[X] Close

நாளை பந்த்... முன்னெச்சரிக்கையா இருங்க! பஸ்கள் ஓடாது; கடைகள் இயங்காது!


banth-cauvery-melanmai-vaariyam-tamilnadu

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Apr, 2018 18:24 pm
  • அ+ அ-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாகவே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் போராட்டம் மேலும் வலுவடையும் வகையில், நாளை வியாழக்கிழமை 5.4.18ம் தேதி, திமுக விடுத்த பந்த் போராட்டத்திற்கு, பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக தொமுச உள்ளிட்ட சங்கங்கள் பலவும் நாளைய தினம் பஸ்கள் இயங்காது, இயக்கமாட்டோம் என அறிவித்துள்ளன.

மேலும் நாளைய பந்த்தின் போது, கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்கள் உட்பட பல சங்கங்களும் அறிவித்துள்ளன.

ஆகவே நாளைய தினம் முழுவீச்சில் பந்த் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களைக் கையாளவேண்டும்.

1. தினமும் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் நாளைய தினத்துக்கு உள்ள மாத்திரைகள் இருக்கிறதா என்பதைப் பார்த்து, இல்லையெனில் முன்பே வாங்கிவைத்துக் கொள்ளுங்கள்.

2. அரை லிட்டரோ ஒரு லிட்டரோ பால் கூடுதலாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

3. நாளைய தினம் மெடிக்கல் செக்கப், உறவினர் வீடு, ஷாப்பிங் என்று திட்டமிட்டிருந்தவர்கள், அவசியமில்லாத நிலையில் அடுத்த நாளுக்குத் தள்ளிப்போடுவது மிகவும் நல்லது. பெரும்பாலும் பஸ்கள் இயங்காத நிலையில், தேவையற்ற பதற்றத்துடன் செல்வதைத் தவிர்க்கலாமே!

4. உணவுக்குத் தேவையான பொருட்களை கையோடு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பஸ்கள் ஓடாததாலும் திடீர் விருந்தாளிகள் வர வாய்ப்புண்டு. எனவே அவர்களுக்கு உடனடியாக ஒரு உப்புமா செய்யக்கூட ரவா முதலானவை கைகொடுக்கும்.

5. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, நாளைய தினம் தேர்வு நடைபெறவில்லையெனில், பள்ளிக்கு ஒருநாள் லீவு எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. ஒருவேளை, தேர்வு நடந்துகொண்டிருந்தால், நீங்களே ஒரு எட்டு அவர்களை அழைத்துச் சென்று, தேர்வு முடிந்ததும் அழைத்துவர முடியுமா என்று பாருங்கள். பள்ளி வேன், பஸ், தனியார் வேன் என்பனவாக இருந்தால், அவர்களின் செல்போன் நம்பர்கள், உங்களிடம் இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்வதும் அவர்களிடம் பள்ளி இருக்கும் சூழல் குறித்து அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வதும் மிக மிக நல்லது.

6. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால், இரண்டு பேரில் யாரேனும் ஒருவர், வீட்டில் இருப்பது நல்லது. ஒருவேளை பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் அரைநாள், விடுமுறை என்பது மாதிரி போன் செய்து அழைத்தால், வீட்டில் யாரேனும் இருத்தல் நல்லது அல்லவா!

7. தண்ணீர் கேன் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

8. பெட்ரோல் பங்க் இயங்கும் என்றாலும் கூட, வண்டியில் டேங்க் நிரப்பிக் கொள்வது உத்தமம்.

9. காய்கறிகள், இட்லி மாவு முதலானவை மற்றும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் முதலானவற்றை வாங்கிவைத்துக் கொள்ளுங்கள்.

10. கூடுமானவரை, வெளியூர்ப் பயணத்தைத் தவிர்ப்பதே நல்லது. ஏற்கெனவே டிக்கெட் ரிசர்வ் செய்திருப்பவர்கள், கேன்சல் செய்துவிடுங்கள்.

தமிழக விவசாயிகளுக்காகவும் குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்காகவும் காவிரி கிடைக்கக் கோரியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் நடைபெறும் இந்தப் பந்த் போராட்டம், தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், நாம் முன்னெச்சரிக்கையாக, விழிப்பு உணர்வுடன் இருப்பதே நல்லது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close