமா இருந்துச்சு.

ஒரு தொழிலை நேசிச்சு, உண்மையா செய்தால் வெற்றி பெரிய விஷயமில்லைங்கிறது என் அனுபவம். பெரிய கோடீஸ்வரனா ஆகணும்னு நான் இந்தத் தொழிலுக்கு வரலை. ஆனா, இப்ப நான் கோடீஸ்வரன்தான். இதுக்கு நான் செய்தது,  மனசு விரும்பி தொழில் செய்ததுதான்.  வெற்றி ரகசியமா வராது, வெளிப்படையாத்தான் வரும். உழைப்பு, சிந்தனை, கவனம் எல்லாமே எனக்கு மோட்டர் தொழில் மேலதான் இருக்கு. நான் எப்படி ஜெயிக்காம இருக்க முடியும்? நானே ஜெயிக்கலைன்னா வேற யாருதான் ஜெயிக்கிறது? அதுக்காக சுலபமா ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம் இல்லை. ஒவ்வொரு வெற்றியும் போராட்டம்தான். என் போராட்டம் ரொம்ப வித்தியாசமானது. எப்படினு கேக்குறீங்களா?

சொகுசான பயணம்

பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெஞ்சா போதும்னு பஸ் கம்பெனிகாரங்க நினைப்பாங்க. அதுல எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. விமானத்துல பயணம் பண்ணும்போது தேவையை மட்டும் பூர்த்தி செய்யறது கிடையாது. விமானப் பயணம் வசதியான பயணம். மூணு மணி நேரம் சும்மா உட்கார்ந்துட்டுப்போனா, பொழுது போகாதுன்னு சீட்டுக்கு முன்னால படம் காட்டுற திரையை வெச்சிருப்பாங்க. பார்வைக்கு அழகான பெண்களை வேலைக்கு நியமிச்சு இருப்பாங்க. பூமியில் இருந்தா,  என்னென்ன வசதிகளோட நாம இருப்போமோ, அதெல்லாம் பல ஆயிரம் அடி உயரத்துல  பறக்கும்போதும் செஞ்சிக்  கொடுக்கிறாங்க. அதே மாதிரி, பஸ் பயணத்தையும் `சொகுசு பயணமா மாத்தினா என்ன?`னு தோணுச்சு.

என் பஸ்ஸை பெயின்டிங் பண்றதுல இருந்து,  சீட் வடிவமைப்பு வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சேன். பெரிய பெரிய பஸ் தயாரிப்பு கம்பெனிங்க, புது வண்டிக்கான டிசைன் செய்யும்போது எங்கிட்ட கருத்து கேப்பாங்க. அந்த அளவுக்கு பயணிகளோட வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். கே.பி.என். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதுதான் முக்கியக் காரணமா அமைஞ்சது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close