[X] Close

ஆண் நன்று பெண் இனிது 30: முடிவே இல்லாத கதைகள்!


aan-nandru-pen-inidhu-30-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 23 Sep, 2018 14:22 pm
  • அ+ அ-

நான் ஏழாவதும் என் அக்கா ஜெயா எட்டாவதும் படித்துக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு தொலைக்காட்சி வந்திராத காலம். ரேடியோ கேட்பதிலும் பெரிய விருப்பம் இருந்ததில்லை. எங்களது ஆர்வமெல்லாம் புத்தகங்கள் மீதுதான். சிறுவர்கள் வாசிக்கும் சித்திரக்கதைகளை விட்டு நகர்ந்து அப்போதுதான் சற்று பெரிய புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கத் தொடங்கியிருந்தோம். படிக்கும்போது எங்களுக்கு வரும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஒருவருக்கொருவர் பேசித் தெளிவு படுத்திக்கொள்வது வழக்கம். சிலசமயங்களில் அது பெரிய விவாதமாகி அண்ணனோ அப்பாவோ தலையிட்டு தீர்ப்புச் சொல்ல வேண்டியதும் வரும்.

அப்படி வாசித்த கதையொன்றில் அறிவியல் ஆராய்ச்சியாளர்தான் முதன்மைப் பாத்திரம். அக்கதையின் தலைப்போ எழுதிய ஆசிரியரின் பெயரோ இப்போது நினைவில் இல்லை. நீண்ட ஆராய்ச்சிக்குப்பிறகு அந்த மனிதர் ஒரு ரகசிய மருந்தைக் கண்டுபிடித்திருப்பார். ‘மனிதர்களின் ஒவ்வொரு உணர்வையும் தூண்டுவதற்கு அவர்கள் உடலில் ஒவ்வொரு நரம்பு செயல்படும். அந்த ரகசிய மருந்தினைப் பயன்படுத்தி ஒரு மனிதன் சிரிப்பதற்குக் காரணமான நரம்பின் செயல்பாட்டினை முடக்கிவிட்டால் அதன்பிறகு அவனுக்கு வாழ்நாள் முழுவதும் சிரிப்பே வராது’ என்று அந்தக் கதை போகும்.

அதை வாசித்த என் அக்கா,’நம்ம அம்மாவுக்கு அந்த மருந்தைக் கொடுத்து கோபம் வரச் செய்கிற அந்த நரம்பைச் செயல்படாம ஆக்கிடலாம்ல ஜோதி! ஏன்தான் அப்பாகிட்ட எப்பப்பாத்தாலும் அம்மா கோபப்படுறாங்களோ?’என்று சொன்னாள். அதற்கு நான்,’அப்படின்னா நம்ம அப்பாவுக்கு அந்த நரம்பு செயல்படவே இல்லையோ, அம்மா எவ்வளோ கோபப்பட்டாலும் எதிர்த்துப் பேசாமல் பொறுத்துப்போகிறார். பாக்கவே பாவமா இருக்கு’ என்று சொன்னேன். ‘நாம பெரிய பிள்ளையா வளந்த பிறகும் அம்மா இப்படி அப்பாகிட்ட கோவிச்சுகிட்டாங்கன்னா, வேற எதுக்காவது ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டுப் போறதுபோல சொல்லி கோபத்துக்கான நரம்பை மட்டும் செயலிழக்கச்

செய்திடணும்’ என்று அக்கா சொன்னாள். ‘சரிதான்’ என்று நானும் ஒத்துக்கொண்டேன்.

அரசுப்பணியிலிருந்து அப்பா ஓய்வு பெற்ற சில வருடங்களில் அவர் சுபாவம் மாறிவிட்டது. எதற்கென்றே தெரியாமல் எல்லோரிடமும் எரிந்து விழத்தொடங்கினார். அதற்கு நேர்மாறாக அந்நாட்களில் அம்மா பொறுமையாக நடந்து கொண்டார். அம்மாவின் இயல்பு என்று நாங்கள் நம்பியிருந்த அவருடைய கோபம் அப்பாவின் மறைவிற்குப் பிறகு அம்மாவிடம் தென்படவேயில்லை.

அப்பா இல்லாமல் அம்மா மட்டும் தனியாக வாழ்ந்த காலத்தில் எங்களிடம் கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்திலும்கூட நிதானமாகக் கடந்துவிடுகிற அம்மாவை நான் வேறு யாரோபோல உணர்ந்திருக்கிறேன்.

அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே அடிக்கடி பிணக்கு வந்ததற்கான காரணங்கள் எதையும் நான் புரிந்து கொண்டதில்லை. ஆனால் ‘ஏன் இந்த அம்மா இப்படி நடந்து கொள்கிறார், இந்த அப்பா ஏன் இவ்வளோ பொறுமையாக இருக்கிறார்’ என்று அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். ஆனால் அம்மா கோபப்பட்ட காலங்களில் அவர் நிதானமாக இருந்தது என் மனதில் பதிந்திருக்கிறது. அதனைப்போலவே அப்பா எரிச்சல்பட்டு நடந்து கொண்ட காலங்களில் அம்மா எதுவுமே சொல்லாமல் கடந்து விட்டதும் இன்றைக்கும் என் நினைவிலிருந்து அகலவேயில்லை.

சற்றேறக்குறைய முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்தலைவியாகவும், வளர்ந்துவிட்ட இரு பிள்ளைகளுக்குத் தாயாகவும் நிற்கையில் இப்போது அப்பாவையும் அம்மாவையும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. என் முன்பாக கனத்துத் தொங்கிய ஒரு பெரிய திரை இப்போது விலகுவதுபோல இருக்கிறது.

மனித நாகரீகத்தின் தொடத்திலிருந்தே ஆணும் பெண்ணும் சேர்ந்துவாழ்வது என்கிற ஏற்பாடு தொடங்கிவிட்டது. இது வெறும் உடல் சார்ந்த நாட்டம் மாத்திரம் அன்று, உள்ளம் சார்ந்த பிணைப்பும்கூடத்தான் என்பதால் குடும்பம் என்கிற அமைப்பு உருவாகி நிலைப்பெற்றுவிட்டது. காலத்தையொட்டி அதில்

உடைவுகளும் மீறல்களும் நெகிழ்வுகளும் ஏற்பட்டு வந்தாலும் இதைத்தாண்டி வேறொரு இணக்கமான அமைப்பு இன்னும் தோன்றவில்லை. அதனால்தான் ஆணும் பெண்ணும் கணவன்மனைவியாகவோ, நண்பர்களாகவோ இன்னமும் சேர்ந்து வாழ்கிறார்கள்.

தன் சுயத்தை மதிக்கத் தெரிந்தவர்கள்தான் தன்னையே நேசிக்கிறவர்களாகவும், தன்னைச் சார்ந்த மனிதர்களை தாங்கிக்கொள்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் நெகிழ்வான ஒரு தருணத்தில் மனம் கலைந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது அதை அந்த அலைவரிசையிலேயே புரிந்துகொள்ள ஏதுவாக இன்னொரு மனதை தேடுகிறார்கள். அது ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாக அமைந்திருப்பது சாலவும் நன்று. அதனால்தான் ‘ஆண் நன்று பெண் இனிது’ என்று பாரதி பாடி வைத்திருக்கிறான். ஒருவர் தளரும்போது இன்னொருவர் தாங்கிப் பிடித்துக்கொள்வதுதான் உறவுகளை முக்கியமானதாக்குகிறது. ஒருவரின் கோபத்தை மட்டுமல்ல, ஒருவரின் கண்ணீரை, காதலை, காமத்தை, நெகிழ்ச்சியை, வெற்றியை மற்றவர் தாங்கிக்கொள்கையில்தான் இந்த உறவு மேலும் மேன்மைப்படுகிறது.

இதையே தான் சமீபத்தில் அடைந்த மற்றொரு அனுபவமும் உறுதி செய்தது. கும்பகோணம் அருகேயுள்ள தலப்பிரசித்திபெற்ற ஒரு சிறிய கோவிலுக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். நான் போன சமயத்தில் நடை சாத்தியிருந்தது. கோவில் வளாகத்தை ஒரு பெண்மணி கூட்டிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பூ விற்கிற மேசைக்கடியில் இரண்டு குழந்தைகள் அமர்ந்தபடி ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். தாழ்வாரத்தில் நடைபாதையருகே சாமியார்போலத் தோற்றமளித்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய காவியுடையும் கையில் வைத்திருந்த நாகம்போல் செதுக்கப்பட்ட ஒரு நீண்ட தடியும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

அடுக்கடுக்காக நூல் சுற்றப்பட்டு மஞ்சள் பூசி சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டிருந்த அந்தத்தடியை அவ்வப்போது தொட்டுக் கும்பிட்டபடி, தனக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தார். வாய்விட்டுக் கேட்காமலேயே யாரையும் அவருக்குத் தர்மம் செய்ய வைக்கும்படியான ஏதோவொரு ஈர்ப்பு அவரிடம் இருப்பதாகத் தோன்றியது. சற்று நேரத்தில் நடை திறக்கப் பட்டவுடன் கோவிலுக்குள் நுழைபவர்களிடம், ‘இதோ இந்தப்பக்கம் போய் கருப்பசாமியைக் கும்பிட்டுட்டு, அம்பாளை வழிபடணும், அப்புறமாத்தான் ஈஸ்வரனை வழிபடணும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். நான் அவரைக் கடந்து உள்ளே சென்றேன். கருப்பசாமி பீடம் அருகே கொஞ்சநேரம் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வருபவர்களிடம்,’மகராஜா நாகேந்திரனுக்கு மனசார தர்மம் பண்ணுங்க, நீங்க போறவார வழியெல்லாம் நாகேந்திரன் தொணையா வருவான், ஆபத்து ஒண்ணும் அண்டாது’ என்று தன்னிடமிருந்த ‘கோல்’ பக்கம் கைகாட்டிச் சொன்னார்.

வழிபாடு முடிந்து திரும்ப வரும்போதும் அக்குழந்தைகள் சலிப்பின்றி விளையாடிக்கொண்டிருந்தன. நான் அருகில் சென்றதும் விளையாட்டை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தன. ‘உங்க ரெண்டுபேர் பேரன்ன?’ என்று கேட்டேன். ‘எம்பேரு சத்யா, இவ பேரு சுலோச்சனா’ என்றாள் அவர்களில் பெரிய குழந்தையாக இருந்தவள். ‘எந்த ஊரு?, இங்க என்ன பண்றீங்க தனியா ரெண்டு பேரு மட்டும்?’ என்று கேட்டேன். ‘திருநாகேஸ்வரம் எங்க ஊரு, எங்க ஆத்தா கூட வந்தோம்’ என்று சத்யா சொன்னாள். ‘ஆத்தா எங்க?’ என்று கேட்டேன். ‘அதோ’ என்று கைகாட்டிய திசையில் கோவிலின் முற்றத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. ‘நாம சேந்து போட்டோ எடுக்கலாமா?’ என்று கேட்டேன். ‘சரி’யெனத் தலையாட்டியபடி என்னருகே வந்து நின்றார்கள். நாங்கள் போட்டோ எடுத்துக்கொண்டபின் கேமராவிலிருந்த அவர்களின் படங்களை காட்டி’ நல்லா இருக்கா’ என்று கேட்டேன். அப்போது அந்தக் குழந்தைகளின் ஆத்தா எங்களருகே வந்தார்.

‘என்னம்மா உங்க பேரக் குழந்தைகளா?’ என்று கேட்டேன். ‘ஆமாம்மா, பெருசு மகன் புள்ள, சின்னது மக புள்ள’ என்று சொன்னார். ‘பள்ளிக்கூடம் அனுப்பலையா? இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?’ என்று கேட்டேன். ‘பெருசு ஒண்ணாவது படிக்குது, சின்னத்துக்கு இப்பத்தான் மூணு வயசாகுது. பால்வாடியில விடலாம்னா அப்பனில்லாத புள்ள, கொஞ்ச நாளைக்கு நம்ம கூடவே இருக்கட்டும்னு எங்கபோனாலும் கூட்டிட்டு வரேன்’ என்று சொன்னார். ‘என்னாச்சு இவங்க அப்பாவுக்கு?’ என்று கேட்டேன். ‘தங்கமான மருமகன், எம் பொண்ண கண்ணுல வச்சுத் தாங்குவாரு, ஒருநாள் வேலைக்குப்போயிட்டு

வரும்போது கூட வேலை செய்யுற ஆளோட சேந்து பைக்குல வந்தார். லாரி மோதி அங்கனவே போயிட்டார். இந்தப்புள்ள அப்ப எம்மக வயித்துல ஏழுமாசம், வீட்டுக்காரர் போன அதிர்ச்சியில அவளுக்குக் கொஞ்சம் சித்தம் கலங்கிப்போச்சு, இன்னமும் பித்துப்பிடிச்சது போலதான் ஒவ்வொரு சமயம் நடந்துக்குவா, அதான் எங்கூடவே இந்த புள்ளைய வச்சிருக்கேன்’என்று சட்டென கண் கலங்கினார்.

எனக்கு உடனே என்ன சொல்வது என தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். கண்களைத் துடைத்துக்கொண்ட அந்தப் பெண்மணி, ‘எங்கள மாதிரி ஆளுகளுக்கு சாமிதானே தொணை. ரவ்வும் பகலும் இந்த அம்பாளை வேண்டிக்குவேன். இப்ப அவ வேலைய அவளே பாக்குற அளவுக்கு இருக்கா’ என்று சொன்னார். ‘சரி, இந்தக் குழந்தைகள நல்லா படிக்க வையுங்க, எல்லாம் நல்லதாவே நடக்கும்’ என்று சொன்னேன். நான் சொன்னவுடன் அந்தம்மா அழ ஆரம்பித்து விட்டார். ‘என்னம்மா? என்னாச்சு?’ என்று பதற்றமானேன்.

‘அதோ, அங்க உக்காந்திருக்கார் பாருங்க, தாடி வச்சிக்கிட்டு, அவருதான் என்னோட வீட்டுக்காரரு, மகளுக்கு இப்படியானதும் இங்க வந்து உக்காந்தவர்தான், அப்புறம் வீட்டுக்கே வரல, நாளும் கிழமையும்னா ஏதோ வரும்படி கொஞ்சம் அதிகமா வரும். என்னைக் கூப்பிட்டு எவ்வளோ இருக்கோ அதை அப்பிடியே குடுத்துருவார். அதுக்கப்புறம் நிமுந்து எம் மொகத்தைக்கூட பாக்க மாட்டரும்மா’ என்று சொன்னார். அந்தம்மா சொல்லியவுடன் நான் அவரைத் திரும்பவும் பார்த்தேன். அவர் அப்போதும் உள்ளே போவோரிடம் வழிகாட்டிக்கொண்டிருந்தார். ‘சாமியாராகிட்டாரா? வீட்டுக்குக் கூப்பிட்டீங்களா?’என்று கேட்டேன். ‘ஆரம்பத்துல வந்து கெஞ்சிப்பாத்தேன். இவரும் கொஞ்சம் சித்தங்கலங்கிப் போய்தான் இங்கேயே வந்து உக்காந்தார். அதுனாலதான் கொஞ்ச நாள்ல தான்தான் நாகேந்திரன், இந்த கோவிலுக்கு வந்து போறவங்க வாகனத்துக்குப் பாதுகாப்பா இருக்கிறதா நினைச்சுகிட்டார். அப்புறம் நானும் அப்படியே விட்டுட்டேன். நான் இந்தக்கோவிலை சுத்தம் பண்ணிவிட வரதே, இவரு மொகத்தையும் பாத்துகிறலாமேன்னுதான், இவருதான் எங்க வீட்டுக்காரருன்னு இங்க இருக்கவங்க நிறையப் பேருக்குத் தெரியாது, நீங்க பேசினவிதம் உங்ககிட்ட சொல்லணும்போல தோணுச்சும்மா’ என்று சொன்னார்.

நாம் சந்திக்கிற பலரும் மனதைப் பூட்டிக்கொண்டுதான் முகத்தில் வரவழைத்துக்கொண்ட சிரிப்போடு வாழ்கிறார்கள். ஏதோவொரு நெகிழ்வான தருணத்தில் பிறிதொருவர் அக்கறையோடு அக்கதவைத் தட்டும்போது சட்டென அது திறந்து கொள்கிறது. அதற்குப்பிறகு திரும்பவுமே அவர்கள் தங்களைத் தாழிட்டுக் கொள்ளலாம். ஆனாலும் அவர்களுக்குச் சொல்ல நம்மிடம் சில ஆறுதல் வார்த்தைகள் உள்ளதுதானே.

நான் அன்றாட வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களில் அவர்களின் சுயம் வெளிப்பட்டதாக உணர்ந்த ஏதோவொரு தருணத்தைத்தான் என் சொற்களால் இதுவரையிலும் சித்திரமாக்கி இந்தக் கட்டுரைத் தொடரில் பதிவு செய்திருக்கிறேன்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மனிதர்களுக்கும் அவர்கள் ஒவ்வொருவரின் பின்னிருக்கும் கதைகளுக்கும் முடிவே இல்லை. இக்கட்டுரைகளில் கண்ட முகங்கள் நீங்கள் சந்தித்த ஏதோவொரு மனிதரை நினைவுபடுத்துமென்றால்

அதுவே நன்று. அதுவே இனிது.

- நிறைவுற்றது

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close