[X] Close

இறவாக் கலைஞன் பாலுமகேந்திரா


balu-madendra

இயக்குநர் பாலுமகேந்திரா

  • வி.ராம்ஜி
  • Posted: 13 Feb, 2019 11:12 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

தியேட்டரில், சினிமாவில்... ஒருநிமிடமோ இரண்டு நிமிடமோ... சத்தமே இல்லாமல் காட்சிகள் நகர்ந்துகொண்டிருந்தால், ‘ஆய் ஊய்...’ என்று கத்திக் களேபரப்படுத்திவிடுவார்கள் ரசிகர்கள். ஆபரேட்டர் அறையில் இருந்து வரும் ஒளிப்புகை நோக்கி, திரும்பி, குரல் கொடுப்பார்கள். ‘யோவ்... ஆபரேட்டரே... என்னாச்சு?’ என்று களேபரமாவார்கள். மெளனமும் அமைதியும் நமக்குப் புதிது. நம்மால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆரம்பகால சினிமாக்களில் மெளனமே இருப்பதில்லை. ஆனால், மெளனங்களின் வழியாகவும் நமக்குள் கதையின் போக்கையும் வலியையும் நமக்குள் கடத்தியவர்கள் வெகுசிலரே! அவர்களில் முக்கியமானவர் பாலுமகேந்திரா.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் பெற்றவர் ஏ.வின்சென்ட். நம்மூர் இயக்குநர் ஸ்ரீதரின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். கேமிரா வழியே ஜாலம் காட்டியவர். இவருக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே... எனும் அடைமொழியுடன் கேமிரா வழியே கவிதை எழுதியவரும் கோலமிட்டவரும் பாலுமகேந்திரா என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது சினிமா உலகம்.

இலங்கையில் பிறந்து எங்கெல்லாமோ படித்து, புனேவில் ஒளிப்பதிவைப் பயின்று, அதில் தங்கப்பதக்கம் வென்ற பாலுமகேந்திராவின் பெயரை, ரசிக மனங்கள் இன்றைக்கும் சூடியது சூடியபடி இருக்கின்றன. அங்கே படித்துக்கொண்டிருந்தபோது இவர் பார்த்த அந்தப் படம் உள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கத்தை ஏற்படுத்திய படம்... ‘பதேர் பாஞ்சாலி’. ஏற்படுத்தியவர் சத்யஜித் ரே.

இவரின் திறமை ஊருக்கும் உலகுக்கும் தெரிவதற்கு முன்பே, ராமு காரியத் உணர்ந்து புரிந்தார். புகழ் பெற்ற ‘செம்மீன்’ பட இயக்குநரான இவர், பாலுமகேந்திராவின் கண்கள் வழியே தன் அடுத்த படமான ‘நெல்லு’ திரைப்படத்தைக் கொடுத்தார். அதுவரை அப்படியொரு உணர்வை, எந்தக் கேமிராவும் உள்புகுத்தியதில்லை. கிறங்கிப்போனான் ரசிகன். ‘யாருய்யா கேமிராமேன்’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டான். ‘யாரோ பாலுமகேந்திராவாம்’ என்றார்கள்.

ஒரு படம், இயக்குநரைத் தாண்டி, நாயக நாயகியைத் தாண்டி, கதையைத் தாண்டி, பேசுபொருளானது. ‘எல்லாமே சூப்பர். எல்லாத்தையும் விட, பாலுமகேந்திரா கேமிரா பிரமாதம்’ என்றார்கள் ரசிகர்கள். அடுத்தடுத்த படங்கள் வந்துகொண்டே இருந்தன.

ஆனாலும் அவருக்கு படம் பண்ண விருப்பம். உள்ளே ‘பதேர்பாஞ்சாலி’ தந்த பாதிப்புகள் நிமிண்டிக்கொண்டே இருந்தன. கன்னடத்தில் முதல் படம் இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் கோகிலா. படத்தின் நாயகன் கமல்ஹாசன். மிகப்பெரிய தாக்கத்தைத் தந்தது கோகிலா.

அதே வருடத்தில், ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார், புதிய இயக்குநரைக் கொண்டு படவேலைகளில் இறங்கியிருந்தார். அந்த இயக்குநருக்கு நல்ல ஒளிப்பதிவாளர் அமையவில்லையே என்றொரு குறை. அதைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்க, அப்போது இயக்குநரிடம் பாலுமகேந்திராவின் பெயர் சொல்லப்பட்டது. அவரும் ஏற்றுக்கொண்டார். பாலுமகேந்திராவின் பெயரை சிபாரிசு செய்தவர் கமல்ஹாசன். அந்த இயக்குநர் மகேந்திரன். அந்தப் படம்... முள்ளும் மலரும். இந்த ‘முள்ளும் மலரும்’தான் பாலுமகேந்திரா தமிழில் ஒளிப்பதிவு செய்த முதல் படம்.

இப்படித்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் பாலுமகேந்திரா.

அழியாத கோலங்கள் கொடுத்தார். இன்னும் அழியாமல் பசுமையாய், அழியாமல் இருக்கிறது. ‘மூடுபனி’ கொடுத்தார். இன்னும் அந்தப் பனி, நம்மை ஊடுருவித் துளைத்துக்கொண்டே இருக்கிறது. அவரின் ‘மூன்றாம் பிறை’ முழுநிலவென நம் மனதில் நிறைந்திருக்கிறது. விஜியை, சீனுவை, அந்தச் சுப்பிரமணியை யார்தான் மறக்கமுடியும்?

கதை சொல்லும் பாணி புதிது. பாடல்கள் இருக்கும். ஆனால் டூயட்டுக்கு, மரம் சுற்றி ஆடுவதற்கு இடம் தரமாட்டார். பல பாடல்கள் ஓடிக்கொண்டே இருக்கும். நாயகனும் நாயகியும் பேசிக்கொண்டே, நடந்துகொண்டே, ஓடிக்கொண்டே, சிரித்துக்கொண்டே, விளையாடிக்கொண்டே இருப்பார்கள். வேறு ஏதேதோ பேசியபடி இருப்பார்கள்.

கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போலவே, மெளனத்தின் பாஷைகளை, அதன் வீரியங்களை, கனத்தை நமக்குள் கடத்தினார் பாலுமகேந்திரா. இன்றைக்கு வயதாகிவிட்டாலும் மாஸ் ஹீரோக்கள், ஹீரோக்களாகவே அடியும் உதையுமென பறந்துபறந்து சண்டைக்காட்சிகள் வைக்கப்பட, நடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே வயதாகிவிட்ட சொக்கலிங்க பாகவதர் தாத்தாவை முக்கியக்  கேரக்டரில் நடிக்க வைத்து ‘வீடு’ என்றொரு படத்தை எடுத்தார். ‘சந்தியாராகம்’ என்ற படத்தை வழங்கினார்.

‘என் படத்தின் மெளனங்கள், வசனங்கள் சொல்லாததை மிக அழகாக உணர்த்திவிடுபவை. அந்த மெளனத்தை சிதைக்காமல், உயிர் கொடுத்தவர் இளையராஜா. எனக்கும் இளையராஜாவுக்கும் அப்பாடியொரு புரிதலுணர்வு உண்டு. ராஜாவின் இசை இல்லாமல் நான் படமெடுக்கமாட்டேன்’ என்று சொன்ன பாலுமகேந்திராவின் கடைசிப்படமான ‘தலைமுறைகள்’ படத்துக்கும் இளையராஜாதான் இசையமைத்தார். இந்தப் படத்தில் அவரே கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்குப் பிறகு, இயக்குநர் பாக்யராஜுக்குப் பிறகு, இயக்குநர் மணிவண்ணனுக்குப் பிறகு தன்னுடைய பட்டறையில் இருந்து, ஏராளமான படைப்பாளிகளை, இயக்குநர்களை உருவாக்கியது பாலுமகேந்திரா எனும் மகா கலைஞன்தான்!  

தமிழ் சினிமாவில், சிலரது இடங்களை எவராலும் பிடிக்கவே முடியாது. சிலரைப் போல எவராலும் ரசிக மனங்களைத் தொடவே முடியாது. இந்த இரண்டுக்கும் சொந்தக்காரர்கள் பலர் உண்டு. அதில், பாலுமகேந்திராவுக்கு தனியிடம் உண்டு.

13.2.19 இன்று பாலுமகேந்திரா நினைவு தினம்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close