[X] Close

சிறார்கள் குற்றவாளியாவதைத் தடுக்க அடிக்காம.. திட்டாம.. குணமா பேசுங்க: மனநல மருத்துவர் அறிவுரை


doctors-advise-on-bringing-up-children

சித்தரிப்புப் படம்

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 13:32 pm
  • அ+ அ-

எளிதில் உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் போன்றவற்றால் வன்முறைச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களிடமும் சமீப காலமாக வன்முறை எண்ணங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கூட்டுறவு வங்கி ஊழியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. அவர்களில் 5 பேர் பள்ளி மாணவர்கள். காலையில் கொலை செய்துவிட்டு, எதுவுமே தெரியா ததுபோல் அன்றைய தினமே பள்ளிக்கும் சென்றுள்ளனர்.

இதேபோல், சீவலப்பேரி அருகே மேல பாலாமடை கிரா மத்தில் ஓர் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலையான அவர் சிறுவனாக இருந்தபோது நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர். இளம் வயதில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வாழ்க்கையே தடம் மாறிவிடுகிறது.

குடும்ப பின்புலம்

சிறார்களின் மனதில் வன்முறை எண்ணம் எதனால் ஏற்படுகிறது, இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து திருநெல்வேலி சினேகா மனநல மருத்துவமனையின் மனநல மருத்துவர் பன்னீர்செல்வன் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் 15 முதல் 23 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மரணம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. இதற்கு முதல் காரணம் விபத்துகள். இரண்டா வது காரணம் வன்முறை. ஒரு லட்சம் பேரில் 28 பேர் வன்முறை யால் மரணம் அடைகின்றனர்.

சிறார்களின் கோபம், மன உளைச்சல் அதிகரித்து வருகிறது. பதின் பருவத்தில் இந்த கோபம் அதிகரித்து உச்ச நிலையை அடைகிறது.

இவர்களில் 75 சதவீதம் பேர் இயல்புநிலைக்கு வந்து விடுகின்றனர். ஆனால், 25 சதவீதம் பேர் மனதில் கோப உணர்ச்சி அதிகரித்துவிடுகிறது.

சிறார்களிடம் கோபம், வன்முறை எண்ணம் அதிகரிக்க முக்கியக் காரணமாக இருப்பது குடும்ப பின்புலம். பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் அந்த குடும்பத்தில் வளரும் சிறார் மனதிலும் வன்முறை எண்ணம் அதிகரிக்கிறது. இவர்கள் இளம் வயதை அடையும்போது குற்றச் செயல்கள், வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சினிமா- தொலைக்காட்சி

மேலும், சிறுவர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு கூட அடிப்பது உள்ளிட்ட கடுமையான தண்டனை கொடுப்பது அவர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிடும். குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வன்முறைச் செயல்களில் ஈடு படத் தொடங்கிவிடுகின்றனர். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பு, அரவணைப்பு கிடைக்கா மல் தனிமையாக இருக்கும் சிறு வர்களிடமும் வன்முறை எண்ணம் அதிகரிக்கும் நிலை உள்ளது.

சிறார்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள்?, பழகும் நபர் எப்படிப்பட்டவர்? என்பதை கண்காணிக்க வேண்டும். வீட்டில் நல்ல முறையில் வளர்க்கப்பட்ட சிறுவர்கள் கெட்டவர்களுடன் பழகி, கெட்ட குணங்களுடன் வளரும் நிலை வந்துவிடும்.

சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளும் சிறுவர்கள் மனதில் வன்முறை எண்ணத்தை விதைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதேபோல், நகர்ப்புறங்களில் உள்ள சிறார்கள் வீடியோ கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். அவற்றில் இடம்பெறும் அடித்தல், கொல்லுதல் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகள் சிறுவர்கள் மனதில் வன்முறையை தூண்டுகின்றன.

பெற்றோர்- ஆசிரியர்

சிறுவர்கள் மனதில் வன்முறை எண்ணம் வராமல் தடுக்க பெற்றோர், பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். சிறுவர்களின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்தே கண்காணிக்க வேண்டும். அதிக கோபம், அடிப்பது, ஆத்திரத்தில் எந்த பொருளையாவது எடுத்து உடைப்பது, கீழே தள்ளி விடுவது போன்ற செயல்கள் சிறார்களிடம் இருந்தால் அவர்கள் மனதில் வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது என்பதை கண்டறியலாம்.

குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை அடிக்கக் கூடாது. அவர்களிடம் கனிவாக பேசி, எது தவறு?, எது சரி? என்பதை புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் முன் பெற்றோர் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர் இருக்க வேண்டும்.

மனம்விட்டு பேச வேண்டும்

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போதும், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதும் வீட்டில் தாய் அல்லது தந்தை இருப்பது அவசியம். குழந்தைகளை தனிமையாக இருக்கவிடக் கூடாது. அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவ்வாறு பேசினால், தங்கள் மனதில் உள்ளதை குழந்தைகள் கூறுவார்கள்.

சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும்? என்பதை புரிய வைக்க வேண்டும். வீட்டில் இருப்பதைவிட பள்ளிகளிலேயே குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறார்கள். எனவே, ஆசிரியர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

பள்ளியில் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவ்வப்போது பெற்றோர் கூட்டங்களை நடத்தி, பிள்ளைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

சிறுவர்களை எப்படி அணுகுவது? அவர்கள் பிரச்சினை களுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்பது குறித்து மனநல ஆலோ சகர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை சிறுவர்கள் பார்க்க அனுமதிக்க கூடாது. சிறுவர்களை நல்ல முறையில் வளர்த்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மனநல மருத்துவர் பன்னீர்செல்வன்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close