[X] Close

சோவியத்தில் வீழ்ந்தது மார்க்சியமே அல்ல!- வர்க்க மெய்யியலை சுவாசிக்கும் `கோவை ஞானி’


kovai-gnani

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 10:59 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

வியத்தில் வீழ்ந்தது மார்க்சியமே அல்ல. சொத்துக்களும், முதலாளித்துவக் கூறுகளும் தழுவிய மார்க்சியம்தான்" என்கிறார் மார்க்சிய மெய்யியலை சுவாசிக்கும் கோவை ஞானி.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழ் இலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளர் என இடைவிடாது இயங்கிவருகிறார்  ஆய்வறிஞர் ஞானி. `இவருக்குள் தமிழ் இயங்குகிறது` என்பார்கள் இவரையறிந்தவர்கள். விருது பெற்றவர்களெல்லாம் வந்து வாழ்த்தும், ஆசியும் பெற்றுச் செல்லும் இவரால், ஞானப் பார்வையால் மட்டுமே உலகைப் பார்க்க முடியும்.

கோவை துடியலூரில் உள்ள அவரது வீட்டில், நூல்களை உதவியாளர் வாசிக்க, ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது அறையில் ஒரு மேஜையில் நூல்கள் குவிந்து கிடக்கின்றன. சமீபத்தில் வாசித்த நூல்களைப் பற்றிப் பேசும் கோவை ஞானி, அவற்றுக்குள் இருக்கும் மார்க்சியத்தின் மெய்யியல் கோட்பாட்டை  அலசுகிறார்.

அசலான ஆன்மிகமே மார்க்சியம்தான்

"இந்தியாவில் ஆன்மிகம் வேரூன்றி  நிற்பதால்தான் மார்க்சியத்தின் சோஷலிசம், கம்யூனிஸம் வெற்றியடையவில்லையா?" என்று கேட்டபோது, சற்றும் யோசிக்காமல் "மனித குலத்துக்கான ஆகச் சிறந்த அசலான ஆன்மிகமே மார்க்சியம்தான். இது உண்மையான ஆன்மிக பூமியாக இருந்திருந்தால், மார்க்சியத்தைத்தான் ஏற்றிருக்க வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான், எதையோ ஆன்மிகம் என்கிறார்கள். மதங்களை அரசியலாகக் கொண்டுவிட்டு அதை ஆன்மிக அரசியல் என்கிறார்கள்" என்கிறார்.

கோவை ஞானியின் இயற்பெயர் கி.பழனிசாமி(83). பல்லடம் வட்டம் சோமனூரைச் சேர்ந்தவர். "கருமத்தம்பட்டி ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பும், கோவை மைக்கேல் பள்ளியில் 9, 10-ம் வகுப்பும் படிச்சேன். சோமனூரிலிருந்து ரயிலில்தான் வந்து போவேன். அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிச்சேன். அப்புறம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி. அங்கே ரெண்டு பெரிய நூலகம். ஏராளமான புத்தகங்கள் படிக்க வாய்ப்புக்  கிடைச்சுது. ஆரம்பக் காலங்களில் ஆங்கில இலக்கியங்கள், தத்துவம், வரலாறு படிச்சேன். தமிழில் படிச்ச நூல்கள் மிகக் குறைவு. அதுவும் பழைய சங்க இலக்கியம் மட்டும்தான் வாசிச்சிருந்தேன்.

பின், கோவை சுந்தராபுரத்தில் உள்ள செங்கோட்டையா நினைவுப் பள்ளியில் ஆசிரியப் பணி.  இரண்டு வருஷம்தான். தொடர்ந்து,  கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் 28 வருஷம். அப்ப படிக்கிற நூல்களை எல்லாம் குறிப்பெடுக்கிற பழக்கம். கண் பார்வை பாதிச்சுது. லேசர் சிகிச்சை எடுத்தப்ப,  இன்னும் 6 மாசத்துல சுத்தமா கண் பார்வை போயிடுங்கிற நிலைமை. விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். அப்பத்தான் `மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்` என்ற முதல் நூலை வெளியிட்டேன். அதுதான் நான் பார்வையிழப்பதற்கு முன்பு வந்த ஒரே புத்தகம்" என்றவர், தான் எழுதிய மற்ற 35 நூல்களைப் பற்றி விவரிக்கிறார். அதில் 3 கவிதை நூல்கள், 4  மார்க்சிய தத்துவ நூல்கள். அதற்குப் பிறகு எழுதிய ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்ற நூலைப் பற்றிப் பேசுகிறார்.

கடவுள் பற்றிய ஆராய்ச்சி

"அந்த நூலை எழுதிய பிறகு, அதன் இரண்டாம் பாகம்போல ‘நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகள்’ எழுதினேன். கடவுள் பற்றிய விடாப்பிடியான ஆராய்ச்சி அது. கடவுள் இல்லைன்னும், கடவுள் இருக்குன்னும் கருத்துகள் எப்படித் தோன்றியது என்பது மாதிரியான ஆராய்ச்சி நூல் அது. கடவுள், தத்துவம் எதுவாக இருந்தாலும் மார்க்சியம்தான் அடிப்படை" என்றவரிடம், "பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டது எப்படி?" என்று கேட்டோம்.

கலாட்டாவில் முடியும் கூட்டங்கள்

"பேச்சாற்றல் சின்ன வயசுல சுத்தமா இல்ல.  மைக்கேல் ஸ்கூல்ல படிக்கும்போது சில பேச்சுப் போட்டியில் கலந்துகிட்டு பரிசு வாங்கியிருக்கேன். ஆசிரியரான பிறகு பேச்சே தொழிலா மாறிடுச்சு" என்றவரிடம், "நீங்க போகிற, பேசுகிற சமூக, இலக்கியக் கூட்டங்கள் பெரும்பாலும் சர்ச்சையாகி, கலாட்டாவில் முடிகிறதே?"  என்று கேட்டோம்.

"சரிதான். நான் சாதாரண மார்க்சியம்தான் பேசறேன்.  மத்தவங்களிடம்  அந்த கருத்துகள் இல்லை. இங்கே மார்க்சியம், மார்க்சியமா இல்லை. பெரியாரியம், பெரியாரியமாக இல்லை. அதை நான் வெளிப்படையாக பேசுகிறேன். அதுலயும், நான் குறிப்பிட்ட நபர் மற்றும் குறிப்பிட்ட அமைப்பின் பெயர்களைப்  பேசுகிறேன். அதுதான் கோபப்படுகிறார்கள். கூட்டத்தில் சலசலப்பும், கொந்தளிப்பும் ஏற்படுது" என்றார்.

"ஆரம்பத்தில் பரிணாமம், பிறகு நிகழ், அதற்குப் பிறகு தமிழ்நேயம்.. எதற்கானதாக சிற்றிதழ்களை தழுவிக் கொண்டீர்கள்?" என்று கேட்டதற்கு, "மார்க்சிய மெய்யியல் தேடல்தான் காரணம். சோவியத் மார்க்சியம், சைனா மார்க்சியம் என இருவகையில் இந்திய மார்க்சியர்கள் வாதிட்டுக் கொண்டிருந்த வேளையில், அசல் மார்க்சிய பரிமாணங்கள் பற்றிப் பேச வேண்டியிருந்தது. அதற்குத்தான் 'பரிணாமம்' இதழ் கொண்டு வந்தேன். அது இவ்விரு அரசியல் சூழலையும், நெருக்கடிகளையும் ஆராய்ந்தது. மேற்கத்திய, இந்திய, தமிழ்நாட்டின் மார்க்சியக் கூறுகளையும் அலசியது. அதை 1000 பக்கங்கள் கொண்ட புத்தகமாகவே பின்னர் கொண்டு வந்திருக்கோம். 1988-ல் 'நிகழ்' வருது. சோவியத் யூனியனில் மார்க்சியம் தகர்ந்துருச்சு. அதனால் மார்க்சியம் தோற்றுவிட்டது என்ற பிரமை இடதுசாரி சிந்தனையாளர்களுக்குள் ஊடுருவியது.  அதைத் தாண்டிய விவாதம், நுண்ணிய ஆய்வை அதற்குள் தேட வேண்டியிருந்தது. சோவியத்தில் வீழ்ந்தது மார்க்சியமே அல்ல. சொத்துக்களும், முதலாளித்துவக் கூறுகளும் தழுவிய மார்க்சியம்தான் என்பதை வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரியாரியம், தலித்தியம் எல்லாம் மார்க்சியத்திற்கு வெளியே நிற்கின்றன. தமிழ் தேசியம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. அதெல்லாம் `நிகழ்` இதழில் தேவையாக அமைந்தது. 1996 வரை அது நடந்தது.

தமிழ்நாட்டில், தமிழுக்கே அந்நிய நிலை ஏற்பட்டதால் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தோம். அதற்காகவே 1998 முதல் 2012 வரை `தமிழ் நேயம்` நடத்தினோம். திருப்பூர் தாய்த் தமிழ் பள்ளி ஆரம்பித்ததில் எங்கள் பங்களிப்பும் உண்டு. தமிழ் மாணவர்கள் தமிழிலேயே படிக்கணும்.  6-ம் வகுப்பில் ஆங்கிலம் வந்தால் போதுமானது என்பது அதன் திட்டம். இன்றும் திருப்பூர் பள்ளி அந்த ஊக்கத்தோடும்,  செயல்பாட்டோடும் இருக்கு" என்றார் பெருமிதத்துடன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close