[X] Close

குக்கிராமத்தில் விண்வெளி ஆய்வுக் கூட மாதிரி!- புதுப்பாளையம் அரசுப் பள்ளியின் சாதனை


model-isro

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 11:01 am
  • அ+ அ-

எஸ்.விஜயகுமார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக ராக்கெட்டை செலுத்தி,  வானில் செயற்கைக் கோளை நிலைநிறுத்தியது என்ற செய்தியைப் படிக்கும்போது, நாமே சாதனைபுரிந்ததுபோன்ற பெருமிதம் ஏற்படும். இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள், ராக்கெட் மூலம் விண்ணில் ஏவும் தொழில்நுட்பம், வானில் சஞ்சரிக்கும் கிரகங்கள் உள்ளிட்ட தகவல்கள் நமக்குள் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

ஆனால், இஸ்ரோ மையத்துக்குள் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் எத்தனை பேர்? விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்? நகரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இது எட்டாக்கனி எனும்போது, கிராமப்புற மாணவர்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை.

ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு சேலம் மாவட்டம்  புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என்பதையறிந்தபோது, வியப்பு மேலிட்டது.

சேலத்தில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில், 33 கிலோமீட்டர் தொலைவு வயல்வெளிகளையும், விசைத்தறிக் கூடங்களையும் கடந்துசென்றால் வருகிறது புதுப்பாளையம் கிராமம். பெரிய கிராமம்கூட அல்ல, குக்கிராமம் எனப்படும் மிகச் சிறிய கிராமம்தான்.

இந்தியாவில் முதல்முறையாக...

இந்தியாவில் முதல்முறையாக அரசுப் பள்ளியில் விண்வெளி காட்சிக் கூடம், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெருமையுடன், கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி இங்கு விண்வெளி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, இஸ்ரோ  ஏவியுள்ள ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில்,  விண்வெளிக்  கப்பல், ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் ஆகியவற்றின் சிறிய மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், விண்வெளி அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் உண்மைகள் குறித்த விவரங்கள் அடங்கிய 40-க்கும் அதிகமான புத்தகங்களும் இங்குள்ளன. வானில் உலா வரும் சூரியன் மற்றும் அதன் துணைக் கோள்கள் கொண்ட பால்வீதியின் புகைப்படங்கள்  ஆய்வக சுவர்களில் மிளிர்கின்றன.

இஸ்ரோ ஏவியுள்ள ராக்கெட்டுகள் குறித்த சாதனைகள் அடங்கிய விளக்க உரை, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் இயங்கும் தொழில்நுட்பம் குறித்த நூல்கள் மற்றும்  வீடியோக்களும்  வைக்கப்பட்டுள்ளன. எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இந்த நூல்கள், அறிவியில், விண்வெளி ஆய்வுகள் மீதான மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ள நவீன தொலைநோக்கியின் மூலம், விண்ணில் உலா வரும் கிரகங்களையும், பிரகாசித்திடும் நட்சத்திரங்களையும் ஆய்வு செய்யலாம். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற நிகழ்வுகளின்போது,  மாணவர்கள் நகரங்களில் உள்ள வான் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு செல்லத் தேவையின்றி, இங்கிருந்தபடியே விண்ணில் நிகழும் மாற்றங்களைக் கண்டு ரசிப்பதுடன், அறிவியல் ரீதியான உண்மைகளையும் புரிந்துகொள்ளலாம்.

இங்குள்ள விண்வெளி காட்சிக் கூடம் மற்றும் ஆய்வகத்தில் உள்ள அறிவியல் உபகரணங்களை,  பெங்களூருவைச் சேர்ந்த ஆக்டிவிட்டி எஜுகேட்டர் என்ற நிறுவனமும், ஐஸ்கோப் என்ற நிறுவனமும் வழங்கியுள்ளன.

இங்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு,  ராக்கெட், செயற்கைக்கோள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் குறித்த அடிப்படை விளக்கப் பயிற்சியும், அறிஞர்கள் மூலம் கலந்துரையாடல் நிகழ்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், வான் அறிவியல் சார்ந்தப்  போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யவும் இந்த மையம் முயற்சித்து வருகிறது. வான் அறிவியல் குறித்த அரசாங்க செயல்திட்டங்களைப் பரப்புதல் இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

உரிய அனுமதி பெற்று, மாதத்தில் 4 நாட்கள் முதல்  10 நாட்கள் வரை விண்வெளி காட்சிக் கூடத்தை மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள்  மட்டும்,  நிர்வாகம் மற்றும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தலைமை ஆசிரியை நா.முருகம்மாள் கூறும்போது, “இந்தியாவில் அரசுப் பள்ளிக்கு கிடைத்த முதல் விண்வெளி ஆய்வுக் கூடம் என்ற பெருமை எங்கள் பள்ளிக்கு கிடைத்துள்ளது. இது எங்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் விண்வெளி அறிவியலை விளக்கும் காட்சிக் கூடமாக செயல்படும்” என்றார்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், நவீன விண்வெளி ஆய்வுக் கூடம் அமைய, இந்தப் பள்ளி முன்மாதிரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close