[X] Close

சபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு


sabarimala-pilgrims-block-two-trekking-women

  • நெல்லை ஜெனா
  • Posted: 24 Dec, 2018 13:31 pm
  • அ+ அ-

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இன்றும் இளம் பெண்கள் இருவர் செல்ல முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் தராமல் ரகசியமாக சென்ற அந்த பெண்களை பக்தர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் மயங்கியதால் பரபரப்பு நிலவியது

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்ற 50 வயதுக்குட்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண்கள் 11 பேர், போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கினார்கள்.

பெண் பக்தர்கள் செல்ல கடும் எதிர்ப்புத் தெரிவித்த போராட்டக்காரர்களை கேரள போலீஸார் கைது செய்தனர்.  பம்பையில் 6 மணிநேரம் பெரும் பரபரப்பாக இருந்த சூழல் முடிவுக்கு வந்தது.

சென்னையைச் சேர்ந்த “மனிதி” எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு சென்றனர். சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாகப் பம்பைக்கு நேற்று  காலை 5.30 மணிக்கு சென்றனர்.

 இந்த விஷயம் அறிந்ததும் பம்பையில் தமிழக பெண் பக்தர்களை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, தெரிவித்ததால் பதற்றம் அதிகமானது.

பெண்களை செல்லவிடாமல் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள், பக்தர்கள் சென்னையில் இருந்து வந்த மனிதி அமைப்பைச் சேர்ந்த பெண்களுடன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலித் பிரிவைச் சேர்ந்த அம்மினி உள்ளிட்ட பெண்களும் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் திரண்டு இருந்தால் பெண்களை செல்ல அனுமதிக்கவில்லை. அதன்பின் மீண்டும் பெண்களுடன் போலீஸார் பேச்சு நடத்தி அவர்களை மலையை விட்டு கீழே அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் திடீரென சபரிமலைக்கு செல்ல முற்பட்டனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவரும் காவல்துறையினருக்கு தகவல் கூறாமலேயே மலையை ஏறத் தொடங்கினர். அப்பச்சிமேடு அருகே அவர்களை பக்தர்கள் சூழ்ந்துகொண்டு தடுத்தனர். சரணகோஷம் எழுப்பியவாறு அவர்கள் மேலே செல்ல முடியாதவாறு திரண்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்கள் இருவர் சபரிமலைக்கு செல்ல முற்பட்ட விவகாரம் போலீஸாருக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் வந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். அவர்களை பாதுகாப்பாக சிறிது தூரம் அழைத்துச் சென்றனர். ஆனால் நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பதற்றம் ஏற்பட்டது. பெண்களை மலையே அனுமதிக்க மறுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு சரணகோஷம் எழுப்பினர். இதையடுத்து அந்த பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் பத்திரமாக கீழே அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் திருப்பிச் செல்ல முடியாது எனக் கூறி உறுதியாக இருந்த பிந்து, தலித் மற்றும் பழங்குடி மக்கள் சார்பில் தாம் செல்வதாகவும், தங்களை போன்றவர்களை சபரிமலைக்கு செல்லவிடாமல் தந்திரி குடும்பம் தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், பெண்கள் அமைப்பினர் தனக்கு ஆதரவு அளித்து இருப்பதாகவும் எனவே திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என உறுதிபடத் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் அவருடன் பேச்சவார்த்தை நடத்தினர். சபரிமலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருப்பதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அவரை கீழே இறக்கிச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அப்பச்சிமேட்டில் இருந்து கீழே அழைத்து வரப்பட்ட நிலையில் அந்த பெண்கள் மயங்கம் அடைந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தனர். அவர்களை சபரிமலையை விட்டு கீழே அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரத்தால் மீண்டும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. சபரிமலைக்கு செல்ல முற்பட்ட 2 பெண்களும் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் பின்னணியில் கேரள மாநில அரசு இருப்பதாகவும் பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இதனை தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ள போதிலும், சபரிமலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close