[X] Close

குரு மகான் தரிசனம் 17 : பூண்டி சுவாமிகள்


guru-mahan-dharisanam-17

பூண்டி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 13 Nov, 2018 14:42 pm
  • அ+ அ-

திருவை குமார்

ஆற்று மணலை இரு கைகளாலும் அள்ளி எடுத்துக் கொண்டு அதை உங்கள் உணவாக சாப்பிட்டுவிட முடியுமா? அதுவும் ஆற, அமர… நிதானித்துச் சாப்பிட்டுவிட்டு உச்சி நேர வெய்யிலில் ஓடும் ஆற்றிலிருந்து இரண்டு குவளை நிறைய நீரைப் பருகுவீர்களா? இந்த இரண்டும் முடித்துக் கொண்டு ஏதோ பெளர்ணமி நிலவில் படுப்பதைப்போல்… அந்தச் சுடுமணலில் மல்லாந்து படுத்து ஆனந்த நித்திரை செய்ய முடியுமா?

கேட்ட மாத்திரத்திலேயே புருவம் நெளிகிறதுதானே அன்பர்களே! இந்த எல்லாவற்றையுமே அன்றாட வாழ்வில்  அனுதினமும் நிகழ்த்திக் காட்டிய ஒரு மாபெரும் மகான் வாழ்ந்து வந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

உலக நியதிக்காக சமாதிநிலைக்குச் சென்று விட்டபோதிலும் இன்றும் கூட அந்தப்பகுதி மக்களை வஞ்சனையின்றி வாழ்த்தி அருளியபடி அரூப நிலையில் இருந்து வருகிறார்  பூண்டி சுவாமிகள்.

இவரது பிறப்பு வரலாறு குறித்து பெரிதாக அறியப்பட முடியவில்லையே தவிர பூண்டி என்ற ஊரிலேயே சுற்றித்திரிந்து கொண்டிருந்த இவரை அனைவருமே சித்த சுவாதீனமற்றவராக இனம் பிரித்து வைத்திருந்தனர். யாரும் இவரை ஒரு மகானாகவே பார்க்கவில்லை.

மகானை மக்களுக்குள் தெரியப்படுத்த விரும்பிய மகேச லீலை தொடங்கியது.

ஒருநாள் குறிப்பிட்ட விவசாயப் பெருமக்கள் பக்கத்து ஊர் அறுவடைக்குச் சென்றுவிட்டு தங்களது ஊரான பூண்டி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுப்படுகை அருகே ஒரு பெரும்புதர் அவர்களது கண்ணில் பட்டது. பசுமை வழிச் சாலையில் அந்த குறிப்பிட்ட புதர் மட்டும் ஏன் தெரிவானேன்? அதுதான் இறைவனின் திருவிளையாடல்.

அந்தப் புற்றின் நடுவே  ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல் மங்கலாகத் தெரிந்தது. ‘ஒருவேளை தெய்வத்திருமேனி ஏதேனும் காலப்போக்கில் புதர்மண்டி போயுள்ளதோ?...’ என்ற சந்தேகத்துடனே இன்னும் சற்று அருகில் நெருங்கினர்.

ஆம்! சந்தேகமில்லைதான். ஏதோ ஒரு சிலைதான் புதர்பட்டுப் போயுள்ளது என்ற தீர்க்கமான முடிவுடன்… அந்த புதரை களையத் தொடங்கினர். கடுமையான முட்புதர் என்பதால் அவர்களது கை-கால்கள் மட்டுமின்றி உடலையும் பதம் பார்த்தது. ஆனாலும் அசராமல் புதரை அகற்றி முடிக்கும் வேளையில் ஆச்சரியத்தில் ‘ஆ’… என்றே கூக்குரலிட்டனர். அது அவர்கள் நினைத்ததுபோல் சிலையல்ல! சாட்சாத் உயிர்ப்புள்ள ஒரு மனிதன் . ஆனாலும் அவர்களது சந்தேகம் என்னவோ, அரிவாள் கடப்பாறை என்று ஆயுதங்களால் அகற்றியபோதே இத்தனை அவதிப்பட வேண்டியிருந்தது.

இவர் உள்ளே போய் தானாக அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. யாரும் உட்கார வைத்திருக்கவும் முடியாது?... பிறகு எப்படி இது சாத்தியம்?

கண்டிப்பாக சாதாரண மனிதன் செய்யும் செயல் அல்ல என்ற திடமான முடிவுக்கு வந்து, அமர்ந்திருந்த நிலையில் உள்ள மனிதரைக் குண்டுக்கட்டாக வெளியே தூக்கி வந்து வைத்து அவரைப்பற்றி விசாரிக்க முற்பட்டனர்.

சுவாசம் சீராகப்போய்க் கொண்டிருந்ததே தவிர தேகமோ மரம் போல் இருந்தது. உதடு பிரியவில்லை. விழிகள் விரியவில்லை. அழைத்து… அழைத்து… சோர்ந்து போனவர்கள் அங்கேயே சற்று நேரம் இளைப்பாறலாம் என்று அமர்ந்தபோது… அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆடாமல் அசங்காமல் அதுவரை அமர்ந்திருந்த அந்த உருவம் எழுந்து ஓட்டமும் நடையுமாக கிளம்பியது.

பதறிபோன விவசாயிகளும் பின்னாலேயே துரத்தினர்.

‘சாமீ! கஞ்சி குடிங்க’

‘சாமீ! சோறு சாப்பிடுங்க’

‘சாமீ தண்ணீ குடிங்க”

ஓட்டமும் நடையுமாய் பின்னாடியே ஓடியபடி வந்தனர். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவரின் ஓட்டம் சடாரென்று நின்றது. யார்… யார் எதெல்லாம் கொடுத்தார்களோ அதையெல்லம் வாங்கி சாப்பிட்டார். பிறகு தனது வலக்கரம் உயர்த்தி அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தபோதுதான்… அந்த கண்களில் தோன்றிய ஒளியையும் முகத்தில் ஏற்பட்ட தேஜஸ்சையும் பார்த்துவிட்டு ‘இவர் சாதாரண மானுடரல்ல’… ‘கடவுள் அவதாரம்’ என்ற உணர்வு மேலிட நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள். எழுந்து பார்த்தால் அவர் அங்கில்லை.

அவர்தான் பூண்டி மகான் சுவாமிகள். இவரை ஆற்று சுவாமிகள் என்றும் அழைத்து மகிழ்ந்தனர்.

ஏனெனில் பெரும்பாலும் கலசப்பாக்கம் ஆற்றங்கரை அருகிலேயேதான் காணப்பட்டதால் அந்த காரணப்பெயர் ஏற்பட்டுள்ளது.  அன்று முதல் சுவாமிகளை அப்பகுதி மக்கள் இனம் கண்டு கொண்டதோடு தங்கள் எல்லா குறைகளையும் அவரின் முன்பாக கொட்டித் தீர்த்தனர்.

அவரோ, புன்முறுவலுடன் கையசைத்துவிட்டு சர சர என்று எழுந்து சென்று ஆற்று மணலில் அமர்ந்து கொள்ளவோ – படுத்துவிடவோ செய்வார். அப்புறம் ஒரு நாளோ ஒரு வாரமோ அப்படியே கட்டை போலவே கிடப்பார். பூச்சிகளும், எறும்புகளும்… இன்னபிற உயிரினங்களும் அவரை மொய்த்தபடி இருக்கும்.

ஆனால் அவரது உடலில் ஒருசிறு அசைவும் தெரியாது. மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் மகானின் நிலையைப் பார்த்து பரிதவித்துப் போய்… அவரின் மீதுள்ள பூச்சி, புழுக்களை, எறும்புகளைத் தட்டி விடுவதும் அவரது பாதங்களைத் தொட்டும் வணங்குவார்கள்.

இந்த நிலையில் திடீரென்று துள்ளி எழுந்து அமர்ந்து கொள்வார்… கூடவே, ‘அடேய்! ஜட்ஜ் கொழ்ந்தே இங்கே வா…’.  ‘ஏண்டா, டாக்டர் இங்கே வா…’ இப்படி செல்லமாக அந்த சிறுவர்களை அழைத்து கைத்தட்டிச் சிரிப்பார். அப்படி  அழைக்கப்பட்டவர்கள் பின்னாட்களில் அவர் சொன்னபடியேதான் உருவானார்கள்.

சிறுவர்கள் அகமகிழ்ந்து போவார்கள்… அடுத்த ஒரு மணி நேரம் களிப்புடன் இருந்துவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விடுவார்.

சரியாக ஒரு தினமாகி மறு தினம் மதிய வேளையில் மணல் தின்னும் பணியைத் தொடங்குவார். அதுவும் பிடிப்பிடியாகத் தின்பார். இந்த காட்சியைக் கண்ணால் கண்டுவிட்ட பக்தர் ஒருவர் – அய்யோ! சாமீ வயிறு நோவும்… என்றால் “இந்தா உனக்கு ஒரு பிடி” என்பாராம்.

சுவாமிகளோ… அந்த நட்டநடு மணற்பரப்பில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருப்பார். அவரது மனதோ எதற்கும் சட்டை செய்யாது. ஆனால் அவரோ ஐந்தாறு சட்டைகளை அணிந்து கொண்டிருப்பார்.

இந்து மதத்தினர் மட்டுமே இவரைப் போற்றிப் புகழவில்லை. முஸ்லீம் அன்பர்கள் அன்புடன் கூழ்வார்த்து தருவார்கள். அதையும் வாங்கிக் குடிப்பார். தன்னை நாடி நோய் என்று சொல்லி வருபவர்களுக்கு அவர் தந்ததெல்லாம் திருநீறும், மூலிகை இலையும்தான். அடுத்தநாள் நோய் ஓடிப்போயிருக்கும்.

ஒருமுறை அவர் தங்கியிருந்த கிராமத்தில் பருவமழை பொய்த்துப்போய் வறண்ட நிலை தலைவிரித்தாடியது. கிராம மக்கள், இவரிடம் விஷயத்தைச் சொல்லி மழை வரச்சொல்ல வைக்கலாம் என்ற எண்ணத்துடன் ‘முன்சீப்’ முன்பு சொல்ல அவரோ நகைத்து நின்றாராம்.

இவராவது… மழையைக் கொண்டுவருவதாவது?... என்ற ஒரு நக்கல்… அன்றைய இரவு நடுநிசி! முன்சீப் ஆழ் உறக்கத்தில் இருந்தபோது யாரோ தன்னை தட்டி எழுப்பியதுபோல் இருக்கவே, எழுந்து பார்த்தால் மஞ்சள் நிறத்தில் ஒளிவட்டமுடன் பூண்டி சுவாமிகள் அவர் எதிரே நின்றிருக்க, முன்சீப்பிற்கு வியர்த்துப் போனது.

“என்னப்பா முனுசீப்பு, இவனாவது சித்தனாவது? இவனாவது மழை தருவதாவது? என்றுதானே உன் நெனப்பு…” என்று கேட்கவும், “அய்யய்யோ!  சுவாமீ அப்படியெல்லாம் இல்லை. உங்களை நம்பறேன், மதிக்கிறேன்…” என்றார்.

“என்னங்க முனுசீப்பு… பெரும் வார்த்தை பேசறே? ஒரு செயல் செய்து முடிக்கப்படாதபோது எவன்தான் நம்புவான். நீ இப்போ வாசல்ல போ… போய்ப்பார்?”… என்றார்.

முன்சீப் ஓட்டமும் நடையுமாக வாசலுக்குச் சென்றால் வானம் வெளுத்து வாங்கத் தொடங்கியிருந்தது.  திரும்பி உள்ளே வந்தால் மகான் மாயமாகி இருந்தார்.

அன்று இரவு தொடங்கிய மழை மறுநாள் வரை ஊற்றித் தீர்க்க… கிராமத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிந்தன.

முன்சீப் கிராம மக்களிடம் முன்னிரவு நடந்ததை சொல்லி உணர்ச்சிவசப்பட, உடனடியாக மகானைத் தேடி ஓடினார். ஆனால் எங்கேயும் அவர் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு சிறுவன்தான் சொன்னான் “அதப்பாருங்க அந்த மண்ணு மேடு, அதுலதான் போனாரு”…

அடுத்த நிமிடம் மணல் மேடு அகற்றப்பட உள்ளே மகான் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

திடீரென விழித்திறந்து ‘போதுமா மழை’… என்றார்.  மக்கள் உணர்ச்சி மேலிட விழுந்து வணங்கினர். அப்போது சில பொன்மொழிகளை அவர் அருளிச்சென்றார்.

பணம் எட்டாத உயரமோ, பாயாத பாதாளமோ இல்லைதான். ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்காது.

தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் நலம் தந்தருளிய நமது சுவாமிகள்… ஜீவமுக்தி அடைந்து இன்றும் பக்தர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிறார். நீங்களும் சுவாமிகளை வழிபடுங்கள். வளம்பெறுவீர்கள்.

- தரிசனம் தொடரும்

 

  •  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close