[X] Close

சுற்றுச்சூழலை காக்கும் இளைஞர் படை!- ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு


valluvar

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 16:23 pm
  • அ+ அ-

எஸ்.விஜயகுமார்

நீரின்றி அமையாது உலகு' என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் அருமையை உணர்த்திவிட்டார் வள்ளுவர்.

தண்ணீர் இல்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது. உலகில் உள்ள நீரில் சுமார் 3 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீர் . இதிலும் 2  சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது. வெறும் ஒரு சதவீத  தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதால் மட்டுமே நம்மால் அதிக தண்ணீரைப் பெற முடிகிறது. மழை பெய்வதற்கு முக்கியக்  காரணமாக மரங்களும், அவை மிகுந்த வனப் பகுதிகளும்தான். ஆனால், நாம் தான் அவற்றை அழித்துக்கொண்டே போகிறோமே! இதனால்தான், ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையாவது நட்டுவைத்துப் பராமரிக்க வேண்டுமென வலியுறுத்துகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.  அவசர உலகில் இதற்கெல்லாம் நேரமின்றிப் பறந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால், சேலத்தில் இளைஞர் பட்டாளம் மரம் நடுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது ஆச்சரியமளிக்கிறது. அவர்கள்தான் `சேலம் இளைஞர் குழு` அமைப்பினர். மரம் நடுவது மட்டுமின்றி, சமூகப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவ்வமைப்பின் செயலர் ஆர்.பிரதீப்பை சந்தித்தோம்.

"இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை வாங்கி, ஆங்காங்கே இருந்த வெற்றிடங்களில் நட்டு வைக்கத் தொடங்கினோம். நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்தபோதிலும், அவற்றில் சில மட்டுமே துளிர்த்து வளரத் தொடங்கின. அதனால், மரக்கன்றுகளாக வைப்பதைவிட, 3 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்த செடிகளாக வைக்கவும், ஒவ்வொரு செடியையும் இரும்புக் கம்பிகளாலான கூண்டுக்குள் வைக்கவும் முடிவுசெய்தோம்.

அதற்காக, சேலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் வயதுடைய செழிப்பான மரங்கள் இருக்கும் இடத்தை தேடிச்சென்று, அவற்றின் விதைகளைப்  பொறுக்கி எடுத்துவந்தோம். வேம்பு, இலுப்பை, நாவல், புங்கை, பூவரசு, இலந்தை, நாட்டு நெல்லி என நாட்டு வகை மரங்களை மட்டுமே  தேர்வு செய்தோம். இந்த விதைகளைக் கொண்டு 3 அடி உயர மரக்கன்றுகளை வளர்த்தோம்.

பின்னர்,  ஆங்காங்கே அவற்றை நட்டு வைத்து வருகிறோம். 3 அடி உயர மரக்கன்றுகளை நட்டுவைப்பதால், அவற்றில் 70 சதவீதத்துக்கும் மேலானவை உயிர்ப்புடன் இருக்கின்றன.

மேலும், வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், எங்கள் குழுவின் www.salemyouthteam.in என்ற இணையத்தில் பதிவு செய்பவர்களின் வீடுதேடிச்சென்று, மரக்கன்றுகளை நாங்களே நட்டுவைக்கிறோம். மேலும், அந்த வீட்டில் உள்ள குழந்தையின் பெயரை அந்த மரக்கன்றுக்கு சூட்டி, குழந்தையின் கைகளால் மரக்கன்றை நடுகிறோம். இதனால், அவர்கள் தங்கள் குழந்தையைப்போல மரக்கன்றைப்  பாதுகாத்து வளர்க்கின்றனர். இதுபோல,  இதுவரை 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளோம்.

சேலம் அரசு மருத்துவமனை வளாகம், பெரியார் மேம்பாலத்தை ஒட்டிய சாலை, மாநகராட்சி அலுவலக வளாகம் என பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு, கூண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகிறோம். வாரந்தோறும் வாகனத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று, மரக்கன்றுகளுக்கு  ஊற்றிப் பராமரித்து வருகிறோம்" என்றார்.

தனி நர்சரி

இதேபோல, அரசுப் பள்ளிகளிலும் மரக்கன்றுகளை வைத்து, இரும்புக் கம்பிகளாலான கூண்டுகளில் பராமரித்து வருகின்றனர். 3 அடி உயர  மரக்கன்றுகளை வாங்குவதற்கு அதிக செலவானதால், சொந்தமாக நர்சரி வைக்க முடிவு செய்தனர். இவர்களது பணியால் நெகிழ்ந்த ஆசிரியர்கள், தங்கள் மன்ற அலுவலகம் உள்ள இடத்தின் ஒரு பகுதியில் நர்சரியை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளனர். தற்போது, அந்த இடத்தில் சிறிதாக நர்சரி வைத்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்கின்றனர்.

இதுவரை 10 ஆயிரம் மரக்கன்றுகளை  பொதுமக்கள், சமூக அமைப்புகளுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக் தடையை கொண்டு வருவதற்கு முன்னரே, கடைவீதிகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கிச் செல்பவர்களிடம் அந்தப் பைகளைப் பெற்றுக்கொண்டு, துணிப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், பழுதடைந்த அங்கன்வாடி மையங்களைச் சீரமைப்பது, வகுப்பறை சுவரில் குழந்தைகளைக் கவரும் ஓவியங்கள், பாடம் தொடர்பானவற்றை வரைவது, குழந்தைகளுக்கு  அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இதுவரை 3 அங்கன்வாடி மையங்களை இவர்கள் மேம்படுத்தியுள்ளனர்.

தினமும் 60 ஏழைகளுக்கு இரவில் இலவசமாக  உணவு கொடுக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர்.

அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, உணவகம் நடத்தும் ஒருவரது உதவியுடன் தினமும் இரவில் 60 உணவு பாக்கெட் தயாரித்து, நகரின் பல்வேறு இடங்களில் உணவின்றித் தவிப்போருக்கு கொடுக்கின்றனர்.

கடந்த  270 நாட்களாக இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

மரங்களில் விளம்பரப் பலகைகளை மாட்டுவதற்காக அடிக்கப்பட்டுள்ள ணிகளைப்  பிடுங்கிவிட்டு, ‘மரத்தில் ஆணி அடிக்க வேண்டாம்’ என்ற வேண்டுகோளுடன் கூடிய பலகையை கட்டி வைக்கின்றனர்.

மேலும், மரங்களில் ஆணிகளை பிடுங்கி எடுத்த இடத்தில், நல்லெண்ணெயில் மஞ்சள் கலந்து  பூசுகின்றனர்.

மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் மரங்களை நட்டுப் பராமரிப்பதே நோக்கம் என்று கூறும் இக்குழுவினர், சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, சவரம் செய்து, குளிக்கச் செய்வது போன்ற பணிகளையும் அவ்வப்போது மேற்கொள்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close