[X] Close

வானவில் பெண்கள்: ‘இசை’பட வாழும் குடும்பம்!


ladies-work-is-music

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 20:15 pm
  • அ+ அ-

ஓய்.ஆண்டனி செல்வராஜ்

கணினி முன் அமர்ந்தபடி பாடிக்கொண்டிருக்கிறார் விஜயா ஸ்ரீராம். பல்லவியை  முடித்து அவர் நிதானிக்க, கணினிக்குள் இருந்து சரணம் ஒலிக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு ‘ஸ்கைப்’ வழியாக சங்கீதத்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் விஜயா. மாணவியின் பாட்டில் தென்பட்ட சிறு சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்திய பிறகு குருவும் சிஷ்யையும் சேர்ந்து இசைக்கிறார்கள்.

விஜயா ஸ்ரீராமுக்குச் சொந்த ஊர் தென்காசி. இவர், அப்பகுதியில் ‘மெர்சல்’ டாக்டர் என்று அறியப்படும் ஐந்து ரூபாய்க்குச் சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவர் ராமசாமியின் மகள். திருமணமாகி மதுரை பழங்காநத்தம் முத்துப்பட்டியில் தற்போது வசிக்கிறார்.

19 ஆண்டுத் தவம்

குருகுல முறைப்படி கர்னாடக சங்கீதத்தைக் கற்றுத் தேர்ந்தவர். அதில் ‘ஹையர் கிரேடு’ பாஸ் செய்துள்ளார். 

ஆரம்பத்தில் இவருக்குச் சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வரவில்லையாம். 19 ஆண்டுகளாகத் தவமிருந்து கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்டுள்ளார். தற்போது மதுரையில் இசைப்பள்ளி நடத்திவருகிறார். இந்த இசைப்பள்ளியில் 6 முதல் 60 வயதுவரையுள்ள 40 மாணவர்கள் பயில்கின்றனர். தமிழகத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் ‘ஸ்கைப்’ வழியாகவும் இசையைக் கற்றுத்தருகிறார்.

‘‘இசையைப் பயிற்றுவிக்கும் குருவாக நான் இருந்தாலும் இசையைப் பொறுத்தவரையில் நானும் மாணவியே. சங்கீத தாகம் எப்போதுமே தீராது. இசையென்பது பெரிய கடல். அதில் அவ்வளவு சீக்கிரம் கரையைதொட்டுவிட முடியாது” என்று சொல்லும் விஜயா எம்.ஏ., பி.எட்., முடித்திருக்கிறார்.

“ஸ்கூல் டீச்சராக இருக்கறதுல விருப்பமில்லை. இசை மீது ஏற்பட்ட பிரியத்தால் கச்சேரிகளில் பாடினேன்” என்று சொல்லும் விஜயா, அதன் தொடர்ச்சியாக விருப்பமுள்ளவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். தன் கணவர் கொடுத்த ஊக்கத்தால்தான் தன்னால் இசைப்பள்ளியை நடத்த முடிகிறது என்று சொல்லும் விஜயா, தன் மகளையும் இசைக் கடலில் நீந்தவிட்டிருக்கிறார்.

“என்னைவிட என்னோட பொண்ணு, கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் நல்லா பாடுறா. கர்னாடக சங்கீதத்தில் மட்டுமில்லாம இசையின் எல்லா வடிவங்களிலும் சாதிக்க ஆர்வமா இருக்கா. அவளோட யூடியூப் சேனலுக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு’’ என்று மகளைப் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தினார்.

பதினாறு அடி பாயும் மகள்

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதைக் கச்சிதமான இசைத் திறமையால் நிரூபிக்கிறார் மானஸா ஸ்ரீராம். வீணையை மீட்டியபடி இவர் பாடும் பாப் பாடல்கள் தனிரகம்!

பிரபல அமெரிக்கப் பாடகியான கமிலாவின் ‘ஹவானா’ பாடலுக்கு இவர் வெளியிட்ட கவர் வெர்ஷன் யூடியூபில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மதுரை சற்குரு சங்கீத வித்யாலயா இசைக் கல்லூரியில் எம்.ஏ. மியூசிக் படிக்கும் மானஸா, எம்.எல். வசந்தகுமாரியின் மாணவியான வசந்தா  சந்திரசேகரிடம்  இசை பயின்றார்.

வெளி மாநிலங்களிலும் இசைக் கச்சேரிகளில் இவர் பாடுகிறார். கல்லூரியில் படித்தபோது தடகள வீராங்கனையாகவும் ஜொலித்திருக்கிறார்.

‘‘எங்க இசைப் பயணத்தோட முதுகெலும்பு எங்க குடும்பம்தான். அப்பா, தாத்தா, பாட்டி இவங்கதான் என்னோட முதல் ரசிகர்கள். நான் பாடும் பாடல்களை வீடியோ எடுப்பது, அதை எடிட் செய்வது, யூடியூபில் அப்லோடு செய்வது வரை நாங்க குடும்பமாக உட்கார்ந்து வேலை பார்ப்போம்.

மீனாட்சி திருக்கல்யாணத்துக்காக நானும் அம்மாவும் சேர்ந்து பாடிய ‘சித்திரை ஸ்பெஷல்’ பாடல்களை நாங்களே கம்போஸ் செய்தோம். அம்மா எழுதும் கவிதைகளையும்  பாடல்களாக்கி யூடியூப் சேனலில் அப்லோடு செய்வோம்.

ஒரு முறை மிருதங்க வித்வான் சங்கீதக் கலாநிதி திருச்சி சங்கரன் முன் ‘வேணுநாதவ’ என்னும் கன்னட கர்னாடக சங்கீதப் பாடலைப் பாடினேன். பாடலைக் கேட்ட பிறகு என் தலையில் கைவைத்து ‘ரொம்ப பிரமாதம்மா,  இந்த வித்தையை விட்டுறாத, தொடர்ந்து பாடுன்னார்’. அதை என் பாக்கியமா நினைக்கிறேன்’’ என்று சொல்லும் மானஸாவுக்கு அனைத்துவிதமான இசையையும் கற்றுத்தரும் பள்ளியைத் தொடங்குவதே லட்சியமாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close