[X] Close

சென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு கஜா புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்?


gaja

  • நெல்லை ஜெனா
  • Posted: 26 Nov, 2018 10:37 am
  • அ+ அ-

தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் உலுக்கி எடுத்து இருக்கிறது. தானே, சென்னை பெருவெள்ளம்,  ஒக்கி புயலை தொடர்ந்து கஜா புயல் தமிழகத்தை பதம் பார்த்துள்ளது. கடலூர்,சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது இயற்கையின் கோரப் பசிக்கு பலியாகியுள்ளது டெல்டா மாவட்டங்கள்.

குறிப்பாக தமிழக கடல்பகுதியில் முனைப்பகுதியாக இருக்கும் வேதாரண்யம் பகுதியில் பாதிப்பு அதிகம். வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி,  அதிராமபட்டினம் வரையிலும் மிக மோசமான பாதிப்பு. வேதாரண்யத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் புரட்டி போட்டுள்ளது கஜா.  

உணவு, இருப்பிடம், மின்சாரம், தண்ணீர் இன்றி பல நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதைவிட வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எதிர்கால மிரட்டல் அந்த மக்களை மிகுந்த மன சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது. பெரும்பாலும் விவசாயப் பெருங்குடி மக்கள். நெல்லை தவிர கடலோரப்பகுதி என்பதால் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி. 

அவ்வப்போது செலவுக்காக நெல்லை பயிரிடும் விவசாயிகள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, எதிர்கால தேவை என அனைத்துக்கும் நம்பி இருந்தது இந்த தென்னை மரங்களை தான். குழந்தையை போல பார்த்து பார்த்த வளர்த்த தென்னை ஒரு நொடியில் விழுந்துவிட்டதால் எதிர்காலம் மக்களை வெகுவாக மிரட்டுகிறது. வேறு எந்த தொழிலும் இல்லாத பூமி, விவசாயம் மட்டுமே ஒரே வாழ்வாதாரம். சோறுடைத்த சோழ வளநாடு இப்போது தேம்பி தேம்பி அழுகிறது. 

ஆனால் டெல்டாவின் அழுகுரல் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கேட்கேவில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது. சென்னை பெருவெள்ளத்துக்கு தமிழகம் காட்டியே ஒற்றுமையும், ஆதரவும் அந்த அளவுக்கு டெல்டா பக்கம் திரும்பவில்லையோ?

அதற்கு சில காரணங்களும் இருக்கதான் செய்கின்றன. சென்னையை தெரிந்த அளவுக்கு, சென்னையுடன் இருக்கும் தொடர்பு அளவுக்கு, சென்னையை பற்றிய புரிதல் அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு புரிதல் குறைவாகவே இருக்கும். சென்னை என்பது ஒரு பகுதியல்ல. 

தமிழகத்தின் பல பகுதி மக்களும் சேர்ந்து உருவாக்கிய நகரம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சொந்தக்காரர்களும், உறவினர்களும் வசிக்கும் இடம் சென்னை. ஒவ்வொரு தமிழர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை உள்ளது. 

தாங்கள் வாழும் பகுதியை தவிர மற்ற பகுதிகளை பற்றி தெரியாத தமிழர்களுக்கும் சென்னை வந்துபோகும் இடமாக உள்ளது. இதனால் தான் சென்னைக்கு பாதிப்பு என்றதும் ஒட்டுமொத்த தமிழகமும், ஓடோடி வந்தது; உறவாக பார்த்தது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிகள் பொருளாக, பணமாக குவிந்தது. மீட்பு பணிக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி படையெடுத்தனர். 

பெருவெள்ளத்தை, கடுமையான போராட்டத்தை சரியான தைரியத்துடன் எளிதாக எதிர்கொண்டது சென்னை. ஆனால் டெல்டாவிலோ நிலைமை முற்லும் வேறானது.  

சென்னையை போன்று எந்த தொடர்பு அந்த மக்களுக்கு இல்லை. மற்ற பகுதி மக்களுக்கு டெல்டாவை பற்றிய புரிதலும் இல்லை. இதனால் தான் கஜா பாதிப்பிக்கு பின் ஓடோடி வந்தவர்கள், உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.

பாதிப்பும் சரி, அதை எதிர்கொள்ளும் சூழலும் சென்னையை ஒப்பிடுகையில் டெல்டாவில் மோசம். தொழில் சார்ந்த சென்னையில் நிறுவனங்கள்,தொழிலாளர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஒரு சில மாதங்களில் சரி செய்து விட முடிந்தது.

 ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இடுகட்ட அரசுமட்டுமின்றி  அவர்கள் பணிபுரியம் நிறுவனங்களும் முன் வந்தன. சம்பளமாக, சலுகையாக, பணமாக, பொருள் உதவியாக வந்து குவிந்தன. ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கடமையாக இல்லாவிட்டாலும் தார்மீக ரீதியில் உதவி செய்ய நிறுவனங்கள் முன் வந்தன. அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசும் பலவிதங்களில் முன் வந்தது. 

ஆனால் அப்பாவி விவசாயிகளின் நிலையோ அப்படி இல்லையே. எந்த நிறுவனத்திலும் அவர்கள் வேலை செய்யவில்லையே; அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்த நிறுவனம் ஈடுகட்ட முடியும். சென்னை பெருவெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், நிறுவனங்கள், இயந்திரங்கள் என ஒவ்வொன்றுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்ததால்  மிக கடுமையான விதிமுறைகளை சற்றளவு தளர்த்தி இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட தந்து உதவின.பெரிய நகரத்தில், தலைநகரத்தில், தொழில் சார்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதி இருந்ததே?

ஆனால் விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த விவசாயிகளுக்கு அரசு சார்ந்த பயிர் இன்சூரன்ஸ் தவிர எந்த இன்சூரஸூம் வராதே; அவர்கள் என்ன செய்வார்கள். 

சென்னை பெருவெள்ளத்தின்போது சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கஜா பாதித்த டெல்டாவிலோ அரசு பயிர் காப்பீடு தவிர 200 கோடி ரூபாய் அளவுக்கு கூட இன்சூரன்ஸ் தொகை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது இன்சூரன்ஸ் வட்டாரங்கள். இன்சூரன்ஸ் தொகை கூட கட்ட முடியாத ஏழை விவசாயி, என்ன தான் செய்ய முடியும்? 

அவர்களுக்கு அரசு கணக்கிட்டு கொடுக்கும்  இழப்பீட்டை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக வளர்த்த தென்னையும், சவுக்கும், வேறு பல மரங்களும் முறிந்து விழ, வாழ்வாதாரத்தை தொலைத்து விட்ட வேதனை அந்த மக்களை உலுக்கி எடுக்கிறது. தை பிறந்தால் திருமணம்  ஏற்பாடுகள் செய்து வந்த குடும்பத்துக்கு இருந்த நிதி ஆதாரம் முழுவதையும் கஜா கபளீகரம் செய்துவிட விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட குடும்பங்கள் பல.

இந்த இயற்கையின் தாக்குதலில் இருந்து எழுந்து நிற்க இன்னும் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ என்ற மலைப்பு டெல்டா மக்களை புரட்டி எடுக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? என்ற ஏக்கம் அவர்களை வாட்டி வதைக்கிறது. 

இந்த வேதனையும், விரக்தியும் தான் அவர்களை, அரசியல்வாதிகள் உட்பட யாரும் ஊருக்குள்ளேயே வர வேண்டாம் என்று விரட்டும்  மனநிலைக்கு தள்ளியுள்ளது. தண்ணீர் இன்றி, விவசாயம் இன்றி, மாற்று தொழில் இன்றி எப்படியாகினும் விவசாயம் செய்து தீர வேண்டும் என போராடி வந்த விவசாய பெருங்குடி மக்கள், இன்று ஒரே நாளில் இயற்கையின் கோரப்பசிக்கு ஆளாகி தவிக்கிறார்கள். இயற்கைக்கு கூட அவர்கள் மீது கருணை இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ டெல்டா மீண்டும் எழுந்து நிற்க.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close