[X] Close

ஆண் நன்று பெண் இனிது 28: பார்வதிகள் சூழ் உலகு!


aan-nandru-pen-inidhu-28-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 10 Sep, 2018 09:30 am
  • அ+ அ-

அந்தக்கல்லூரியில் பேசச் சென்ற இடத்தில் என்னுடைய பள்ளித்தோழி அமலாவைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. தமிழ் மன்றத்தொடக்க விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். மேடையில் அமர்ந்திருந்தபோதுதான் அவளைப் பார்த்தேன். நிகழ்வை ஒழுங்கு செய்துகொண்டிருந்த மாணவிகளோடு நின்று அவர்களை வழிப்படுத்திக்கொண்டிருந்தாள். ஆளே வெகுவாக மாறிவிட்டிருந்தாள். பள்ளியில் படிக்கும்போது மிகவும் கூச்ச சுபாவத்துடன் பின்வரிசையில் நிற்கும் அந்த அமலாவிற்கும் இப்போது கல்லூரி ஆசிரியையாக கம்பீரமாக நிற்பவளுக்கும் பாரதூரமான வேறுபாடு இருந்தது. அவளுடைய திருமணத்தின்போது பார்த்தது, அதன்பிறகு ஒன்றிரண்டுமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அவ்வளவுதான். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக அவளோடு தொடர்பு எதுவுமில்லை.

அந்தக்கல்லூரியில் அமலா பணிபுரிவது எனக்குத் தெரியாது, ஆனால் நான் அங்கே வருவது அவளுக்கு முன்பே தெரியும் அல்லவா, என்னை அழைத்துப் பேசியிருக்கலாமே என்று யோசித்தேன். ஒருவேளை எதிர்பாராத மகிழ்வை எனக்குத் தருவதற்கு அவள் விரும்பியிருக்கலாம் என்றும் தோன்றியது. எதிரேயிருந்தவாறு கண்கள் மினுங்க என்னைப்பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய மகிழ்ச்சி நிரம்பிய முகமும் அதையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய என்னுடைய பேச்சை அமலாவுக்கும் எனக்குமான நட்பிலிருந்து தொடங்கினேன். இலக்கியம் சார்ந்து மட்டுமன்றி மாணவப்பருவம் குறித்தும், அப்பருவத்தில் நிகழ்கிற நட்பின் களங்கமின்மை பற்றியும் அங்கே பேசினேன்.

நிகழ்வு முடிந்து மேடையைவிட்டு இறங்கியதும் ஆர்வத்தோடு சூழ்ந்துகொண்ட மாணவிகளுடன் ஓரிரு வார்த்தைகள் பேசியபடியே அமலாவைப் பார்வையால் தேடினேன். கூப்பிடு தூரத்தில் கைகளைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்தபடி தூணில் சாய்ந்து நின்றிருந்தாள்.

‘மெதுவா வா, நான் இங்கேதான் நிற்கிறேன்’ என்று என்னைப் பார்த்து சைகையால் சொன்னாள்.

சிறிதுநேரம் கழித்து சூழ்ந்திருந்த மாணவிகள் கூட்டத்தை விலக்கி, சாப்பிடுவதற்காக வேறொரு பேராசிரியர் என்னை அழைத்தார். அதுவரை காத்திருந்த அமலா வேகமாக என்னருகே வந்து என் கைகளை அழுந்தப் பற்றிக்கொண்டாள். ‘அமலா’ என்று மட்டுமே நான் சொன்னேன். அதற்கு மேல் அப்போது ஒன்றும் பேசத் தோன்றவில்லை. அதுவே எவ்வளவோ பேசியதுபோல இருந்தது. மனதின் ஆழத்திலிருந்து ஆதுரத்துடன் அழைக்கப்படும் ஒரு பெயரைத் தவிர வேறு எதனாலும் இடைவெளியான காலத்தை ஈடு செய்ய முடியாது. அமைதியாக இருந்தவளின் முகத்தைப்பார்த்தேன். கண்களில் துளிர்த்த நீருடன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். என்னுடைய கண்களிலும் சட்டென கண்ணீர் துளிர்த்தது. அதன்பிறகு ஒரு வார்த்தையும் எங்களுக்குத் தேவைப்படவில்லை. சிலநிமிடங்கள் கழித்து அருகிலிருந்த பேராசிரியரிடம்,’நாங்க ரெண்டுபேரும் ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டுவரை ஒன்றாகப்படித்தோம்’ என்று சொன்னாள். ‘அப்படியா’ என்று கேட்ட அந்தப் பேராசிரியர், ‘எங்கே படித்தீர்கள்?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின், அன்றைய நிகழ்வு பற்றியும் கல்லூரியின் பெருமைகள் குறித்தும் பேசிக்கொண்டு வந்தார். அந்தப்பேராசிரியர் என்னோடு பேசுவதற்கு இடம்விட்டு உணவருந்தும் அறைக்குச் செல்லும்வரை அமலா எதுவும் பேசாமல் உடன்வந்தாள்.

புறப்படுகையில் கல்லூரி முதல்வர் அறையிலிருந்து வாசல்வரைக்கும் உடன் வந்தவளிடம் ஓரளவே பேச முடிந்தது. அந்தக் குறைவான பேச்சு எங்களுடைய பலவருடங்களை பின்னகர்த்தியது. ‘இந்த நிமிஷம் நம்ம வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ விஷயங்கள் காணாம போயிடுச்சு இல்ல.. வேறெந்த அடையாளமும் இல்லாம ’நீ ஜோதியாகவும் நான் அமலாவாகவும் மட்டும் இருக்கோம்.. இல்லையா?’ என்று கேட்டாள். அப்போது நாங்கள் இருவருமே எங்கள் பள்ளிப்பருவத்துக்குத்  திரும்பியிருந்தோம். ‘நீதான் சிறப்பு அழைப்பாளரா கல்லூரிக்கு வர்றேனு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. உன்கிட்ட பேசலாம்னு நெனைச்சு ஒன்னோட மொபைல் நம்பரக் கேட்டு வாங்கினேன். சரி, உனக்கு இன்ப அதிர்ச்சியா இருக்கட்டும்ன்னுதான் போன்ல கூப்பிடல. இங்க வந்து நீ என்னைப் பாத்தவுடன் எப்படி இருப்பன்னு நான் கற்பனைபண்ணி வச்சிருந்தேனோ அப்படியேதான் நீ இருக்க’ என்று படபடவென பேசிக்கொண்டே இருந்தாள்.

‘அப்ப நான் நெறையா பேசுவேன், இப்பவும்தான். நீ அப்பல்லாம் ரொம்ப அமைதியா கேட்டுட்டு இருப்ப.. எந்த நிகழ்ச்சியிலயும் கலந்துக்காம ஒதுங்கியே இருப்ப. எப்பவுமே மொகத்த சீரியஸாவே வச்சுக்குவ. காதுல கம்மல் போடமாட்ட, பொட்டுக்கூட வச்சுக்க மாட்ட, இப்ப சிரிச்சிகிட்டே படபடன்னு பேசுற, நல்லா பளிச்சுன்னு முகத்தை வச்சிருக்க. முன்னவிட அழகா இருக்க.. தூரத்திலருந்து உன்னப்பாத்தவுடன், முதல்ல எனக்கு அடையாளமே தெரியல. ஆளே மாறிட்ட. ஆனா இப்படிப்பாக்க ரொம்ப நல்லாருக்கு..’ என்று சொன்னேன்.‘ நீ சொல்றது சரிதான்.. அப்பல்லாம் என்ன வேலைன்னாலும் தட்டிக் கழிச்சிடுவேன்.. இப்பல்லாம் கல்லூரியில எல்லா வேலையையும் நானே இழுத்துப் போட்டுகிட்றேன்.. இந்த நிகழ்வுக்காக அழைப்பிதழ் கூட நான்தான் டிஸைன் செஞ்சேன். ஆனா நீ வரப்போற நாளத் தெரிஞ்சுகிட்டு, அதுவரைக்கும் உங்கிட்ட பேசாம இருக்கறது எவ்வளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..’ என்றாள். கிளம்பும்போது அவளுடைய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். கூடிய விரைவில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு வந்தேன்.

படிப்பு முடிந்து குடும்ப வாழ்க்கைக்குள் ஒரு பெண் நுழையும்போதே அவள் முதலில் இழப்பது தன்னுடைய தோழிகளைத்தான். அவ்வாறே நாங்களும் பிரிந்துபோனோம். திருமணத்திற்குப்பிறகு கணவரின் பணி சார்ந்தவகையில் உருவாகும் நட்புகளும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களும், உறவினர்களாக இருப்பவர்களும் என்கிற அளவிலேயே பெண்களின் சிநேகிதம் மாறிவிடுகிறது. தன்னுடைய விருப்பங்களை, துயரங்களை, அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆத்மார்த்தம் பல சந்தர்பங்களில் பெண்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. நீண்டகாலம் கழித்து எதிர்பாராத தருணத்தில் தன்னுடைய பள்ளிப்பருவத் தோழிகளில் யாரையேனும் சந்திப்பதன்வழியாக இன்றைய வாழ்வின் பல செயல்களுக்கு அர்த்தங்கள் மாறிவிடும். எனக்கு அவளிடம் பகிர்ந்துகொள்ள எவ்வளவோ இருந்தன, அதேபோல அவளுக்கும் இருந்தது என்பதை அவளின் அழுத்தமான அப்போதைய அணைப்பு எனக்கு உணர்த்தியது.

சொன்னபடியே அதற்கு அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவள் வீட்டுக்குப்போனேன். ஆரவாரம் ஏதுமின்றி அந்த வீடு அமைதியாக இருந்தது. வரவேற்பறையில் மாலையும் மெழுகுத்திரியுமாக இருந்த அவளுடைய கணவரின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அதிர்ந்து அவள் முகத்தைப்பார்த்தேன். என் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவள், ‘ஒரு விபத்து, எம்பையனுக்கு அப்போ ஒரு வயசு..அப்பா முகம் கூட அவனுக்குத் தெரியாது. இப்ப சென்னையில ஆங்கில இலக்கியம் ரெண்டாவது வருஷம் படிக்கிறான், நானும் அத்தையும் மட்டும்தான் இங்க இருக்கோம்’ என்று சொன்னாள்.

‘கையில கொழந்தையோட இருந்தா என்ன பரவால்லன்னு எப்படியாவது எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சிடணும்ன்னு எங்க வீட்ல மட்டும் இல்ல, எங்க அத்தையும் சொன்னாங்க, வேணவே வேணாம், அவரோட நெனப்புலேயே வாழ்ந்துடலாம்னு அந்த வயசுல தோணுச்சு. இப்படியே இருந்துட்டேன். பிளஸ் டூ முடிச்சவுடனே கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களா, அதுக்கப்புறம்தான் அத்தை சொல்லித்தான் தொடர்ந்து படிச்சேன், கல்லூரியில வேலைக்கும் வந்துட்டேன்’ என்று சொன்னாள். அதன்பிறகு நீண்டநேரம் அவளோடும் அவளுடைய அத்தையோடும் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினேன்.

சிலவாரங்கள் சென்று ஒருநாள், அவள் அத்தையை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். அமலா என்னுடைய அலமாரியில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் அத்தை என்னிடம் வந்து தனியாகப் பேசினார். ’மகன் போன வருத்தத்தக்கூட கொஞ்ச நாள்ல மென்னு முழுங்கிகிட்டேம்மா, இவ இப்படி ஒத்தையா நிக்குறததான் கண் கொண்டு பாக்க முடியல. அப்பவே எவ்வளவோ சொல்லிப்பாத்தோம். பிடிவாதமா மறுத்துட்டா. நான் இருக்கிறவரைக்கும் சரி. அப்புறம் இவளுக்குன்னு ஆதரவா நாலு வார்த்த சொல்ல ஒரு ஆள் வேணாமா. இப்பகூட ஒண்ணும் இவளுக்கு பெருசா வயசாகிடல. அவளுக்குப் பிடிச்சமாதிரி யாராவது இருந்தா அவங்ககூட சேந்து வாழறதுல ஒண்ணும் தப்பில்ல.நீயாவது எடுத்துச்சொல்லு. கேக்குறாளான்னு பாப்போம்’ என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

‘இத நீங்க அப்பவே செஞ்சு வச்சிருக்கலாமே, இன்னும் கொஞ்சம் அழுத்தமாச் சொல்லி அவளுக்குப் புரிய வச்சிருக்கலாம்ல, இப்ப பையன் பெரியவனா இருக்கானேம்மா, அவன் இதை எப்படி புரிஞ்சிக்குவான், அப்புறம் அவனுக்கு ஒரு கல்யாணம்னு வரும்போது வேற எதுனா சிக்கலாகிடாதா?’ என்று கேட்டேன். ‘நீயுமாம்மா இப்படி யோசிக்கிற, எதையும் எடுத்துச் சொல்ற விதமா எடுத்துச் சொன்னா யாரும் புரிஞ்சுக்குவாங்க.. எம்பையன் உசிர் பிரிஞ்ச நேரத்துல நாந்தான் பக்கத்துல இருந்தேன், எங்கையப் புடிச்சிகிட்டு, ‘அமலாவை எதுக்கும் கஷ்டப்படாம பாத்துக்கோம்மா’ ன்னுதான் கடைசியாச் சொன்னான். அதுக்கப்புறம் அவளோட படிப்பு, வேலைன்னு அவளை ஊக்கப்படுத்திகிட்டே இருப்பேன். பொம்பள மனசு எப்பவுமே பூக்கொடி போலத்தான், அழுத்தமா பற்றிக்க கொம்பு தேடிகிட்டே இருக்கும். அவ இளமையா இருந்தப்ப குழந்தையும், அப்புறம் படிப்பும்னு போயிடுச்சு. இப்ப நாப்பதுக்கு மேல ஆகிடுச்சு. பொண்ணுங்களுக்கு இனிமே என்ன இருக்கப்போகுதுன்னுதான் எல்லாரும் நெனைப்பாங்க, அது அப்படியெல்லாம் இல்ல, இந்த வயசுலதான் அவளுக்கு ஆதரவா சாஞ்சுக்க, இவளைப் புரிஞ்சிகிட்ட ஒரு மனசு வேணும். சில நாட்கள்ல வீட்டு வேலைகள அவளே வலிஞ்சு செய்வா, வாசல்ல போட்டிருக்கிற கால்மிதியடி வரை எடுத்துப்போட்டுத் தொவப்பா, அப்ப எனக்கே தெரியும் இன்னைக்கு இவ கஷ்டப்படுறான்னு. இப்படி சில நாட்கள் இருக்கும்னு எனக்கும் தெரியும்தானே, நானும் அதையெல்லாம் கடந்துதானே வந்திருக்கேன்’ என்று சொன்னார்.

சாப்பிட்டு முடித்தபிறகு எங்களுடைய பழைய கதைகளைப் பேசிச்சிரித்துக் கொண்டிருந்தோம். கடைசியாக அவளிடம் அவளுடைய அத்தையின் விருப்பத்தைச் சொன்னேன். மென்மையாகப் புன்னகைத்தவள், ‘எப்பவுமே உடலைப்பத்தின நினைவு சுத்தமா வராதுன்னு சொன்னா அது பொய். அதுக்குள்ள நாமளே ஒரு பயணம் நிகழ்த்தித்தானே அதைக் கடக்கமுடியும். ஒருசில நாளில் எப்பவாச்சும் கொஞ்சம் தடுமாறிப்போயிறேன்.

ஆனாலும் அது அப்படியெல்லாம் ஆளை அடிச்சுப்புரட்டிப் போடறதில்லை. நின்னு நிதானமாக பெய்கிற மழைபோல அவரோட இருந்த நாட்கள் நினைவுக்கு வரத்தான் செய்யுது. எப்பவாச்சும் வர்ற சில கனவுகள் நம்ப உடலை நமக்கே நினைவுபடுத்தும், இல்லையா, அதுமாதிரியான நாட்கள்தான் கொஞ்சம் சிரமமானது. அதான் பாத்தியே என் வீட்ல. எவ்வளோ செடிகள் செழிப்பா வளந்திருக்குன்னு. அதுல துளிர்க்கிற ஒவ்வொரு இலையும், பூவும் என்னை உணர்ந்திருக்கும். இன்னைக்குக் காலையிலகூட குளிச்சி முடிச்சிட்டு, நாப்கின் வச்சுக்க மறந்து டிரஸ் மாத்திகிட்டேன். சாப்பிடும்போது சேலையெல்லாம் நனைஞ்சு அதுக்கப்புறம்தான் அது நினைவுக்கு வந்தது. ஒருபக்கம் அந்தளவுக்கு கனமில்லாம என்னோட உடல் இருக்குன்னு நெனைச்சுக்கிட்டேன், இன்னொருப்பக்கம் மெனோபாஸ் காலம் இப்படித்தான் இருக்கும்னு நெனைச்சுகிறேன். பெரும்பாலும் எந்தப்பெண்ணும் வலிஞ்சி எந்த நினைவுக்குள்ளயும் போறதில்ல. தானா மேலெழுந்து வர்ற நினைவுகள அவங்கங்க சூழல்தான் கொஞ்சம் கொஞ்சமா சமனடைய வைக்கும். எனக்கு நான் வாசிக்கிற புத்தகங்கள், அப்புறம் வீட்டுத்தோட்டம், அப்புறம் என்னை நம்பி வர்ற குழந்தைகளுக்கு நான் படிச்சத மனசாரக் கத்துக் கொடுக்கிறேன். இதுதான் என்னை நிதானமா வச்சிருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயமா நான் நம்புறது, ‘நாம சம்பாதிச்ச வீடு, நிலத்தை மட்டும் நம்ம பிள்ளைகளுக்குக் கொடுக்கிறது மட்டும் நிலவுடைமை சமூகத்தோட எச்சமில்லை, நாம படிச்ச கல்வியை நம்ம பிள்ளைகளுக்கே கிடைக்கணும்னு நினைக்கிறதும்கூடதான். பெண்கள்கிட்ட பியூடல் மென்டாலிட்டியே இல்ல. அதனாலதான் பெரும்பாலான பெண்கள் கத்துக்கொடுக்கிறவங்களாவே இருக்காங்க. அம்மாதானே நமக்கெல்லாம் முதல் ஆசிரியர். எந்த அம்மாவும் தனக்குன்னு எதையும் வச்சுக்காம எல்லாத்தையும் கொடுத்துடுவா. நானும் அம்மாதானே?’ என்று சொன்னாள்.

‘நீ ஏதோ கஷ்டப்படுறன்னு உங்க அத்தை நினைக்குறாங்களே?’ என்று கேட்டேன். ‘அத்தை நல்ல மனசுள்ளவங்க, அவங்களும் இந்தக் கஷ்டமெல்லாம் கடந்துதான் வந்திருக்காங்க, அவங்க முப்பது வயசா இருக்கப்ப அவங்க கணவருக்கு ஹார்ட் அட்டாக். தனியாளா நின்னுதான் அவர வளர்த்து, நல்ல வேலைக்கும் அனுப்பிவச்சு, கல்யாணம் பண்ணி வச்சாங்க. அல்டர்நேட்டிவ்ங்குறது இன்னொரு ஆணோட துணை மட்டுமில்ல, இல்லையா. பெண்களைப் பொருத்தவரைக்கும் அவளோட வைராக்கியம் மட்டும்தான் எல்லாத்துக்கும் மாற்றா இருக்க முடியும்னு நினைக்கிறேன். கணவன் இறந்துபோன பெண்கள் மட்டுமில்ல, மனைவி குழந்தைகள விட்டுட்டு ஓடிப்போன எத்தனையோ ஆண்கள் நம்ம நாட்டுல இருக்காங்க. அத எதிர்கொண்டு வாழ்ற எத்தனையோ பெண்கள் இருக்காங்க தானே’என்று சொன்னாள்.

அதே வயதுதான் என்பதோடு எங்கள் இருவரின் மன அலைவரிசையும் ஒன்றுதான் என்பதால் அவளது மன உணர்வுகளை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘அத்தை கேட்டாங்கன்னா, அமலாகிட்ட சொல்லிட்டேன்னு மட்டும் சொல்லு, போதும். இன்னைக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்றேன் கேளு’ என்றவள், ‘காலையில இங்க வரும்போது உனக்குப் புடவை எடுக்கலாம்னு ஒரு ஜவுளிக்கடைக்குப் போயிருந்தேன். மாடியிலிருந்து கீழே போய் பில் போட்டுட்டு வரதுக்கு கொஞ்சம் லேட்டானதால அங்க மேற்பார்வையாளரா இருந்த ஒரு பெண்மணியோடு பேசிட்டுருந்தேன். அப்ப அந்தப்பெண்ணோட குடும்பத்தைப்பத்தி விசாரிச்சேன். எடுத்தவுடனேயே, ‘எங்க வீட்டுகாரர விட்டுப் பிரிஞ்சு ‘இந்த மாசம் ஏழாந்தேதியோட பத்தொம்போது வருஷமாச்சு’னு அழுத்தந்திருத்தமா சொன்னாங்க அந்தப்பெண்மணி. பெண்கள் அவங்க வாழ்க்கையில முக்கியமான நாட்கள், கிழமைகளை மறப்பதேயில்ல. அவங்க கணவருக்கு இத்தனைத் துல்லியமா தேதி, வருஷமெல்லாம் நினைவிருக்குமான்னா, நிச்சயமா இருக்காது. ஏன்னா ஆண் உடலுக்குள் எந்தப் பயணமும் சுழற்சி முறையில் நிகழ்றதில்ல. பெண்ணைப் பொருத்தவரைக்கும் எந்த நாட்களையும் மாதாந்திரச் சுழற்சியோடு தொடர்புபடுத்தி வச்சிக்குவா. அதனாலதான் அத்தனை திருத்தமா தேதியோட அவங்க சொல்றாங்கன்னு உடனே தோணுச்சு’ என்று அமலா சொன்னாள்.

ஒரு நிமிட அமைதிக்குப்பிறகு அமலாவே தொடர்ந்தாள்.‘இப்படிக் கேக்குறது நாகரீகமில்லதான். ஆனாலும் தெரிஞ்சிக்கணும்னு கேக்குறேன், என்ன காரணத்தால ரெண்டுபேரும் பிரிஞ்சிட்டீங்க?’ன்னு கேட்டேன்.’அதுகென்ன, இதச் சொல்றதுல எனக்கு ஒண்ணும் கூச்சமில்ல. அவருதான இதுக்காக வருந்தணும். எங்கிட்ட இல்லாத எதையோ இன்னொரு பொண்ணுகிட்ட பாத்திருக்காரு, நாம சாப்பிட்ட எடத்துல வேறொரு பொண்ணு இருக்கறத என்னால தாங்கிக்க முடியல. அவ்வளோதான். பதினாறு வயசுல கட்டிகொடுத்தாங்க. பதினஞ்சு வருஷம் அவரோட வாழ்ந்தேன். மூணு பிள்ளைக. அதுகள கூப்பிட்டுகிட்டு அப்படியே எங்கம்மா வீட்டுக்கு வந்துட்டேன். தனியாளா நின்னு பிள்ளைகள ஆளாக்கிட்டேன். ரெண்டு பொண்ணுங்கள கட்டிக்கொடுத்துட்டேன். பேரனும் பேத்தியும் இருக்காங்க, மகனை அபுதாபியில வேலைக்கு அனுப்பிட்டேன். எல்லாரும் அமோகமா இருக்காங்க, இப்ப எனக்கு அம்பது வயசு’ன்னு சொன்னாங்க.

‘தனியா இருக்க கஷ்டமா இல்லையா?’ன்னு கேட்டேன். என் கேள்வியின் அர்த்தத்தைப்புரிந்து கொண்ட அந்தப்பெண், ‘இதுவும் சாப்பாடு மாதிரிதான், வயிறு பசிக்கிற மாதிரி, ஒடம்புக்கும் ஒரு பசி இருக்கும். நாமதான் அதைச் சரியா புரிஞ்சுகிறணும். அப்ப மனசுக்கு ஏத்த மாதிரி புடிச்ச விஷயத்துல கவனத்தச் செலுத்தணும். நான் இங்க வேலைக்கு வந்திருக்கேன். புடிச்ச புடவைய வாங்க காசுபத்தாம புடவை புடிக்கலன்னு சொல்றவங்கல எவ்வளோ பேர பார்க்குறேன். வாழ்க்கைங்குறது அவ்வளோதான். ‘ஒரு தடவை சாப்பிட்டா என்ன பத்துத் தடவ சாப்பிட்டா என்ன? நமக்குப்போதும்னு தோணுறதுதான முக்கியம்’ நம்மட்ட இருக்க எல்லாப் பொடவையையும் உடுத்திக்க மட்டுமா வச்சிருக்கோம். இல்ல புடிச்சதுங்குறதுக்காக எல்லாநேரமும் அதையேவா கட்டிக்கிறோம். சிலது சில நினைவுக்காகன்னு பத்திரப்படுத்துறது இல்லையா’ன்னு மென்மையாகச் சிரித்துக்கொண்டே கேட்டாங்க அந்தப்பெண். 

பில்லுக்குப் பணத்தைக் கட்டிட்டுப் புறப்படும்போதுதான் ஞாபகம் வந்து அவங்ககிட்ட திரும்பி,‘உங்க பேரென்ன?’ என்று கேட்டேன். ‘பார்வதி’ன்னு சொன்னார். நம்ம நாட்ல ஒரு பார்வதிதான் இருக்காங்களா என்ன?‘ என்று சிரித்துக்கொண்டே அமலா கேட்டாள். கொஞ்சம் அவள் கண்கள் கலங்கி இருந்தன.

- இன்னும் வருவார்கள்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close