[X] Close

நான் மலரோடு தனியாக..! காலமெல்லாம் கண்ணதாசன் - 28


kalamellam-kannadasan-28

இரு வல்லவர்கள்- ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி

  • ஆர்.சி.மதிராஜ்
  • Posted: 07 Sep, 2018 10:15 am
  • அ+ அ-

படம்    : இரு வல்லவர்கள் (1966)

இசை    : வேதா
குரல்    : டி.எம்.சௌந்தர்ராஜன் - பி.சுசீலா

* * *

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்

பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
* * *

மனித மனம் ஓர் உணர்வுக் குவியல். ஒவ்வோர் உணர்வும் தனித்தன்மை வாய்ந்தவை. அங்கே அந்த மனமும் அதனுடைய உணர்வும் மட்டுமே இருக்கும். அந்த மனதுக்குள் சென்று அந்த உணர்வை மாற்றவோ ஆற்றுப்படுத்தவோ வல்லவை இசையும் பாட்டும். சில நேரங்களில் ஒரு பாடல் முழுமையாக உள்ளே செல்லாமல், அதன் ஏதேனும் இரண்டு வரிகள் மட்டும் இதயத்தை உருட்டிக்கொண்டேயிருக்கும். அதுவே அந்தப் பாடலுக்கான வெற்றிதான்.

ஒரு பாடல் தன்னை இரண்டு விதங்களில் செறிவாக நிலைநிறுத்திக் கொள்ளவேண்டும். ஒன்று, திரைப்படத்தோடு ஒட்டி, அதன் மையக் கதையையும் அதன் உணர்வுளையும் பிரதிபலிக்கவேண்டும். மற்றொன்று, திரைப்படத்தோடு இல்லாமல் பாடலாக எப்போது கேட்டாலும், கேட்போரின் உள்ளங்களில் ஏதேனும் ஓர் உணர்வை ஆற்றுப்படுத்தவேண்டும். கவியரசரின் பல பாடல்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை.

காதலில் மட்டும்தான்... பார்ப்பது, பேசுவது, காத்திருப்பது, சந்திப்பது, கேலி செய்வது, சண்டையிடுவது, சமாதானம் செய்வது என்று எல்லாமே அழகு. இந்த உணர்வுகள் காதலைத்தாண்டி மிகையாகும்போது சந்தேகமாக உருவெடுக்கிறது. சந்தேகம் நுழைந்த இடத்தில் காதல் வெளியேறி எப்போதும் சச்சரவே குடியிருக்கிறது. காதலின் ஊடலையும், கிண்டலையும் அழகாகச் சொல்லும் பாடல்தான் `இரு வல்லவர்கள்' படத்தில் இடம்பெற்ற `நான் மலரோடு தனியாக...' பாடல். கேட்காத கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும், கிண்டலாக கேள்விகள் கேட்பதாகவும், ஒருவரை ஒருவர் செல்லமாக சீண்டிக்கொள்ளும் விதமாகவும் அமைந்த பாடல் இது.

நாயகனுக்காக நாயகி காத்திருக்கிறாள். அவள் எதுவும் கேட்காமலேயே `வேறு யாருக்காக இப்படி மலரோடு தனியாக நிற்கப்போகிறேன். என் மகராணிக்காகத்தானே...' என்று நாயகனே பதில் சொல்கிறான்.

தொடர்ந்து, என்னைப் பார்ப்பதற்காக நீ வந்த வழியில் உன்னை யாரெல்லாம் பார்த்தது? வளையல் அணிந்த உன் கரங்களுக்குப் பரிசாக என்னவெல்லாம் தந்தார்கள்? கூந்தல் காற்றில் அலைபாயும் அளவுக்கு உன்னிடம் என்னவெல்லாம் சொன்னார்கள்? அழகான உன் இதழுக்கு என்ன சுவையைத் தந்தார்கள்? என்று கேள்விகளாக அடுக்குகிறான் நாயகன்.

சந்தேகத் தொனியில் குறும்புகளோடு அவன் கேட்ட கேள்விகளுக்கு விடை தருவதாக, `நீ இல்லாமல் யாரோடு உறவாடப்போகிறேன். உன்னுடைய இளமைக்குத் துணையாகத்தான் தனியாக வந்தேன்' என்று அவள் தொடர்கிறாள். காதல் ரசத்தைப் பிழிந்து எழுதிய வரிகள் இவை.காதல் என்பது ஒரு மிகையுணர்ச்சி. எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலும் போதாது. எவ்வளவு பேசினாலும் தீராது. உலகில் அழகான ஒன்றே ஒன்று அவளுக்கு அவனும்... அவனுக்கு அவளும்தான். எல்லாம் காதல் இருக்கும்வரைதான். மிகையுணர்வுகளுக்கு காதலை பலியிட்டுவிட்டால்... காதலைத் தவிர மற்ற எல்லாம், இருவர் மனதிலும் குடிகொள்ளும்.

மனித மனம் எப்போதும் சுயநலமானது. அதனால்தான் தன் சுயநலத்துக்கு காதலையும் காவு வாங்குகிறது. எல்லாம் தனக்கு வேண்டும். தனக்குமட்டும்தான் வேண்டும் என்கிற குணம் தோன்றும்போது காதல் காணாமல் போய்விடுகிறது. அங்கே காதல் ஓர் உடைமையாகிவிடுகிறது. இது தனக்கான பொருள் என்று... காதலின் உயிரைத் தொலைத்து அதனை ஓர் அஃறிணைப் பொருளாக்கிவிடுகிறது. தனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை... வேறு யாருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்பதும் இதன் நீட்சியே.

எத்தனை கேலி கிண்டல் என்றாலும், கருத்துவேறுபாடுகள் வந்தாலும் காதலை காதலாகவே வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் காதலை எதனோடும் குழப்பிக்கொள்வதில்லை. காதல் என்பது மதித்தல். தான் நேசிக்கும் உயிரின் நேசத்தையும் மதிப்பதே காதல். காதலில் எல்லாம் வரும்... காதல் அப்படியே இருக்கும். `பொசசிவ்னெஸ்', சந்தேகம் போன்றவற்றிற்காக காவு கொடுக்கப்படும் காதல்கள்தான் இப்போது அதிகமாகிவிட்டது. இதனைக் காதல் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

பழைய நாட்டுப்புற இலக்கியங்களிலிருந்தும், சங்க இலக்கியங்களிலிருந்தும் அழகழகான உவமைகளைத் தன் பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவதில் வல்லவர் கவியரசர். இந்தப் பாடலிலும் அப்படி ஒரு காட்சியை வரிகளாக்கியிருப்பார்.

சங்க இலக்கியமான விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலில் இப்படி ஒரு காட்சி...

மாலை நேரம். மரங்கள் அடர்ந்த ஒரு பூஞ்சோலை. நாவல் மரத்தடியில் ஒரு கருவண்டு தேன்குடித்து மயங்கிக் கிடக்கிறது. அந்த வழியே வந்த அழகிய பெண் அந்த வண்டைப் பார்க்கிறாள். அவளுக்கு அது வண்டென்று தெரியவில்லை. அடிபடாத நாவல்பழம் கிடக்கிறது என்றெண்ணி அதைக் கையிலெடுக்கிறாள்.

அவள் கையில் எடுத்ததும் சற்றே மயக்கம் தெளிந்த வண்டு, ஒளிவீசும் அவள் முகத்தை சந்திரன் என்றும், அவளது கையைத் தாமரை மலர் போன்றும் உணர்ந்ததாம். இரவாகிவிட்டது போல் இருக்கிறதே... இரவானால் தாமரை இதழ்கள் மூடிக்கொள்ளுமே... உள்ளே மாட்டிக்கொண்டால் என்னாவது என்று பறந்து சென்றதாம். வண்டு பறந்ததும்... அந்தப் பெண்ணுக்கு வியப்பாகிவிட்டது. இது என்ன பறக்கிறதே... இது நாவல் பழம்தானா? இல்லை வண்டா? என்று பிறகுதான் சந்தேகம் வந்ததாம்.


இதிலிருந்து உருவானவைதான்...
`பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...'
என்னும் வரிகள் என்று கவியரசரே கூறியிருக்கிறார்.

கேட்கக் கேட்க சலிக்காத இந்தப் பாடலை வேதா அவர்களின் மயக்கும் இசையில் டி.எம்.எஸ்.-சுசீலா அவர்களின் குரலில் கேட்பது அத்தனை இதம்.

- பயணிப்போம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close