[X] Close

போராட்ட களத்தில் கொங்கு விவசாயி!- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி


kovai-farmer

  • kamadenu
  • Posted: 06 Feb, 2019 11:02 am
  • அ+ அ-

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாராவாரம் விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சட்டைக்காலர் அழுக்காகாமல் செல்லும் சிலர், கசங்கிய உடை, கலைந்த தலையுடன், கையில் கோரிக்கை அட்டையையோ அல்லது வாடிப்போன, கருகிப்போன பயிர்களையே பிடித்துக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டுப்பவர்களைப் பார்த்து, "இவங்களுக்கு வேற வேலை இல்ல" என்றபடி அவர்களைக் கடந்து செல்வார்கள், காலையில் அவர்கள் சாப்பிட்ட உணவு, அங்கு போராடிக் கொண்டிருக்கிற விவசாயி விளைவித்ததுதான் என்பதை  அறியாமல்!

"அரசாங்கம்தான் விவசாயிகளுக்கு நிறைய செய்வதாக கூறுகிறதே? இன்னும் எதற்கு நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள்?" என்று, போராட்டத்துக்கு தலைமை வகித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு.பழனிசாமியிடம் கேட்டோம்.

"நல்லா இருந்தா, விவசாயிங்க ஏங்க தற்கொலை செஞ்சிக்க போறாங்க? நாட்டோட முதுகெலும்பு விவசாயம்னு சொல்லிக்கிட்டே, அந்த முதுகெலும்ப ஒடச்சிக்கிட்டிருக்காங்க. ஊருக்கே சோறு போடற விவசாயி, தன்னோட சாப்பாட்டுக்கே போராடத்தான் வேண்டியிருக்கு. மூத்த குடி, ஆதிதொழில்னு எல்லாம் சொன்னாலும், வாழ்வாதாரத்தை இழந்து, தற்கொலை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிங்க தள்ளப்பட்டுவிட்டாங்க. எங்க வாழ்க்கைய, உரிமைய மீட்க நாங்க போராடத்தானே வேண்டியிருக்குங்களே. கேலி, கிண்டல் செஞ்சா, செஞ்சிட்டுப் போறாங்க. விவசாயியா இருந்து பாருங்க. அப்பத்தான் எங்களோட வலியை உணர முடியும்" என்றார் கொஞ்சம் வேதனையுடன்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கருமத்தம்பட்டி புதூரைச் சேர்ந்த சு.பழனிசாமியின்(59) தந்தை சுப்பண்ண கவுண்டர், தாய் ராஜம்மாள்.  பாரம்பரிய விவசாயக் குடும்பம். "எங்க தாத்தா ராமண்ண கவுண்டர், குடுமி வெச்சிக்கிட்டு, கடுக்கன் போட்டுக்கிட்டு விவசாயம் பாத்தாரு. அதையெல்லாம் பாத்து நாங்க வளர்ந்தோம். எங்க வீட்ல நிறைய கறவை மாடு இருக்கும். நானு, அண்ணன் நடராஜன், தம்பி ராமசாமி எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்தவாட்டி, தோட்டத்துக்குப் போவோம். கறவ மாடுகளையும் பராமரிப்போம். எங்க அப்பா பொதுவுடமைவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில சோமனூர் பகுதி செயலாளராக இருந்தாரு.

கருமத்தம்பட்டி மரியன்னை உயர்நிலைப் பள்ளியில எஸ்.எஸ்.எல்.சி. படிச்சேன். ஸ்கூல்ல படிக்கும்போதே மாணவர் தலைவனா பொறுப்பு வகிச்சேன். ஸ்கூல் முடிச்சதுக்கப்புறம் அகில இந்திய மாணவர் பெருமன்றத்துல சேர்ந்து, 1978-ல தலைவரா தேர்வானேன். அப்ப கோயம்புத்தூர் மாவட்டத்துல இருக்கற பள்ளிக்கூடங்கள்ல மாணவர் தலைவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேணுமுன்னு போராட்டம் நடத்தினோம். அதுக்குப் பிறகு இளைஞர் பெருமன்றத்துல சேர்ந்தேன். அதுல மாவட்டச் செயலாளராக இருந்து, கோயம்புத்தூர் முழுவதும் அமைப்பை பலப்படுத்தினோம்.

1992-ல் திருமணமாச்சி. மனைவி தேவி. இன்னைய வரைக்கும் நான் பொதுவாழ்க்கையில முழுமையாக கவனம் செலுத்தறதுக்கு, அவங்கதான் காரணம். விவசாயிங்க பிரச்சினையில நான் கவனம் செலுத்தினால், எங்க குடும்ப பிரச்சினைகள அவங்க பாத்துக்கிட்டாங்க.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில இருந்து தா.பாண்டியன் வெளியேறி, ஐக்கிய பொதுவுடமைக் கட்சி தொடங்கினப்ப, நான் அவரோட இணைஞ்சேன். இந்திய இளைஞர் மன்றத்தோட  மாநிலத் தலைவர், கட்சியோட கோவை மாவட்டச் செயலர்னு பொறுப்புகள் வகிச்சேன். மீண்டும் ரெண்டு கட்சியும் சேர்ந்ததால, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துல சேர்ந்தேன். மாவட்டக் குழு உறுப்பினர், செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர்னு பல பொறுப்புகளுக்கு அப்புறம், 2009-ல்

மாவட்டத் தலைவராகப் பொறுப்பேத்து, இன்னிக்கு வரைக்கும் விவசாயிங்களுக்காக போராடிக்கிட்டிருக்கேன்" என்றார் சு.ப. என்று தோழர்களால் அழைக்கப்படும் சு.பழனிசாமி.

"2015-ல் நீங்கள் நொய்யல் பாதுகாப்பு மாநாடு நடத்தினீர்களே? அது எதற்கு?" என்று கேட்டோம். "காஞ்சிமா நதி-னு சங்க இலக்கியத்திலேயே நொய்யலாற குறிப்பிட்டிருக்காங்க. கோயம்புத்தூருக்கே பாசன வசதியும், குடிநீர் வசதியும் கொடுத்துக்கிட்டிருந்த நதியை, ஆக்கிரமிப்பு, கழிவு கலக்கறதுன்னு அழிக்கிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வந்து, சுத்தமான தண்ணி போய்க்கிட்டிருந்த நொய்யல சாக்கடையா மாத்திக்கிட்டிருக்கோம். எங்க கண்ணு முன்னாடி ஒரு நதி செத்துக்கிட்டிருக்கறத பாக்கத் தாங்க முடியல. அதனாலதான், நொய்யலைப் பாதுகாக்கணும், அத்திக்கடவு-கவுசிகா நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தணுமுன்னு மாநாடு நடத்தினோம்.

நொய்யல் மட்டுமில்லீங்க. எல்லா நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பு, குப்பை, கழிவுகொட்டறதுன்னு அழிச்சிக்கிட்டிருக்கிறோம். நீர்வரத்து வாய்க்கால் முழுக்க கட்டிடங்களாக மாறிக்கிட்டிருக்கு. இப்படியே போனா, ஒரு சொட்டு தண்ணி கிடைக்காதுங்க. அதனாலதான், நீர்நிலைகளை பாதுகாக்கணும், ஆக்கிரமிப்புகளை அகற்றணுமுன்னு இன்னும் போராடிக்கிட்டிருக்கிறோம். பொள்ளாச்சியில இருந்து நிறைய தண்ணீர் கேரளாவுக்குப் போய், வீணா கடல்ல கலக்குது. கோயம்புத்தூர்லயே தடுப்பணைகள் கட்டி, அந்த தண்ணிய பயன்படுத்தனும். நீர்நிலைகள்ல இருக்கற சீமைக்கருவேல மரங்களையும், பார்த்தீனியம் செடிகளையும் அகற்றணும்.

இப்ப அரசாங்கமே பிளாஸ்டிக்க ஒழிக்க தடை கொண்டு வந்துடுச்சி. ஆனா,  2017-லேயே நாங்க பிளாஸ்டிக் பைகள், பொருட்களை ஒழிக்க வேணுமுன்னும், அதுக்குப் பதிலா வாழை இலை, பாக்குமட்டை மாதிரியான வேளாண் விளை பொருட்கள பயன்படுத்துணுமுன்னும் போராட்டம் நடத்தினோம். 

கோயம்புத்தூர்ல இயங்குற கரும்பு இனவிருத்தி ஆராய்ச்சி மையத்தை, லக்னோவுக்கு மாத்த நடவடிக்கை எடுத்தாங்க. அதையும் கண்டிச்சிப் போராட்டம் நடத்தினோம்.

இப்பவெல்லாம், விவசாயம் செய்யறதே ரொம்ப கஷ்டமுங்க. ஒரு பக்கம் வறட்சி. இல்லைன்னா வெள்ளம். இதுமட்டுமில்லாம, இடுபொருட்கள் விலை உயர்வு, பூச்சித் தாக்குதல், வேலைக்கு ஆட்கள் கிடைக்காததுனு ஆயிரம் பிரச்சினை. இதையெல்லாம் மீறி பயிர் சாகுபடி செஞ்சி, விளை பொருட்களை உற்பத்தி செஞ்சா, போதுமான விலை கிடைக்காது. விவசாயி கிட்ட 10 ரூபாய்க்கு வாங்கற பொருள, நுகர்வோர்கிட்ட 50 ரூபாய், 60 ரூபாய்க்கு விக்கறாங்க. விவசாயிக்கும் லாபம் இல்ல. நுகர்வோருக்கும் நியாயமான விலையில கிடைக்கறதில்ல. இடையில வாங்கி விக்கறவங்க மட்டும்தான் பயனடைகிறாங்க. இதனால, அரசாங்கமே ஒவ்வொரு விளை பொருளுக்கும் உரிய விலையை நிர்ணயிக்கணுமுன்னு போராடிக்கிட்டு வர்றோம். வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை கொண்டுவரக்கூடாதுனு கோரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கோம்.  உழவர் சந்தையில நிலவுற பிரச்சினைகள் தொடர்பாவும் போராடியிருக்கோம்.

வன விலங்குகள் தொல்லை!

யானைங்க, சிறுத்தை,  காட்டுப்பன்றினு விளை பொருட்களை சேதப்படுத்தற விலங்குகள் ஏராளம். பல இடங்கள்ல விவசாயியை தாக்கி, உயிரைப் பறிச்சிடுதுங்க. ஊருக்குள்ள வன விலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தணும், பாதிக்கப்பட்ட விவசாயிங்களுக்கு, கேரளா, மகாராஷ்டிரா மாதிரி உரிய இழப்பீடு கொடுக்கணுமுன்னு போராடிக்கிட்டிருக்கோம். இப்பவெல்லாம் வேளாண்மைத் துறையில போதுமான அளவுக்கு அதிகாரிங்க இல்ல. இதனால ஃபீல்டு விசிட் வர்றது கம்மியாயிடிச்சி.

பல பகுதிகள்ல தண்ணி இல்லாம பாசனமே நடக்கல. இதனால, தென்னக நதிகளை இணைக்கணும். குறைந்தபட்சம், தமிழகத்துல உள்ள நதிகளையாவது இணைக்கணுமுன்னு வலியுறுத்தி வர்றோம். அதேமாதிரி, விவசாயத்துக்கு தனிபட்ஜெட் போடணும்.  விவசாயிங்க பிரச்சினைக்காக பலமுறை போராட்டம் நடத்தி, கைதாகியிருக்கேன். விவசாயிங்க பிரச்சினைக்கு சட்டரீதியான தீர்வு கிடைக்கணும். இதுக்காகவே என் பெரிய பையன் கௌதம் ராஜ வக்கீலுக்குப் படிக்க வெச்சிருக்கேன்.

பறிபோகும் விளை நிலங்கள்

இப்பவெல்லாம்,  விளை நிலங்களை ஏதாவது சொல்லி, பறிமுதல் செஞ்சிக்கிறாங்க. புதுசா மின் கோபுரம், உயரழுத்த மின் கம்பிங்க அமைக்க நிலங்கள ஆர்ஜிதம் செய்யப் பாக்கறாங்க. எந்த திட்டத்தையும், விளை நிலங்கள பாதிக்காம செயல்படுத்தணுமுங்க.

விவசாயிங்க நல்லா இருந்தாதான், எல்லோரும் சாப்பிட முடியும். ஆனால், விவசாயிங்க எல்லாம் நிலத்த வித்துவிட்டு, வேலைக்குப் போற சூழல் அதிகரிச்சிருக்கு. நம்ம நஷ்டம் நம்மளோடயே போகட்டுமுண்ணு, அடுத்த தலைமுறையை விவசாயத்துக்கு வர வேணாம்முண்ணு சொல்லற நிலை. எல்லோருக்கும் ஓய்வூதியம் இருக்கு. சோறு போடற விவசாயிக்கு ஓய்வூதியம் இருக்குதா? விளை பொருட்களை கொண்டுபோகற வண்டிக்குக்கூட டோல்கேட் கட்டணம் வசூலிக்கறாங்க. சந்தையில காய்கறிக்கு இரட்டை வரி வசூலிக்கறாங்க.

இதெல்லாம் மாறணுமுன்னா, விவசாயிங்களோட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கணுமுங்க. நாதியத்த விவசாயிகளோட பிரச்சினையை யார் வெளிப்படுத்தறது. அதுக்குதான் நாங்க தொடர்ந்து போராடறோம். பல பிரச்சினைகள்ல தீர்வும் கிடைச்சிருக்கு. விவசாயிக்கு விடியணுமுன்னா ஒண்ணு சேர்ந்து போராடணும். இப்ப சொல்லுங்க... நாங்க போறாடறது தப்புங்களா?" நியாயமான கேள்வியுடன் முடித்துக் கொண்டார் சு.பழனிசாமி.

கமிஷன் வாங்காம வளர்ச்சிப் பணி!

2001 முதல் 2006 வரை சூலூர் வடக்கு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இருந்துள்ளார் இவர்.  "அப்ப 11 ஊராட்சிகள்ல 96 கிராமங்கள்ல ரூ.2.36 கோடிக்கு சாலை, குட்டை மேம்பாடு, பள்ளிக் கட்டிடம், மருத்துவமனை, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடம்னு நிறைய பணிகள் செஞ்சோம். ஒரு பைசாகூட கமிஷன் வாங்கல. இதனால், சிறந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரா தேர்வு செஞ்சி பாராட்டினாங்க` என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close