[X] Close
 

காலமெல்லாம் கண்ணதாசன் - 29 : நெஞ்சம் மறப்பதில்லை...


kalamellam-kannadasan-29

இயக்குநர் ஸ்ரீதர் - எம்.எஸ்.வி. - கண்ணதாசன்

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 14 Sep, 2018 09:21 am
  • அ+ அ-

படம்    : நெஞ்சம் மறப்பதில்லை (1963)
இசை    : எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்    : பி.பி.ஸ்ரீநிவாஸ் - பி.சுசீலா
* * *

நெஞ்சம் மறப்பதில்லை - அது
நினைவை இழக்கவில்லை - நான்
காத்திருந்தேன் - உன்னைப்
பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை - என்
கண்களும் மூடவில்லை...

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே - வரும்
காற்றினிலும் - பெரும்
கனவிலும் - நான்
காண்பதும் உன் முகமே...

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன் - ஒரு
தூதுமில்லை - உன்
தோற்றமில்லை - கண்ணில்
தூக்கம் பிடிக்கவில்லை...
*
ஒரு மடமாது உருகுகின்றாளே
உனக்கா புரியவில்லை - இது
சோதனையா நெஞ்சில் வேதனையா - உன்
துணை ஏன் கிடைக்கவில்லை
*
ஒரு பொழுதேனும் உன்னுடனே நான்
உயிரால் இணைந்திருப்பேன் - அதை
இறப்பினிலும் மறு பிறப்பினிலும் - நான்
என்றும் நினைத்திருப்பேன்
* * *

மறதி - வரமா? சாபமா? நல்ல நினைவுகளை மறக்காமல் இருப்பது வரம். மறக்க நினைக்கும் நினைவுகள் மறக்காமல் துன்புறுத்திக் கொண்டே இருப்பது சாபம்.

இரண்டு நாட்களுக்கு முன் நாம் என்னவெல்லாம் செய்தோம்? யாரையெல்லாம் சந்தித்தோம்? அவர்களிடம் பேசியது என்ன? என்று கேள்விகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கினால், இன்னாரைப் பார்த்தோம்... அவர்களிடம் இதையெல்லாம் பேசினோம் என்று யோசித்து கொஞ்சம் நினைவுக்குக் கொண்டுவர முடியும். இரண்டு வாரங்களுக்கு முன்... இரண்டு வருடங்களுக்கு முன் என்று... இன்னும் இன்னும் பின்னோக்கிப் போனால்...? கொஞ்சம் அல்ல நிறையவே குழம்புகிறது அல்லவா? நம் ஞாபக அடுக்குகளில் எல்லாமும் பதிந்துதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் தேவையானதை மட்டும்... அல்லது நமக்குப் பிடித்தமாக நடந்த நிகழ்வுகளை முகங்களை மட்டும் நினைவுகள் நமக்கு மீட்டுத் தருகின்றன.



எப்போதோ ஒரு விபத்து நடக்கிறது... அல்லது காதலியை முதன்முதலாகப் பார்த்த அந்த நாள்... அல்லது நெருங்கிய ஒருவரின் பிரிவோ மரணமோ... இவையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாதுதானே? மனித மனம்தான் எத்தனை வியப்புக்குரியது? நினைவுகளில் மூளையின் பங்கு அளப்பரியது. நம் நினைவுகளின் `ஸ்டோரேஜ்' மூளைதானே? தலையில் அடிபட்டால் அல்லது அதிர்ச்சிக்குரிய செய்திகளைக் கேட்டால் அது மூளையை பாதிக்கிறது. முற்றிலும் நினைவுகள் போகலாம். அல்லது சில குறிப்பிட்ட அதாவது, பால்ய நினைவுகள் மட்டும் தங்கிவிட அதற்குப்பிறகான நினைவுகள் அழிந்துபோகலாம். பழையவை முற்றிலுமாக மறந்து, தான் யார் என்பது கூட நினைவில் இல்லாமல் போகலாம். உடல் மட்டும் இயங்க, `கோமா' என்னும் மூளை இயக்கமின்றி செயலிழந்த நிலைக்கும் செல்லலாம். இவையெல்லாம் மூளைக்கு ஏற்படும் பாதிப்புகளினால் நிகழ்பவை.

அடுத்தடுத்த பிறப்புகள் உண்டா? அப்படிப் பிறப்பது சாத்தியம்தானா? என்பவையெல்லாம் இன்னும் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிலரைப் பார்க்கும்போது பார்த்த முகமாகத் தோன்றுவதும்... சில இடங்களுக்குச் செல்லும்போது அந்த இடங்களை முன்பே பார்த்ததுபோலவும், பழகிய இடமாகவும் தோன்றும் அல்லவா? இவன் அவனைப்போலவே இருக்கிறான். இவள் அவளைப்போலவே சிரிக்கிறாள்... என்று நிகழ்காலத்தில் உள்ளவர்களில் சிலர் இறந்தகாலத்தை நினைவுபடுத்துகிறார்கள்தானே?

இப்படி... மறுபிறப்பை மையமாக வைத்து இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட படம்தான் `நெஞ்சம் மறப்பதில்லை'. கல்யாண்குமார், தேவிகா, நம்பியார், நாகேஷ் ஆகியோரது நடிப்பில் தமிழ்த்திரையுலகில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட படம்.

ஒரு பழைய அரண்மனை. அங்கு வரும் நாயகனுக்கு சென்ற பிறப்பின் நினைவுகள் சுழன்று வருகின்றன. அந்தப் பிறப்பில் ஜமீன்தாரின் மகனான அவனுக்கு ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகளோடு காதல் ஏற்படுகிறது. அதற்கு ஜமீன்தார் காட்டிய வெறுப்பும் வன்மமும்... அவரால் அவனது காதலி கொல்லப்படும் அளவுக்குச் செல்கிறது. காதலியை இழந்த துக்கத்தில் அவனும் இறந்துவிடுகிறான். இப்போது இந்தப் பிறப்பில் பாழடைந்த  அதே அரண்மனையில்  அதே ஜமீன்தாரை சந்திக்கிறான். அதாவது போன பிறப்பில் அப்பாவாக இருந்தவரை இந்தப் பிறப்பில் சந்திக்கிறான். அவனது காதலியும் அதே ஊரில் மறுபிறப்பு எடுத்திருக்கிறாள். அவர்கள் மீண்டும் இணைந்தார்களா என்பதை திரைக்கதையில் துளியும் குழப்பமின்றி `திகில்' பட பாணியில் அற்புதமாக இயக்கியிருப்பார் ஸ்ரீதர். கறுப்பு வெள்ளையில் `சில்-அவுட்' போல எடுக்கப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்தன.

இசை எம்.எஸ்.வி., படத்தின் பாடல்களை எழுதியது கவியரசரும், பஞ்சு அருணாசலமும். தலைப்பின் பெயரில் அமைந்த `நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் படத்தின் பல இடங்களில் அவ்வப்போது வந்து போகும். படத்தின் உயிர் நாதம் அந்தப் பாடல் என்றால் மிகையில்லை. பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் `ஹம்மிங்' கேட்கும்போதெல்லாம் நம் நினைவுகளை மீட்டெடுப்பது போன்ற ஒரு நடுக்கத்தைத் தரும். சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பிறவிப் பயன் அடைந்ததுபோன்ற ஓர் இன்பம் வரும்.

பாடலின் பல்லவி பல இடங்களில் வருவது போலவே சரணங்களும் கதைக்கு ஏற்ப ஆங்காங்கே வரும். இந்தப் பாடலை முழுமையாகக் கேட்க படத்தையும் முழுமையாகப் பார்க்கவேண்டும்.



நெஞ்சம் மறப்பதில்லை என்ற முதல் வரிக்கு இணையாக அடுத்த வரியை `நினைவை இழக்கவில்லை' என்று எழுதியிருப்பது எத்தனை பொருத்தம். படத்தின் உயிர்நாடியை சரியாகப் பிடித்துப் பார்த்து எழுதப்பட்ட வரி. முதலிரண்டு சரணங்களில் தூய காதலின் புனிதத் தன்மையை அழகாகக் கையாண்டிருப்பார். காலம் முழுக்க காதலின் மடி தேடிதான் மனம் கலங்கும். வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும் உன் முகத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கும். உனக்காகக் காத்திருக்கும் இந்த மனதினை எடுத்து தாமரை மலர்மீது தனியே வைத்திருந்தேன். ஆனால் உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை... அதனால் கண்களில் தூக்கம் பிடிக்கவில்லை என்று பாடல் முழுக்க கனவு, நினைவு, இறப்பு, பிறப்பு என்று திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வார்த்தைகளைக் கோர்த்துப் பாடலாக்கியிருக்கிறார் கவியரசர்.

கடைசி சரணத்தில் ஒரேயொரு பொழுதாவது உன்னுடன் நான் உயிரால் இணைந்திருப்பேன். அதை இறப்பிலும் மறு பிறப்பிலும் நான் என்றும் நினைத்திருப்பேன் என்று முடித்திருப்பார். படத்தின் இடையிடையே வரும் பல்லவியையும் கடைசி சரணத்தையும் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடியிருப்பார். மெட்டும், குரலும், வரிகளும் பின்னிப் பிணைந்திருப்பதால்தான், எப்போது கேட்டாலும் நம் உயிருக்குள் ஊடுருவி, நெஞ்சத்தாலும் நினைவுகளாலும் மறக்கமுடியாததாக இருக்கிறது இந்தப் பாடல்.

காதல் எப்போதும் தன்னைத் தேடிக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் இடமெல்லாம், காணும் கனவெல்லாம், எண்ணும் நினைவெல்லாம் அது காதல் காதல் என்றே துடித்துக்கொண்டிருக்கிறது.  நிறைவேறாத காதலின் ஏக்கம், முடிவுறாத ஒரு பயணம் போன்றது. அதற்கு இந்தப் படமும் பாடலும் அற்புதமான ஒரு சாட்சி.

- பயணிப்போம்



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close