[X] Close

ஆண் நன்று பெண் இனிது 27 : அன்பு மொழிக்கு மொழியே இல்லை!


aan-nandru-pen-inidhu-27-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 03 Sep, 2018 13:38 pm
  • அ+ அ-

சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தம்தரி மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். மாவட்ட நிர்வாகம்  நடத்திய விவசாயக் கருத்தரங்கு ஒன்றில் ‘சுழற்சிமுறை பயிர் மேலாண்மை மற்றும் விவசாய உற்பத்தியாளர் சங்கம்’ பற்றிப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். விவசாயத்திற்கு என்றே வருகிற முன்னோடி பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருக்கும் நண்பர்  குமரேசன் என்னிடம், ‘இந்தக் கருத்தரங்கிற்காக நீங்கள் சத்தீஸ்கர் செல்ல முடியுமா?’என்று முதலில் கேட்டபோது,’எனக்கு ஹிந்தி தெரியாதே..’என்று தயங்கினேன். ‘அங்கே நீங்க ஹிந்தியில பேசினாலும், தமிழ்ல பேசினாலும் ஒண்ணுதான்.. ஏன்னா நீங்க பேசப்போறது விவசாயிகள்ட்ட, அவங்கள்ல பெரும்பான்மையானவங்களுக்கு ‘சத்தீஸ்கடி’ தான் தாய்மொழி... ஹிந்தி புரியும் ஆனா சத்திஸ்கடியில பேசினாத்தான் நெருக்கமா உணர்வாங்க..’  என்று சொன்னார்.

‘அச்சச்சோ.. அப்புறம் எப்படி.. அங்க நான் போய்.. என்ன பேச..’ என்று கேட்டேன். ‘நீங்க இங்கிலீஷ்ல பேசுங்க, அங்கேயுள்ள வேளாண்துறை ஆட்கள் பாத்துக்குவாங்க.. மொழி குறித்தெல்லாம் தயங்கவேணாம்.. திண்டுக்கல்தான் பல்வேறு பயிர்வகைகள், பழங்கள், பூக்கள் உற்பத்தி செய்யற மாவட்டம். அதுமாதிரி இந்த மாவட்டத்துல இருக்கிற ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்தான் தமிழ்நாட்டுலயே முக்கியமானதுன்னு உங்களுக்குத் தெரியும். தென்னை விவசாயி உற்பத்தியாளர் சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் பத்தியெல்லாம் இங்க பயிற்சி கொடுக்கிறீங்க. அதனால விவசாய உற்பத்தியாளர் சங்கம்  தொடங்குவது, அதோட விதிமுறைகள், செயல்பாடுகள், அதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய பயன்கள்னு நம்ம மாவட்டம் பற்றிய தகவலைச் சொல்லுங்க.. விவசாயிகளே நேரடி விற்பனையாளர்களாக மாறுவது பத்தின உங்களோட அனுபவத்தை அங்க இருக்க விவசாயிகள்ட்ட பகிர்ந்துகிட்டாப்போதும்...அப்புறம் பயிர்ச்சுழற்சி முறைகளைப்பற்றியும் பேசணும்..’என்று சொன்னார்.

சத்தீஸ்கர் மாநிலம் பற்றியும் தம்தரி மாவட்டம் பற்றியும் இணையத்திலிருந்து கிடைத்தவரை தகவல் சேகரித்துக்கொண்டேன். இங்கேயுள்ள விவசாய செயல்பாட்டுமுறைகளில் அங்கிருப்பவர்களுக்குப் பயனுள்ளவற்றை ஒழுங்கு செய்துகொண்டு கருத்தரங்குக்குத் தயாரானேன். இங்கு விவசாயிகளுக்கான பல்வேறு பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தாலும் சத்தீஸ்கர் செல்வது குறித்த தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. 

கருத்தரங்குக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக குமரேசனை அழைத்து, ‘சத்தீஸ்கர் மாநிலத்தோட உங்களுக்கு எப்படி தொடர்பு..?’ என்று கேட்கத் தொடங்கும்போதே இடைமறித்த அவர், ‘பிரசன்னான்னு ஒரு தமிழர், சத்தீஸ்கர்ல பல்ராம்பூர் மாவட்டத்துல ஆட்சியரா இருந்தப்ப அங்க போயிருக்கேன்.. இப்ப அவர்தான் மாற்றலாகி தம்தரி வந்திருக்கார்.. அவர் எந்த இடத்துல இருந்தாலும் வித்தியாசமாவும் பயனுள்ளதாகவும் நெறைய நல்ல காரியங்களை செய்றார்.. நம்மூர்ல வேல செய்றதவிட வடநாட்ல, அதுவும் சத்தீஸ்கர் மாதிரி புதுசாத் தொடங்கின மாநிலத்துல வேல செய்றதே சிரமம், அங்க போயி பழங்குடியினருக்காக நிறையத் திட்டங்களை நடைமுறைப் படுத்தியிருக்கிறார்.. அந்த மாநிலமே ஏதோ நக்சல் ஏரியான்னு நாம நெனச்சிக்கிருவோம்.. ஆனா அங்க ஒருதடவ போயிட்டு வந்தோம்னா.. அந்தப்பகுதிய நாம வேற மாதிரி புரிஞ்சுக்க முடியும்.. அவ்ளோ இயற்கை வளங்கள் நெறஞ்சது... ஒரு கவிஞரா உங்களுக்கு நல்ல அனுபவமா இருக்கும்.. அதேசமயம் உங்கள மாதிரி சமூகப்பணிகள்ல இருக்கவங்களுக்கு ஊக்கமாகவும் இருக்கும்.’என்று சொன்னார்.

குறிப்பிட்ட நாளில் சத்தீஸ்கர் சென்றேன். ராய்ப்பூர் விமானநிலையத்திற்கு மனோஜ் சாகர் என்கிற வேளாண்துறை அதிகாரி ஒருவர் வரவேற்க வந்திருந்தார். ’நீங்கள் இங்கிருக்கும் நாட்களில் உங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னுடையது’ என அறிமுகம் செய்துகொண்டார். என்னுடைய பேச்சினை அவர்தான் மொழிபெயர்க்கப்போவதாகச் சொல்லி, தமிழக அரசியல் முதல் விவசாயம் வரை அவர் அறிந்த வகையில் சொல்லிக்கொண்டிருந்தார். இடையிடையே மாவட்ட ஆட்சியர் பற்றியும் ஏதாவது தகவல்களைப் பேசிக்கொண்டே வந்தார். தம்தரியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் விருந்தினர் இல்லம் செல்வதற்குள் இணக்கமான உரையாடலை உருவாக்கிவிட்டார்.

அடுத்தநாள் மாவட்ட ஆட்சியரின் வீட்டில் காலை உணவுக்குப்பின் நிகழ்ச்சிக்குச் செல்வதாகத் திட்டம். நான் அங்கே சென்றபோது  மாவட்ட ஆட்சியரின் மனைவி திருமதி பிரதீபா வரவேற்றார். அறிமுக உரையாடலுக்குப்பிறகு அவர்களுடைய வீட்டைச்சுற்றி அமைத்திருந்த  தோட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம். ‘நம்ம ஊர் காய்கறி, கீரை வகைகளை நீங்களே பராமரிப்பதைப் பார்க்க சந்தோசமா இருக்கு’ என்று அப்போது அவரிடம் சொன்னேன். ‘சத்தீஸ்கர் முழுக்கவே நெல்தான் முதன்மையான விவசாயம், இங்க காய்கறி விலை கொஞ்சம் அதிகம், இங்க உள்ளவங்க காய்கறிக்குத்தான் அதிகம் செலவு செய்வாங்க.. அதனால வீட்டுத் தோட்டத்தை அறிமுகம் செய்ய நெனைச்சோம், அதுக்கு நாம முதல்ல முன்மாதிரியா இருக்கணும்னு நெனைச்சோம். அரை ஏக்கர்ல நெல்கூட நாங்களே போட்டு எடுத்தோம்... இங்க பக்கத்துல இருக்கவங்கள எல்லாம் அழைச்சு பொங்கல் கொண்டாடினோம்.. இங்க இருக்கவங்ககிட்ட அவ்வளோ வரவேற்பு நம்மூர் பொங்கலுக்கு..’ என்று சொன்னார்.

நாங்கள் பேசிகொண்டிருந்த சற்று நேரத்திற்கெல்லாம் மாவட்ட ஆட்சியரும்  எங்களோடு இணைந்துகொண்டார். ’உங்களைப்பற்றி குமரேசன் நெறைய சொன்னார், பழங்குடியினரோடு உங்க அனுபவத்தை கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு அப்பவே தோணுச்சு...’ என்று சொன்னேன். ‘சத்திஸ்கரே அடர்ந்த காடுகளும் மலைகளும் கனிமவளங்களும் நெறஞ்சதுதானே.. இந்த இயற்கைவளத்துக்கு பழங்குடி மக்கள்தான் பாதுகாப்பா இருக்காங்க. அவங்கதான் நம்முடைய வளங்களைக் காக்கிற காவல் தெய்வம்போலன்னு எனக்கு எப்பவுமே தோணும்..ஒரு பழங்குடி மனிதர் ஓர் ஆயிரம் சதுரமீட்டர் அளவுக்குள்ள வாழ்ந்து தன்னோட வாழ்நாளை முடிச்சுக்குவார். ஆனா அவர் வாழ்ற நிலத்துல இருக்கிற புல், பூச்சி, மரம், செடி, கொடின்னு எல்லாத்தையும் தெரிஞ்சி வச்சிருப்பார். அவருக்குத் தெரியாம அந்த நிலத்துல ஒரு அரும்புகூட பூக்க முடியாது, ஒரு இலை உதிர முடியாது. அந்தளவுக்கு இயற்கையோட ஒன்றிப்போய் வாழ்றவங்களா அவங்கதான் இருக்காங்க. நாமல்லாம் காலையில ஒரு நாடு, சாயந்திரம் வேற ஒரு நாடுன்னு பயணம் பண்றோம். ஆனாப்பாருங்க பக்கத்துல இருக்கிற மனுஷனோட சுகதுக்கத்தை கவனிக்க மறந்துபோயிடறோம்..’ என்று சொன்னார்.

‘இங்க எந்தந்த பழங்குடியின மக்கள் இருக்காங்க?’ என்று கேட்டேன். ‘கோண்ட், மரியா, மூரியா, ஹல்பா, பைகா போன்ற பத்துப்பனிரெண்டு விதமான தொல்குடிகள் இருக்காங்க..’என்றார்.

‘பல்ராம்பூர்ல நீங்க இருந்தப்ப அங்கிருந்த பழங்குடியினரின் பாரம்பரிய அரிசிவகையோட உற்பத்தியப் பெருக்கவும், விற்பனையை அதிகப்படுத்த உதவினதாகவும் மனோஜ் சாகர் சொன்னார். அது என்ன அரிசி.. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க?’ என்று கேட்டேன். ‘அதுக்கு முன்னாடி ராய்ப்பூர் மண்டிபோர்ட்ல இயக்குனரா இருந்தேன். சத்தீஸ்கர் மாநிலத்தை இந்தியாவோட ‘அரிசிக்கிண்ணம்’னு சொல்லலாம். ராய்ப்பூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் 23000 வகை அரிசிவகைகளின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்துலதான் நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளையும் அவற்றின் தனித்தன்மையையும் தெரிஞ்சுகிட்டேன். குறிப்பா ‘ஜீரா ஃபூல்’ அரிசிவகை நல்ல வாசனையா இருக்கும், ஆனா அது குறிப்பிட்ட சில மக்கள் மட்டும் ரொம்பக்குறைவாதான் விளையவைச்சிட்டு இருந்தாங்க. அப்புறம் பல்ராம்பூர் மாவட்டமா பிரிக்கப்பட்டு, அங்க மாவட்ட ஆட்சியரா பொறுப்பேற்றபோது ‘சாங்ரோ’ ங்குற இடத்துல வசிக்கிற கோண்டு பழங்குடியினர்கள் ‘ஜீரா ஃபூல்’ வகை நெல்லை உற்பத்தி செய்வது தெரிந்தது. அவங்ககூட வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்பப்புதுசு. இவங்களுக்கு உதவிதானே செய்ய வந்திருக்கோம், ஆனா இவங்க நம்பள முழுசா நம்பாம சந்தேகத்தோடவே பாக்குறாங்களேன்னு ஆரம்பத்துல எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்..’ என்று சொன்னவர் சற்று அமைதியானார். அப்போது தொல்குடி நிலத்தின் நீங்காத நினைவுக்குள் அமிழ்ந்தது அவர் முகத்தில் வரிகளாக தெறித்து மறைந்தது.

எல்லோரும் அமைதியாக அவர் முகத்தையே பார்த்தபடியிருக்க மீண்டும் அவரே, ’பொதுவாவே பழங்குடி மக்கள் வெளியாட்கள் யாரோடும் அவ்வளோ சீக்கிரமா ஒட்ட மாட்டாங்கன்னு தெரியும்.. அப்ப எனக்கு பெர்னார்ட்-ன்னு பிரெஞ்சு மனிதர்பற்றிய நினைவு வந்தது. அவர் பிரான்ஸ்லயிருந்து பாண்டிச்சேரி ஆரோவில் வந்தவர். பாண்டிச்சேரியின் கிராமங்களில் ‘வீட்டுகொரு தோட்டம்’ உருவாக்கிக்கொண்டிருந்தார். நான் கல்லூரியில படிக்கும்போது ஆரோவில்ல பெர்னார்ட் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்திருக்கிறேன். அவர் பிரான்ஸ்ல இருந்துகிட்டு அந்த வேலைய செய்திருந்தா அந்தப்பகுதி மக்கள்ட்ட அவரோட செயல்பாடுகள் சேர்ந்திருக்காது. தன்னோட நாடு, உறவுகள்னு எல்லாத்தையும் விட்டுட்டு இங்கேயே வந்து தங்கியிருந்தார். எந்த நல்ல திட்டமும் நாமளும் மக்களோட மக்களா கலந்தா மட்டும்தான் முழுமையா செயல்படுத்த முடியும்னு தோணுச்சு, அதனால கிட்டத்தட்ட ஒரு வருஷம் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் நான் அந்த சாங்ரோ கிராமத்துக்குப் போயிருவேன். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் பேசினதில் மெல்லமெல்ல அவங்களும் மாறினாங்க, ஆறு ஏக்கருக்கும் குறைவா ‘ஜீரா ஃபூல்’ பயிரிட்டவங்க, நான் அங்கேயிருந்து மாற்றலாகி வரும்போது கிட்டத்தட்ட நானூறு ஏக்கர் அளவுல பயிரிட்டாங்க.. அதேபோல அந்த அரிசிக்கு துபாயில நல்ல வரவேற்பு, அதனால அங்கிருந்து இந்த மக்கள்ட்ட நேரடி கொள்முதலுக்கும் ஏற்பாடு செய்தேன்.. ஆனா இத நிகழ்த்த முழுசா ரெண்டு வருஷம் ஆகிடுச்சு’ என்று சொன்னவர் வேறு ஒரு நிகழ்வுக்கு நேரமாகிவிட்டதால் மாலையில் கருத்தரங்கில் சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றுச்சென்றார்.

 

அடுத்தநாள் மாலை மகாநதிக்கு மனோஜ் சாகர் என்னை அழைத்துச் சென்றார். அப்போது,.’சார் இங்கே வந்த பிறகுதான் முதல் ‘உழவர் சந்தை’ ஆரம்பிக்கப்பட்டது. கத்தரி, தக்காளி, பீன்ஸ் என என்ன வகையான பயிர் செய்கிறார்களோ அதைக்குறிப்பிட்டு அடையாள அட்டையை அந்தந்த விவசாயிகளுக்கு கொடுத்திடறோம். அதனால் மாற்று ஆட்கள் கடைபோடுவது தவிர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி லாபம் கிடைக்கிறது. அங்கங்கே சிதறிக்கிடக்கிற விற்பனையில் ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்து விவசாயிகளுக்கு முழு பலன் கிடைக்கணும்ன்னு சார் நினைக்கிறார். அதனால்தான் உற்பத்தியாளர் சங்கம்பற்றி உங்களைப்போல சிலரை அழைத்துப்பேச வைக்கிறார்’ என்று சொன்னார். பேசிக்கொண்டே மகாநதியின் காங்க்ரேல் அணைக்கட்டுக்கு அருகே சென்றிருந்தோம்.

‘நீர்த்தேக்கத்தில் படகில் பயணிக்க விருப்பமா?’என்று கேட்டார். சரியென்று சொன்னவுடன் உடனே ஏற்பாடு செய்தார். சிறுவயதிலிருந்தே அணைக்கட்டுகள் எனக்கு எப்போதுமே நெருக்கமானவை. நீர்மின்சாரம் எடுக்கக் கட்டப்பட்ட எந்த அணைகட்டும் எனக்கு என்னுடைய அப்பாவின் நினைவையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். அதிகம் பேசிக்கொள்ளாத அந்த படகுச்சவாரி பயமும் சிலிர்ப்புமான அனுபவம்.   

இந்த அணைக்கட்டு பாசனம்தான் தம்தரி முழுக்க.. இல்லையா சார்..? என்று நானே என்னுடைய மௌனத்தைக் கலைத்துக்கொள்ளும்வரை மனோஜ் சாகர் அமைதி காத்திருந்தார். ‘ஆமாம், இந்தப் பாசனத்தால் தம்தரியில கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு மேல நெல் விவசாயம் மட்டும்தான், சார் வந்தப்பிறகுதான் நாற்பதாயிரம் ஏக்கர்ல கொண்டைக்கடலை போட்டு விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்க வச்சிருக்கார். மாற்றுப்பயிர் மண்ணுக்கும் நல்லதுன்னு விவசாயிகள் இப்ப ஏத்துகிறாங்க. அப்புறம் சார்தான் முதன்முதலாக தேசிய அளவிலான விவசாய கண்காட்சியை நடத்தினார். பாரம்பரிய அறிவோடு நவீனகருவிகளை விவசாய நிலங்களில் பயன்படுத்துகிற விழிப்புணர்வு இங்கேயுள்ள விவசாயிகள் மத்தியில ஏற்பட்டிருக்கு. பல்ராம்பூர்ல இருக்கிற சாங்க்ரோ பற்றி நேற்று பேசினார் இல்லையா, அந்த ஊர் மலைக்கு மேல இருக்கு. வாராவாரம் போறது அவ்வளோ எளிதான காரியம் இல்லை. ஏன்னா அந்த ஊருக்கு ஒத்தையடிப் பாதைதான். நடந்துதான் போகணும். சார் மாற்றலாகி வரதுக்கு முன்னாலதான் சரக்கு ஏத்துற சின்ன ட்ரக் போய்வரமாதிரி பாலம் அமைக்க உதவி செய்திருக்கிறார்.அதுக்குப் பிறகுதான் அவங்க உற்பத்தி பெருகி, வருமானமும் கூடியது. அந்த மக்கள்ட்ட பேசுறதுக்காகவே அவங்க மொழியையும் சார் கத்துகிட்டார். நேத்துக்கூட பாருங்க, உங்க பேச்சை நான் ஹிந்தியில்தான் மொழி பெயர்த்தேன். நான் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவன். ஆனா சார் சத்தீஸ்கடியில் பேசினார். எவ்வளோ பெரிய அதிகாரியா இருந்தாலும் மக்களோட மனசப்புரிஞ்சு வேலை செய்தாத்தான் எந்த நல்ல திட்டமும் மக்களுக்குப் போய்ச்சேரும்ன்னு சொல்லி எங்களை ஊக்கப்படுத்துவார். அப்புறம் சார் பல்ராம்பூர்லயிருந்து மாற்றலாகி வரும்போது அந்த பழங்குடி மக்களுக்கு இவரை விட்டுப்பிரியவே மனசில்லை. அவங்க எல்லோரும் நேரடியா வந்து சாரை அவங்க ஊருக்கே அழைச்சிட்டுப்போய், அந்த இனக்குழுவின் மிகப்பெரிய கௌரவமான ‘பகடி’யை தலையில் அணிவித்து அவருக்கு மரியாதை செய்திருக்காங்க. ‘அது எந்த அரசாங்க விருதை விடவும் தனக்குக்கிடைத்த பெரிய கௌரவம் என்றும், அந்த மக்கள் என்னை அவங்கள்ள ஒருத்தரா ஏத்துகிட்டாங்க’ ன்னு  சார் நெகிழ்ந்துபோய் சொல்வார்’ என்று மனோஜ் சாகர் சொன்னார்.

மனோஜ் சாகர் சதாப்பொழுதும் கலெக்டர் புகழ் பேசுகிறாரோ என்று முதல்நாளிலிருந்து தோன்றியது. ஆனால் அவர் உண்மையிலேயே மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளினால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டிருக்கிறார் என்பதை அன்றைய உரையாடலின்போது புரிந்துகொண்டேன்.

நான் தம்தரியிலிருந்து கிளம்பும்போது மாவட்ட ஆட்சியரிடம், ’சார் உங்களைப் பத்தி மனோஜ் சாகர் நிறைய தகவல் சொன்னார். நம்ம ஊரைச்சேர்ந்தவர், இங்க வந்து இவ்வளோ நல்ல காரியங்களைச் செய்து எல்லோர் மனசிலயும் இடம் பெற்றிருக்கீங்கன்னு நினைக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு..’ என்று சொன்னேன். ‘நம்மளால செய்ய முடிஞ்ச சின்னச்சின்ன வேலைகளை நம்ம மனசுக்கு நிறைவா செஞ்சா போதும்ன்னு நினைக்கிறேன். அப்படியும் என் கையிலிருந்து ஒண்ணும் கொடுக்கலையே. இருக்கிற சிறிய அதிகாரத்தை மக்களுக்குப் பயனுள்ளதா ஆக்கணும். அவ்வளோதான்.. இதுல ஊரும் மக்களும் வேறுபாடு இருக்கா என்ன..?..யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ன்னு தெரிஞ்சவங்க நீங்க... ‘ என்று சொன்னார். 

‘சார்.. எனக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கு உங்களிடம் கேட்க? ‘ என்று சொன்னேன். ‘கேளுங்க..’ என்று சொன்னார். ‘நீங்க நிறைய மொழி அறிந்தவராக மனோஜ் சாகர் சொன்னார். உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?’ என்று கேட்டேன். என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவர், ’அன்பிற்கு ஏது மொழி?’ என்று என்னிடமே திருப்பிக் கேட்டார்.

அன்பு என்பது மனிதர்களை எளிதில் பிணைக்கக்கூடியது. அதுவே உலகப் பொதுமொழியும்கூட. அதை நன்கறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசன்னா போன்றவர்களால்தான் எளியவர்களின் தேவையைப் புரிந்து, அதனை நிவர்த்தி செய்யமுடிகிறது. இவர்களாலேயே இவ்வுலகு இன்னமும் அன்பின் மொழியைத் தக்க வைத்திருக்கிறது.

- இன்னும் வருவார்கள்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close