[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 30 - ரத்தக்களறி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 02 Nov, 2018 12:35 pm
  • அ+ அ-

”நான் எழுதினது எங்க” என்று கேட்ட கானா பாபுவின் குரலில் நட்பில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

“அதான் அன்னைக்கே சொன்னேனில்ல அண்ணே.. இன்னும் கொஞ்சம் சர்காஸ்டிக்கா இருந்தா நல்லாருக்கும்னு. நீங்க அனுப்பலை.. சரினு நானும் என் உதவி இயக்குனரும் சேர்ந்து எழுதினோம்” என்றான் ஸ்ரீதர். கையில் கொடுத்திருந்த பாடல் வரிகள் பேப்பரை ஒரு முறை மேலும் கீழுமாய் பார்த்தார். 

படித்தது போல தெரியவில்லை.

“நீங்களே எழுதிட்டீங்க?”

“ஆமாம்ணே”

“அப்படியே நீங்களே பாடிற வேண்டியதுதானே?” என்றார் நக்கல் குரலில்.

புரிந்தாலும், சட்டென கோபம் வந்தாலும் சற்றே அடக்கிக் கொண்டான் ஸ்ரீதர். ”அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களேண்ணே” என்றான்.

“இல்லைப்பா.. நீங்களே எழுத சொல்றீங்கோ.. நீங்களே வேணாங்குறீங்கோ.. அது போல நீங்களே பாடிருவீங்களோனு நினைச்சேன்” என்று சொல்லிவிட்டு, பக்கங்களை மேலும் கீழும் ஒரு முறை படித்தார். 

கையில் இருந்த பேப்பரை தன் தொடைகளின் மேல் தட்டி.. “இது நமக்கு சரிப்பட்டு வராது டைரக்டர்” என்று ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு “நான் வர்றேன்” என்று கிளம்ப இசையமைப்பாளர். கொஞ்சம் ஆடித்தான் போனான்.

“சார்.. சார்.. இருங்க.. உங்களூக்கு பிடிக்கலைன்னா.. லைன்ஸ்ல மாத்திக்கலாம்” என்று கெஞ்சாத குறையாய் பேசினான்.

“இல்லை இசை. உனுக்கு முத பாட்டுனுதான் ஆர்வமா வந்தேன். இது சரிப்பட்டு வராது”

“எது சரிப்பட்டு வராதுண்ணே..?

பதில் சொல்லாமல் ஸ்ரீதரை நிமிர்ந்து பார்த்தார் பாபு. இசையமைப்பாளருக்கு கண்கள் பயத்தில் விரிந்தது. “இருங்க சார்.. நான் பேசுறேன்”

“இல்லை வேணாம் சார். அண்ணே.. மொதல்ல உங்களை பாடத்தான் பிக்ஸ் பண்ணோம். நீங்க கொஞ்சம் சர்காஸ்டிக்கா அரசியல் பேசுறீங்களேன்னு தான் எழுதச் சொன்னோம். ஆஸ் எ டைரக்டர் உங்க பாட்டை நாங்க பயன்படுத்துறதா இல்லையான்னு நான் தான் டிசைட் பண்ணனும்.

மாத்தி தரச் சொன்னேன் இதுவரைக்கும் உங்க கிட்டேர்ந்து வரலை. சோ.. நாங்க எழுதுனோம். அது ஒரு தப்புமில்லை. அத மீறி நீங்க பாடாம போறது அவ்வளவு சரியில்லை” என படபடவென ஸ்ரீதர் பேசியதைப் பார்த்து, அவனையே பார்த்துக் கொண்டிருந்த பாபு

“பேசிட்டியா. ஆமாம் நான் கரெக்ட் பண்ணித் தரலை. நான் பிஸி. நீ தான் கேட்கணும். பாட்டு வரிகள் அரசுக்கு எதிரா இருக்கு. நான் பாட மாட்டேன். நீ அதை மாத்திக் கொண்டு வா.. பாடுறேன்.”

“இல்லேண்ணே.. இதான் பாட்டு நீங்க பாடுறதா இருந்தா பாடுங்க”

“முடியாது டைரக்டர். இன்னைக்கு ரெக்கார்டிங் கேன்சல். நான் வர்றேன்”

”அதை சொல்லுறதுக்கு நீங்க யாரு. காசி. மேனேஜர் கிட்ட சாருக்கு கன்வேயன்ஸ் எவ்வளவுன்னு கேட்டு கொடுத்து அனுப்பு.”  இசையமைப்பாளரிடம் தன் மொபைலிலிருந்து ஒரு வீடியோவைக் காட்டி. “இவரை எங்க இருந்தாலும் பிடிங்க இன்னைக்கே இப்பவே ரெக்கார்டிங். யார் நிறுத்துறாங்கன்னு பாக்குறேன்” என்று சத்தமாய் சொல்ல, கானாபாபு கோபத்துடன் புறப்பட்டார்.

அடுத்த நிமிடங்கள் பரபரவென இருந்தது ஸ்டுடியோவில். இண்டிபெண்டண்ட மீயூசிக் வீடியோவில் பாடிய தாஸு குமார் நம்பர் தேடி எடுக்கப்பட்டு, கூப்பிடப்பட,

“தாஸு.. நான் டைரக்டர் ஸ்ரீதர். எனக்கு ஒரு பாட்டு உடனடியாய் ரெக்கார்டிங் போகணும் எங்க இருக்கீங்க?”

“வடபழனியிலதான் சார்.”

“உடனடியா கே.கே.நகர் வாங்க” என்று அட்ரஸை வாட்ட்ஸாப் செய்து காத்திருந்த பதினைந்து நிமிடங்களில் தாஸு குமார் ஸ்டூடியோவிலிருந்தான். அதன் பிறகு நடந்ததெல்லாம் மேஜிக். ரெண்டே மணி நேரத்தில் பாடல் பதிவு நடந்து முடிந்தது. இங்கு நடந்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அல்லக்கை மேனேஜர் சுரேந்தருக்கு தகவல் அனுப்பியபடி இருந்தான்.

************************

ஹாலில் எல்லோரும் உட்கார்ந்திருக்க, ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடலை தன்னுடய ஜேபிஎல் ஸ்பீக்கரில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தான் இசையமைப்பாளன்.

ராவான தாஸு குமார் குரலில் பாடப்பட்ட எம்.ஆர்.ராதா டைப் சர்காஸம் மெல்ல அனைவர் மனதினுள் புகுந்து லேசான சிரிப்பை அவரவர் முகத்தில் வெளிப்படுத்த ஆரம்பிக்க, சுரேந்தர் பாட்டைக் கேட்பதை விட மற்றவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் கடுகடுவென இருந்தவர்களின் முகம் சிரிப்பதை பார்த்தவர் மெல்ல இலகுவாக, பாடல் முடிந்த மாத்திரத்தில் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து “இன்னொரு வாட்டி போடுங்க. செம்ம கலாய்” என்று சந்தோஷத்தில்  சுரேந்தரின் கை பிடித்து குலுக்கி, “இது வரைக்கும் நாம எடுத்த படத்துல இதான் ஆரம்பமே செம்ம ஜோரா இருக்கு” என்றது குறித்து சந்தோஷப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? என்று புரியாமல் ஸ்ரீதரைப் பார்க்க, ஸ்ரீதர் க்ளவுட் நைனில் இருந்தான்.

அது அவனுக்கு பின்னாளில் ஆப்பு வைக்கப் போவதை உணராமல்

************************

ராமராஜின் படத்து நாயகியின் படம் முக்கிய பத்திரிக்கையில் வெளியானது குறித்து திருப்பூர் மணிக்கு பெருமை தாங்கவில்லை.

“இத்தன வருஷமா இவங்க பத்திரிக்கையில எது வந்தாலும் அதான் தரம்னு நம்பிட்டிருந்தவன் நான். அவங்க பத்திரிக்கையில நம்ம படத்தோட ஹீரோயின் போட்டோ.. ரொம்ப சந்தோஷம் ராமராஜ் சார். ரொம்ப சந்தோஷம்” என்று தன் பாக்கெட்டில் கைவிட்டவர் அதில் பணம்மில்லாமல் பக்கத்திலிருந்த ரவியிடம் “டேய்.. ஒரு பத்தாயிரம் எடுத்து சார் கிட்ட கொடு” என்றார்.

“சார்.. அதெல்லாம் வேண்டாம் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய நல்லபடியா படத்த ஆரம்பிப்போம்”. என்றவரை, தடுத்து. “இதப்பாருங்க ராமராஜ். அதெல்லாம் எல்லாம் நல்லபடியாய் நடக்கும். இன்னைக்கு இந்த போட்டோ பத்திரிக்கையில வந்ததுக்கு நானா காரணம். நீங்க.. உங்க மேல அவங்க வச்சிருக்கிற மரியாதை. நான் சந்தோஷமாயிருக்கேன் என் சாய்” என்ற அடுத்த சில நிமிடங்களில் ஆலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாணி, சரக்கு என்று வழிந்தோடியது.

ராமும், நித்யாவையும் காரில் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். அலுவலகத்தில் கொண்டாட்டம் அவர்களுக்கும் தொற்றிக் கொள்ள . ராம் கையில் ஒரு கோக்கை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த கொண்டாட்டத்திற்கான காரணமே நித்யாவின் போட்டோதான் என்பதால் அவள் செண்டராப் அட்ராக்‌ஷனாய் இருப்பது குறித்து ராமுக்கு நிஜமாகவே கொஞ்சம் துணுக்கெனத்தான் இருந்தது.  இதுக்கெல்லாம் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? என்று கூட தோன்றியது கூட்டத்தில் தனித்து இருந்த ராமை பார்த்த ரவி “கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க இல்லை “என்று போதையாய் குழறலோடு ராமிடம் காது கடிக்க, என்ன சொல்வது என்று தெரியாமல் மையமாய் அவனை பார்த்தான் ராம்.

அவனிடமிருந்து எந்தவிதமான ரியாக்‌ஷனும் இல்லாத்தால் அங்கிருந்து நகர்ந்த ரவி பாடலைப் போட்டு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த நித்யா, மற்றும் உதவி இயக்குனர்கள் மத்தியில் மெல்ல சென்றான். அவனும் கூட ஆட ஆரம்பித்தான். நித்யா ஹாலின் செண்டரில் போய் நின்று மயக்கமாய் ஒர் புன்னகை பூத்து ரிலாக்ஸ்டாய் கைகளை மேலே தூக்கி சோம்ப முறிப்பது போல கார்ஜியஸாய் போஸ் கொடுக்க, ரவி இரண்டு கைகளை விரித்து அவளை கட்டி அணைத்தான்.

அதிர்ந்து போன அனைவரும் ஒரு கணம் சட்டென விதிர்த்துப் போய் நிற்க, அவனை தரையில் தள்ளிவிட்டாள் நித்யா.  இவையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருர்ந்த ராமுக்கு என்ன செய்வது என்று புரியாமல் நித்யாவின் பின் போய் நிற்க, திருப்பூர் மணி அவ்வளவு கோவப்பட்டு பார்த்தேயில்லை. விறுவிறுவென எழுந்து வந்தவர். கீழே வீழ்ந்திருந்த ரவியை தன் காலால் எத்தித் தள்ளினார். திரும்பத் திரும்ப எத்த, போதையில் வலி தெரியாமல் “என்னையா அடிக்கிறே? என்னையா அடிக்கிறே?” என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான் ரவி.

நடந்த களேபரங்கள் அத்தனையும் பார்த்து மிரண்டிருந்த ராமராஜ் நிலைக்கு வரவே சில நிமிடங்கள் பிடித்தது. தடக்கென எழுந்து திருப்பூர் மணியின் காலை கட்டி பிடித்து ரவியை அடிக்க விடாமல் செய்ய மணி போதையிலும், கோபத்திலும் இருக்க, தன் கால் இழுக்கபடுவதை புரியாமல் ராமராஜோடு தன்காலை இழுத்து ரவியை எத்த ஓங்கி,பேலன்ஸ் போய் மடேரென மல்லாக்க விழுந்தார்.  விழுந்த வேகத்தில் அவரது தலை தரையில் பட்டு எழும்பி “தட்’ என  சத்தத்தோடு மயங்கி விழ, தரையெங்கும் ரத்தம் பரவ ஆரம்பித்தது.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 29 - https://bit.ly/2yKX2aY

பகுதி 28 - https://bit.ly/2OPlGB3

பகுதி 27 - https://bit.ly/2yLqYTs

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close