[X] Close

நெல் விதைகள் பாதுகாப்பை இயக்கமாக மாற்றிய ஜெயராமன்


nel-jayaraman-special

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 08:45 am
  • அ+ அ-

வி.தேவதாசன்

கார், கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, சீரகச் சம்பா, மடுமுழுங்கி, வாடன் சம்பா, கருடன் சம்பா, காட்டு யானம், தேங்காய்ப்பூ சம்பா, கிச்சடிசம்பா, அன்னமழகி, ஒட்டடையான், மாப்பிள்ளைச் சம்பா…

இவையெல்லாம் நம் பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்கள். இந்த பெயர்களை வாசிக்கும் பலருக்கும் நிச்சயம் நினைவுக்கு வரும் பெயர் ‘நெல் ஜெயராமன்’.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை நம் முன்னோர்கள் பயிரிட்டு, பாதுகாத்து வந்துள்ளனர். இந்த நெல் ரகங்கள் அனைத்தும் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களையும், பூச்சித் தாக்குதல்களையும் தாங்கி நின்று வளரக் கூடியவை. ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் வரவு ஒட்டுமொத்த பாரம்பரிய நெல் ரகங்களையும் நம் மண்ணில் இருந்தே விரட்டிவிட்டது. அதிக மகசூல் கிடைக்கும் என்று ஆசை காட்டி, வீரிய ஒட்டு நெல் ரகங்கள் நம் விவசாயிகளின் கைகளில் திணிக்கப்பட்டன. இதனால் நம் மண் வளம் அழிந்ததோடு, மனிதர்களின் உடல்நலமும் சேர்ந்தே பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான் அழிவின் விளிம்பில் இருந்த 174 பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து, அவற்றை பாதுகாத்து பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பரவலாக்கியிருக்கிறார் நெல் ஜெயராமன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ஜெயராமன். 9-ம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர், திருத்துறைப்பூண்டியில் ஓர் அச்சகத்தில் தொழிலாளியாக வேலை செய்தார். நுகர்வோர் இயக்கங்களில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டவர், பாரம்பரிய விவசாயத்தைப் பாதுகாக்கும் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில்தான், இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று போற் றப்பட்ட நம்மாழ்வாரின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு, ஜெயராமனின் பணிகள் வேகமெடுத்தன.

தமிழகத்தில் ‘கிரியேட்’ என்ற நுகர்வோர் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற இயக் கம் செயல்பட்டு வருகிறது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்ற ஜெயராமன், பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடித் தேடி கண்டறிந்து, அவற்றை பரவலாக்குவதை தனது முழுநேர பணியாக மேற்கொண்டார்.

நம்மாழ்வார் அளித்த விதை

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “நஞ்சில்லா உணவை வலியுறுத்தி நம்மாழ்வார் 2003-ல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நடைபயணமாக சென்றார். அப்போது அவருடன் நானும் சென்றேன். அந்தப் பயணத்தின்போது ஒரு விவசாயி தன்னிடம் இருந்த காட்டு யானம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை நம்மாழ்வாரிடம் வழங்கினார். அருகே இருந்த என் கைகளில் அந்த விதைகளை ஒப்படைத்தார் நம்மாழ்வார். ‘இந்த விதைகளை எல்லாம் மறுஉற்பத்தி செஞ்சு, ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கணும்’ என்று என்னிடம் நம்மாழ்வார் கேட்டுக்கொண்டார்.

அந்த விதைகளை இயற்கை விவசாயி களின் உதவியால் மறு உற்பத்தி செய்தோம். ஆதிரெங்கம் கிராமத்தில் ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் சார்பில் முதல் நெல் திருவிழாவை 2006-ல் நடத்தினோம். அதில் 150 விவசாயிகள் பங்கேற்றனர். நாங் கள் மறுஉற்பத்தி செய்த 7 நெல் ரகங்களின் விதைகளையும் அந்த விவசாயிகளிடமே விநியோகித்த நம்மாழ்வார், ‘நெல் ஜெயராமன்’ என்றே என்னை அழைக்கத் தொடங்கினார்.

அதன்பிறகு ஆதிரெங்கத்தில் ஆண்டு தோறும் மே மாதம் நெல் திருவிழாக்களை நடத்தினோம். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்குவோம். அவற்றை அவர்கள் மறுஉற்பத்தி செய்து அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும் போது 4 கிலோவாக திரும்ப ஒப்படைப் பார்கள்.

இந்தத் திருவிழாவில் விவசாயி களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் வந்தனர். அவரவர் பகுதிகளில் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களையும் தேடி எடுத்து வந்தனர்.

ஆதிரெங்கம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் நெல் திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கின. தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் பாரம்பரிய நெல் திருவிழாக்களை ஏற்பாடு செய்து, அங்குள்ள விவசாயிகள் எங்களை அழைத்துச் சென்றனர். இதனால் 170-க் கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மூலம் பரவலாக்கப்பட்டுள்ளது” என்று ஜெயராமன் தனது பணிகள் பற்றி விவரித்துள்ளார்.

2006-ல் தொடங்கிய ஆதிரெங் கம் நெல் திருவிழா இந்த ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. ஐ.டி. நிறுவனங் களில் பணியாற்றும் இளம்பெண் கள் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்களை நெல் திருவிழாக் களில் பங்கேற்கச் செய்து, அவர் களையும் விவசாயத்தில் ஆர்வத் தோடு ஈடுபட வைத்தார் ‘நெல்’ ஜெயராமன்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, பாரம் பரிய நெல் ரகங்கள் பற்றி பிரச் சாரம் செய்த ஜெயராமன், பிலிப் பைன்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச கருத்தரங்கிலும் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்துகொண் டார்.

ஜெயராமனின் பணிகளை அங் கீகரிக்கும் வகையில், தேசிய அடிப் படை நிலை கண்டுபிடிப்பு - பாரம் பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறி தலுக்கான ‘SRISTI சம்மான்’ விரு தையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்தது.

‘நெல்’ ஜெயராமனின் பணிகள் பற்றி நினைவுகூர்ந்த ‘கிரியேட்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஆர். பொன்னம்பலம், “விவசாயி களின் தற்சார்பு நிலை பெருக வேண்டுமானால், பாரம்பரிய விதை ரகங்களைப் பாதுகாப்பது அவசியம் என்ற எண்ணத்தை தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநில விவசாயிகளிடமும் ‘நெல்’ ஜெயராமன் விதைத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டு கருத்தரங்கில் ஜெயராமனோடு பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகள் பலரும், அவரது பணிகள் பற்றி தங்கள் நாடுகளில் பேசி வருகின்றனர். ஜெயராமனின் இத்தகைய பணி களுக்கு ஆதாரமாக திகழ்ந்த நெல் திருவிழாவை ‘கிரியேட்’ அமைப் பின் ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கம் சார்பில் தொடர்ந்து நடத்துவோம்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close