[X] Close

புதுக்கோட்டை திருநங்கைகளுக்கு ஒரு சல்யூட்!


pudhukottai-thirunagai

புதுக்கோட்டையில் சிறுதொழில் செய்யும் திருநங்கைகள்

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 18:14 pm
  • அ+ அ-

எப்ப பார்த்தாலும்

இது எங்களுக்குக் கெடைக்கல…

அது எங்களுக்குக் கெடைக்கலன்னு போராடுறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு; ஏதோ இவங்களுக்கு மட்டும்தான் உலகத்திலேயே பிரச்சினைங்க இருக்கிறது போலவும் நமக்கெல்லாம் பிரச்சினையே இல்லாத மாதிரியும்தான் இவங்கள்லாம் நடந்துக்கறாங்க…

-சாலையின் ஓரத்தில் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்த திருநங்கைகளைப் பார்த்து, பேருந்தில் எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அலுத்துக்கொண்டார்.

“அவர்களுக்காக மட்டும் அல்ல, பொதுச் சமூகத்தினருக்கு ஏற்படும்  பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கவும், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது உதவவும் செய்கிறார்கள் தானே…” என்றேன்.

“பொது மக்களுக்கு அவங்க என்ன செஞ்சாங்க சொல்லுங்க” என்றார்.

கையில் வைத்திருந்த நாளிதழில், கஜா புயல் பாதித்த கிராமங்கள் சிலவற்றில் திருநங்கைகள் நலப்பணிகளைச் செய்யும் செய்திகள் வந்திருப் பதைக் காட்டினேன்.

“எல்லாம் காலக் கொடுமை” என்றவர் வேறு இடத்தில் சென்று அமர்ந்துகொண்டார்.

யாரைப் பற்றியும் எதையும் நான் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்ற முன்முடிவோடு இவரைப் போல் மனக் கதவைப் பூட்டி, சாவியையும் தொலைத்துவிட்டவர்கள் பலர். அவர்களுக்கு இந்தத் தொடரின் மூலம் நாம் சொல்ல நினைப்பதெல்லாம், அவர்களையும் உள்ளடக்கியதுதான் நம்முடைய சமூகம் என்பதைத்தான்.

தன்னை யாரும் மரியாதைக் குறைவாகப்பேசக் கூடாது என்று நினைப்பவர்கள்தாம், அடுத்தவரின் மரியாதையைக் குலைக்காமல் இருப்பார்கள். கல்வி, பணி வாய்ப்பு, வருமானத்தை ஈட்ட அரசு தரும் பலவகையான பயிற்சிகளைக் கற்றுத் தேர்ந்து முன்னுதாரணத் திருநங்கையாக புதுக்கோட்டைக்குப் பெருமைசேர்க்கிறார் ஷிவானி.

தன் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து கொள்ளும் பொதுச் சமூகத்தின் மத்தியில், தன்னைப் போன்ற மூன்றாம் பாலினத் தவருக்கான உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதையே தனது பணியாகக் கடந்த பத்து வருடங்களாகச் செய்துவருபவர் ஷிவானி.

கைகொடுக்கும் கல்வி

ஒன்பதாம் வகுப்பு படித்தபோது தனக்குள் ஏற்பட்ட பெண் தன்மையை உணர்ந்த ஷிவானி, சக மாணவர்களின் கேலி கிண்டல்களைப் பொருட்படுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம்செலுத்தினார். பி.எஸ்சி., உளவியல், DMLT பட்டயப்படிப்புடன் அக்குபஞ்சர் சிகிச்சை முறையையும் கற்றுக்கொண்டார். தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் கரகாட்டக் கலைஞராகவும் அறியப்படுகிறார்.

திறன் வளர்த்த திருநங்கைகள்

சமூக மக்களுக்கான திட்டத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி பின்பு திட்ட மேலாளராகப் பணி உயர்வு பெற்று அடுத்த கட்டமாகத் தன் சமூகத் திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சியாளராக இருந்து பயிற்சியளித்தார். மூன்றாம் பாலின சமூக மக்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய சேவைகளை அரசிடமிருந்து பெற்றுத்தரும் சேவையாளராகத் தன் பணியை முழுமனதுடன் செய்ய ஆரம்பித்தார்.

திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை, தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்புகள், மானியக் கடனுதவி போன்றவற்றைப் பெறத் துணை நின்று, திருநங்கைகள் சுயமாகத் தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள உறுதுணையாகச் செயல்பட்டார். இதன் பலனாக புதுக்கோட்டையில் தையல் தொழில், சமையல் பணி, நடனக் கலைஞர்கள், அழகுக் கலை நிபுணர், ஊறுகாய் போடுபவர் என ஏதாவது ஒரு தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருவாய் ஈட்டும் திருநங்கைகளைத்தான் புதுக்கோட்டையில் பார்க்க முடியும். கடைகேட்கும் திருநங்கைகள் இங்கு மிகக் குறைவு.

விரியும் சமூகப் பணி

பல கல்லூரிகளில் மாணவ மாணவியர் மத்தியில் திருநங்கைச் சமூகம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும்விதமாகப் பயிற்சி வகுப்புகளை ஷிவானி நடத்திவருகிறார். திருநங்கைகளுக்குப் பணியாற்றுவது தவிர, நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய மரங்களை அகற்றி மாற்று மரக்கன்றுகளை நடுவது போன்ற பணியைப் பல சமூக அமைப்புகளுடன் இணைந்து செய்துவருகிறார்.

தற்போது கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பொது மக்களுக்கான நிவாரண உதவிகளைத் தங்களைப் போன்ற திருநங்கைகள் அமைப்புகள் மூலம் சேகரித்து  வழங்கியிருக்கிறார். ‘புதுக்கோட்டை மாவட்டத் திருநங்கைகள் நலச் சங்கம்’ என்ற அமைப்பையும் தொடங்கி திருநங்கை சமூகத்திற்கான உரிமைகள் மற்றும் சேவைகளைச் செய்துவருகிறார்.

பாலியல் தொழிலுக்கு முழுக்கு

“நான் செய்யும் இந்தப் பொது பணிகளுக்கு முழுக்க முழுக்கக் காரணம் என்னை இந்தப் பூமிக்குக் கொண்டுவந்த தாயும், என்னை மகளாகத் தத்தெடுத்து வளர்க்கும் திருநங்கை தாய் அசினா நாயக்கும்தான். அவர்தான், கால்நடைத் துறையில் அளிக்கப்படும் செயற்கைக் கருவூட்டாளர் பயிற்சியைப் பெறவைத்தார். இந்தப் பயிற்சியைப் பெற்றதால் கிராமங்களில் உள்ள பசுக்களுக்குச் செயற்கை முறை கருவூட்டல் செய்யும் பணியையையும் செய்து பொருளீட்டுகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் திருநங்கைகள் யாரும் ஈடுபடக் கூடாது என்னும் முடிவை ஜமாத்தில் கொண்டுவந்து அதைச் செயல்படுத்திய பெருமை அசினா நாயக்கையே சேரும். வெறும் சட்டத்தால் மட்டும் அல்ல எளிய கைத்தொழில் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானமே எனக்குப் போதும் என்ற  திருநங்கைகளின் எண்ணமும் இந்த மாற்றத்துக்குக் காரணம்” என்கிறார் ஷிவானி.
 

மாற்றுப்பாலினப் பாதுகாப்பு மசோதாவை ஏன் எதிர்க்க வேண்டும்?

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போராட்டம், ‘மத்திய அரசின் மாற்றுப்பாலினப் பாதுகாப்பு மசோதா 2018’-ஐ எதிர்த்து தமிழ்நாடு, பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த மாற்றுப்பாலினத்தவர் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்த போராட்டம்.

அந்தப் பாதுகாப்பு மசோதாவில் பிரச்சினைக்குரிய அம்சங்களாகச் சிலவற்றை மாற்றுப்பாலினத்தவர் குறிப்பிடுகின்றனர். அவை:

> ஒருவர் தன்னைத் திருநராக அடையாளப்படுத்திக்கொள்ள மாவட்ட நீதிபதியிடம் விண்ணப்பம் செய்து திருநர் அடையாளச் சான்றிதழ் பெற வேண்டும்.

> தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை மாவட்ட நீதிபதி அரசாங்கத்தால் திருநர்களை அடையாளப்படுத்த அமைக்கப்படவிருக்கும் மாவட்ட மேற்பார்வைக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

> பிச்சை எடுக்கத் தூண்டுவதைக் குற்றச்செயல் ஆக்குதல்: திருநர்களைப் பிச்சையெடுக்கத் தூண்டினாலோ,  வற்புறுத்தினாலோ அவருக்குக் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுவரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

> திருநர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்குக் குறைந்த தண்டனையே வழங்கப்படுகிறது.

> ஒரு திருநரை அவர்களுடைய குடும்பத்தால் பார்த்துக்கொள்ள

முடியவில்லை என்றால் நீதிமன்றம் வழியாக அவரை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்.


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close