[X] Close

நெஞ்சம் மறப்பதில்லை... நினைவுகளை சேமிக்க ஓர் இணையதளம்- அசத்துகிறார் கோவை இளம் பெண்


kovai-ilampen

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 10:36 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்துவிடும். உயிர் உடலைப் பிரிந்தால், அத்தனை நினைவுகளும் காற்றில் கரைந்துவிடும். அதனால்,  நினைவைப் பதிவு செய்யவும், சேமித்து வைக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பலரும் விரும்புகிறோம். இந்த நிலையில், நினைவுகளைச் சேகரிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் தனி இணையதளம் மற்றும் மொபைல் ஆஃப் தொடங்கப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த இணையதளத்தின் நிர்வாகியை சந்தித்தபோது, சில மாதங்களுக்கு முன் கல்லூரிப் படிப்பை முடித்த  இளம் பெண் அதை நிர்வகிக்கிறார் என்ற ஆச்சரியத் தகவல் கிடைத்தது.அது மட்டுமல்ல, வில் வித்தை சாதனையாளர், நாவலாசிரியர், உளவியல் நிபுணர் என பன்முகம் காட்டுகிறார் 22 வயது கோவை ஸ்ரேயா. இனி...அவரது வார்த்தைகளிலேயே...

"பெற்றோர் நயன்-பிரியா. கோவையைச் சேர்ந்த வணிகக் குடும்பம். கோவையில் தொடக்கக் கல்வி பயின்ற நான், மும்பையில் எஸ்எஸ்எல்சி முடித்தேன். தேசிய அளவிலான மொழியியல் தேர்வில் வெற்றி பெற்றேன். அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படிக்க வாய்ப்புக் கிடைத்தது. உளவியல், ஐரோப்பிய கலாச்சாரம், நிதித்துறைகளைப் பயின்றேன். கடந்த ஆண்டு பட்டப் படிப்பு முடிந்தது.

15 வயதில் நாவல்

நான் பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். 2012-ல் எனது 15 வயதில் `ஒன்` என்ற புனைவுக் கதையை நாவலாக எழுதினேன். காதல், த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டது அந்தப் புத்தகம். வெளியிடப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே, வாசகர்களிடையே  அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், வில் வித்தைப் போட்டிகளிலும் பங்கேற்று, சர்வதேச அளவிலான வெற்றிகளைப் பெற்றேன்.

இந்த நிலையில், மற்றொரு கட்டுரைக்காக, புற்றுநோய் உள்ளிட்ட கடும் நோய்களால் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் உள்ள குழந்தைகளை சந்தித்துப் பேசினேன். அவர்களைப் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் பதிவு செய்தேன். அந்தக் கட்டுரையை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் ராயல்டி தொகையை, அந்தக் குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்திருந்தேன். ஆனால், இந்தக் கட்டுரை நூலை முடிக்கும் முன்பே, நான் சந்தித்த குழந்தைகள் சிலர், நோயின் கடுமையால் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. அந்தக் குழந்தைகளை சந்தித்தபோது எடுத்த படங்கள், வீடியோக்கள் மற்றும் அவர்களுடனான உரையாடல்களை எழுதி, ஒரு ஜாடியில் போட்டு அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் கொடுத்தேன். அது அவர்களிடையே பெரிய அளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

`நாஜி` படை வீரரின் சந்திப்பு

இதேபோல, ராணுவ அதிகாரிகளை சந்தித்து, அவர்களது தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அந்த ராணுவ அதிகாரிகள் இறந்தபோது, அவர்களது குடும்பத்தினரிடம் நினைவுகளை ஒப்படைத்தேன். ஜெர்மனி ஹிட்லரின் நாஜிப் படையில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற ஒரு வீரரை நியூஜெர்சியில் சந்தித்தேன். அவருக்கு வெகுசில சம்பவங்கள் மட்டுமே நினைவில் இருந்தன. குறிப்பாக, அவரால் கொல்லப்பட்ட வீரர்களின் முகங்கள் ஞாபகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

நான் உளவியல் படித்திருந்ததால், இது தொடர்பாக 6 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்தேன். இதில், தனிமைதான் மனிதர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது தெரியவந்தது. சர்வதேச அளவிலான ஆய்வுகளும் தனிமையின் கொடுமையை புள்ளி விவரங்களுடன் விளக்கின. அதேபோல, மனிதாபிமானம், கருணை ஆகியவை குறைந்து வருவதும் தெரியவந்தது. அதுபோன்றவர்களிடம், அவர்களது பழைய நினைவுகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்தது.

இதையடுத்து, நமது நினைவுகளைச் சேமித்துவைக்கவும், பகிர்ந்துகொள்ளவும்  தனி இணையதளத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. ஏற்கெனவே ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வசதிகள் இருந்தாலும், அதைவிடக் கொஞ்சம் எளிமையானதாகவும்,  பாதுகாப்பானதாகவும் இணையதளம் இருந்தால் நல்லது என்ற எண்ணம் உருவானது.

`லம்ஹா` இணையதளம்

இதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி `லம்ஹா (LUMHAA) ` என்ற இணையதளத்தைத் தொடங்கினேன். லம்ஹா என்றால் நினைவுகள் என்று பொருள். இதில், ஏராளமானோரின் நினைவுகளைச் சேகரித்து, பகிரத் தொடங்கினேன். வெளியாட்களும் நினைவுகளைப் பகிரத் தொடங்கினர். 

மொத்தம் 132 ஒலிம்பிக் வீரர்களை சந்தித்து, அவர்களைப் பற்றி விவரங்கள், படங்கள், வீடியோக்களை இணைத்தேன். தொடர்ந்து 95 வயதான முதியவர்கள் குறித்த நினைவுகள், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் என பல நினைவுகளையும் பகிர்ந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக லம்ஹா இணைய தளம்   மேம்படுத்தப்பட்டது. தற்போது இதில், தனிப்பட்ட நினைவுகள், உறவினர்களுடனான பகிர்வு, பொது பகிர்வு என்று 3 நிலைகள் உள்ளன. தனிப்பட்ட நினைவுகளாகப் பகிரக் கூடியவற்றை, லம்ஹாவால் கூட பார்க்க முடியாது. அதேபோல, உறவினர்களுடனான பகிர்வுகளை, சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம். பொது பகிர்வுகளை மட்டுமே அனைவரும் பார்க்க முடியும். புகைப்படம், வீடியோக்கள், வாய்ஸ் ரெக்கார்டிங், டெக்ஸ்ட் என அனைத்து வழிகளிலும் நினைவுகளைச் சேமித்துவைக்கலாம்.

இதில், தற்போது 3 ஜிபி வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். ஏறத்தாழ 1000 நினைவுகளைச் சேகரிக்கலாம். அதேசமயம், அமைப்புகள், தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் அதற்கு மேற்பட்ட அளவிலும் இலவசமாக நினைவுகளைச் சேகரிக்கலாம்.

கண்ணாடி ஜாரில் நினைவுகள்

இதேபோல, மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தில் சேமித்து வைக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பிரிண்ட் செய்து, கண்ணாடி ஜார்களில் வைத்து கொடுக்கும் வசதியையும் தொடங்கியுள்ளோம். அதுமட்டுமலல, கர்ச்சீப், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றிலும் நினைவுகளைப் பிரிண்ட் செய்து தருகிறோம். இதில் கிடைக்கும் வருவாயில் 80 சதவீதம், பல்வேறு நாடுகளில் உள்ள ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு உதவப்படுகிறது. இதுவரை 60 நாடுகளைச் சேர்ந்தோர் ஏராளமான நினைவுகளை லம்ஹாவில் பகிர்ந்துள்ளனர்.

இணையதளத்தில் தற்போது ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக இருந்தாலும், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஹிந்தி, தமிழ் மொழிகளையும் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தி வருகிறோம். விரைவில் அவை பயன்பாட்டுக்கு வரும். இதேபோன்ற வசதிகள்  செல்போன் செயலியிலும் கொண்டுவரப்படும். நாம் பதியும் தகவல்கள், நண்பர்கள், உறவினர்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை மரத்தின் கிளைகள் போன்ற வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மிக எளிதாகப் பார்வையிடலாம்.

நான் தற்போது அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், கோவையில் தங்கிப் பணியாற்றுவதே விருப்பம். விரைவில் அது நிறைவேறும்" என்றார்.

கோவை வரலாற்றை  பிரதிபலிக்கும் படங்கள்

"கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், கோவை மேலாண்மை சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அமைப்புகளைத் தொடர்புகொண்டு, கோவையின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் புகைப் படங்களை சேகரித்து, லம்ஹாவில் பகிரத் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, குழந்தைகளுக்கான புத்தகங்கள், புகைப்படங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டைல்ஸ் ஆகியவற்றையும் வழங்க உள்ளோம்"  என்றார் ஸ்ரேயா.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close