[X] Close

எழுத்தாளுமைகள் பாராட்டிய நாவலாசிரியர்!


c-r-ravindran

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:57 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

ஒரு வட்டார வழக்கில் எழுதப்பட்ட நாவல், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக வாசகர்களின் நெஞ்சில் நிலைத்துநின்று பேசப்படுகிறதென்றால் அந்தப் பெருமை ‘ஈரம் கசிந்த நிலம்’ நூலுக்கானதாகவே இருக்கும். கொங்கு மண்ணின், மனிதர்களின் மாண்புகளை விளக்கும் இந்த நாவல் 1992-ல் கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றது. இதுவரை 8 பதிப்புகளாக வெளிவந்துள்ள இந்த நாவல், தற்போது காலச்சுவடு `தமிழ் கிளாசிக்` நாவல் வரிசையிலும் வெளிவந்திருக்கிறது. இந்த நூலுக்குச் சொந்தக்காரர் சி.ஆர்.ரவீந்திரன்(74). இவரது சொந்த ஊர் அவிநாசி ஆட்டையம்பாளையம்.

‘நான் பிறந்தபோதே அப்பா, அம்மா பேரூர் செட்டிபாளையத்துக்கு வந்துட்டாங்க. வானம் பார்த்த பூமி. பெரிசா எந்த விளைச்சலும் இல்லை. அப்பா தேங்காய் லோடு ஏத்திக்கிட்டு மாட்டு வண்டி வாடகைக்கு போவார். அம்மாவுக்கு காட்டு வேலை. நம்மள மாதிரி இல்லாம பையன் படிச்சே ஆகணும்னு பெற்றோர் நெனச்சாங்க.

உள்ளூர் பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விட்டா, உடனே காட்டுக்குள்ளே ஓடிப்போயிருவேன். பேரூர் காட்டுக்குள்ளே ஒத்தைப் பனை மரத்து அடியில உக்காந்துட்டு,  கரெக்டா பள்ளிக்கூடம் உட்டதும் ஊடு வந்துருவேன். அப்பா பார்த்தார். 

இவன இப்படி விட்டா சரிப்படாதுனு, ரெண்டு மூணு மைல் தள்ளி இருக்கிற கவுண்டனூர் பள்ளிக்கூடத்துல சேர்த்தார். அந்த பள்ளிக் கூடத்துக்கு ஒரு வாத்தியார் பேரூர்ல இருந்து போவார். என் கை ரெண்டையும் பின்னாடி வச்சு கயித்துல கட்டிட்டு,  அவர் ஊட்ல கொண்டுபோய் விடுவார். 
அந்த வாத்தியார் பள்ளிக்கூடம் போகும்போது,  என்னை  ஆடு, மாட்டை புடிச்சுட்டுப் போற மாதிரி, கயிறு கட்டி கூட்டீட்டுப் போவார். ஒரு தடவை அந்த வாத்தியார் பள்ளிக்கூடம் வரலை.  அதனால, அப்பாவே என்னை கயிறு போட்டு கட்டி ஒரு கையில பிடிச்சுட்டு, இன்னொரு கையில மாட்டை அடிக்கிற சாட்டை வாரை வச்சு வீசிட்ட பள்ளிக்கூடத்துக்கு கூட்டீட்டுப்  போறார். அப்ப எங்க சமூகத்தைச் சேர்ந்த மரமேறி பெரியவர் பார்த்துட்டு, “டேய் ரங்கசாமி, பையனை அடிச்சுக்கிடிச்சுக் கொன்னு போடாதீடா. நம்மளுக்கு எப்படிடா படிப்பு வரும். அவனுக்கு ஒரு மாட்டை வாங்கிக்குடுடா. அதை மேய்ச்சுப் பழகி புழைச்சுக்குவாண்டா. அவனை உட்டுடுடா”னு சொன்னாரு”.

சிலோன் இதழில் முதல் சிறுகதை 

கொஞ்சம் கண்ணீருடன் பள்ளி வாழ்க்கையை சொல்லத் தொடங்கினார் ரவீந்திரன். 5-ம் வகுப்பு வரை உள்ளூர் பள்ளி.  பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் உயர்நிலைக் கல்வி. பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம். அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக ஆசிரியப் பணி. அங்கிருந்தபடியே எம்.ஏ. ஆங்கிலம் பகுதி நேரப் படிப்பு என ரவீந்திரனின் கல்வி வாழ்க்கையில்,  பள்ளியில் படிக்கும்போதே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  மு.வ., ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதியின் வாசிப்புகளை விவரித்த அவர், தான் எழுதிய முதல் சிறுகதை,  சிலோனிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் பிரசுரமான அனுபவத்தைக் கூறுகிறார்.

“அந்தக் காலத்தில் சிலோன் சென்றுவிட்டு வந்த சுந்தரராஜன்,  எனக்கு ஆசிரியராக இருந்தார். அவரிடமிருந்த ‘செம்பியன் செல்வன்’ எழுதிய ‘அமைதியின் இறகுகள்’  நூலை இரவல் வாங்கிப் படிச்சு அசந்துட்டேன். 

உடனே,   செம்பியன் செல்வனுக்கு கடிதம் எழுதிப் போட்டேன்.  அதில் அவர் தொடர்பு கிடைத்தது. யாழ் இலக்கிய வட்டம் அமைப்பை நடத்தி வந்த செம்பியன் செல்வன் மூலம், இலங்கை  இதழ்கள், நூல்கள் தருவித்துப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவரது ஊக்குவிப்பால் எழுதிய ஒரு கதையின் தலைப்பை மட்டும் மாற்றி, வீரகேசரி இதழுக்கு செம்பியன் செல்வன் அனுப்பவே, அது பிரசுரமும் ஆனது. அந்த சிறுகதையின் வெளிப்பாடு, கோவையில் அக்னிபுத்திரன், புவியரசு, ஞானி, மு.மேத்தா, தீபம் நா.பார்த்தசாரதி, விஜயா மு.வேலாயுதம் போன்றவர்கள் தொடர்பு கிடைத்து வானம்பாடியுடனும் பிணைத்தது.

ஒரு சமயம் வானம்பாடி சந்திப்பு நிகழ்ச்சியில,  கவிஞர் அக்னிபுத்ரனைப் பார்த்தேன்.  “உங்க படைப்புகளை நா.பா.வின் தீபம் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கீங்க. அதைப்  படிச்சிட்டு ‘எங்க ஊர்க்காரர். நல்லா எழுதறார்ல?’னு நா.பா.கிட்டவே கேட்டேன். அவர் அப்ப, ‘நல்லா எழுதறார். இருந்தாலும் அவருடைய எழுத்தில் கலைத்தன்மை, எழுத்துப்பிழை, வாக்கியப்பிழை வருது. அது இல்லாம எழுத, நிறைய உலக இலக்கியங்களை அவர் படிக்கணும்னு சொன்னாரு” என்றார் அக்னிபுத்திரன்.

7 ஆண்டுகள் எழுதவில்லை...

இதனால நான் 7 வருஷம் எழுதறத விட்டுட்டேன். ஆங்கிலம், தமிழ் மொழி பெயர்ப்பு என உலக இலக்கியங்கள் எல்லாம் படிச்சேன். அப்புறம்தான் செம்மலர்,  தாமரை இதழ்களில் ஒருசில கதைகள் எழுதினேன்.

அந்த நேரத்தில் கலைஞன் பதிப்பகம் மாசிலாமணிகிட்ட இருந்து ஒரு தபால் கார்டு வந்தது. ‘எங்கள் பதிப்பக 25-வது ஆண்டுவிழாவுக்காக 25 நாவல்கள் பதிப்பிக்க முடிவு செஞ்சிருக்கோம். அதற்காக தேர்வு பெற்ற எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். 

எங்களுக்கு ஒரு நாவல் எழுதி அனுப்பமுடியுமா?’னு கேட்டிருந்தார். அதுவரைக்கும் நான் நாவலே எழுதியதில்லை. புவியரசுவிடம் ‘நான் நாவல் எழுதறேன். நீங்க படிச்சுப் பார்த்த பிறகுதான் அனுப்புவேன்!’னு  சொன்னேன். நாவல் எழுதிமுடித்த சமயத்துல, புவியரசு பாம்பே போயிட்டார். அதனால, அவர் படிச்சுப் பார்க்காமலே நாவலை மாசிலாமணிக்கு அனுப்பிட்டேன்.  ‘பழைய வானத்தின் கீழே’ என்ற தலைப்பில் வெளியான அந்த நாவலே எனது முதல் நாவல்” என்றார் சி.ஆர்.ரவீந்திரன்.

தொடர்ந்து, அவர் இதுவரை எழுதி வெளியிட்டுள்ள 16 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள், 20 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிஞர் கண்ணதாசன், சிற்பி குறித்த ஆய்வு நூல்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கிய ரவீந்திரன், `ஈரம் கசிந்த நிலம்` படைத்த அனுபவம் குறித்து பேசினார். “என்னோட 3-வது நாவல் இது. வெளியாகறதுக்கு முன்னாடி அதப் படிச்ச கோவை ஞானி, ‘அம்மணிய கொன்னு போட்டீயேய்யா’னு உருகி அழுதுட்டார். அதேபோல,  புவியரசு, ஞானராஜசேகரன், விஜயா பதிப்பகம் வேலாயுதம் படிச்சாங்க. இந்த நாவல தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டால் நல்லாயிருக்கும்னு சொல்லி,  அகிலன் கண்ணனுக்கு அனுப்பினார் மு.வேலாயுதம். அவர் அதை `அகிலன் நினைவு நாவல்` போட்டிக்கு பரிந்துரைச்சார். ஜெயமோகனின் `ரப்பர்` நாவலும், ஈரம் கசிந்த நிலமும்தான் இறுதிச்சுற்றுக்குப் போனது. இதுல `ரப்பர்` நாவலுக்கு பரிசு அறிவிச்சாங்க. 

ஆனாலும், என் நாவலை மாசிலா மணியே பதிப்பித்து, அதை கொல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் கமிட்டிக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப்  பரிசை வென்ற பிறகுதான் `ஈரம் கசிந்த நிலம்` பிரபல்யமானது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தொடர்ந்து 4 வருடங்கள் மாணவர்களுக்கு பாடமாக அந்த நாவலை வைத்தது. பாரதியார், பாரதிதாசன், சென்னைப் பல்கலைக்கழகங்களும் மாறி மாறி பாடமாக வைத்தன. அகில இந்திய வானொலி, சென்னைத் தொலைக்காட்சி நிலையம் இதை நாடகமாக்கி, தொடராகவும் ஒளி, ஒலி பரப்பியது. 

பிரபஞ்சன், சுஜாதா போன்ற எழுத்தாளுமைகள் இதைப்பற்றி மேடையில பேசினாங்க. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்கள், கவிஞர்கள்கூட, அந்த நாவலைப்படிச்சுட்டு, என்கிட்ட பேசினாங்க. காலச்சுவடு `கிளாசிக் நாவல்` வரிசையில் ஒரு நாவலை வெளியிட 25 ஆண்டுகள் அது பேசப்பட்டு வாழ்ந்திருக்க வேண்டுமாம். அதைத்தான் தற்போது இந்நாவல் பெற்றிருக்கிறது” என்றார் பெருமிதத்துடன்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close