[X] Close

88 வயதில் முதல் நாவல் நாவலாசிரியராக மாறும் கவிஞர்


poet-puviyarasu

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 10:58 am
  • அ+ அ-

கா.சு.வேலாயுதன்

கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகங்கள் என இதுவரை 106 புத்தகங்களை எழுதியுள்ள கவிஞர் புவியரசு, 88-வது வயதில் 107-வது புத்தகமாக தன் முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்தபோது, ஒரு  நீள நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார். கறுப்பு மையில் முத்துமுத்தாக கையெழுத்துகள். சினிமா ஸ்கிரிப்ட்போல நேர்த்தி.  ‘மெய் என்பது எந்தவொரு பூர்வீக அல்லது நவீன சமூகத்துக்கும் அடிபணிவதில்லை. அந்த சமூகம்தான் மெய்க்கு  தலைவணங்க வேண்டும். அல்லது, வழிபடாது மடிய வேண்டும்!’

'த மேன் அண்ட் சூப்பர் மேன்' நாடகத்தில் வரும் பெர்னாட்ஷாவின் மொழி நோட்டின் மேல் பகுதியில். ‘ஆபத்தான வாழ்வை எதிர்கொள்பவரே அதி மனிதர்’ என்ற வரிகள் மையத்தில். அடிப்பகுதியில்  சா.தே.இரா.கண்மணி என்று எழுதப்பட்டு,  அதன் கீழே ‘சோபியா’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதுதான் தலைப்பு. நல்லாயிருக்கா?" என்று வினவுகிறார். "ஒருநாள் விமானத்தில போகும்போது அரசியல் கட்சித் தலைவர் ஒருவரிடம் பிரச்சினை செஞ்சுதே. அந்தப்  பெண்ணோட பேர்தான். என்ன துணிச்சல்பா அந்தப் பொண்ணுக்கு.  கதை அது அல்ல. இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி’’ என்கிறார் தொடர்ச்சியாக.

அழகிய கையெழுத்து மாறாமல், அடித்தல்,  திருத்தல் இல்லாமல் ஒருவித ஒழுங்கமைவுடன் 208 பக்கங்கள் கதை சென்று விட்டிருக்கிறது. 
"கண்ணுல ரொம்ப பிரச்சினை. இருந்தாலும் பாருங்க. இந்த பத்து நாள்ல இவ்வளவை எழுதிட்டேன்.   நாம்தான் பாத்திரங்களை படைக்கிறோம். அப்புறம் அதுகளே நம்மோட பேச ஆரம்பிச்சுடுது. என்னை இப்படி எழுதுங்குது. தூங்கவிடாம எழுப்புது.  என்னை ஏன் அப்படி படைச்சே? இப்படியல்லவா நானிருக்கணும்னு அதட்டலும் போடுது. அதுவே திருத்தமும் செய்யுது’’ ஒரு குழந்தமை அவருக்குள் குடிகொள்கிறது.
லியோ டால்ஸ்டாய், தஸ்தாயேவஸ்கி முதல் ஓஸோ வரை அலசுகிறார். 2009-ல் `கையொப்பம்` கவிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது, ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான்,உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி மற்றும் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பு அனுபவங்கள் மற்றும் உணர்வுகளுள் ஊடாடுகிறார்.  நடிகர் கமலஹாசனுடன் இணைந்து பணியாற்றிய காலப்பொழுதுகளை சற்றுநேரம் பகிர்கிறார்.
‘‘உங்கள் இலக்கியப் பயணம் வானம்பாடி யிலிருந்துதானே ஆரம்பித்தது. அதை சொல்லுங்களேன்?’’ என்ற கேள்விக்கு, "அது பழைய கதை, எல்லோரும் பேசின கதை. அது எதுக்கு?’’ என்றவர், தான் பிறந்த ஊரிலிருந்தே பேச ஆரம்பிக்கிறார்.

வறண்ட பூமியிலிருந்து...  

‘‘என் ஊர் உடுமலை லிங்கம நாயக்கன் புதூர். எங்க ஊர்ல பள்ளிக்கூடம் கிடையாது. டீக்கடை, மளிகைக்கடைகள் இல்லை.  பார்பர்ஷாப், குளம், குட்டை, ஆறு ஒண்ணுமில்லை.

பஸ் வராது. வறண்ட பூமிக்கு நடுவே வறண்டஊர். இப்பவும்பார்த்தால் ரத்தக்கண்ணீர்வடிப்பேன். பிழைப்புக்கு வழி கிடையாது. நான் பிறந்தவுடனே கோயமுத்தூருக்கு வந்துட்டோம். அப்பா ஓவியர். சாமி பெயின்டிங்ல எக்ஸ்பர்ட்.

ஆண், பெண் தெய்வங்களை அங்க லட்சணத்துடன் வரைவார். புலியகுளத்துலஒரு சின்ன அறையில குடி.  தேவி ஓவியக்கூடத்துக்கு வேலைக்குப்போனார். நான் சிட்டிமுனிசிபல் ஸ்கூல்ல படிச்சேன். கவிதை, ஓவியத்துல சின்ன வயசிலேயே ஆர்வம். 9, 10-வது படிக்கும் போதே க்ரைம், இலக்கியம்னு 2 கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கேன். அப்பா ஓவியராச்சே. அழகா ஓவியம் போட்டு, படங்கள் வெட்டி ஒட்ட வச்சு. கையெழுத்துப் பத்திரிகையே ரொம்ப பிரமாதமா இருக்கும். வள்ளுவம், பாரதியார், ம.பொ.சி, சாவின்னு நிறையவே அதில் எழுதியிருக்கேன்.

அப்படியான பயணம் வானம்பாடியுடன், ஷெரீப் பட்டிமன்றத்துடன், காங்கிரஸ் இயக்கத்துடன் எல்லாம் இணைத்தது. ம.பொ.சி.யுடன்எனக்கு ரொம்ப நெருக்கம். காங்கிரஸுலயிருந்து தமிழனுக்கும், தமிழுக்கும் சுயாட்சி வேணும்்னு தமிழரசுக் கழகம் பிரிஞ்சதுல, அது கூட வந்தேன். அதே நேரத்துல கல்லூரிப் படிப்பு முடிச்சு ஆசிரியர் வேலை கிடைச்சுப் போனேன். அதுலயும் நரசிம்மலு நாயுடு பள்ளியில் டிரஸ்டிலும் இருந்துட்டு, ஆசிரியனாவும் வாழ்ந்து நின்றது தனி அனுபவம்.

அன்னெய்க்கு கோயமுத்தூர் முழுக்க பஞ்சாலைகள்தான். 110 மில்கள் இருந்தது. அப்படியான தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இங்கே பத்திரிகை, இலக்கிய வளர்ச்சிக்கும் முகாந்திரம் செய்தவர் சே.ப.நரசிம்மலு நாயுடு.

கோவையின் குடிநீர்த் தேவைக்கு அரும்பாடுபட்டவர். சிறுவாணி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில் முத்திக்குளத்தில் இருப்பதை நேரில் சென்று முதலில் ஆய்வு நடத்தியவர். கோவையின் முதல் பத்திரிகை கலாநிதி. அதை அச்சிட்ட முதல் அச்சகம் பெயரும் கலாநிதி. அந்தஅச்சகத்தில் அந்தப்  பத்திரிகையை முதன்முதலாக அச்சிட்டு கொண்டுவந்தவர் நரசிம்மலு நாயுடு. எதையும் அவரே அச்சுக்கோர்த்து அச்சிடுவார்.

106 நூல்கள்

அந்தக் காலத்தில் ரொம்பவும் பேசப்பட்ட  புகையிலை வழக்கு, மிளகாய் மோசடி வழக்குகளை பப்ளிக் பிராசிக்யூட்டர் பாலகிருஷ்ணனை முன்வைத்து, தன் பத்திரிகையில் தொடர் செய்தி ஆக்கியுள்ளார்.  மொத்தம்  110 நூல்களை எழுதியவர். அவருக்கப்புறம் இப்ப நான்தான் கோவையில் 106 நூல்களை எழுதியுள்ளேன். சொல்லப்போனால் நான் நரசிம்மலு நாயுடுவின் வாரிசு என்பேன்" என்கிறார் உணர்ச்சிமயத்துடன்."50-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செஞ்சிருக்கீங்க. இதனாலஉங்கள் படைப்பின் அசல் தன்மை காணாமல் போயிருக்கணுமே!" என்று கேட்டதற்கு, "மொழிபெயர்ப்பில் எழுத்து காணாமல் போகவே போகாது. வேணும்ன்னா அதுல நேட்டிவிட்டி இல்லாம இருக்கும். அழகு போகாது. மெருகு ஏறும். அதேபோல, சொந்தமா கவிதை எழுதும்போது சுதந்திரம் இருக்கு. மொழிபெயர்ப்புக்கவிதையில அது இருக்காது.  எதுவா இருந்தாஎன்ன? நாய்க்குட்டியானாலும், தீக்குச்சியானாலும் நீ என்ன சொல்கிறாய் என்ற கருப்பொருள்தான் முக்கியம்’’ என்று பதில் அளித்தார்.

‘‘மொழிபெயர்ப்பு, கவிதை என இரண்டு முறை சாகித்ய அகடாமி வாங்கியவர். இத்தனை வருஷம் இல்லாம இப்ப நாவல் எழுதறீங்களே, அப்படின்னா நீங்க இதுவரை எழுதின கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகங்களில் நிறைவு இல்லை என்று சொல்லலாமா?’’ என்றதற்கு, "நான் கவிதைக்காரன், நாடகக்காரன் என்றாலும், எனக்குப் பிடித்த வடிவம் நாவல். அதிகம் வாசிப்பதும் அதுதான். என்னிடம் தமிழ் நாவல்கள் மட்டுமல்ல, ஆங்கில நாவல்களும் நிறைய  இருக்கு. எல்லா மொழிபெயர்ப்பு நாவல்களையும் வாங்கிப் படிச்சிடறேன். கவிதை, கட்டுரை, நாடகங்களில் இருந்து நாவல்  மாறுபட்ட வடிவம். அதிலும் நான் இப்போது எழுதும் இந்த நாவல், நாவல் வடிவங்களிலேயே மாறுபட்ட வடிவம்’’ என்றார் நாவலாசிரியராக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞர்.

சினிமா அனுபவம் எப்படி?

"சினிமாவுல கமல்ஹாசனோட ரொம்ப நாள் இருந்தவர் நீங்கள். இப்ப சினிமாவுக்கு ஏங்குகிற எழுத்தாளர்களுக்கு சொல்வதென்ன?" என்று கேட்டதற்கு, "சினிமாவுக்குப் போறவங்க அவங்களை இழந்துடக்கூடாது. எழுத்துல பிரபல்யம் ஆன ஆட்களை அவங்க பேருக்காக கூப்பிடறாங்க. நாங்க உஷாராக இருந்துடறோம். இருந்திருக்கிறேன். நான் கமல்கிட்ட இருந்தப்ப,   பிரபல எழுத்தாளர்  ஒருத்தர்,  பிரபல  டைரக்டர்கிட்ட கதை எழுதப் போனார். ஒவ்வொரு நாளும் என்கிட்ட சொல்லிட்டே போவார். ரெண்டு வாரம் கழிச்சு, அந்த எழுத்தாளர்கிட்ட கேட்டேன். 'கதை எந்த அளவுக்கு இருக்கு? வசன அனுபவம் எப்படின்னு?' அதுக்கு அவர் சொல்றார்.'அந்த படத்துல அஞ்சே அஞ்சு வரி வரும். அது மட்டும்தான் என் டயலாக். மத்தபடி கதை, திரைக்கதை, வசனங்க எதுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. ஆனா படத்துல  நம்ம பேரை மட்டும் போட்டுருவாங்க'ன்னு சொன்னாரு. இப்படித்தான், ஏதோ,  கதை, வசனம் முழுக்கவே நாம பண்ணின மாதிரி காட்டுவாங்க. அது தேவையா. நம்ம அடையாளத்தை சினிமால போய் இழக்கணுமா?" என்றார் புவியரசு.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close