[X] Close

தேர்வுக்குத் தயாராவது இப்படித்தான்: பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு!


10th-plus2

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 13:12 pm
  • அ+ அ-

ஜெமினி தனா               

இன்றைக்கு லைஃப் இஸ் எ ரேஸ்… ரன்.. ரன்… என்று  குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.  இப்படிச் சொல்வதை விட, பெற்றோர் இழுக்க குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஆசிரியர்கள் இழுக்கிறார்கள். இரண்டுமே மதிப்பெண்ணுக்கான பயணம்தான்!

அம்மாவுக்கும்   குழந்தைக்கும், அப்பாவுக்கும் குழந்தைக்கும் அல்லது பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடக்கும் ஸ்கூல் சம்பந்தப்பட்ட பேச்சு, ஆகச்சிறந்த கவலையாகிவிட்டது. மகுடிக்கு கட்டுப்பட்டது போல் இந்த வாசிப்பில் அடங்கியபடி தலையாட்டுவார்கள் குழந்தைகள்.

”இந்த வருஷம் நீங்கல்லாம் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறீங்க… கொஞ்சம் கூட பயமே இல்லாம விளையாட்டுப்பசங்க மாதிரி இருக்கீங்க? நம்ம ஸ்கூல் வழக்கம் போல இந்த வருஷமும் 100% ரிசல்ட் கொடுக்கணும். முக்கியமா எல்லாருமே 450 மார்க் எடுக்கணும். நீங்க படிக்காம  கோட்டை விட்டீங்கன்னா எங்க தலைதான் உருளும்.” என்று உருட்டி மிரட்டும் ஆசிரியர்களைக் கொண்ட வகுப்பறைகள்... அது இன்னொரு உலகம்; இன்னொரு பயங்கரம்!

20 வருடங்களுக்கு முன்பு, மாணாக்கர்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமே பயந்தார்கள். தேர்வுக்கு பயப்படவில்லை. ஆனாலும்  அவர்களும் படித்தார்கள். நல்ல நிலைமையில் முன்னேறினார்கள்.  கல்வியோடு அனுபவ அறிவும், பொதுஅறிவும் பெற்று தங்கள் வாழ்க்கையை அதிக சதவீதத்தினர் சிறப்பாக செதுக்கிக்கொண்டார்கள்.

 இன்று பெரும்பாலான பெற்றோர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் வேகமான உலகில் தங்கள் குழந்தைகளும் வேகமாக வளர வேண்டும். கல்வியில் முதன்மையில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் உலகில் சிறப்பாக வாழமுடியும்  என்ற மாயையை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். உச்சகட்டமாக குழந்தையின் கவனம் சிதறாமல் கல்வியில் மட்டுமே இருக்க  என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை பயிற்சி வகுப்புகளுக்கெல்லாம் செல்லத் தொடங்கிவிட்டார்கள். விளைவு குழந்தைகள் குழந்தைகளாய் வளராமல் நாம் ஆட்டுவிக்கும் பொம்மையாக மாறிவருகிறார்கள்.

தேர்வுகளை எழுதப்போவது மாணாக்கர்கள்தான். ஆனால் தேர்வு நெருங்க நெருங்க.. பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். எளிமையாக செய்ய வேண்டிய பணிகள் கூட மனதில் சுமையோடு செய்யும்போது  கடுமையான பணியாக மனதில் பதிந்துவிடும். அப்படியிருக்க, குழந்தைகளின் நிலையை எப்படி சொல்வது?

தற்போது 10,+12 மாணாக்கர்களுக்கு  தேர்வுகள் நெருங்கியுள்ளன. இப்போது குழந்தைகளைத் தேர்வு பயத்திலிருந்து மீளச்செய்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பெரும்பங்கு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமே உண்டு.  தேர்வு குறித்த அச்சத்திலிருந்து நீங்கள் வெளியேறுங்கள். பிறகு தேர்வை எதிர்கொள்ளும் பக்குவத்தை அவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்கலாம்.

முதலில்... பெற்றோர்களுக்கு:

* நன்றாகப் படித்தால் தான் தேர்வில் வெற்றி பெற முடி யும். நீ விரும்பியதைப் படிக்க வேண் டுமானால் இரவு முழுவதும் படித்தால் தான் முடியும் என்று 24 மணி நேரமும் தேர்வைக் காட்டி பயமுறுத்தாதீர்கள்.  வழக்க மாக  உங்கள்  விடைத்தாள்கள் பள்ளியிலேயே திருத்தப்படும். இந்த வருடம் சற்று மாறுதலாக  அரசு இதைச் செய்கிறது.  கேள்விக்கேற்ற விடைகளை நீ தான் சரியாக எழுதுவாயே…  உன்னால் முடியாதா என்ன என்று தட்டிக்கொடுங்கள்.

*உங்கள் பிள்ளைகள் தேர்வுக்கு  தயாராகும் போதும், தேர்வு நேரத்திலும் உங்கள் வீட்டு  தொலைக் காட்சியையும், முக்கியமாக உங்கள் செல்ஃபோனையும் அணைத்து வையுங்கள். வீட்டில் அநாவசிய சத்தங்களுக்கு இடம்கொடாதீர்கள்..

* பிள்ளைகள் படிக்கும் போது அவர்கள் அருகில் அமர்ந்திருங்கள். நீங்கள் கண்காணிக்கிறீர்கள் என்பதை விட அவர்களுக்குப் பாதுகாப்பாகத் துணை நிற்கிறீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைத் தரும். இயன்றால் அவர்கள் பாடக்குறிப்புகளை எழுதும் போது உதவுங்கள். குறிப்பாக அதிகாலையில் பிள்ளைகள் படிக்கும்போது ஏதேனும் வேலை செய்தபடி அவர்கள் உடன் இருந்தால் சோர்வு ,உறக்கம், இன்றி  படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.    

* பிள்ளைகள் நண்பர்களுடன் குழுவாக படிக்க அனுமதி கேட்டால்  அவர்களது பெற்றோர்களின் அனுமதி யும் கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷமாக அனுமதியுங்கள். இயன்றால் உங்கள் வீட்டிலேயே அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கி  அவர்களுக்கு  வேண்டிய உணவுகளை சமைத்து அவ்வப்போது அவர் கள் மீது ஒரு பார்வையையும் வைத்திருங்கள். நீங்கள் அவர்களுக்கு உதவுவதாக சொல்லி பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டு அவர்களைச் சொல்ல வையுங்கள். எழுத வையுங்கள். அவர்களது ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.

*  உங்கள் பிள்ளை அரசுத் தேர்வு எழுதுகிறானா? அப்படியானால் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என்று அறிந்தவர்கள், அறியாதவர்கள் சொல்லும் ஆலோசனைகளை வேதவாக்காக கொண்டு இதையும் படித்தே ஆக வேண்டும் என்று திணிக்காதீர்கள்.ஏற்கனவே பள்ளி, சிறப்புவகுப்பு, தனி வகுப்பு என்று மாறி மாறி திணித்ததை உள்வாங்கிக்கொள்ளும் குழந்தைகளுக்கு இது குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.

* குழந்தைகள் படிக்கும் போது அவ்வப்போது உலர் பழங்களைக் கொடுங்கள். அன்றாட உணவில் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்த்து முளை கட்டிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை சேருங்கள். ஒரே நேரத்தில் உணவுகளைக் கொடுக்காமல் அவ்வப்போது பழச்சாறாகவோ, சாலட் ஆகவோ செய்து கொடுங்கள். எளிமையாக  ஜீரணம் ஆவதுடன் அவர்களைச் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். அவ்வப் போது நடைப்பயிற்சி செய்ய வையுங்கள்.

ஆசிரியர்களுக்கு:

*பாடங்களை மனப்பாடமாக படிக்காமல் புரிந்து படிக்க மாணாக்கர்களைத் தயார் செய்வது மிகவும் முக்கியம். பாடங்களை நடத்தும்போதே முக்கிய குறிப்புகளைப் பற்றி சொல்லி அதை அடிக்கோடிட செய்து பழக்குதல் வேண்டும்.

* வேகமாக பாடங்களை நடத்திவிட்டு தினமும்  டெஸ்ட் வைப்பதை விட்டு, பாடங்களைப் பொறுத்து அதிலிருக்கும்  குறிப்புகளுக்கேற்ப தகுந்த இடைவெளியில் கற்று தருவதோடு அப்போதே உடனடியாக முக்கிய கேள்வி பதில்களை அவர்களைப் படிக்கவைக்கலாம். முதலில் படித்து சொல்பவர்களுக்கு அளிக்கப்படும் பாராட்டு மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும்.

* தமிழ், ஆங்கில மொழி பாடங்கள் தவிர  கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உயிரியல், வரலாறு போன்ற பாடங்களில் மாணாக்கர்கள் தவறவிடும் பகுதியை மட்டும் அன்றாட குறிப்பாக்கி மீண்டும் மீண்டும் அவர்களை தயார்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு கணிதம் என்றால் அதற்குரிய ஃபார்முலாக்கள், இயற்பியல் என்றால்  குறியீடுகள், வரலாறு என்றால் ஆண்டுகள் இப்படி முக்கியமானவற்றை  மீண்டும் அசைபோட  வகுப்பறையில் தினம் ஒரு பத்துநிமிடங்கள் ஒதுக்குவது நல்லது. அடுத்த பத்துநிமிடங்கள் மாணாக்கர்களது சந்தேகத்தை தீர்ப்பதாக இருக்க வேண்டும்.  வருடம் முழுவதும் இது தொடர்ந்தாலே எல்லா மாணவர்களும் விரல் நுனியில் பதில்களை வைத்திருப்பார்கள்.

*சில பள்ளிகளில் அரசு தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு  காலை 6 மணிமுதல் மாலை 7 மணிவரை  வகுப்புகள் நடைபெறுகிறது,  மாணாக்கர்களுக்கு  வேண்டிய இடைவெளியும் இருப்பதில்லை.  தினமும் 12 மணிநேரம் தொடர்ந்து  படிப்பு என்னும் போது மாணாக்கர்கள் நிச்சயமாக கல்வியை சுமையாகத்தான் நினைப்பார்கள். கூடவே படித்ததையே மீண்டும் மீண்டும் படிக்கும் போது  கல்வி மீது ஒருவித அசுவாரஸ்யமே ஏற்படும்.

*தினமும் கொடுக்கும் பயிற்சியானது ஒரே விதமாக இல்லாமல் இன்று.. ஒரு மதிப்பெண் வினா.. என்றால் அடுத்த நாள் பாடங்களுக்குரிய முக்கிய குறிப்புகளை அடிகோடிட்டு படிப்பது.. அடுத்த நாள்  இலக்கணம், அடுத்த நாள் வினா விடை.. அடுத்த நாள் பாடங்களில் உள்ள முக்கிய குறிப்புகளை நினைவுப்படுத்தி கொள்வது.. பிறகு விரிவான கேள்வி பதில்கள்….  இப்படி பாடவாரியாக.. பிரித்து கொடுத்தாலே மாணாக்கர்கள் எளிதில் தயாராகிவிடுவார்கள்.

*தினமும் ஒரு பாடப்பிரிவில் தேர்வு என்று வைக்காமல்  வாரம் ஒரு முறை ஒரு பாடத்துக்குரிய தேர்வும் மறுநாள் அத்தேர்வுக்குரிய கேள்விகளுக்கரிய பதில்களை  கற்றுகொடுக்கும் போது மந்த நிலையில் உள்ள பிள்ளைகள் கூட நல்ல மாற்றம் பெறுவார்கள்.

* தேர்வு குறித்த அச்சத்தை பரப்பாமல்  ஆரம்பம் முதலே தேர்வு எழுதும் முறையை  பழக்குவது நல்லது.    படிக்கும் மாணாக்கர்களையும் மந்தமான நிலையில் உள்ள மாணாக்கர்களையும்  வெவ்வேறு வகுப்புகளாக பிரித்து செயல்படும் பள்ளிகளுக்கு மத்தியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்குள் இத்தகைய வேறுபாடுகளை காண்பிக்காமல் இருக்க வேண்டும். உன்னாலும் முடியும்.. ஆனால் கொஞ்சம்  கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை மாணாக்கர்களிடம் பதிய வைக்க வேண்டும். மாணாக்கர்கள் உங்களைக் கண்டு அச்சமடையாமல்  எளிமையாக அணுகும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் இருந்தால்  உங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்கள் நிச்சயம் கூடும். அதே நேரம் அவர்களைக் கண்டிக்க உங்கள் கண் அசைவே போதுமானதாகவும் இருக்க வேண்டும். 

மாணவர்களுக்கு:

*யார் என்ன சொன்னாலும் நம்மால் முடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும் என்ற  நம்பிக்கையை முதலில் உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் அட்டவணையிட்டு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண் டும். உங்களுக்குச் சிரமமாகத் தோன் றும் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங் கள்.

* படிக்கும் போது அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இடை இடையே எழுந்து போவதால் கவனம் சிதற வாய்ப்புண்டு. மணிக் கணக்கில் தொடர்ந்து படிக்காமல் இடையில் சற்று ஓய்வு எடுத்துக் கொள் வது நல்லது. (நடக்கலாம், ஓடலாம்) இதனால் இரத்த ஓட்டம் சிறப்பாகச் செயல்பட உதவும்.

*சின்னதான ஒரு குளியலால் மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டு மன ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும்.

*படிப்பதற்கு உகந்த நேரம் அதிகாலை நேரம். உங்களைச் சுற்றி  அமைதியான சூழல் இருக்கும். மூளை சுறுசுறுப்புடன் இயங்கும்.படிப்பது ஆழ் மனதில் நன்கு பதியும்.  

*தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ  கூடாது. தேர்வுகளில் பெறப்படும்  மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும்   சரியான முறையில் திட்டமிட்டால்  அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.

*ஒவ்வொரு பாடங்கள் படித்து முடித்ததும் அந்தப் பாடத்தில் உள்ள முக்கியக் குறிப்புகளை மட்டும் குறிப்பெடுத்து கொள்ளுங்கள். பிறகு நேரம் கிடைக்கும் போது மனதில் அசைப்போட்டு பார்க்கலாம்.எழுதிப் பார்க்கலாம். உதாரணத்துக்கு கணக்குப் பாடம் என்றால் ஃபார்முலாக்கள், அறிவியல் என்றால் வரைபடங்கள், வேதி பொருள்களின் பெயர்கள், குறியீடுகள் வரலாறு என்றால் ஆண்டுகள் போன்றவற்றை அவ்வப்போது மனதில் அசைப்போடலாம்.

*குரூப் ஸ்டடி செய்வது நல்லது. நண்பர்களுடன் இணைந்து  படிக்கும் போது சந்தேகங்கள் விலகும்.(நண்பர் கள் கூட்டமாகச் சேர்ந்து நேரத்தை வீணாக்காமல் இருப்பது முக்கி யம்)

*கடினமான உணவுகள் தேர்வுக்குத் தயாராகும் போதும், தேர்வு நேரத்திலும் கண்டிப்பாகக் கூடாது. கடினமான உணவை எடுக்கும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் குறைவாக இருக்கும். ஹோட்டல் உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஈடுபாடுகள் இருந்தாலும் தேர்வு நேரத்தில் கட்டாயம் இதைத் தவிர்க்க வேண்டும்.

* இரவு முழுவதும் கண்விழித்து படிக்கவே கூடாது. சிரமப்பட்டு படித்தாலும் மூளை சோர்வுற் றிருக்கும். உடல் ஆரோக்யமும் பாதிக்கும். அதிக படிப்பு, குறைந்த நேர தூக் கம்,போதியசத் தின்மை இவை அனைத்தும் சேர்ந்து ஒருவித மன இறுக்கத்தை ஏற்படுத்தித் தேர்வு பயத்தை அளித்து விடும்.

.இவையெல்லாம் அனைவருமே எளிமையாக கடைப்பிடிக்க கூடிய குறிப்புகள்தான். மனதை லேசாக்கிக் கொள்ளுங்கள். இயல்பாக இருங்கள். உங்கள் மனதில் இருக்கும் அமைதியே  உங்களின் வெற்றிக்கான பாதையை வகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

 ஆல் த பெஸ்ட்…..

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close