[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 29 - முரண்


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 26 Oct, 2018 11:38 am
  • அ+ அ-

”ஒரு ஷாட் கூட நடிக்கவில்லை” என்கிற மெசேஜைப் பார்த்து என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நித்யா இருந்தாள். தன்னுடய போட்டோ ஷூட்டை பற்றி சொல்லி அவனை வெறுப்பேற்றி விட்டோமோ என்று கூட யோசித்தாள். பட் இது அவனாய் எடுத்துக் கொண்ட முடிவு அதை அவன் எதிர் கொண்டு தான் ஆக வேண்டுமென்று புரிந்தது.

“விடு ராம் நிச்சயம் எல்லாம் சரியாயிரும். இளையராஜாவோட மொத சாங் ரிக்கார்டிங் போதும் கரண்ட் கட் ஆயிருச்சாம். எத்தன நாள் நீ இல்லாமல் ஷூட் போகும்? ” என்று மெசேஜ் அனுப்பினாள். அவனிடமிருந்து பதில் வரவில்லை.  

ஆனால் அவள் சொன்ன நேரமோ, என்னவோ.. ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொன்விழாவுக்காக அனைத்து கலைஞர்களின்  விழா இருப்பதால் நான்கு நாட்கள் படப்பிடிப்பு ரத்து என்ற அறிவிப்பு வர, நடுவே ஒரு ஞாயிறும், இன்னொரு டபுள் கால்ஷீட் நாளும் வர, வேறு வழியில்லாமல் சுமார் ஒரு வாரம் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது ஒர் பெரிய வருத்தம். 

ஆனால் அதே நேரத்தில் பிரபல வார இதழில் வெளியான நித்யா படம் பேசப்பட்டது  . ராமராஜ் சாரின் அலுவலகத்தில் தான் பார்க்கிறான். பொதுவான பேச்சுக்களை மீறி ஏதுமில்லாமல் கிளம்பிவிடுகிறான். அட்லீஸ்ட் இந்த அட்டைப் படத்துக்காக பேசுவான் என்று எதிர்பார்த்தாள். 

போனுக்கு பதிலில்லை. 

எப்படியும் ராமராஜ் அலுவலகத்துக்கு வருவான் என்று தெரியுமாதலால், பத்ரிக்கு போன் செய்து ராம் வந்திருக்கிறானா என்று விசாரித்துவிட்டு, நேரே போய் அவனைப் பார்த்து நாடகமாய் “ஹாய் “ என்றாள்.

அவளின் வருகையை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளின் “ஹாயிலும்’ சிநேகமில்லை என்று புரிந்தது. ஏதும் பதில் பேசாமல் போனால் நிச்சயம் பப்ளிக்காய் சண்டைக்கு இழுக்க தயாராக இருக்கிறாள் என்று புரிந்த காரணத்தினால் சிரித்தபடி பதிலுக்கு ‘ஹாய்’என்றான். 

”சார்.. நான் இவரோட கொஞ்சம் பேசணும்” என்று அங்கிருந்த ராமராஜிடம் சொல்லிவிட்டு, ராமின் கை பிடித்து தரதரவென பக்கத்து அறைக்கு அழைத்து சென்றாள். 

“உன்கிட்டேயிருந்து நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணலை. நீ சொல்லித்தான் அதுவும் நீ நடிக்கிறேங்கிறதுக்காக நான் நடிக்க ஒத்துக்கிட்டேனு தெரியுமில்லை.”

ராம் வேகமாய் தலையசைத்தான். 

“பின்ன எதுக்கு ஒரு கமெண்ட் கூட சொல்லலை? ஆர் யூ ஃபீலீங் ஜெலஸ்?”

ராம் பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான். 

“நான் வேணா நடிக்கலைன்னு சொல்லிரவா?.”

ராம் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

“நான் ஏன் உனக்காக நடிக்கலைன்னு சொல்லணும்?. பார்ட்னரோட சக்ஸஸை கொண்டாட முடியாதவனுக்காக எதுக்கு நான் இழக்கணும்?”

அவளின் பேச்சில் இருக்கும் கோபம் புரிந்து அமைதியாய் இருந்தான். 

”பதில் சொல்லப் போறியா? இல்லையா?”

ராம் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவனிடமிருந்து விலக நினைத்தவள் அவனின் அணைப்பில் இருந்த நெருக்கம் உணர்ந்து அப்படியே இருந்தாள்.

“ஐயம் சாரி. செம்மையா இருந்தே. அவ்வளவு பெரிய மேகசின்ல அட்டைப் படம் சாதாரண விஷயமா?.கார்ஜியஸ்.. சட்டுனு பார்த்தவுடனே இவ்வளவு அழகானவளா நம்மாளுன்னு கொஞ்சம் கர்வமாக்கூட இருந்துச்சு. பட்.. எதையும் கொண்டாடுடற மனநிலையில நான் இல்லை நித்து. 

ஸ்ரீதரோட அவமதிப்பு. இந்த ஷூட்டிங் கேன்சலேஷன் எல்லாம் பெரிய இடைவெளிய கொடுக்கப் போவுதுன்னு மனசுல சொல்லிட்டேயிருக்கு. ஷுட் நடந்து முடிஞ்சு மூணு நாள் ஆச்சு. அவங்க ஆபீஸுலேந்து ஒரு கம்யூனிகேஷன் இல்லை. பட் அவனால என்னை அந்தப் படத்துலேர்ந்து தூக்க முடியாதபடி பண்ணிட்டேன்” என்ற ராமின் குரலில் இருந்த ஆதங்கத்தையும், கோபத்தையும், நித்யாவினால் புரிந்து  கொள்ள முடிந்தது. 

அவனிடமிருந்து விலகி, கைபிடித்தபடி “ த பாரு ராம். இது நீயா செய்த முடிவு. பேஸ்பண்ணித்தான் ஆகணும். அதுக்காக ஸ்ரீதரோட விரோதம் பண்ணிக்கிட்டா. அது நிச்சயம் படத்துக்கு நல்லதில்லை. இத்தனை மன உளைச்சலோட ஒரு ப்ராஜெக்ட், அதுவும் மொத ப்ராஜெக்ட் நிச்சயம் தப்பாயிரும். அவன் மேல தப்பு இல்லை. அதனால கோபப்படுறான். நீதான் உன் நிலைமைய புரிய வைக்கணும். பேசு கன்வின்ஸ் பண்ணு. அவனுக்கு புரியும். அவன் திறமையானவன். பட் ஈகோயிஸ்டிக் எப்பவும் அதை டச் பண்ணாத.. நீ எனக்கு பண்றா மாதிரி.” என்றாள்.

கடைசி வார்த்தையில் இருந்த அழுத்தம் புரிந்து ராம் அவளை மீண்டும் இறுக்கி அணைத்து “சாரி” என்றான்.

************************

ஷூட் ஆரம்பித்து ஒரே நாளில் ப்ரேக் என்பது நல்ல விஷயம் அல்ல.’இது போல ஒரு ப்ரோக்ராம் இருக்குன்னு ஒரு டைரக்டருக்கு தெரிய வேணாமா?” என்று அல்லக்கைகள் சுரேந்தரிடம் ஏற்றிவிட்ட காரணத்தினால் சுரேந்தர் ஸ்ரீதர் மேல் கொஞ்சம் கடுப்பில் தான் இருந்தார். 

ஆனால் மேனேஜரில் ஆரம்பித்து அனைவருமே சுரேந்தரின் தடாலடி பேச்சுக்கு பயந்து அவர் சொன்ன தேதியிலேயே ஷுட் வைத்துக் கொள்ள ஓகே சொல்லியிருந்தனர். அத்தோடு இப்படி நாலைந்து நாள் விடுமுறை வராது என்று நினைத்த காரணத்தினால் முன்னமே சொல்ல முடியவில்லை என்று பதிலையெல்லாம் விட,  முக்கியமாய் நீங்க செலக்ட் பண்ண தேதியை மாத்துறதுல எனக்கு பெரிய இஷ்டமில்லை என்ற ஸ்ரீதரின் பதில் மிகவும் பிடித்த காரணத்தினால் சுரேந்தர் சமாதானமடைந்திருந்தார்.

வின்செண்ட் ஒளிப்பதிவாளர் சங்க வேலையிருப்பதால் வர இயலாது என்று சொல்லியிருந்தான். பத்து நாட்களுக்கான ஷெட்யூல் ஏற்கனவே போடப்பட்டிருந்ததினால், கொஞ்சம் பரபரப்பு குறைவாய்த்தான் இருந்தது.  இசையமைப்பாளரிடமிருந்து ரெண்டு ட்யூன்கள் வந்திருந்தது. அவ்வளவாய் திருப்தி இல்லை. அடுத்த ரெண்டு நாட்களில் அவனோடு உட்கார்ந்து நான்கு ட்யூன்களை ஓக்கே செய்தான். 

டைட்டில் பாடல் மட்டும் இன்னும் சரியாய் பிடிபடவில்லை. கானா ஸ்டைலில் ஒரு வெஸ்டர்ன் க்ளாஸிக்கல் அரசியல் நய்யாண்டி என்று முடிவெடுத்த பிறகு அதற்கான ட்யூனை செலக்ட் செய்ய கஷ்டப்பட்டாலும் சரியான பாடலாசிரியர் செட்டாகவில்லை. 

ஸ்ரீதரின் நெருங்கிய நண்பன் முத்துதான் நான்கு பாடலில் ரெண்டு பாடல் எழுதியிருந்தார். இந்த பாடலின் சிட்சுவேஷனை சொன்ன போது கானாவுல வெஸ்டர் க்ளாஸிக்கல். அதிலேயும் அரசியலா? என்று யோசித்து “அது சரி வராது ஸ்ரீ’என்றார். 

ஏனோ ஸ்ரீதருக்கு அவரை அதற்கு மேல் அழுத்தி சொல்லி எழுத தோன்றவில்லை.பிரபல கானா பாடகரான கானா பாபுவை சந்தித்து சிட்சுவேஷனை சொன்னான்.  உடனடியாய் நான்கைந்து வரிகளைச் சொல்ல, அதை தொடர்ந்து அவரையே பாடல் எழுதி பாட வைக்க ஓகே சொன்னான். ரெண்டு நாளில் பாடலை அனுப்பச் சொன்னான்.

இதன் நடுவில் ஒரு நாள் ஷுட்டை எடிட் செய்து பார்த்து விடலாம் என்று எடிட்டரை அழைத்தான். விஷுவலாய் நன்றாக வந்திருந்தது. ஆர்டர் செய்து ரெண்டு மூன்று கரெக்‌ஷன்கள் சொல்லி, இனி ஆன்லைன் எடிட்டர் ஒருத்தர அனுப்பிருங்க.. என்று சொல்லிக் கிளம்பிய போது, எடிட்டர் கொஞ்சம் தயக்கமாய் “சார்.. ஒரு சின்ன விண்ணப்பம்.” என்று இழுத்தான்.

“என்ன ?”

“எடிட்டுக்கு நானும் வருவேன். நான் ஓகே பண்ணவுடன் அவுட் எடுங்கன்னு வின்செண்ட் சொல்லி விட்டிருக்காரு. அவரப் பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும். கொஞ்சம் விட்டீங்கன்னா ஓவரா டாமினேட்  பண்ணுவாரு. பைனல் அவர் கிட்ட காட்டுறது ஓகே.. நான் யாராச்சும் ஒருத்தர் கண்ட்ரோல்ல இருந்தா நல்லாருக்கும்னு தோணுது” என்றார்.

ஒரு நிமிடம் அவரையே உற்றுப் பார்த்தான் ஸ்ரீதர். “என் கிட்ட வேலை கேட்கும் போது அவர் பேர் சொல்லி அவர் கிட்ட வேலை செய்திருக்கேன்னு சொல்லித்தான் வேலை கேட்டீங்க.. இப்ப அவர வேணாம்னு சொல்றீங்க? எப்படி எடுத்துக்கிறதுன்னு தெரியலை.. பட். நான் பாத்துக்குறேன். அவர் ஏதாச்சும் சொன்னா நான் தான் சொன்னேன்னு சொல்லிருங்க” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருந்த காசியிடம் “என்ன இப்படி?” என்பது போல பார்த்தான். 

ஸ்ரீதரின் போன் அடித்தது.  

கானா பாபு.”பாட்டு அனுப்பியிருக்கேன். பாருங்க எப்ப ரிக்கார்டிங் வச்சிக்கலாம்னு சொல்லுங்க” என்றார்.

அவசர அவசரமாய் மொபைலில் மெயில் ஓப்பன் செய்து பார்த்தான் சவசவ என்று இருந்தது.  போன் செய்து “அண்ணே.. இன்னும் கொஞ்சம் வேற மாதிரி காட்டா வேண்டும்ணே..” என்றான். 

”எப்படி இன்னும் காட்டானா?” என்ற அவரின் குரலில் லேசாய் கிண்டல் இருந்தது. 

“நான் ஒரு சாம்பிள் அனுப்புறேன்ணே..” என்று சொல்லிவிட்டு, அலுவலகத்துக்கு வந்தான். லேப்டாப்பில் அந்த ட்யுனை கேட்டு கொண்டிருந்த கார்க்கி நான்கைந்து வரிகள் எழுதி வைத்திருந்ததை காட்டினான். 

‘அட” என சொல்லும் அளவிற்கு இருக்க, அவனுடன் ஒவ்வொரு வரியாய் உட்கார்ந்து வரிகளோடு கொஞ்சம் நகாசு வேலை செய்து இம்ப்ரூவ் செய்தான். பாடல் வரிகள் நெத்தில அடிக்கிறாப்போல வந்திருக்கு” என்று சந்தோஷித்தான். 

இசையமைப்பாளருக்கும் பாடல் அனுப்பி, ஓகே வாங்கி அன்றைக்கு மாலையே ரிக்கார்டிங் வச்சிக்கலாம் என்று சொல்ல, கானா பாபுவுக்கு அழைத்து ப்ரோக்ராம் சொல்லச் சொன்னான்.  ரிக்கார்டிங் அறைக்கு வந்த பாபுவிடம் பாடல் வரிகள் கொண்ட பேப்பரை கொடுக்க, “நான் எழுதினது எங்க?” என்று கேட்டார். அவரின் தொனி சரியில்லை என்பதை உணர்ந்தான் ஸ்ரீதர். 

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 28 - https://bit.ly/2OPlGB3

பகுதி 27 - https://bit.ly/2yLqYTs

பகுதி 26 - https://bit.ly/2Cg0cpD

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close