[X] Close

ரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்! இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலகல


rajini-kamal-spm

ரஜினி - கமல்

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Feb, 2019 20:42 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரஜினியை கமலும் கமலை ரஜினின்னும் கூப்பிட்டதையெல்லாம் மறக்கவே முடியாது என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இதுவரை 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் கமல், ரஜினியை வைத்து ஏராளமான படங்களை இயக்கி, அந்தப் படங்களை மிகப்பெரிய வெற்றிப்படங்களாகவும் ஆக்கியுள்ளார்.

தனியார் சேனல் ஒன்றில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:

கமலை அவன் சின்னப்பையனா அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்துலேருந்தே தெரியும் எனக்கு. கமலைத் தூக்கி வைச்சுக்கிட்டிருந்தவன்னு பெருமையா சொல்லிக்கறேன். களத்தூர் கண்ணம்மா இன்னொரு வகைல எனக்கு முக்கியமான படம். ஏன்னா, அதுதான் நான் உதவி இயக்குநரா வேலை பார்த்த முதல் படம். ஆக, அப்போலேருந்தே கமலைத் தெரியும்.

அதேபோல, கே.பாலசந்தரால அடையாளம் காட்டப்பட்ட ரஜினியும் எனக்கு அறிமுகமானார். கமலுக்கும் ரஜினிக்கும்னு நிறையப் படங்கள் இயக்கியிருக்கேன்.

அப்பலாம், மாசத்துல முதல் பத்துநாள் ரஜினி படம் இயக்குவேன். கடைசி பத்து நாள் கமல் படம் இயக்குவேன். ‘ஏன் ரஜினி படம் பண்றீங்க?’ன்னு கமலும் கேக்கமாட்டார். ‘கமல் படம் என்ன கதை?’ன்னு ரஜினியும் கேக்கமாட்டார்.

ரஜினி பட வேலையெல்லாம் முடிச்சிட்டு, கமல் படம் ஆரம்பிப்போம். அப்போ, ‘கமல் இப்படி நடந்து வந்து அப்படித் திரும்பி டயலாக் பேசு’ன்னு சொல்றதுக்கு பதிலா, ‘ரஜினி இப்படி நடந்து வந்து அப்படித் திரும்பி டயலாக் பேசு’ன்னு சொல்லிருவேன். உடனே கமல், ‘ஆமாம், உங்களுக்கு எப்பவும் ரஜினி பத்திதான் நினைப்பு. என்னையெல்லாம் மறந்துருவீங்களே?’ன்னு கமல் கிண்டலாக் கேப்பார்.

அதேபோல கமல் பட ஒர்க்கை முடிச்சிட்டு, ரஜினி பட வேலை பண்ணும்போது, ‘கமல் இந்த சீன்ல நீங்க இப்படிப் பண்ணனும்’னு ரஜினியை கமல்னு பலதடவை கூப்பிட்டிருக்கேன். உடனே ரஜினி, ‘என்னை விட உங்களுக்கு கமல் மேலதான் பிரியம் ஜாஸ்தி. களத்தூர்கண்ணம்மாலேருந்தே கமல் கூட நெருக்கமில்ல’ன்னு கேலி பண்ணுவார்.

என்னைப் பொருத்தவரைக்கும் கமல் வேற, ரஜினி வேற கிடையாது. ரஜினி, கமல் ரெண்டுபேருமே எனக்கு ரெண்டு கண்கள்.

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close