[X] Close

‘சர்வம் சுந்தரம்’ பாட்டு; நான் நிதானத்துலயே இல்ல; ஏவிஎம் செட்டியார் சொன்ன ஒத்தை வார்த்தை! - கவிஞர் வாலி ஞாபகங்கள்


vaali-server-sundaram

சர்வர் சுந்தரம்

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Feb, 2019 11:33 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘சர்வர் சுந்தரம்’ பாட்டு எழுத திடீர்னு கூப்பிட்டாங்க. நான் அப்போ நிதானத்துல இல்ல. ’மருந்து’ சாப்பிட்டிருந்தேன். அப்போ ஏவிஎம் செட்டியார் செவுனில அறையாத குறையா சொன்னார் என்று கவிஞர் வாலி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஏவிஎம் அவர்களின் 104வது பிறந்தநாள் விழாவை ஒருமுறை கொண்டாடினார்கள். அதில் கலந்துகொண்ட கவிஞர் வாலி பேசினார்.

அப்போது அவர் பேசியதில் இருந்து...

‘’1964ம் வருஷத்திலேருந்து 79ம் வருஷம் வரைக்கும் ஏவிஎம் அவர்களோட நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது, என்னோட பாக்கியம்.

எனக்கு நல்லா நினைவிருக்கு. அப்போ தி.நகர் பக்கம் சிஐடி நகர்ல குடியிருக்கேன். கல்யாணமாகலை. சாத்தப்பன்னு ஒரு சமையற்காரரை வேலைக்கு வைச்சிக்கிட்டு, பாட்டு எழுதிட்டிருந்தேன்.

அது 1964ம் வருஷம். டிசம்பர் மாசம். மாலை நேரத்துல பாட்டெல்லாம் எழுதிமுடிச்சிட்டு, வீட்டுக்கு வந்தா, சந்திரபாபு, விஸ்வநாதன், ராமமூர்த்தின்னு யாராவது வருவாங்க. வேற எதுக்கு? விருந்துக்கும் மருந்துக்கும்தான்.

காலைல ஆர்.ஆர்.பிக்சர்ஸ் ‘பணம் படைத்தவன்’ எம்ஜிஆர் படத்துக்காக பாட்டு எழுதினேன். ‘என்ன சாயந்திரம் வர்றீங்களா?’னு விஸ்வநாதன் ராமமூர்த்திகிட்ட கேட்டேன். ‘சாயந்திரம் ஏவிஎம் படம். சர்வர்சுந்தரம்னு ஒரு படம். அதுக்கு கண்ணதாசன் கூட கம்போஸிங் இருக்கு’ன்னு சொல்லிட்டாங்க அவங்க!

சாயந்திரம் மற்ற நண்பர்களோட ‘மருந்து’ சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். திடீர்னு வாசல்ல கார் நிக்கிது. ‘ஒரு பாட்டு எழுதணும். கையோட உங்களைக் கூட்டிட்டு வரச்சொன்னாங்க’ன்னு விஸ்வநாதன் ராமமூர்த்தியோட புரோகிராம் இன்சார்ஜ் தாடி சுந்தரம் வந்து சொன்னாரு.

நான் நிதானத்துல இல்ல. அதாவது போதைல இருக்கேன். சரின்னு கிளம்பிப் போனேன்.’நல்லாத் தெரியுமா? என்னைத்தான் வரச்சொன்னாங்களா?’ன்னு கேட்டேன்.

அதுக்கு தாடி சுந்தரம், ‘அந்த ‘வண்ணக்கிளி சொன்ன மொழி என்னமொழியோ...’ எழுதின வாலியைக் கூட்டிட்டு வந்து இந்தப் பாட்டை எழுதவைங்க’ன்னு ஏவிஎம் செட்டியாரே சொல்லிட்டாரு’ என்றார்.

போனேன். சீன் சொன்னாங்க. பாட்டு எழுதிக் கொடுத்தேன். அதுதான், ‘அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன’ பாட்டு. மிகப்பெரிய ஹிட்டாச்சு அந்தப் பாட்டு.

அப்போ, அந்த ரூம்க்கு ஏவிஎம் செட்டியார் வந்தார். நான் தண்ணி அடிச்சிருந்ததால ரூம் முழுக்க அந்த வாசம்தான். விஸ்வநாதன் கூட வெத்தலையைப் போடுய்யா வெத்தலையைப் போடுய்யான்னு சொன்னாரு. எவ்ளோதான் போடுறது. வெத்தலையைப் போட்டுப் போட்டு  கன்னமே வீங்கிப்போச்சு.

செட்டியார் வந்தார். பாட்டு ரொம்ப நல்லாருக்குன்னார். செட்டியாரோட செகரெட்டரி ரங்கசாமி ஐயங்கார். அவரைக் கூப்பிட்டார். ‘ரங்கசாமி, ரூம்ல ஏதோ ஸ்மெல் வருது. ஊதுபத்தியைக் கொளுத்தி வைங்க’ன்னு சொல்லிட்டுப் போனார். எனக்கு செவுனிலியே ஒரு அறை விட்ட மாதிரி இருந்துச்சு’

இவ்வாறு கவிஞர் வாலி தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close